என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • மாயமான கல்லூரி மாணவர் கிணற்றில் பிணமாக மிதந்தார்
    • இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள பரவாய் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கிருஷ்ணன்(வயது 19). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பார்ம் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இதற்காக அங்கு விடுதியில் தங்கிருந்த அவர், கடந்த 15 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் பரவாய் கிராமத்திற்கு வந்தார்.இதையடுத்து கடந்த 8-ந் தேதி மாலை தனது தாய் உமாவிடம் அருகில் உள்ள வேப்பூர் கிராமத்திற்கு சென்று வருவதாக அவர் கூறி சென்றார்.ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை.

    இதனால் பல இடங்களில் கிருஷ்ணனை தேடியும், அவர் கிடைக்காததால் இச்சம்பவம் குறித்து குன்னம் போலீசில் உமா புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.இந்நிலையில் நேற்று காலை பரவாய் கிராமத்தில் இருந்து ஆண்டி குரும்பலூர் செல்லும் சாலையில் புளியந்தோப்பு அருகில் உள்ள ஒரு கிணற்றில் வாலிபரின் உடல் மிதப்பதாக தகவல் பரவியது.இதையடுத்து கிருஷ்ணனின் உறவினர்கள் அங்கு சென்று பார்த்தனர்.அப்போது கிணற்றில் பிணமாக மிதந்தது கிருஷ்ணன்தான் என்று தெரிவித்தனர்.

    மேலும் உடனடியாக வேப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கும், குன்னம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் மிதந்த கிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இறந்துபோன கிருஷ்ணன் அவரது பெற்றோருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து பிறந்த ஒரே மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • அகரம்சீகூர் அருகே பூட்டிய வீட்டில் திருட முயன்ற அண்ணன்-தம்பி அதிரடி கைது செய்யப்பட்டனர்
    • அக்கம், பக்கத்தினர் அந்த வீட்டை சுற்றி வளைத்து 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து கட்டி வைத்தனர்

    அகரம்சீகூர்,

    பெரம்பலூர் மாவட்டம், அகரம்சீகூர் அருகேயுள்ள லெப்பைக்குடிக்காடு ஜமாலியா நகரில் நேற்று அதிகாலை 3 மணியளவில் அப்துல்சமது மற்றும் அப்துல் ஹமீத் ஆகியோரது வீட்டின் பூட்டை உடைக்கும் சத்தத்தை கேட்டது. இதனையடுத்து பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் வெளியே வந்து பார்த்தனர்.அப்போது அந்த வீட்டின் உள்ளே 2 பேர் பீரோவை உடைத்து பொருட்களை திருடிக் கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் அந்த வீட்டை சுற்றி வளைத்து 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து கட்டி வைத்தனர்.

    பின்னர் இச்சம்பவம் குறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், இருவரும் கள்ளக்குறிச்சியை சேர்ந்த கண்ணனின் மகன்கள் முருகன் (வயது 35), சிவா (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து சகோதரர்களான 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்கள் பலத்த காயங்களுடன் இருந்ததால் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதி மன்றத்தில் 502 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது
    • இதனை மாவட்ட தலைமை நீதிபதி பல்கிஸ் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் கோர்ட் வளாகத்தில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது. இதனை மாவட்ட தலைமை நீதிபதி பல்கிஸ் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சப்-கோர்ட் நீதிபதியுமான சந்திரசேகர் முன்னிலை வகித்தார்.இதில் குடும்ப நல கோர்ட்டு மாவட்ட நீதிபதி தனசேகரன், மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி மூர்த்தி, மாவட்ட உரிமையியல் கோர்ட்மு நீதிபதி ராஜமகேஷ்வர், குற்றவியல் கோர்ட்மு நீதிபதிகள் சுப்புலட்சுமி, சங்கீதா ஆகியோர் கொண்ட 4 அமர்வானது கோர்ட்டுகளில் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வழக்குகளை சமரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு விசாரணை நடந்தியது.

    இதில் வங்கி வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், சிறு குற்ற வழக்குகள் என மொத்தம் 502 வழக்குகள் ரூ.ஒரு கோடியே 60 லட்சத்து 10 ஆயிரத்து 300 மதிப்பில் தீர்வு காணப்பட்டது. நிகழ்ச்சியில் வக்கீல்சங்க தலைவர் வள்ளுவன்நம்பி, வழக்கறிஞர்கள் அசோசியேஷன் சங்க தலைவர் மணிவண்ணன், வக்கீல்கள் சங்கர், அருணன், திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு கோரி அனுக்கூர், அ.குடிகாடு கிராமத்தில் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது
    • தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு கோரிக்கை அடங்கிய கடிதங்களை அனுப்பினர்.

