என் மலர்
உள்ளூர் செய்திகள்

விண்ணப்பங்கள் பதிவிற்கான முதற்கட்ட சிறப்பு முகாம்
- பெரம்பலூரில் விண்ணப்பங்கள் பதிவிற்கான முதற்கட்ட சிறப்பு முகாம் பல இடங்களில் நடைபெற்றது
- கலெக்டர் நேரில் சென்று ஆய்வு நடத்தினார்
கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் தகுதியான குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதி முதல் தமிழக அரசு வழங்கவுள்ளது. இத்திட்டத்திற்காக முதற்கட்டமாக பெரம்பலூர் மாவட்டத்தில் 129 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப தலைவிகளுக்கு அவர்களின் குடும்ப அட்டை பதிவு செய்துள்ள ரேஷன் கடை பணியாளர் மூலம் வீடு வீடாக விண்ணப்பங்கள், டோக்கன்கள் வழங்கப்பட்டது.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பதிவு செய்ய முதற்கட்ட சிறப்பு முகாம்கள் அந்தந்த ரேஷன் கடைகள் அமைந்துள்ள பகுதிகளின் அருகே உள்ள பள்ளிகள், சமுதாய கூடங்கள் உள்ளிட்டவைகளில் நேற்று முதல் தொடங்கியது.குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்களை இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் ஆன்லைனில் பதிவு செய்தனர். குரும்பலூரில் அரசு தொடக்கப்பள்ளி, சமுதாய கூடத்தில் நடந்த சிறப்பு முகாமினை கலெக்டர் கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, தாசில்தார் கிருஷ்ணராஜ் ஆகியோர் உடனிருந்தனர். முதற்கட்ட சிறப்பு முகாம்கள் வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது. பெரம்பலுார் மாவட்டத்தில் மீதமுள்ள பகுதிகளில் 2-ம் கட்டமாக சிறப்பு முகாம்கள் வருகிற 5-ந்தேதி முதல் வருகிற 16-ந்தேதி வரை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. முதல் நாளான நேற்று 14,580 விண்ணப்பதாரர்களில் 11,476 பேரின் விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டது.






