என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • நடுநிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டி தர கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது
    • மாணவர்களின் பெற்றோர்கள் மனு அளித்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்களில் சிலர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர்.அதில், 1962-ம் ஆண்டு கட்டப்பட்ட பள்ளியின் ஓட்டு கட்டிடத்தால் தற்போது மாணவ-மாணவிகளுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அங்குதான் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு பரிமாறப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் அந்த ஓட்டு கட்டிடம் ஒழுகி மழைநீர் வகுப்பறையில் தேங்குகிறது. 61 ஆண்டுகள் பழமையான அந்த ஓட்டு கட்டிடத்தை இடித்து விட்டு பள்ளிக்கு புதிதாக கட்டிடம் கட்டிக்கொடுக்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.

    • வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் தீ வைத்து எரிக்கப்பட்டது
    • பெரம்பலூர் போலீசார் விசாரணை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையம் தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்த வேலுவின் மகன் ராஜேஷ்கண்ணன் (வயது 36). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு வீட்டிற்கு தூங்கச்சென்றார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் ராஜேஷ்கண்ணனின் மொபட்டிற்கு தீ வைத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். மொபட் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததை கண்ட ராஜேஷ்கண்ணன் குடும்பத்தினர் வீட்டிற்கு வெளியே ஓடி வந்தனர்.பின்னர் அவர்கள் மொபட்டில் எரிந்த தீயை தண்ணீரை ஊற்றியும், மண்ணை போட்டும் அணைக்க முயன்றனர். ஆனாலும் மொபட் எரிந்து தீக்கிரையானது. அருகில் நின்று கொண்டிருந்த சைக்கிளின் சில பாகங்களும் தீயில் எரிந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜேஷ்கண்ணன் பெரம்பலூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் மொபட்டிற்கு தீ வைத்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதேபோல் கடந்த 15-ந்தேதி அதிகாலை பெரம்பலூர் சங்குபேட்டை பெரியார் தெருவில் ஒரு வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த ஸ்கூட்டருக்கு மர்மநபர்கள் தீ வைத்து எரித்து சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • ஆர்ப்பாட்டத்திற்கு பின் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்

    பெரம்பலூர்,

    தமிழ்நாடு காது கேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான பெரம்பலூர் மாவட்ட அமைப்பு சார்பில் நேற்று காலை ஆா்ப்பாட்டம் நடந்தது. பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். துணை அமைப்பாளர் செல்லமுத்து முன்னிலை வகித்தார். காது கேளாதோர், வாய் பேசாதோர் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அனைத்து மாவட்டங்களில் உள்ள கலெக்டர் அலுவலகம், போலீஸ் அலுவலகம், அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சைகை மொழி பெயர்ப்பாளரை உடனடியாக நியமிக்க வேண்டும். தொகுப்பூதியத்தில் பணிபுரியும் அவர்களை அரசாணை எண் 151-யின் படி உடனடியாக நிரந்தரப்படுத்த வேண்டும். அரசு வேலைகளில் அவர்களுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடை முறையாக வழங்க வேண்டும். அரசு இலவச வீட்டுமனையை உடனடியாக வழங்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களை கடும் ஊனமுற்றோர் பட்டியலில் இணைத்து, அவர்களுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் நிறைவேற்ற வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்களில் சிலர் கலெக்டா் அலுவலகத்துக்கு சென்று மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணியை சந்தித்து இது தொடர்பான கோரிக்கை மனுவினை கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

    • 3 விவசாயிகளுக்கு, அதிகாரிகள் ரூ.1½ லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
    • 2021ம் ஆண்டு மழையினால் கன மழையினால் வெங்காயம் நாசமானதற்கான காப்பீடு தொகை

