என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • அய்யனார் கோவில் தேர் திருவிழா நடைபெற்றது.
    • மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் தேரோட்டம் நடைபெற்றது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வரகூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 3-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி நாள்தோறும் அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் அய்யனார் எழுந்தருளினார். பின்னர் மேளதாளங்கள் முழங்க வாண வேடிக்கைகளுடன் தேரோட்டம் நடைபெற்றது.

    இதில் வரகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. இதில் குன்னம், அந்தூர், கொளப்பாடி, வெண்மணி, வேட்டக்குடி உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். குன்னம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.



    • பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது
    • பொதுமக்கள்-வழக்காடிகள் நாளை நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தை தங்கள் வழக்குகளில் சமரசம் செய்வதற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் பல்கீஸ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் நடைபெற்று வரும் வழக்குகளை சமரசமாக பேசி முடித்து கொள்ள அரிய வாய்ப்பாக தேசிய மக்கள் நீதிமன்றம் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

    இந்த மக்கள் நீதிமன்றத்தில் பொதுமக்கள், வழக்காடிகள் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள தங்கள் வழக்குகளை, குறிப்பாக சொத்து வழக்குகள் மற்றும் வங்கி கடனுதவி, தனிநபர் கொடுக்கல்-வாங்கல் சம்பந்தப்பட்ட வழக்குகள் மற்றும் திருமண உறவு தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் (சமாதானமாக செய்யக்கூடிய வழக்குகள்) ஆகியவற்றில் தீர்வு கண்டு சமரசமாக தீர்வு பெற ஓர் அரிய வாய்ப்பாக அமைய உள்ளது.

    எனவே, பொதுமக்கள்-வழக்காடிகள் நாளை நடைபெற உள்ள தேசிய மக்கள் நீதிமன்றத்தை தங்கள் வழக்குகளில் சமரசம் செய்வதற்கு பயன்படுத்தி கொள்ளலாம். இது சம்பந்தமாக, நாள்தோறும் சமரச பேச்சுவார்த்தை நடத்த தனித்தனியாக நீதிபதிகள் அமர்வு ஏற்படுத்தப்பட்டு பெரம்பலூர் மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற்று வருகிறது.மேலும் விவரங்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, பெரம்பலூர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04328-296206 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

    • சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் ரூ.49½ லட்சம் உண்டியல் காணிக்கை வசூலானது
    • கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், ஆன்மிக அன்பர்கள் ஈடுபட்டிருந்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவற்றை செலுத்துவது வழக்கம். மேலும் அந்த உண்டியல்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவதும் வழக்கம். கடந்த ஏப்ரல் மாதம் 5-ந்தேதி கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற்றதால் மார்ச் மாதம் உண்டியல்கள் திறந்து எண்ணப்படவில்லை.

    இந்தநிலையில், நேற்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்கம், வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறையின் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலின் உதவி ஆணையர் ஹரிகர சுப்பிரமணியன் தலைமையில், மதுரகாளியம்மன் கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை, சரக ஆய்வாளர் தீபாதேவி ஆகியோர் முன்னிலையில் கோவிலில் உள்ள மொத்தம் 7 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டன.

    இதில், ரூ.49 லட்சத்து 63 ஆயிரத்து 77-ம், 261 கிராம் தங்கமும், 845 கிராம் வெள்ளியும், டாலர், தினார் உள்ளிட்ட 167 எண்ணிக்கையிலான வெளிநாட்டு பணமும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், ஆன்மிக அன்பர்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்கு முன்பு கோவில் உண்டியல் கடந்த டிசம்பர் மாதம் திறந்து எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது
    • மாணவர்களுக்கு வேந்தர் சீனிவாசன் அறிவுரை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ. சீனிவாசன் தலைமை வகித்து, பணி நியமன ஆணைகளை மாணவர்களுக்கு வழங்கினார். அப்போது பேசியதாவது:-இந்த முக்கியத்துவம் வாய்ந்த விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    மேலும் இன்று பணி நியமன ஆணைகளை பெறும் அனைவருக்கும் தன்னுடைய இதயப்பூர்வமான வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்க்கையில் பல சாதனைகள் புரிந்து எல்லா வளங்களும் பெற்று மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்துகிறேன்.இன்று உங்கள் வாழ்க்கையின் அடுத்த அத்தியாத்திற்கான முக்கியமான நாள். நீங்கள் பணிபுரியும் இடத்தில் நீதி, நேர்மை, ஒழுக்கத்தை கடைபிடித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்பட்டு இந்த கல்லூரிக்கும், உங்கள் ஆசியர்களுக்கும், மற்றும் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்.

