என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பெரம்பலூரில் பாலம் அகலப்படுத்தும் பணியினை கோட்ட பொறியாளர் ஆய்வு செய்தார்
    • 8 மாதத்திற்கு முன்னதாக முடிக்க அறிவுறுத்தல்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் செங்குணம் பிரிவு பகுதியில் சாலையின் கீழ் (சப்-வே) பாலம் குறுகியதாகவும், மழைக்காலங்களில் வாகனங்கள் சென்றுவர இயலாத நிலையில் இருந்தது. ஏற்கனவே இருந்த பாலத்தினை ரூ.60 லட்சம் மதிப்பீட்டில், 5 மீ.அகலம், 2.5 மீ. உயரத்துடன் 37 மீ. நீளத்திற்கும் அகலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டம் மூலமாக அகலப்படுத்தி சர்வீஸ் சாலை அமைப்பதின் முதல்கட்ட பணி தற்போது நடைபெற்று வருகிறது. இப்பணியை நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் கலைவாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது இப்பணி 8 மாதத்திற்கு முன்னதாக முடிக்குமாறும், பணியை தரமாக மேற்கொள்ளுமாறும் அவர் அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது உதவி கோட்ட பொறியாளர் தமிழ்அமுதன், இளநிலை பொறியாளர் ராஜா, சாலை ஆய்வாளர் சுப்ரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • பெரம்பலூர் மாவட்டத்தில் அரிசி அரவை ஆலைகளில் போலீசார் சோதனை
    • ரேஷன் அரிசியை மாவாக அரைத்தால் கடும் நடவடிக்கை என எச்சரிக்கை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்றப் புலனாய்வு துறை எஸ்பி சுஜாதா மேற்பார்வையில் சப் இன்ஸ்பெக்டர் கதிரவன், ஏட்டு சுரேஷ்குமார் மற்றும் போலீசார் கொண்ட குழுவினர் பெரம்பலூர் மாவட்டத்தில் அகரம், நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், புதுக்குறிச்சி, தேனூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசி அரவை ஆலை மற்றும் மாவு மில்களில் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தெரிவிக்கையில், பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தனியார் அரவை ஆலைகள் மற்றும் மாவு மில்களில், கால்நடைக்கு உணவாகவோ, பிற வர்த்தக நோக்கங்களுக்காக ரேசன் அரிசியை மாவாக அரைத்தோ அல்லது குருணையாக உடைத்தோ கொடுக்கப்படுவது தண்டனைக்குறிய குற்றமாகும். இது தொடர்பான குற்றங்கள் கண்டறியப்பட்டால் கடுமையான சட்டப்பூர்வ நடிக்கை மேற்கொள்ளப்படும். இது போன்ற குற்றச் செயல்கள் குறித்து பொதுமக்கள் எங்களுக்கு தகவல் அளிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.

    • கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெரம்பலூரில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
    • முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்

    பெரம்பலூர், 

    பெரம்பலூர் துறைமங்கலம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் அருகில் சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். துணை தலைவர்கள் ராஜா, ரமநாயகம், இணைசெயலாளர்கள் மணிவேல், ரஜினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் பழனிசாமி, மாவட்ட செயலாளர் சுப்ரமணியன், சிஐடியு மாவட்ட செயலாளர் அகஸ்டின், மாநில செயற்குழு உறுப்பினர் சுப்ரமணியன், அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் குமரிஆனந்தன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.இதில் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும், சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10சதவீத ஆபத்து படி வழங்க வேண்டும், சாலை பணியாளர்களில் இறந்தோரின் வாரிசுகளுக்கு நெடுஞ் ்சாலைத்துறையிலேயே வாரிசு பணி வழங்க வேண்டும், சாலைப்பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்குரிய ஊதிய மாற்றம் செய்து ரூ. 5 ஆயிரத்து 200 முதல் 20 ஆயிரத்து 200 வரையும், தர ஊதியம் ஒரு ஆயிரத்து 900 வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷமிட்டனர்.முன்னதாக மாவட்ட இணைசெயலாளர் மதியழகன் வரவேற்றார். முடிவில் உட்கோட்ட தலைவர் பழனிசாமி நன்றி கூறினார். தொடர்ந்து கோரிக்கைளை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை மனுவினை முதல்வர், நெடுஞ்சாலைதுறை அமைச்சர், கண்காணிப்பு பொறியாளர், முதன்மை இயக்குநர், முதலமைச்சரின் செயலாளர், தலைமை பொறியாளர் ஆகியோருக்கு தபால் அனுப்பினர்.

    • வேன்- டிராக்டர் மோதி விபத்தில் பலர் காயம்
    • 108 ஆம்புலன்ஸ் டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார்

    திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் ஒரு வேனில் திருவண்ணாமலை கோவிலுக்கு பவுர்ணமி கிரிவலம் சென்று விட்டு மீண்டும் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தனர். இன்று அதிகாலை சுமார் 2.30 மணி அளவில் பெரம்பலூர் மாவட்டத்திற்குள் வந்தனர். அவர்கள் பயணம் செய்த வேன் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி அருகே வந்தபோது முன்னாள் சென்ற டிராக்டரை முந்தியது.

    அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் மீது மோதியதில் டிராக்டர் தலைகீழாக கவிழ்ந்தும், வேன் முன்பக்க கண்ணாடி உடைந்தும் சேதமடைந்தது. இதில் டிராக்டர் டிரைவர் மற்றும் வேனில் வந்த 5 பேரும் பலத்த காயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    அப்போது போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை வரவழைத்தனர். உடனடியாக அங்கு ஆம்புலன்ஸ் வேன் சென்றது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்த இடத்திற்கு எதிர் திசை நோக்கி நிறுத்தி வாகனத்தை விட்டு அதில் இருந்த ஆம்புலன்ஸ் உதவியாளர் காயம் அடைந்த டிராக்டர் ஓட்டுநரை பார்க்க சென்றார்.

    பின்னர் வாகனத்தின் கதவுகளை திறந்து அதில் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் டிரைவர் ராஜேந்திரன் ஏற்றி கொண்டிருந்தார். அந்த சமயத்தில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி அதிவேகமாக வந்த ஆம்னி பேருந்து டிரைவர் விபத்து சம்பவத்தை கவனிக்காமல் ரோட்டின் நடுவே இருந்த தடுப்பு கட்டைகள் மீது மோதினார்.

    அதே வேகத்தில் எதிரே நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனம் மீது மோதியதில் சுமார் 200 மீட்டர் தூரம் ஆம்புலன்ஸ் தூக்கி வீசப்பட்டது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் பெரம்பலூர் அரணாரையைச் சேர்ந்த ராஜேந்திரன் மற்றும் வேனில் பயணித்த திண்டுக்கல்லை சேர்ந்த குப்புசாமி, கவிப்பிரியா ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

    மேலும் டிராக்டரும், வேனும் மோதிய விபத்தில் காயமடைந்த திண்டுக்கல்லை சேர்ந்த கணேசன் (வயது 42), நீலா (65), கிழவன் (45), ராமநாதபுரத்தை சேர்ந்த சாமிதாஸ் (40), சேகர் (40) ஆகியோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அடுத்தடுத்து நடந்த இந்த தொடர் விபத்தால் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஷியாமளாதேவி மற்றும் பெரம்பலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிச்சாமி ஆகியோர் விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசாரை வரவழைத்து போக்குவரத்தை சரி செய்தனர்.

    இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தொடர் விபத்து சம்பவம் பெரம்பலூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பொம்மனப்பாடியில் ஊரணி விழா நடைபெற்றது.
    • இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகேயுள்ள உள்ள பொம்மனப்பாடி கிராமத்தில் ஊரணி விழா நடைபெற்றது. இதையொட்டி செல்லியம்மன், மாரியம்மன் மற்றும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றது. ஊரணி விழாவையொட்டி பொதுமக்கள் அம்மனுக்கு பொங்கல், மாவிளக்கு வைத்து வழிபட்டனர். அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் முக்கிய வீதிகள் வழியாக சுவாமிகள் டிராக்டர் மூலம் ஊர்வலமாக சென்றனர். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.

    • பெரம்பலூர் அருகே பெண் மர்மமான முறையில் இறந்தார்.
    • இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    அரியலூர் மாவட்டம், மேலப்பழுவூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகள் சிவசக்தி (வயது 38). உளவியல் நிபுணரான இவர், தனது தந்தையின் அக்காள் மகனான கீழப்பழுவூரை சேர்ந்த பூமிபால சுந்தரத்தை காதலித்து கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 18 வயதில் மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சிவசக்தி, பூமிபால சுந்தரத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவகாரத்து பெறாமல் அவரை விட்டு பிரிந்து சென்றார்.

    மகளை பூமிபால சுந்தரம் வளர்த்து வருகிறார். பின்னர் சிவசக்தி பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, சிறுகன்பூர் கிழக்கு தெருவை சேர்ந்தவரும், ஏற்கனவே திருமணமானவருமான மருவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணிபுரியும் நேரு (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் சிறுவாச்சூரில் வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு சிவசக்தி வழக்கம் போல் தனது அறைக்கு தூங்க சென்றார்.

    ஆனால் நேற்று காலையில் நேரு எழுந்து பார்க்கும் போது சிவசக்தி நாற்காலியில் எவ்வித அசைவும் இன்றி அமர்ந்திருந்தாராம். இதையடுத்து சிவசக்தியை மீட்டு சிகிச்சைக்காக சிறுவாச்சூரில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு நேரு அழைத்து சென்றார். ஆனால் அங்கு சிவசக்தியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் நேரு சிவசக்தியின் உடலை தனது வீட்டிற்கு எடுத்து வந்து, பின்னர் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

