என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • சூறாவளி காற்றில் வீட்டின் மேற்கூரை தூக்கி வீசியதில் 7 மாத குழந்தை படுகாயம் அடைந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மறவநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 28). இவரது மனைவி மலர்தேவி (23). இவர்களுக்கு மகிழினி என்ற 7 மாத குழந்தை உள்ளது. இவர்கள் மறவநத்தம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.நேற்று மாலை அந்த பகுதியில் திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. அப்போது ராஜா குடியிருந்த வீட்டின் மேற்கூரை காற்றில் தூக்கி வீசப்பட்டது. அப்போது வீட்டின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த குழந்தை மகிழினிக்கு படுகாயம் ஏற்பட்டது.

    இதில் காயமடைந்த மகிழினியை அருகே இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அயிலூர் குடிக்காட்டில் மக்கள் தொடர்பு முகாம் 14-ந்தேதி நடக்கிறது
    • பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக முன்னதாகவே சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்களை அளித்து பயனடையலாம்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், அயிலூர் குடிக்காடு கிராமத்தில் வருகிற 14-ந்தேதி கலெக்டர் கற்பகம் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. எனவே, அயிலூர் குடிக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக முன்னதாகவே சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்களை அளித்து பயனடையலாம், என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி மூலவர், உற்சவர் பாலமுருகனுக்கு நேற்று காலை பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கொண்டு வந்த பாலால் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பாலமுருகனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் பாலமுருகனை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பாலமுருகன் சன்னதியில் வைகாசி விசாகத்தையொட்டி அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு வழிபாடும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சுப்ரமணியர் சன்னதியில் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    வைகாசி விசாகத்தையொட்டி ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் மலை மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோவிலிலும், வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரத்தில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் கோவிலில் உள்ள தண்டாயுதபாணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாக விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

    • அரசு பஸ் மோதி டிரைவர் பலியானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் அருகே குரும்பலூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கோபி என்ற நாகராஜ் (வயது 45), லாரி டிரைவர். இவர் நேற்று இரவு குரும்பலூர் பழைய சினிமா தியேட்டர் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அரசு டவுன் பஸ் நாகராஜ் மீது மோதியது. இதில் கீழே விழுந்த நாகராஜ் மீது அந்த பஸ்சின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில் படுகாயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கறவை மாடு வளர்ப்பு இலவச பயிற்சி முகாம் 9-ந்தேதி நடக்கிறது
    • பராமரிக்கும் முறை மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது

    பெரம்பலூர் :

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் ஊராட்சிக்குட்பட்ட திருச்சி-சென்னை பைபாஸ் சாலையில் செங்குணம் கைகாட்டி எதிர்புறத்தில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் சார்பில் கறவை மாடு வளர்ப்பு குறித்த இலவச பயிற்சி முகாம் வருகிற 9-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் கறவை மாடு வளர்ப்பு இனங்கள் மற்றும் இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, பராமரிக்கும் முறை மற்றும் நோய்த்தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    இந்தப் பயிற்சியில் சேர விரும்பும் விவசாயிகள் வேலை நாட்களில் காலை 10 மணிக்கு மேல் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்திற்கு நேரில் அல்லது 9385307022 என்ற செல்போனில் தொடர்பு கொண்டு தங்களது ஆதார் எண்ணை தெரிவித்து பெயர் பதிவு செய்து கொண்டு பயிற்சியில் கலந்து கொள்ளுமாறு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தின் தலைவரும், பேராசிரியருமான டாக்டர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.