    பெரம்பலூர்,

    பெரம்பலூரில் உள்ள கம்பன் தெருவை சேர்ந்த மெய்யனின் மகன் கார்த்திகேயன். இவர் நக்கசேலத்தில் உள்ள தனக்கு சொந்தமான வயலில் கடந்த 2021-ம் பயிரிட்டிருந்த ஆண்டு சிறிய வெங்காயத்திற்கு காப்பீடு செய்து, பிரீமியம் தொகையாக ரூ.7,810-ஐ மத்திய அரசின் வேளாண்மை காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தினார். இதேபோல் மெய்யன் தனது வயலில் கடந்த 2021-ம் சாகுபடி செய்திருந்த சின்ன வெங்காயத்திற்கு, ரூ.1,464-ஐ பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு பெற்றிருந்தார். அப்போது கனமழை பெய்து வெங்காயப்பயிர்கள் அழுகி, விளைச்சல் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதேபோல் பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்த விவசாயி குணசேகரன், தனது மனைவி ஹேமலதா பெயரில் உள்ள வயலில் 2020-ம் ஆண்டு சிறிய வெங்காயத்திற்கு பயிர் காப்பீடு செய்து, ரூ.5 ஆயிரத்து 91-ஐ பிரீமியமாக செலுத்தியிருந்தார். பருவ மாறுபாடு காரணமாக சின்ன வெங்காயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து கார்த்திகேயன், மெய்யன் மற்றும் ஹேமலதா ஆகிய 3 பேரும் தனித்தனியே வேளாண்மை காப்பீட்டு நிறுவனத்தை அணுகி பயிர்காப்பீட்டு தொகையை அனுமதிக்க முறையிட்டனர். ஆனால் பயிர்காப்பீட்டு தொகை வழங்கப்படாமல் 3 பேரும் அலைக்கழிக்கப்பட்டனர் இதனால் மன உளைச்சலுக்கு ஆளான 3 பேரும் வக்கீல் அய்யம்பெருமாள் மூலம், பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு செய்து வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணைய தலைவர் ஜவகர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் விசாரித்தனர். இதில் மனுதாரர்கள் கார்த்திகேயன், அவரது தந்தை மெய்யன், ஹேமலதா ஆகிய 3 பேருக்கும் மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காகவும், சேவை குறைபாடு காரணமாகவும், வேளாண்மை காப்பீட்டு நிறுவனத்தின் சென்னை மண்டல மேலாளர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஆகியோர் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ, தலா ரூ.50 ஆயிரம் மற்றும் வழக்கு செலவுத்தொகை தலா ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை தீர்ப்பு வெளியான 45 நாட்களுக்குள் வழங்க உத்தரவிட்டனர். அவ்வாறு வழங்காவிட்டால், வழக்கு தாக்கல் செய்த 2022 டிசம்பர் மாதத்தில் இருந்து 8 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். 

    • என்.ஐ.ஏ.அதிகாரிகளை கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • எஸ்டிபிஐ கட்சி சார்பில் நடைபெற்றது.

    பெரம்பலூர்,

    என்.ஐ.ஏ. அதிகாரிகளை கண்டித்து பெரம்பலூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே காந்தி சிலை முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் அப்துல்கனி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், அகில இந்திய செயற்குழு உறுப்பினர் தஞ்சை பாரூக் உள்ளிட்ட நிர்வாகிகளின் வீட்டில் அத்துமீறி சோதனை நடத்திய என்.ஐ.ஏ. அதிகாரிகளை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    • வயலுக்கு சென்ற பெண்ணை விஷ வண்டு கடித்ததால் உயிரிழந்தார்
    • உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள வி.களத்தூர் ராயப்பா நகரை சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 65). இவர் நேற்று முன்தினம் அடுப்புக்கு விறகு பொறுக்குவதற்காக வயலுக்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியில் இருந்த விஷ வண்டுகள் பழனியம்மாளை கடித்துள்ளது. இந்தநிலையில் முகம் வீங்கிய நிலையில் பழனியம்மாள் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வி.களத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழனியம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறையில் ரவுடியை சந்தித்து பா.ஜ.க. நிர்வாகி சதித்திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது
    • திரைப்பட இயக்குனர் கொலையில் கைதான பா.ஜ.க. நிர்வாகி பற்றி பரபரப்பு தகவல்கள்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட அரணாரை அண்ணா தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் என்கிற அப்துல் ரகுமான் (வயது 40). திரைப்பட இயக்குனரான இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் ரவுடி பட்டியலிலும் சேர்க்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் இவர் கடந்த 5-ந் தேதி மாலை தனது பிறந்த நாள் மற்றும் திருமண விழாவையொட்டி பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலின் மதுபான பாரில் நண்பர்களுடன் மது அருந்தி கொண்டாடினார்.அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் அவரை வெட்டி படுகொலை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர்.இந்த கொலை வழக்கு தொடர்பாக பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராஜன் மகன் சரவணன் (22) என்பவர் திருச்சி கோர்ட்டில் சரணடைந்தார்.இதையடுத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக பெரம்பலூர் போலீசார் பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு மேட்டு தெருவை சேர்ந்த அபினாஷ் (22), திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, வடமலை சந்துவை சேர்ந்த நவீன் (20), நவல்பட்டு பூலாங்குடி காலனி பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பிரேம் ஆனந்த் (45), அவரது மனைவி ரமணி (34), பெரம்பலூர் அருகே செஞ்சேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நவீன் (19) மற்றும் 17 வயதுடைய சிறுவன் ஆகிய 6 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர்.பெரம்பலூர் மாவட்டம், அம்மாபாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடி அழகிரி தரப்புக்கும், கொலையான அப்துல் ரகுமானுக்கும் கட்ட பஞ்சாயத்து செய்வதில் தொழில் போட்டி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள வழக்கில் கைதாகி அழகிரி தற்போது சிறையில் உள்ளதால், அப்துல்ரகுமான் கட்ட பஞ்சாயத்தில் அதிகளவில் ஈடுபட்டதால் அழகிரி தரப்புக்கு வருமானம் பாதிக்கப்பட்டது. இதனால் அழகிரிக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் செல்வாக்கு குறைந்து வந்ததாம். இதனால் சிறையில் இருக்கும் அழகிரி தனது மனைவி சங்கீதா மூலம் திட்டம் தீட்டி கூட்டாளிகளை வைத்து அப்துல் ரகுமானை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைதான ரமணி அழகிரியின் தங்கை ஆவார்.இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தலைமறைவாகி இருந்த பெரம்பலூர் திருநகரை சேர்ந்தவரும், பெரம்பலூர் மாவட்ட பா.ஜனதா துணை தலைவருமான ஜெயபாலாஜி (வயது 43) முன் ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரின் மனு தள்ளுபடியானது. இதையடுத்து ஜெயபாலாஜியை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.போலீஸ் விசாரணையில் திரைப்பட இயக்குனர் செல்வராஜ் கொலைக்கு ஜெயபாலாஜி சதி திட்டம் தீட்டியது தொடர்பாக பரபரப்பான தகவல்கள் கிடைத்துள்ளன.பா.ஜ.க. பிரமுகரான ஜெயபாலாஜிக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. சிறையில் உள்ள ரவுடி அழகிரியுடன் அடிக்கடி செல்போனில் தொடர்பு ெ காண்டு பேசிவந்த ஜெயபாலாஜிக்கு சிறைக்கு சென்று சந்தித்து பேசியுள்ளார். இதுவும் விசாரணையில் தெரியவந்தது. இதனை தெடர்ந்தே அவரை கொலை வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர்.