    இந்த சம்பவம் தொடர்பாக சிவசக்தியின் தாய் அன்புமணி கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் சிவசக்தியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறந்து போன சிவசக்திக்கு சிறு வயதில் இருந்து இதயத்தில் பிரச்சினை இருந்ததாகவும், கடந்த 3 ஆண்டுகளாக இதய பிரச்சினைக்கு அவர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. டாக்டர் நேருவின் மனைவி, 3 குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சூறாவளி காற்றில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    • வெங்கனூரில் ஆலங்கட்டி மழை பெய்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பகுதியில் நேற்று மாலை பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. வெங்கனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. சூறாவளி காற்றினால் பெரம்பலூர்-ஆத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் வெங்கனூர் அருகே சாலையோரத்தில் இருந்த புளியமரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலையில் கிடந்த புளிய மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதேபோல் கிருஷ்ணாபுரம்- அரும்பாவூர் சாலையில் தொண்டமாந்துறை பிரிவு அருகே சாலையில் புளியமரம் ஒடிந்து விழுந்தது. அதனையும் போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் பலத்த சூறாவளி காற்றினால் வெங்கலம், தழுதாழை, அன்னமங்கலம், விசுவகுடி, தொண்டமாந்துறை ஆகிய ஊர்களில் மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதையடுத்து, மின்வாரிய ஊழியர்கள் காற்று, மழை நின்றபின் சீர் செய்தனர்.

    • வலிப்பு நோய் ஏற்பட்ட விவசாயி உயிரிழந்தார்
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே வடக்கு மாதவி ஏரிக்கரை காட்டு கொட்டகையை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 66), விவசாயி. இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் ஏற்படுவது வழக்கம். கடந்த 29-ந்தேதி பெரியசாமி அதே பகுதியில் உள்ள முருகன் கோவிலில் கட்டையில் அமர்ந்திருந்த போது திடீரென்று வலிப்பு நோய் ஏற்பட்டு கீழே விழுந்தார். இதில், தலையின் பின்பக்கம் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பெரியசாமி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெரம்பலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுதொடங்கியது
    • நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில், அறிவியல் பாடப்பிரிவுகளில் 20 பேருக்கு இடம் கிடைத்தது. பெரம்பலூர் குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023-24-ம் கல்வியாண்டிற்கு முதலாம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்த மாணவ-மாணவிகளுக்கு சேர்க்கைக்கான முதல் பொது கலந்தாய்வு முதல் கட்டமாக கடந்த 30-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று இளங்கலை அறிவியல் பாடப்பிரிவுகளான பி.எஸ்.சி. கணிதம், வேதியியல், இயற்பியல், நுண்ணுயிரியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள் மற்றும் பி.டெக் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடந்தது.

    தலா 40 இடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களில் 560 மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, மாணவ-மாணவிகளின் கல்வி சான்றிதழ்கள் உள்ளிட்டவை பேராசிரியர்களால் சரி பார்க்கப்பட்டது. கலந்தாய்வில் கணிதம், வேதியியல் பாடப்பிரிவுகளை தவிர மற்ற பாடப்பிரிவுகளில் மொத்தம் 20 பேருக்கு இடம் கிடைத்தது. நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அனைத்து கலை பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடக்கிறது.

    • சூறாவளி காற்றில் வீட்டின் மேற்கூரை தூக்கி வீசியதில் 7 மாத குழந்தை படுகாயம் அடைந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள மறவநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 28). இவரது மனைவி மலர்தேவி (23). இவர்களுக்கு மகிழினி என்ற 7 மாத குழந்தை உள்ளது. இவர்கள் மறவநத்தம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்.நேற்று மாலை அந்த பகுதியில் திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. அப்போது ராஜா குடியிருந்த வீட்டின் மேற்கூரை காற்றில் தூக்கி வீசப்பட்டது. அப்போது வீட்டின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த குழந்தை மகிழினிக்கு படுகாயம் ஏற்பட்டது.

    இதில் காயமடைந்த மகிழினியை அருகே இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு போய் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அயிலூர் குடிக்காட்டில் மக்கள் தொடர்பு முகாம் 14-ந்தேதி நடக்கிறது
    • பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக முன்னதாகவே சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்களை அளித்து பயனடையலாம்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், அயிலூர் குடிக்காடு கிராமத்தில் வருகிற 14-ந்தேதி கலெக்டர் கற்பகம் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. எனவே, அயிலூர் குடிக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக முன்னதாகவே சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் மனுக்களை அளித்து பயனடையலாம், என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வைகாசி விசாகத்தையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி மூலவர், உற்சவர் பாலமுருகனுக்கு நேற்று காலை பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேற கொண்டு வந்த பாலால் அபிஷேகம் நடத்தப்பட்டது. இதையடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பாலமுருகனுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் பாலமுருகனை தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    பெரம்பலூர் அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பாலமுருகன் சன்னதியில் வைகாசி விசாகத்தையொட்டி அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு வழிபாடும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தினி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாகத்தையொட்டி சுப்ரமணியர் சன்னதியில் சிறப்பு அபிஷேகங்களும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    வைகாசி விசாகத்தையொட்டி ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் மலை மீது அமைந்துள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி கோவிலிலும், வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரத்தில் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் கோவிலில் உள்ள தண்டாயுதபாணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் வைகாசி விசாக விழாவையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.

    ×