    • பெரம்பலூரில் ரூ.11 கோடி மோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யபட்டார்
    • முக்கிய குற்றவாளியான ஜெயபாலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அணைப்பாடி கிராமத்தை சேர்ந்த ரத்தினசாமி மகன் தனவேல் (வயது 42) . இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 10 சதவீதம் லாபம் கிடைக்கும் என்ற ஆசை வார்த்தையை நம்பி பணத்தை கட்டி ஏமாந்துவிட்டதாக மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார்.இதன்பேரில் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியதில், கன்னியாகுமரி மாவட்டம், கடியாப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த ஸ்டனிஸ்லாஸ் மகன் ஜெயபால், தோவாலை தாலுகா, விஷ்ணுபுரத்தை சேர்ந்த மதன் மனைவி ராதிகா (28), அதே நிறுவனத்தை சேர்ந்த முகவர் தர்மராஜ் ஆகியோர் புகார்தாரர் தனவேல் மற்றும் சிவா, குமார், பிரபாகரன் மற்றும் சில நபர்களிடமிருந்து ரூ. 11 கோடியே ஒரு லட்சத்தை ஆசை வார்த்தி கூறி பெற்று ஏமாற்றியது தெரியவந்தது.

    இதையடுத்து எஸ்பி ஷ்யாம்ளாதேவி உத்தரவின்பேரில், ஏடிஎஸ்பி மதியழகன், மாவட்ட குற்றப்பிரிவி டிஎஸ்பி தங்கவேல் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை தேடிவந்தனர்.இந்த வழக்கில் தொடர்புடைய ராதிகாவை கடந்த 23ம்தேதி அவரது சொந்த ஊரில் போலீசார் கைது செய்து அழைத்து வந்து பெரம்பலூர் குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய தலைமறைவாகியிருந்த முகவர் தர்மலிங்கத்தை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜெயபாலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எண்ணும்-எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது
    • பயிற்சியினை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மயில்வாகணன், உதவி திட்ட அலுவலர் (தொடக்க நிலை) ரமேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், பெரம்பலூர் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் 4 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 2023-24-ம் ஆண்டிற்கான எண்ணும்-எழுத்தும் திட்டத்தினை தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்து முதலாம் ஆண்டிற்கான 3 நாள் பயிற்சியை நேற்று தொடங்கியது. பெரம்பலூர் ஒன்றியத்தில் தந்தை ரோவர் பள்ளி வளாகத்தில் நடந்த இந்த பயிற்சியினை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மயில்வாகணன், உதவி திட்ட அலுவலர் (தொடக்க நிலை) ரமேஷ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    மாணவர்களுக்கு மகிழ்ச்சியான கற்றல் தொடர்ந்திட, அனைத்து நிலை மாணவர்களும் செயல்பாடுகளில் பங்குபெற, படைப்பாற்றல் சிறந்து விளங்கிட, பேச்சுத்திறன் வளர்ந்திட, சக மாணவர்களுடன் இணைந்து செயல்படுதல் ஆகிய செயல்பாடுகள் பயிற்சியின் கருப்பொருளாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் ஜோதிலட்சுமி, அருண்குமார், ஆசிரியர் பயிற்றுனர்கள், 4, 5-ம் வகுப்பில் உள்ள 96 தொடக்க நிலை ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ெபரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பனை-காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடி திறக்கப்பட்டது
    • அங்காடியினை கலெக்டர் கற்பகம், பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு மாநில பனை வெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம்-கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பனை மற்றும் காதி கிராப்ட் பொருட்கள் விற்பனை அங்காடியின் திறப்பு விழா நேற்று நடந்தது. அங்காடியினை கலெக்டர் கற்பகம், பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலையில் ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். அப்போது கலெக்டர் கற்பகம் பேசுகையில், இந்த அங்காடியில் பனங்கற்கண்டு, பனங்கற்கண்டு மிட்டாய், பனம்பழ சாறு, சுக்கு காபி, பனை ஓலை பொருட்கள், சுக்கு காபி தூள், பனங்கிழங்கு பொடி, பதநீர், பனங்கருப்பட்டி, கதர் பொருட்கள், காதி சோப்பு வகைகள் மற்றும் கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    உடலுக்கு ஆரோக்கியம் தரும் இயற்கையாக விளையும் பனை பொருட்களை கொண்டு, மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்றி இந்த அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இப்பொருட்களை வாங்கி பயன்படுத்தி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும், என்றார். இதில் கதர் கிராம தொழில் வாரிய உதவி இயக்குனர் (திருச்சி) ரவிக்குமார், கண்காணிப்பாளர் மணிகண்டன், புதுக்கோட்டை மண்டல திட்ட அலுவலர் ஆறுமுகம், தாசில்தார் கிருஷ்ணராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூரில் ஊரக வளர்ச்சித்துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • ஆர்ப்பா ட்டத்தில் ஊரக வளர்ச்சி த்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொ ண்டனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பா ட்டத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் மரியதாஸ் முன்னிலை வகித்தார். சங்க மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை வகித்து பேசுகையில், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன் ஒட்டு மொத்தமாக ஊரக வளர்ச்சித்துறை அலுவ லர்களை அவமா னப்படுத்தும் வகையில் ஊரக வளர்ச்சித்துறையே தேவையில்லாத ஒன்று என பேசியதை வன்னையாக கண்டி க்கின்றோம்.அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவத்தார். இதில் ஜெயராமனை கண்டித்து கோஷ மிட்டனர். ஆர்ப்பா ட்டத்தில் ஊரக வளர்ச்சி த்துறை அலுவலர்கள் பலர் கலந்துகொ ண்டனர். முன்னதாக வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் வரவேற்றார். முடிவில் ஒன்றிய பணிமேற்பா ர்வையாளர் தண்டபாணி நன்றி கூறினார்.