    கடவுளை தேடி எந்த கோவிலுக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நம் கண் முன்னே வாழும் கடவுள் நமது பெற்றோர்கள். எனவே அவர்களின் கடின உழைப்பையும், தியாகத்தையும் நாம் உயிர் உள்ளவரை மறக்கக்கூடாது. அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது நமது கடமையாகும்.எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம். இந்த உலகமே அன்பினால் பிணையப்பட்டது. எனவே அன்பை மட்டும் விதைப்போம், அதையே அறுவடை செய்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.விழாவில் டி.சி.எஸ், நிசான் டெக்னாலஜி, லூமினஸ், அல்ட்ராடெக், பெகட்ரான், இ-கான், லோட்டி, எபி சோர்ஸ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் தேர்வு செய்யப்பட 600-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும் இந்த விழாவில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலர் நீலராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    விழாவில் ஜோஹோ கார்ப்பரேஷனின் தொழில் நுட்ப இயக்குனர், ராஜேந்திரன் தண்டபாணி, விப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் மண்டல தலைவர், ஆனந்தகிருஷ்ணன் தேவராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். விழாவில் அவர்கள் பேசுகையில், பணி நியமன ஆணைகளை பெரும் மாணவர்களுக்கு தங்களுடைய பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.மேலும் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் முதல்தர அடிப்படை கட்டமைப்பு வசதிகள், அதி நவீன ஆய்வக வசதிகள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கண்டு பெருமை படுவதாகவும், அவைகள்தான் இதுபோன்ற தரமான மாணவர்களை உருவாக்கியிருக்கிறது என்றும் கூறினர்.

    விழாவில் கல்லூரியின் முதல்வர் முனைவர் இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசுகையில் நிறுவங்களின் தேவைகளை கருத்தில் கொண்டு தரமான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.முன்னதாக துணை முதல்வர் ஸ்ரீதேவி வரவேற்றார். புல முதல்வர் (பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு) முனைவர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார். இதில் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் வேல்முருகன், புல முதல்வர் (அகாடெமிக்) முனைவர் அன்பரசன், புலமுதல்வர் (ஆராய்ச்சி) முனைவர் சிவராமன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.

    • பெரம்பலூர் கிராம பஞ்சாயத்து இளைஞர்களுக்கு சி.சி.டி.வி. கேமரா பொருத்துதல் பயிற்சி நடைபெற உள்ளது
    • இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மதன கோபாலபுரத்தில் உள்ள ஐ.ஓ.பி. ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் மூலம் கிராம பஞ்சாயத்தை சேர்ந்த ஆண் மற்றும் பெண்களுக்கான சி.சி.டி.வி. கேமரா பொருத்துதல் மற்றும் சேவை, ஸ்மோக் டிடெக்டர் அலாரம் பொருத்துதல் பயிற்சி இலவசமாக அளிக்கப்பட இருக்கின்றது. பயிற்சி கால அளவு 13 நாட்கள். பயிற்சி காலத்தில் காலை மற்றும் மதிய உணவு இலவசமாக வழங்கப்படும்.பயிற்சி முடிந்தவுடன் அரசால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.

    இப்பயிற்சி முடிவில் வங்கி கடன் பெற்று உடனடியாக தொழில் தொடங்க வழிகாட்டப்படும். இப்பயிற்சியில் சேர 19 வயது முதல் 45 வயதுக்குபட்ட எழுத படிக்க தெரிந்த, சுய தொழில் தொடங்குவதில் ஆர்வம் உள்ளவராக இருத்தல் வேண்டும்.மேலும் வறுமை கோட்டு எண் அல்லது இலக்கு எண் அல்லது குடும்ப அட்டை எண் அல்லது குடும்பத்தில் எவரேனும் ஏரி வேலை அட்டை உள்ள கிராம பஞ்சாயத்தை சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு வழங்கப்படும்.

    விருப்பம் உள்ளவர்கள் குடும்பஅட்டை, ஆதார் கார்டு, பெற்றோரின் நூறு நாள் வேலை அட்டை வங்கி புத்தகம் ஆகியவற்றின் நகல், 3 பாஸ்போர்ட் சைஸ் அளவு போட்டோ ஆகியவற்றையும் விண்ணப்பத்துடன் இணைத்து 13-ந் தேதிக்குள் ஐ.ஓ.பி. கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையம், ஷெரீப் காம்ப்ளக்ஸ், பெரம்பலூர் என்ற முகவரிக்கு நேரில் வந்து பதிவு செய்யவும். அல்லது 04328-277896, 9488840328, 8489065899 என்ற எண்ணிலோ தொலைப்பேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம்.