    • பூலாம்பாடி ஸ்ரீ தர்மராஜா திரெளபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது
    • தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ்குமார் கலந்து கொண்டார்

     அரும்பாவூர், 

    பெரம்பலூர் மாவட்டம், பூலாம்பாடி கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதர்மராஜா ஸ்ரீ திரெளபதி அம்மன் கோயிலில் முதலாம் ஆண்டு வருடாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. யாக வேள்வியில் 96 வகை மூலிகை திரவிய பொருட்கள் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மஹாபூர்னாஹீதியும் தீபாரதனையும் நடைபெற்றது. இதனையடுத்து மேளதாளம் முழங்க கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. மேலும் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு திரெளபதி அம்மன் உள்ளிட்ட அனைத்து சுவாமிகளுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.மலேசிய தொழிலதிபர் டத்தோ பிரகதீஷ்குமார தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பூலாம்பாடி, கடம்பூர், கள்ளப்பட்டி, உடும்பியம், பெரியம்மாபாளையம் ,தழுதாலை, தொண்ட மாத்திரை, அரும்பாவூர், மேட்டூர், மலையாள பட்டி, சேலம் மாவட்டம் வீரகனூர் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இந்த விழாவில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன்,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இளம்பை தமிழ்ச்செல்வன்,வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி உள்ளிட்டோரும் கலந்துகொண்டு தரிசனம்செய்தனர் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு டாக்டர் பிரகதீஷ் குமார் நற்பணி மன்றத்தினர் அன்னதானம் வழங்கினர்பின்னர் மாலை 6 மணிக்கு தீமிதி திருவிழாநடைபெற்றது.இதற்காக பக்தர்கள் நல்ல தண்ணீர் குளத்திற்கு சென்று சிறப்பு பூஜை செய்தனர். தீமிதிப்பவர்கள் மஞ்சள்ஆடை அணிந்து நீராடி பயபக்தியுடன் அம்மனை வேண்டினர். பின்னர் பக்தர்கள் அருள்வந்து ஆடினர். பம்பை சப்தம் அதிர பக்தர்கள் சாமியாடியபடி கோவில் நோக்கி ஊர்வலமாக வந்தனர்.பின்னர் அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு மத்தியில் தீமிதி திருவிழா நடைபெற்றது.நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக தீமித்தனர். இந்த நிகழ்வு பூலாம்பாடி பகுதியில் கடந்த காலங்களில் நடந்திராத வகையில் சிறப்பாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீதிரௌபதி அம்மன் கோவில் அறக்கட்டளை மற்றும் கிராம பொதுமக்கள்,டத்தோ பிரகதீஸ்குமார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர். இன்று பொங்கல் மாவிளக்கு பூஜையும் இரவு ஏழு வாகனங்களில் ஏழு சுவாமிகள் திருவீதி உலா வான வேடிக்கை ஒயில் கும்மி கோலாட்டம் போன்ற கிராம வேடிக்கையும் நடைபெறுகிறது