    • துங்கபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு ரூ.35 லட்சத்தில் புதிய தேர் செய்யும் பணி தொடங்கபட்டது
    • இன்னும் 3 மாதத்தில் கோவில் தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெறும்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா துங்கபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக தேர் செய்ய வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள் புதிதாக தேர் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யவேண்டுமென அரசுக்கு கோரிக்கை விடுத்ததை ஏற்று புதிதாக தேர் செய்ய ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து தேர் செய்ய முதற்கட்டமாக ரூ.9 லட்சம் வழங்கப்பட்டு தேர் செய்யும் பணி துவங்கி நடந்து வருகிறது.

    தற்போது மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் கலியபெருமாள் 2-ம் கட்டமாக ரூ. 5 லட்சத்து 60 ஆயிரத்திற்கான காசோலையை கோயில் தர்மகர்த்தா ராஜாங்கம், ஸ்தபதி மணிகண்டன் ஆகியோரிடம் வழங்கினார். பின்னர் கலியபெருமாள் கூறுகையில், வரதராஜ பெருமாள் கோயிலுக்கு புதிதாக தேர் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தேர் தரமான கட்டுமானத்துடன் அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் 3 மாதத்தில் கோவில் தேர் செய்யப்பட்டு வெள்ளோட்டம் நடைபெறும் என தெரிவித்தார். நிகழ்ச்சியின்போது கோவில் செயல் அலுவலர் (பொ) ஹேமாவதி உடனிருந்தார்.

    • தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் மனம் நலம் பாதிக்கப்பட்ட அசோக்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மங்களம் கிராமம் காலனி தெருவை சேர்ந்தவர் செல்வ ராஜ் (வயது 65), விவசாயி. இவரது மகன் அசோக்ராஜ் (23). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

    இதையடுத்து அவரது பெற்றோர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். மேலும் கோவில்களுக்கும் சென்ற வேண்டுதல் நிறைவேற்றி பிரார்த்தனை செய்து வந்தனர். அதே வேளையில் அசோக்ராஜ் உரிய சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகளும் சாப்பிட்டு வருகிறார்.

    இதற்கிடையே அசோக் ராஜ் கடந்த மூன்று மாதங்களாக சரியான முறையில் மருந்து, மாத்திரை சாப்பிட மறுத்து வந்துள்ளார். அவரது பெற்றோர் எடுத்துக்கூறியும் அசோக்ராஜ் கண்டுகொள்ளவில்லை. இதனால் நோயின் தீவிரம் அதிகமாகி அடிக்கடி வீட்டில் உள்ளவர்களை கண்மூடித்தனமாக தாக்குவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு தனது தாய் மணிமொழியை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் வீட்டில் அவரது வயதான தந்தை செல்வராஜ் மட்டும் தனியாக இருந்தார்.