    • பெரம்பலூர் அருகே மூங்கில்பாடி பட்டு குளம் தூய்மைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது
    • கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்:

    மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் தூய்மையினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி தங்களது கிராமங்களை இளைஞர்கள், பொதுமக்களின் ஒத்துழைப்புடன் தூய்மைப்படுத்தும் பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்துவது தான் நம்ம ஊரு சூப்பரு திட்டம்.பொதுமக்களிடையே நெகிழிப் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அதற்கு மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், வீடுகளில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பைகளை முறையாக பிரித்து அப்புறப்படுத்தும் பழக்கத்தினை ஊக்குவிப்பதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது.

    இத்திட்டத்தின் கீழ் மூங்கில்பாடி கிராமத்தில் அமைந்துள்ள பட்டுக்குளத்தினை கலெக்டர் கற்பகம், உள்ளூர் பொதுமக்கள், இளைஞர்களுடன் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி வைத்தார். இப்பணியில் இளைஞர்கள் ஆர்வமுடன் உற்சாகத்துடன் கலந்து கொண்டு குளத்தினை தூய்மைபடுத்தினர்.மேலும் கழிவு நீர் வாய்க்கால் தூய்மைப்படுத்தும் பணி, அங்கன்வாடி கட்டிடம், நியாய விலைக் கடை, ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம ஊராட்சி சேவை மையம், சத்துணவு மையம், நூலகம், மகளிர் சுகாதார வளாகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தூய்மைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட கலெக்டர் கற்பகம் பார்வையிட்டார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    • பெரம்பலூர் அருகே ஜெராக்ஸ் கடை உரிமையாளர் வீட்டில் கொள்ளை போனது
    • ஜன்னலை வலைத்து மர்மநபர்கள் கைவரிசை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் காமராஜர் வளைவு அருகே சங்குப்பேட்டை சாலையில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருபவர் சாகித் அப்ரிடி (வயது 25). இவர் எளம்பலூர் சாலையில் ரோஸ் நகரில் வாடகை வீட்டில் தனது தந்தை சையது முகமது, தாயார் குர்ஷிதா யாஸ்மினுடன் கடந்த 4 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.இந்தநிலையில், தேனி மாவட்டத்தில் உறவினர் வீட்டு விசேஷத்திற்காக குர்ஷிதா யாஸ்மின் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சென்று விட்டார்.சம்பவத்தன்று சாகித் அப்ரிடி வீட்டை பூட்டிவிட்டு தனது தந்தை சையது முகமதுவை அழைத்துக்கொண்டு ஜெராக்ஸ் கடைக்கு சென்று விட்டார்.

    வீட்டில் யாரும் இல்லை என்பதை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள் வீட்டின் ஜன்னல் கம்பியை வளைத்து உள்ளே நுழைந்து பீரோக்களை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த ரூ.90 ஆயிரம், ஒரு பவுன் தோடு ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.இரவு சாகித் அப்ரிடி தனது கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் ஜன்னல் பெயர்த்து எடுக்கப்பட்டு, பீரோவும் உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த பணம் மற்றும் நகைகள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.பின்னர் இதுகுறித்து பெரம்பலூர் போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிவிட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மூங்கில்பாடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
    • மூங்கில்பாடி கிராமத்தில் உள்ள பட்டு குளத்தினை நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே மூங்கில்பாடி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. அந்த முகாமில் மாவட்ட கலெக்டர் கற்பகம் பங்கேற்றார். அதனை தொடர்ந்து மூங்கில்பாடி கிராமத்தில் உள்ள பட்டு குளத்தினை நம்ம ஊரு சூப்பர் திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்தும் பணிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் மண்வெட்டியால் குப்பைகளை வாரி தூய்மைப்படுத்தினார்.

    இப்பணியில் இளைஞர்கள் உற்சாகத்துடன் கலந்துகொண்டு குளத்தினை தூய்மைப்படுத்தினர்.

    • அரணாரை மாரியம்மன் கோவிலில் சப்பர தேரோட்டம் நடந்தது.
    • வீதிகளில் பொதுமக்கள் தேங்காய், பழம், மாவிளக்கு போன்றவற்றை படைத்து, வழிபட்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புறநகர் அரணாரையில் உள்ள மாரியம்மன் கோவிலில் கடந்த 23-ந் தேதி பூப்போடுதல் நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து 30-ந் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இதில் மாவிளக்கு வழிபாடு கடந்த 7-ந் தேதியும், தீமிதி திருவிழா நேற்று முன்தினமும் நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று சப்பர (சகடை) தேரோட்டம் நடந்தது. இதில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மாரியம்மன் சப்பரத்தில் வைக்கப்பட்டு, கோவிலில் இருந்து சகடை புறப்பட்டது.

