என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • பிரம்மரிஷி மலையில் மணிமண்படம் திறப்பு விழா
    • நாளை திறப்பு விழா நடைபெற உள்ளது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் ஸ்ரீராஜகுமார் குருஜி மணிமண்டப திறப்பு விழா நாளை (1ம்தேதி) நடைபெறுகிறது.மகாசித்தர்கள் டிரஸ்ட் சார்பில் எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் அன்னை சித்தர் ஸ்ரீராஜகுமார் குருஜியின் 3-ம் ஆண்டு குருபூஜை விழா நேற்று (30ந்தேதி) காலை 8 மணியளவில் ஸ்ரீகணபதி ஹோமத்துடன் பூர்வாக பூஜை பணிகள் தொடங்கியது. மாலை 5 மணியளவில் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலிலிருந்து சிறப்பு ஊர்வலம் துவங்கி எளம்பலூர் பிரம்மரிஷி மலையாடிவாரத்தில் உள்ள காகன்னை ஈஸ்வர் கோயிலில் முடிவடைந்தது. ஊர்வலத்தின்போது கோலாட்டம், நடனம் ஆகியவை நடைபெற்றது. காகன்னை ஈஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடர்ந்து இன்று (31ம்தேதி) 2 மற்றும் 3ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று வருகிறது.நாளை (1ம்தேதி) காலை 8 மணியளவில் 4ம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று 11 மணியளவில் மணிமண்டப திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது. தொடர்ந்து மகாதீபாரனையும், பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர் 200 சாதுக்களுக்கு வஸ்திரதானமும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலியும், அன்னதானமும் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி, தவயோகி சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவயோகி தவசிநாதன் சுவாமிகள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் செய்து வருகின்றனர்.

    • பெரம்பலூர் அஞ்சலகங்களில் வங்கி கணக்கு தொடங்க மகளிருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது
    • தபால்காரர் மூலமாக தொடங்கி மகளிர் உரிமை தொகையை பெறலாம் என்று அறிவிப்பு

    பெரம்பலூர்,

    ஸ்ரீரங்கம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், கலைஞர் மகளிர் உரிமை திட்ட தொகை பெற தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு அவசியமாகும். இந்த திட்டத்தில் பெரம்பலூர் மாவட்டங்களில் தகுதியானவர்கள் அருகில் உள்ள அஞ்சலகங்கள், கிராம அஞ்சல் ஊழியர்கள் மற்றும் தபால்காரர்களை அணுகி இந்திய அஞ்சல் பட்டுவாடா வங்கியில் இ-கே.ஒய்.சி. என்ற முறையில் கணக்கு தொடங்கி உரிமை தொகையை பெற்று கொள்ளலாம்.

    மேலும் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள், முதியோர் உதவித்தொகை மற்றும் பிரதம மந்திரி விவசாயி நிதி உதவித்தொகை பெறும் பயனாளிகளும் இது போன்ற கணக்கு தொடங்கி பயன் பெறலாம். பொதுமக்கள் இந்திய அஞ்சல் பட்டுவாடா வங்கியின் மூலம் மட்டுமே வழங்கப்படும் ரூ.10 லட்சத்திற்கான சிறப்பு விபத்து காப்பீடு திட்டத்தில் ஆண்டிற்கு ரூ.396, ரூ.399 செலுத்தி இணையலாம். இந்த காப்பீடு திட்டத்தில் இணைய இந்திய அஞ்சல் துறை பட்டுவாடா வங்கியின் சேமிப்பு கணக்கு அவசியம். எனவே பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பான திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