    அகரம்சீகூர்,

    வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு நிறைவேற்ற கோரி, பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு அருகே அனுக்கூர் மற்றும் அ. குடிக்காடு கிராமத்தில் தபால் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது. பா.ம.க. மாநில பொதுகுழு உறுப்பினர் அனுக்கூர் ராஜேந்திரன் தலைமையில் மேளதாளங்களுடன், 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக, தபால் நிலையம் வந்தனர். பின்னர் அங்கிருந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர் நீதிமன்ற நீதிபதி ஆகியோருக்கு கோரிக்கை அடங்கிய கடிதங்களை அனுப்பினர்.

    இதில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் குமரவேலன், பா.ம.க. ஒன்றிய கவுன்சிலர் தேவகி ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் ராஜா, மருத்துவர் நக்கீரன், கிராம முக்கியஸ்தர்கள் ஆறுமுகம் துரைராஜ், மணிவேல், கிளை செயலாளர் தாமரை செல்வன் மற்றும் கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    • கை.களத்தூர் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள கிருஷ்ணாபுரம் துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் கலியமூர்த்தி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:- கை.களத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் இங்கிருந்து மின் வினியோகம் செய்யப்படும் கை.களத்தூர், சிறுநிலா, நெற்குணம், நூத்தப்பூர், அய்யனார்பாளையம், காரியானூர், பெருநிலா, பில்லங்குளம், வெள்ளுவாடி, காந்திநகர் ஆகிய ஊர்களில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின்சார வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    • நர்சை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் 1-வது வார்டு செட்டியார் வீதியை சேர்ந்தவர் ராமராஜ். இவரது மகன் மணிகண்டன் (வயது 23). இவர் கடந்த 10-ந்தேதி இரவு 11 மணியளவில் லுங்கியுடன் ஒரு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குள் அத்துமீறி புகுந்து, அங்கு பணியில் இருந்த நர்சு ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதனை கண்ட மருத்துவமனை பணியாளர் ஒருவர் மணிகண்டனை தடுக்க முயன்றார்.

    இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் மருத்துவமனை பணியாளரை தாக்கிவிட்டு தப்பி ஓடினார். அவரை பின்தொடர்ந்து பிடிக்க ஓடிய மருத்துவ பணியாளருக்கு, மணிகண்டன் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பி சென்றார். இதையடுத்து அந்த நர்சு தன்னை அரசு பணி செய்ய விடாமல் தடுத்து, பலாத்காரம் செய்ய முயன்ற மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்குமாறு பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்துக்கு முன்னதாக மணிகண்டன் பெரம்பலூர் உப்போடையில் டாஸ்மாக் பாரில் ஊழியர் ஒருவரிடம் தகராறில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    • வேப்பூர் அரசு கல்லூரியில் சேர மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கபட்டுள்ளது
    • இளங்கலை முதலாம் ஆண்டு மாணவியர் சேர்க்கைக்கு வருகிற 19-ந் தேதிக்குள் மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூரில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் இளங்கலைப் பாடப்பிரிவில் பி.ஏ.-தமிழ், பி.ஏ.-ஆங்கிலம், பி.எஸ்சி.- உயிர் தொழில்நுட்பவியல், பி.எஸ்சி-வேதியியல், பி.எஸ்சி- கணினி அறிவியல், பி.எஸ்சி-கணிதவியல், பி.எஸ்சி-இயற்பியல், பி.காம், பி.பி.ஏ. ஆகிய 9 துறைக்கான பாட பிரிவுகள் உள்ளன.

    இக்கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான இளங்கலை பாட பிரிவுகளுக்கான முதலாம் ஆண்டு மாணவியர் சேர்க்கைக்கு www.tngasa.in என்ற இனணயதள முகவரி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இளங்கலை முதலாம் ஆண்டு மாணவியர் சேர்க்கைக்கு வருகிற 19-ந் தேதிக்குள் மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி முதல்வர் மணிமேகலை ஜெயபால் தெரிவித்து உள்ளார்.