    முக்கிய வீதிகளின் வழியாக சகடை இழுத்து வரப்பட்டு மீண்டும் கோவிலை அடைந்தது. வீதிகளில் பொதுமக்கள் தேங்காய், பழம், மாவிளக்கு போன்றவற்றை படைத்து, வழிபட்டனர். அலங்காரம் மற்றும் பூஜைகளை கோவில் அர்ச்சகர் ரவி அய்யர் நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் கோவில் திருவிழா கிராமக்குழு தலைவர் மணி, நிர்வாகிகள் சிவபிரகாசம், பிரபாகரன், வார்டு கவுன்சிலர் துரை.காமராஜ் மற்றும் கோவில் பூசாரிகள், பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எசனை காட்டு மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது.
    • மஞ்சள் நீர்-விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவடைந்தது.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே எசனையில் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் உள்ள காட்டுமாரியம்மன் கோவிலில் கடந்த 23-ந் தேதி பூப்போடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதைத்தொடர்ந்து சித்திரை திருவிழா கடந்த 30-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. திருவிழாவின்போது ஏகாந்தசேவை, அன்னம், சிம்மம், பள்ளி கொண்ட காட்சி, சூரியன், சந்திரன் பிரபை ஆகிய அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் தினமும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகளும், கடந்த 7-ந் தேதி பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலாவும் நடந்தது.

    நேற்று முன்தினம் பொங்கல் வழிபாடு, மாவிளக்கு பூஜை, வெட்டுங்குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா ஆகியவை நடந்தன.இதில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் அலகு குத்தி, தீச்சட்டி ஏந்தி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. வடம் பிடித்தல் நிகழ்ச்சியில் கோவில் பரம்பரை அறங்காவலர்கள் பெரியசாமி, செல்லமுத்து, லோகுநல்லுசாமி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர்கள், ஆய்வாளர் தீபாதேவி, வேணுகோபாலசுவாமி கோவில் செயல் அலுவலர் தேவி மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    தாரை, தப்பட்டை முழங்க, மேளதாளங்களுடன் எசனை கடைவீதியில் இருந்து புறப்பட்ட தேர் புதுப்பிள்ளையார் தெரு, வேணுகோபாலசுவாமி, அக்ரகாரம், சிவன் கோவில் தெரு உள்ளிட்ட கிராமத்தின் பிரதான வீதிகள் வழியாக இழுத்து செல்லப்பட்டு மாலையில் நிலைக்கு வந்தடைந்தது. இதில் எசனை, அரும்பாவூர், அன்னமங்கலம், பாப்பாங்கரை, சோமண்டாபுதூர், கோனேரிபாளையம், வேப்பந்தட்டை, தொண்டபாடி, அனுக்கூர், பெரம்பலூர், சத்திரமனை, பொம்மனப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று மஞ்சள் நீர்-விடையாற்றி விழாவுடன் திருவிழா நிறைவடைந்தது.

    • சத்துணவு ஊழியர் வீட்டில் 4 பவுன் நகை, ரூ.30 ஆயிரம் திருட்டு போனது
    • இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    பெரம்பலூர்;

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள அ.மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன். இவரது மனைவி சசிகலா (வயது 37). இவர் தழுதாழை அரசு தொடக்கப் பள்ளியில் சத்துணவு ஊழியராக பணியாற்றி வருகிறார். சிவசுப்பிரமணியன் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனை தொடர்ந்து சசிகலா தனது மகளுடன் அ.மேட்டூரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் சசிகலா தனது வீட்டை பூட்டிவிட்டு, அருகில் உள்ள தனது தாயார் சித்ரா வீட்டில் மகளுடன் தங்கியுள்ளார்.

    பின்னர் அவர் தனது வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவுகள் திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது ெபாருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் தோடுகள், 2 பவுன் சங்கிலி, வெள்ளிக்கொலுசு மற்றும் ரூ.30 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இது குறித்து அரும்பாவூர் போலீசில் சசிகலா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கம்பி வேலியில் சிக்கி புள்ளிமான் உயிரிழந்தது
    • மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டவர் முன்னிலையில் வனக்காப்பாளர் அன்பரசுவிடம் அந்த மானின் உடல் ஒப்படைக்கப்பட்டது

    அகரம்சீகூர்:

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள லெப்பைக்குடிக்காட்டில் இருந்து பென்னக்கோணம் ரோட்டில் ஒரு வீட்டின் அருகே போடப்பட்டிருந்த கம்பி வேலியில் 5 மாத ஆண் புள்ளிமான் ஒன்று சிக்கி உயிரிழந்தது. இதுகுறித்து ரஞ்சன்குடி எல்லைக்கு உட்பட்ட வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மங்களமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆண்டவர் முன்னிலையில் வனக்காப்பாளர் அன்பரசுவிடம் அந்த மானின் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து லெப்பைகுடிகாடு உதவி கால்நடை மருத்துவமனையில் உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டு மங்களம் காப்புக்காடு பகுதியில் அந்த மானின் உடல் புதைக்கப்பட்டது.

    ×