    • பெரம்பலூரில் தொழிலாளர் நல வாரிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
    • தொழிலாளர் உதவி ஆணையர் பாஸ்கர் தலைமையில் நடந்தது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் தொழிலாளர் நலத்துறை அலுவலக கூட்டரங்கில் தொழிலாளர் நல வாரிய திட்டங்கள் குறித்தான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாஸ்கர் தலைமை வகித்து பேசுகையில், கடந்த மாதம் நலவாரிய திட்ட ஆன்லைன் சர்வர் முடங்கியதால் அதற்குரிய கால அவகாசம் நீட்டிப்பு ஒரு மாதம் காலம் வழங்கப்பட்டதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். கட்டுமான தொழிலாளர் நல வாரியம் மற்றும் எல்அண்ட்டி நிறுவன சார்பில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பதிவு செய்துள்ள கொத்தனார், கம்பி கட்டுநர், தச்சர், வெல்டர், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட கட்டுமான வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியும், பயிற்சி காலங்களில் தொழிலாளர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்புகளை தடுத்திடும் வகையில் உரிய உதவி தொகை வழங்கப்படுவதை தொழிலாளர்கள் பயன்படுத்திக்கெள்ளவேண்டும் என தெரிவித்தார்.கூட்டத்தில் வீடில்லாத ஏழை கட்டுமான தொழிலாளர் குடும்பங்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தினை உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்யப்படும் நடைமுறை சிக்கல்களை களையவேண்டும்.தொழிலாளர்கள் தொடர்பான இரட்டை பயன்பாட்டு முறைகளை உடனடியாக கவனத்தில் கொண்டு அதை தகுதி நீக்கம் செய்திட முறையான நடவடிக்கை எடுக்கவேண்டும் என தொழிற்சங்க பிரநிதிகள் வலியுறுத்தினர். இதில் ஈஸ்வரன், நெடுஞ்செழியன் உட்பட அனைத்து தொழிற்சங்களின் பிரநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • பெண்ணை கல்லால் தாக்கிய கணவர் கைது செய்யப்பட்டார்
    • கூலி வேலைக்கு சென்ற பெண்ணின் மீது, மகனை ஒப்படைக்க கேட்டு தாக்குதல்

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் ஆதிதிராவிடர் தெருவை சோ்ந்தவர் அறிவழகன்(வயது 40). இவரது மனைவி கவிதா(35). இவர்களுக்கு 6 வயதில் கருணேஸ்வரன் என்ற மகன் உள்ளான். கடந்த 5 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக அறிவழகனும், கவிதாவும் பிரிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர். மகனை கவிதா வளர்த்து வருகிறார். மேலும் அறிவழகனுக்கும், கவிதாவுக்கும் விவாகரத்து வழக்கு குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்த கவிதாவிடம் மகனை தன்னிடம் கொடு என்று கேட்டு அறிவழகன் தகராறு செய்தாராம். பின்னர் அவர் கீழே கிடந்த கல்லை எடுத்து கவிதாவின் தலை மற்றும் முதுகில் தாக்கியுள்ளார். இதனை கண்ட அருகில் உள்ளவர்கள் சத்தம் போட்டு காயமடைந்த கவிதாவை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இது தொடர்பாக கவிதா கொடுத்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அறிவழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்
    • தாய் கொடுத்த புகாரின் பேரில் மகளிர் போலீசார் நடவடிக்கை

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வெங்கலம் கீழ வீதியை சேர்ந்தவர் தங்கராசு (வயது 62). இவர் 8 வயதுடைய 3-ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அந்த சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக சிறுமியின் தாய் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து தங்கராசுவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    பெரம்பலூரில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் கற்பகம் நேரில் ஆய்வு செய்தார்

    பெரம்பலூர், 

    பெரம்பலூரில், எளம்பலூர் மற்றும் செங்குணம் ஆகிய ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மற்றும் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் கற்பகம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.எளம்பலூரில் ரூ.16.70 லட்சம் மதிப்பீட்டில் பிள்ளையார் கோவில் முதல் சுப்ரமணி வீடு வரை தார்சாலை அமைத்தல், ரூ.4.87 லட்சம் மதிப்பீட்டில் புதிய அம்ரித் சரோவர் குளம் வெட்டப்பட்டு முடிவற்ற பணி, செங்குணத்தில் ரூ.7.02 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் அமைத்து, முடிவுற்ற பணி, கழிவுநீர் கால்வாயினை சுத்தம்செய்யும் பணி, செங்குணத்தில் ரூ.5.80 லட்சம் மதிப்பீட்டில் குளம் வெட்டும் பணி ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்து பணிகள் குறித்து அரசு அலுவலர்களிடம் கேட்டறிந்தார். அதன் பின்னர் நியாய விலைகடையினை பார்வையிட்ட அவர் உணவு பொருட்கள் தரமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.இந்த ஆய்வின் போது செங்குணம் மற்றும் எளம்பலூர் ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு சென்ற அவர், தனிநபர் இல்ல கழிப்பிடம் மற்றும் பல்வேறு திட்ட பணிகள், கணினி மூலம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள் போன்றவை குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின்போது உதவி இயக்குநர்(ஊராட்சிகள்)அருளானந்தம், வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவழகன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • பள்ளி-கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சு போட்டி
    • தமிழ்வளர்ச்சித்துறை சார்பில் நடத்தப்பட்டது