    • பெரம்பலூரில் தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
    • சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெற 1800 425 2441 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் தொழிலாளர்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சப்-கோர்ட் நீதிபதியுமான சந்திரசேகர் தலைமை வகித்து பேசுகையில், தொழிலாளர் நலன் குறித்தும், அவர்களுக்கு உரிய முறையில் பணி செய்யும் இடத்தில் அனைத்து வசதிகளும் கிடைப்பதற்கும், பணி நேரம் அரசு விதிகளின்படி உள்ளதா என்பதை தொழிலாளர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

    தொழிலாளர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டால் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் புகார் அளித்தால், அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று தரப்படும். சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெற 1800 425 2441 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். தொழிலாளர் நல சங்கத்தில் உள்ளவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். அனைத்து தொழிலாளர்களும் தொழிலாளர் நல சட்டம் பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்று பேசினார்.

    மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வக்கீல் செல்வம், அரியலூர் தொழிலாளர் உதவி ஆய்வாளர் சம்பத், குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிரவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் கலைவாணன் வரவேற்றார். முடிவில் மேசியா தொழிலாளர் நல சங்கத்தின் பொதுச் செயலாளர் டேனியல் நன்றி கூறினார்.

    • தனலட்சுமி சீனிவாசன் வேளாண் கல்லூரியில் வேளாண்மை கண்காட்சி தொடங்கப்பட்டது
    • மாவட்ட கலெக்டர் கற்பகம் வேளாண்மை கண்காட்சியை தொடங்கி வைத்தார்

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமத்தின் சார்பில் வேளாண்மை கல்லூரியில் 3 நாட்கள் நடைபெறும் வேளாண்மை கண்காட்சி நேற்று துவங்கியது.கண்காட்சி துவக்க விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்தார். தனலட்சுமி வேளாண்மை கல்லூரி முதல்வர் சாந்தகோவிந்த் வரவேற்றார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் வேளாண்மை கண்காட்சியை தொடங்கி வைத்தார்.

    மாவட்ட போலீஸ் எஸ்பி ஷ்யாம்ளாதேவி, கல்விக்குழும துணை தலைவர் அனந்தலட்சுமி, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி நிர்வாக இயக்குனர் நிவானி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றிவைத்தனர்.கவுரவ விருந்தினர்களாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வேளாண் விரிவாக்க இயக்குனர் முனைவர் முருகன் , வேளாண் இணை இயக்குநர் சங்கரநாராயணன், தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக துணை வேந்தர் ரஞ்சன், தனலட்சுமி சீனிவாசன் வேளாண்மை கல்லூரி டீன் ரவிச்சந்திரன் ஆகியோர் பேசினர்.

    கண்காட்சியில் அனைத்து வகையான நாட்டு விதைகள், விதை விதைக்கும் கருவி, மக்காச்சோள புதிய ரக விதைகள், களை எடுக்கும் கருவி, ரசாயன களைக் கொல்லிகள், ரசாயனம் அல்லாத பூச்சி கொல்லிகள், நவீன அறுவடை இயந்திரங்கள், உழவும் உழவு சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் இயந்திரங்கள், வெங்காயத்தாள் உரிக்கும் இயந்திரங்கள், சொட்டு நீர் பாசனம் மற்றும் இதர நுண்ணிய நீர் பாசன இயந்திர வகைகள், நவீன பூச்சி கொல்லி மற்றும் உர தெளிப்பான் எனும் ட்ரோன், விவசாயிகளுக்கு நிதி தரும் வங்கிகள் என 114 அரங்குகளில் விவசாயம் சம்பந்தமான அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.இதனை விவசாயிகள், விவசாய கல்லூரி மாணவ,மாணவிகள், பொதுமக்கள் என பலரும் பார்வையிட்டனர். இந்த கண்காட்சி இன்றும், நாளையும் நடைபெறுகிறது. அனுமதி இலவசம். பொதுமக்களும், விவசாயிகளும் பார்வையிட்டு பயன்பெறலாம்.