    அவரையும் அசோக்ராஜ் கம்பால் சரமாரியாக தாக்கினார். இதில் நிலைகுலைந்த அவர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இன்று காலையில் வந்து மணிமொழி பார்த்தபோதுதான் கணவர் செல்வராஜ் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டதால் உயிர் தப்பினார்.

    பின்னர் இது குறித்து குன்னம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குன்னம் போலீசார் மனம் நலம் பாதிக்கப்பட்ட அசோக்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையுண்ட செல்வராஜ் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மனநலம் பாதித்த மகன் தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • பெரம்பலூரில் மாற்றுத்திறனாளியின் நிலத்தை அளவீடு செய்ய மறுத்தமைக்காக அவருக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணமாக வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
    • சீதாராமன் பெயரில் தனிப்பட்டாவாக மாற்றுவதற்கு நிலத்தை அளவீடு செய்து, எல்லைக்கல் நடுவதற்காக நில அளவைத்துறை வட்ட துணை ஆய்வாளரிடம் 16.4.2021 அன்று மனு கொடுத்திருந்தார்

    பெரம்பலூர்:

    பெரம்பலூரை அடுத்த விளாமுத்தூரை சேர்ந்தவா் விவசாயி சந்திரசேகர் (வயது 53). மாற்றுத்திறனாளியான இவர், நொச்சியம் கிராம எல்லையில் உள்ள ஏறத்தாழ 49 சென்ட் நிலத்தில் தனது மகன் சீதாராமன் பெயரில் தனிப்பட்டாவாக மாற்றுவதற்கு நிலத்தை அளவீடு செய்து, எல்லைக்கல் நடுவதற்காக நில அளவைத்துறை வட்ட துணை ஆய்வாளரிடம் 16.4.2021 அன்று மனு கொடுத்திருந்தார். இதற்காக தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நிலம் அளப்பதற்குரிய கட்டணமும் செலுத்தியிருந்தார்.

    இதுதொடர்பாக சந்திரசேகர் நில அளவைத்துறையினரை பலமுறை நேரில் அணுகினார். ஆனால் அவரது மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தநிலையில் கிராம மக்கள் சிலர் ஆட்சேபணை தெரிவிப்பதாக கூறி வட்ட துணை ஆய்வாளர், மனுதாரர் சந்திரசேகரின் நிலத்தை அளந்துகாட்டி, எல்லைக்கற்கள் நடாமல், அவரை அலையவிட்டுள்ளார். நில அளவைத்துறையினரின் அலட்சியம் மற்றும் சேவை குறைபாடு காரணமாக மனஉளைச்சலுக்கு ஆளான சந்திரசேகர், தனது வக்கீல் அய்யம்பெருமாள் மூலம் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வட்ட துணை ஆய்வாளர், பெரம்பலூர் தாசில்தார், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட நில அளவையர், மாவட்ட கலெக்டர் ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்ற தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர், மனுதாரரின் மனுவை பகுதியாக அனுமதித்து, இருதரப்பிலும் விசாரணை நடத்தினர். பெரம்பலூரில் சந்திரசேகரின் மனுவின் மீது உரிய தீர்வு காணாமல் சேவைக்குறைபாடு காரணமாக அவரை அலையவிட்டு மனஉளைச்சலுக்கு ஆளாக்கியமைக்காக வட்ட துணை ஆய்வாளர் ரூ.20 ஆயிரம் நிவாரண தொகையும், வழக்கு செலவுத்தொகையாக ரூ.10 ஆயிரமும் வழங்க வேண்டும் என்றும், தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் அவரது நிலத்தை அளவீடு செய்து நான்கு புறத்திலும் எல்லைக்கல் நட்டுத்தரவேண்டும் என்றும், அதனை அறிக்கையாக நுகர்வோர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டும் என்றும், மேலும் மற்ற எதிர்மனுதாரர்களான தாசில்தார் முதல் கலெக்டர் வரை அனைவரையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்தும் தீர்ப்பில் உத்தரவிட்டிருந்தனர்.

    ×