    பெரம்பலூர் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக பேச்சு போட்டிகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில்  நடந்தது. போட்டிகளுக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் உதவி இயக்குனர் சித்ரா தலைமை தாங்கினார். காலையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், மதியம் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் வந்து போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. இதைத்தவிர பேச்சு போட்டியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளில் தனியாக தேர்வு செய்யப்பட்ட 2 பேருக்கு சிறப்பு பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

    • பெரம்பலூரில் பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
    • பள்ளிக்கு செல்லாததை கண்டித்ததால் விபரீத முடிவு

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள திம்மூர் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் முருகவேல் (வயது 14). இவர் திம்மூர் அருகே உள்ள சில்லக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். முருகவேலின் தாய் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் தாயின் அரவணைப்பு இல்லாத நிலையில், சமீப காலமாக முருகவேல் படிக்க விருப்பம் இல்லாமல், சரியாக பள்ளிக்கு செல்லவில்லை என்றும், இதனை சுப்பிரமணியன் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முருகவேல் சம்பவத்தன்று வயலில் அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்துள்ளார். பின்னர் முருகவேலுக்கு உடல்நிலை சரியில்லாமல் போகவே, அவரை பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மேல் சிகிச்சைக்காக அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முருகவேல், தான் விஷம் குடித்து விட்டதாக டாக்டரிடம் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, திருச்சி அரசு மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவில் அவர் இறந்தார். இது குறித்து குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை வெங்காயம் வழங்கப்பட உள்ளது
    • வேளாண் விற்பனை வணிகத்துறை இயக்குநர் ச. நடராஜன் தகவல்

    குன்னம்,

    வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் ச. நடராஜன் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தில் உள்ள வெங்காயம் வணிக வளாகத்தில் நேற்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் முடிவில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இயக்குநர் ச. நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது;தமிழக முதலமைச்சர் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக ஆக்க வேண்டும் எனும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதைத் தொடர்ந்து வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சரின் உத்தரவின்படி செட்டிகுளம் வெங்காய வணிக வளாகத்தை பார்வையிட வந்திருக்கிறேன்.சின்ன வெங்காயத்தை மதிப்பு கூட்டுதல், பேக்கேஜ் செய்தல், அதை பத்திரமாக ஏற்றுமதி செய்தல் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்து வருகிறோம். உள் நாட்டிலும் வெங்காயத்தை நல்ல விலைக்கு விற்பனை செய்ய விவசாயிகள் வணிகர்களுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்திக் கொடுத்து வருகிறோம். இங்குள்ள வணிக வளாகத்தில் தினந்தோறும் வெங்காயம் ஏலம் நடைபெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். குளிர் பதன கிடங்கில் வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளை நீண்ட நாட்கள் இருப்பு வைப்பதில் சிக்கல் உள்ளது. வெங்காயத்தை குளிர் பதன கிடங்கில் நவீன தொழில்நுட்பம் மூலம் இருப்பு வைக்க முடியுமா என ஆலோசித்து வருகிறோம். சின்ன வெங்காயத்துக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடுப்பது என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. அது குறித்து அரசுதான் முடிவு செய்ய முடியும்.விவசாயிகளுக்கு விதை வெங்காயம் மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு தெரிவித்தார். அப்போது வேளாண்மை இணை இயக்குநர் முரளிதரன், வேளாண்மை துணை இயக்குனர் கண்ணன், விற்பனை குழு செயலாளர் சரசு, திருச்சி வேளாண் விற்பனை வாரிய பொறியாளர் சக்திவேல் மற்றும் வேளாண்மை விற்பனை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