    • சேவை குறைபாடு காரணமாக லாரி டிரைவருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • மேலும் வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பூலாம்பாடி பேரூராட்சிக்குட்பட்ட விநாயகர் தெருவை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் ராமகிருஷ்ணன் (வயது 40), லாரி டிரைவர். இவரை சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதி நிறுவனத்தின் பெரம்பலூர் கிளை மேலாளர் காத்தவராயன், நிதி வசூல் நிர்வாகி பாஸ்கர் ஆகியோர் அணுகினர். தங்களது நிறுவனத்தில் வேறு ஒருவர் ஒப்பந்த முறையில் கடன்பெற்று தவணையை முறையாக செலுத்தாமல் விட்டிருந்த 14 சக்கரங்கள் கொண்ட லாரியை ராமகிருஷ்ணன் பெயருக்கு மாற்றம் செய்து, எளிய தவணைகளில் மாதாமாதம் குறிப்பிட்ட தொகையை செலுத்தும் வகையில் கடனுதவியும், (ஹையர் பர்சேஸ்) அடிப்படையில் ரூ.11 லட்சமும் நிதியுதவி தருவதாக கூறினர்.

    மேலும் லாரியின் மீதான காப்பீடு மற்றும் அதில் ஏற்பட்டிருந்த பழுது ஆகியவற்றை சரி செய்து கொடுப்பதாக வாக்குறுதி அளித்தனர்.இதனை நம்பிய ராமகிருஷ்ணன், கிளை மேலாளர் மற்றும் நிதி வசூல் நிர்வாகி ஆகியோர் தந்த ஆவணங்களில் கையெழுத்திட்டு கொடுத்தார். முதல் தவணையாக ரூ.56 ஆயிரமும் செலுத்தினார். அடுத்தடுத்த தவணைகள் என மொத்தம் ரூ.3 லட்சத்து 36 ஆயிரம் செலுத்திவிட்டார்.இந்தநிலையில் ராமகிருஷ்ணன், மேற்கண்ட லாரியின் பழுதுகளை நீக்கி, தனது பெயருக்கு பதிவு சான்றை மாற்றித்தருமாறு கிளை மேலாளர் மற்றும் நிதி வசூல் நிர்வாகி ஆகியோரிடம் முறையிட்டார்.

    இதனை செய்து தராமல் ராமகிருஷ்ணன் அலைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டார். இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ராமகிருஷ்ணன், பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றத்தில் சோழமண்டலம் முதலீடு மற்றும் நிதிநிறுவனத்தின் பொதுமேலாளர், பெரம்பலூர் கிளை மேலாளர், நிதி வசூல் நிர்வாகி, ஏரியா மேலாளர் (ரிசிவபில்ஸ்) ஆகிய 4 பேர் மீதும் தனது வக்கீல் சுப்ரமணியன் மூலம் கடந்த 2021-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர், லாரி டிரைவர் ராமகிருஷ்ணனிடம் முறையற்ற வணிகம் செய்தமைக்காகவும், நிதிநிறுவனத்தின் சேவை குறைபாடு மற்றும் மனஉளைச்சலுக்கு காரணமாகவும் இருந்துள்ள எதிர்மனுதாரர்கள் 4 பேரும் தனியாக அல்லது கூட்டாக இணைந்து ரூ.1 லட்சத்தை நிவாரணமாக ராமகிருஷ்ணனுக்கு வழங்க வேண்டும். மேலும் வழக்கு செலவு தொகையாக ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    • தபால் அலுவலக ஊழியரிடம் 2 பவுன் சங்கிலி பறித்தனர்
    • இந்த சம்பவம் குறித்து ராகவி அளித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் மாவட்டம் தேவையூர் கிராமத்தை சேர்ந்தவர் ராகவி (வயது 20). இவர் மங்களமேடு அடுத்துள்ள ரஞ்சன்குடி தபால் அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று வழக்கம்போல் பணி முடிந்து ராகவி தனது வீட்டிற்கு சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமி ராகவி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துகொண்டு தப்பி சென்றான். இந்த சம்பவம் குறித்து ராகவி அளித்த புகாரின் பேரில் மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூரில் நாளை ரேஷன் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது
    • நாளை (13-ந்தேதி) காலை10 மணியளவில் நடைபெறுகிறது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், பிழை திருத்தம் செய்தல் போன்ற கோரிக்கைகளின் மீது உடனுக்குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் மேலப்புலியூர், தழுதாழை, திருமாந்துரை, நாட்டார்மங்கலம் ஆகிய கிராமங்களில் நாளை (13-ந்தேதி) காலை10 மணியளவில் நடைபெறுகிறது. முகாமில், பொதுமக்கள் கலந்து கொண்டு, உணவு பொருள் வழங்கல் மற்றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான, குறைகளைத் தெரிவித்து பயன்பெறலாம் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

    ×