    • மின் பகிர்மான அலுவலகம் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது
    • பெரகம்பி மின் பகிர்மானம் மண்ணச்சநல்லூர் கிழக்கு பிரிவு அலுவலகத்திற்கு மாற்றம்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மின் பகிர்மான வட்டம், பெரம்பலூர் கோட்டம், சிறுவாச்சூர் உபகோட்டம், செட்டிகுளம் தெற்கு பிரிவுக்கு உட்பட்ட பெரகம்பி மின் பகிர்மானத்தில் உள்ள மின் இணைப்புகளை மின் வட்ட சீரமைப்பு காரணமாக உரிய வருவாய் கிராமம் உள்ள மாவட்டத்தில் இணைக்க வேண்டியுள்ளது. இதனால் பெரகம்பி மின் பகிர்மானம் திருச்சி மாவட்டத்தில் உள்ள திருச்சி பெருநகரம் மின்பகிர்மான வட்டம், ஸ்ரீரங்கம் கோட்டம், மண்ணச்சநல்லூர் உபகோட்டம், மண்ணச்சநல்லூர் கிழக்கு பிரிவு அலுவலகத்திற்கு நேற்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே பெரகம்பி மின் பகிர்மானத்தில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களும் மின்சாரம் சம்பந்தமான அனைத்திற்கும் மண்ணச்சநல்லூர் கிழக்கு பிரிவு அலுவலகத்தை அணுகுமாறு பெரம்பலூர் செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

    • மேல்பாதி கிராமத்திற்கு பாதயாத்திரை செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
    • திரவுபதி அம்மன் கோவிலை திறக்க கோரி கோஷங்களை எழுப்பினர்

    பெரம்பலூர்,

    விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலை திறக்க தமிழக அரசை வலியுறுத்தி பெரம்பலூர் அருகே அம்மாபாளையம் கிராமத்தில் தாமரைக்குளத்தில் இருந்து நேற்று காலை தங்கமாமுனி தலைமையில் பக்தர்கள் சிலர் அந்த கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்ல தயாராகினர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பாதயாத்திரை செல்ல இருந்த பக்தர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அந்த பக்தர்கள் மேல்பாதி திரவுபதி அம்மன் கோவிலை திறக்க கோரி தமிழக அரசை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    • அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
    • வனத்துறையினர் ரோந்து பணியின்போது சிக்கினர்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின்பேரில், பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிகுமரன் தலைமையில் வனக்குழுவினர் நேற்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெங்கநாதபுரம் பகுதியில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.இதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சோழமுத்துவின் மகன் மணிகண்டன் (வயது 24), நடேசன் (67) என்பதும், அவர்கள் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததும், அந்த துப்பாக்கிக்கு உரிய அனுமதி பெறவில்லை என்பதும் தெரியவந்தது.இதையடுத்து அவர்களிடம் இருந்து நாட்டு துப்பாக்கியை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் மேல் விசாரணைக்காக அவர்களை பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் வனத்துறையினர் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    • வாலிகண்டபுரம், ரஞ்சன்குடி அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது
    • எம்.எல்.ஏ. பிரபாகரன் வழங்கினார்

    அகரம்சீகூர், 

    பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் அடுத்துள்ள வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவும் மற்றும் மிதிவண்டி நிறுத்தும் இடம் திறப்பு விழாவும் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் செல்வராசு அனைவரையும் வரவேற்று பேசினார். பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். வாலிகண்டபுரம் ஊராட்சி மன்ற தலைவர் கலியம்மாள் அய்யாக்கண்ணு முன்னிலை வகித்தார், தொடர்ந்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் மாணவ, மாணவிகளுக்கு விளையில்லா மிதி வண்டிகளை வழங்கினார்.தொடர்ந்து ரஞ்சன்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார், தலைமை ஆசிரியர் ராஜா உடன் இருந்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ரவிச்சந்திரன், மாவட்ட இடைநிலை கல்வி அலுவலர் கலைச்செல்வி, வேப்பந்தட்டை ஒன்றிய குழு தலைவர் ராமலிங்கம், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் மகாதேவி ஜெயபால், ஒன்றிய குழு உறுப்பினர் சாவித்திரி மகாராஜன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் அமராவதி, பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் கண்ணபிரான், உட்பட வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் வீரையன் நன்றியுரை கூறினார்.

    ×