    • ஸ்ரீராஜகுமார் குருஜி 3-ம் ஆண்டு குரு பூஜை விழா நாளை தொடங்குகிறது
    • எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் நடைபெறுகிறது

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் அருகே எளம்பலூர் பிரம்மரிஷி மலையில் ஸ்ரீராஜகுமார் குருஜியின் 3 ஆம் ஆண்டு குருபூஜை விழா மற்றும் மணிமண்டப திறப்பு விழா, கும்பாபிஷேகம் ஆகிய விழா 3 நாட்கள் நடைபெறுகிறது.மகாசித்தர்கள் டிரஸ்ட் சார்பில் எளம்பலூர் பிரம்மரிஷி மலையடிவாரத்தில் அன்னை சித்தர் ஸ்ரீராஜகுமார் குருஜியின் அதிஷ்டான மணி மண்டப திறப்பு விழா கும்பாபிஷேகம் மற்றும் 3ஆம் ஆண்டு குருபூஜை விழா நாளை (30ந்தேதி) காலை 8 மணியளவில் ஸ்ரீகணபதி ஹோமத்துடன் பூர்வாக பூஜை பணிகள் தொடங்குகிறது. அன்று மாலை 4 மணியளவில் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலிலிருந்து சிறப்பு ஊர்வலம் துவங்கி எளம்பலூர் பிரம்மரி ஷிமலையாடிவாரத்தில் உள்ள காகன்னைஈஸ்வர் கோயிலில் முடிவடைகிறது. ஊர்வலத்தின்போது கோலாட்டம், நடனம் ஆகியவை நடைபெறுகிறது. பின்னர்முதல்கால யாகசாலை பூஜைகள் தொடங்கிறது.தொடர்ந்து 31ம்தேதி 2 மற்றும் 3ம் கால யாகசாலை பூஜைகளும் நடைபெறுகிறது. 1ம்தேதி காலை 10 மணியளவில் மணி மணிமண்டப திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் விழா நடைபெறுகிறது. தொடர்ந்து மகாதீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னர் 200 சாதுக்களுக்கு வஸ்திரதானமும், 10 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலியும் வழங்கப்படுகிறது.ஒசூர் ஸ்ரீவேலனடிமை சுவாமிகள் குருபூஜையை நடத்தி வைக்கிறார். 3 நாட்கள் முழுவதும் இன்னிசை நிகழ்ச்சிகள், சிறப்பு சொற்பொழிவுகள், அருளாசிகள் நடைபெறுகிறது. இதில் வேலூர் ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தர் சுவாமிகள், ஆதினம் குருமகாசந்நிதானம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிய பராமாச்சாரியார் சுவாமிகள் மற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.விழா ஏற்பாடுகளை டிரஸ்ட் இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி, தவயோகி சுந்தரமகாலிங்கம் சுவாமிகள், தவயோகி தவசிநாதன் சுவாமிகள் மற்றும் ஆன்மீக அன்பர்கள் செய்து வருகின்றனர்.

    • பூலாம்பாடியில் காய்கறி மார்க்கெட் அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம்
    • தொழிலதிபர் டத்தோ பிரகதீஸ்குமார் தலைமையில் நடைபெற்றது

    அரும்பாவூர்,

    பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூரை தன்னிறைவு பெற்ற ஊராக மாற்றுவதற்கு டத்தோபிரகதீஸ்குமார் பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார். அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து பணிகளையும் முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டுவருகிறது. அதன் ஒருபகுதியாக சேலம் மாவட்டம் தலைவாசலில் உள்ளது போல் பூலாம்பாடியில் பெரிய அளவில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயர்வதோடு, ஊரின் வளர்ச்சிக்கு வருவாயும் கிடைக்கும் என்பதால் டத்தோ பிரகதீஸ்குமார் அவரது சொந்த செலவில் செய்து தர தயாராக உள்ளதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார்.பூலாம்பாடியில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் காய்கறிகளை கோயம்பேட்டிற்கு அனுப்புவதற்கும் திட்டம் இருப்பதாககூறியிருந்தார்.இந்த நிலையில் தினசரி காய்கறி மார்க்கெட் அமைப்பது தொடர்பான ஆலோசனைக்கூட்டம் திரௌபதி அம்மன் கோவில் முன்பு டத்தோ பிரகதீஸ்கு மார்தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பெரம்பலூர் மற்றும் சேலம் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு காய்கறி சாகுபடி குறித்தும் காய்கறிகள் பயிரிடுவதால் கிடைக்கும் லாபம் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினர்.அதைத்தொடர்ந்து டத்தோ பிரகதீஸ்குமார் பேசும் போது , காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு அரசு சலுகைகள் மானியங்கள் ஆகியவற்றை பெற்று தர தனது கம்பெனி செலவிலேயே பணியாளர்கள் நியமிக்கப்பட்டு.விவசாயிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்துதரப்படும். தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் உங்களுக்கு அவ்வப்போது ஆலோசனை வழங்குவர். ஒரு விவசாயி ஒரே காய்கறிகளை பயிரிடாமல் வெவ்வேறு காய்கறிகளை பயிரிட்டால் லாபம் கிடைக்கும்.அக்டோபர் 25 ல் பூலாம்பாடியில் தினசரி மொத்த காய்கறி மார்க்கெட் திறக்கப்பட்டு, கோயம்பேடு மார்க்கெட் திருச்சி காந்தி மார்க்கெட்டுக்கு காய்கறிகள் என் சொந்த செலவில் அனுப்பப்படும் என அவர் என தெரிவித்து அதற்கு விவசாயிகள் இப்பொழுதே தயாராகும்படி கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் பூலாம்பாடி கடம்பூர் உடும்பியம் பெரியம்மாபாளையம் அரும்பாவூர் மலையாள பட்டி தழுதாழை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுமார் 500 மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூர் அருகே வாலிபர் திடீர் சாவு உறவினர்கள் போராட்டத்தால் டாஸ்மாக் கடை மூடல்
    • மறியல் போராட்டத்தை அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்

    பெரம்பலூர்.

    பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்ட புரம், வேப்பந்தட்டை தாலுகா, தேவையூர் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 37). திருமணம் ஆகாத இவர், மது பழக்கத்திற்கு ஆளாகியிருந்தார்.

    இந்நிலையில் வாலிகண்டபுரம் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் வெள்ளையன் மது வாங்கி கொண்டு அங்குள்ள பாரில் உட்கார்ந்து மது குடித்துள்ளார்.

    பின்னர் சிறிது நேரத்தில் இருக்கையில் இருந்து மேஜையில் சாய்ந்தார். நீண்ட நேரமாக அவர் அதே இடத்தில் ஆடாமல் அசையாமல் இருந்ததால், பக்கதில் மது அருந்தியவர்கள் அவரிடம் பேச்சு கொடுத்தனர். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இருக்கையிலேயே வெள்ளையன் இறந்து போனது தெரியவந்தது. இைத தொடர்ந்து அதிர்ச்சியடைந்த அவர்கள், பார் மேலாளரிடம் தகவல் தெரிவித்தனர். அவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

    இதற்கிடையே வெள்ளையன் இறந்த தகவல் அறிந்த அவரது உறவினர்கள், டாஸ்மாக் மற்றும் பாரை அகற்றக்கோரி சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    அந்த நேரம் தஞ்சையில் அரசு நிகழ்ச்சியை முடித்து கொண்டு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை செல்ல காரில் வந்து கொண்டிருந்தார்.

    மறியல் போராட்டத்தை அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் டாஸ்மாக் கடை தற்காலிகமாக மூடப்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    மறியல் போராட்டம் முடிவுக்க வந்த சில நிமிடங்களில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த பகுதியை கடந்து சென்றார்.

    பின்னர் போலீசார் வெள்ளையனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக மங்களமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    டாஸ்மாக் பாரில் மது அருந்தியவர் இருக்கையிலேயே இறந்த சம்பவம் அங்கிருந்த மது பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ×