என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • எல்.ஐ.சி. முகவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
    • காப்பீட்டு வார விழாவையொட்டி

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் சார்பில் இன்சூரன்ஸ் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக எல்.ஐ.சி. முகவர்கள் பங்கேற்ற இன்சூரன்ஸ் விழிப்புணர்வு மற்றும் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் பெரம்பலூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆயுள் காப்பீட்டு கழக பெரம்பலூர் கிளை முதுநிலை மேலாளர் சங்கர் தலைமை தாங்கினார். எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு தொடங்கிய மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதுமதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் எல்.ஐ.சி. முகவர் சங்க தலைவர் சுத்தாங்காத்து, செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் கருப்பையா, கோட்ட இணை செயலாளர் முருகானந்தம் உள்பட திரளான முகவர்கள் கலந்து கொண்டனர். மோட்டார் சைக்கிள் ஊர்வலம் வெங்கடேசபுரத்தில் இருந்து புறப்பட்டு சங்குப்பேட்டை, கடைவீதி, பழைய பஸ் நிலையம், காமராஜர் வளைவு, மதனகோபாலபுரம், பாலக்கரை, புதிய பஸ் நிலையம் சென்று மீண்டும் எல்.ஐ.சி. கிளை அலுவலகத்தில் நிறைவடைந்தது

    • மாணவர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
    • பெரம்பலூரில் நாளை நடைபெறுகிறது

    பெரம்பலூர்

    தமிழக அரசின் ஆணைப்படி பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்தும் மாபெரும் கல்விக்கடன் முகாம் கலெக்டர் அலுவலகத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் நடைபெறுகிறது. இந்த முகாமில் தொழில்முறை படிப்பு பயிலும் மற்றும் கல்வி கடன் பெற விரும்பும் அனைத்து மாணவ-மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த முகாமில் கலந்து கொள்ள வரும் மாணவ-மாணவிகள், பெற்றோர்களின் பான் கார்டு, ஆதார் கார்டு ஆவணங்களையும், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் மாணவ-மாணவிகளின் 10, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், 12-ம் வகுப்பு மாற்று சான்றிதழ், குடும்ப வருமான சான்று, கல்லூரி சேர்க்கைக்கான சான்று, கல்வி சான்று, கல்லூரி கட்டண அறிக்கை ஆகிய ஆவணங்களின் அசல் மற்றும் நகல் சான்றிதழை கொண்டு வர வேண்டும். கல்விக்கடன் முகாமிற்கு வருவதற்கு முன்பாக https://www.jansamarth.in இணையதளத்தில் விண்ணப்பித்து அதன் நகலை கொண்டு வர வேண்டும். தகுதி உள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் கல்வி கடன் வழங்கப்பட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் நடத்தப்படுகின்ற இந்த முகாமினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும், என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மகள்-மகனுக்கு தோசை கரண்டியால் தந்தை சூடு வைத்தார்.
    • மது போதையில் நடந்த சம்பவம்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் அருகே கவுல்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது 35), கொத்தனார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், புகழினி (10) என்ற மகளும், நித்திஷ் (8) என்ற மகனும் உள்ளனர். கவுல்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புகழினி 5-ம் வகுப்பும், நித்திஷ் 3-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.இவர்கள் 2 பேரும் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றனர். ஆசிரியர் தினத்தையொட்டி பள்ளியில் ஆசிரியை ஒருவர் நித்திசுக்கு சாக்லேட் வழங்கும் போது, அவனது வலது கை மணிக்கட்டு அருகில் தீக்காயம் இருப்பதை கண்டு விசாரித்தார். அதற்கு நித்திஷ் தனது தந்தை மது போதையில் தனக்கும், அக்காள் புகழினிக்கும் கடந்த 2-ந்தேதி தோசை கரண்டியால் சூடு வைத்ததில், 2 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டதாகவும், இதனை தட்டி கேட்ட தனது தாயை தந்தை மத்துக்கட்டையால் தாக்கினார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக யாரிடமும் கூறக்கூடாது என்று மிரட்டியதாக நாங்கள் இதுகுறித்து யாரிடம் கூறவில்லை என்று கூறினான்.

    இதையடுத்து அந்த ஆசிரியை இந்த சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்தார். அவர் குழுந்தைகள் நலக்குழுவினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் பள்ளிக்கு வந்த குழந்தைகள் நலக்குழு பணியாளர் வந்து நித்திஷிடம் விசாரணை நடத்தி, அவனுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளித்து குன்னத்தில் உள்ள காப்பகத்திலும், புகழினியை பெரம்பலூரில் உள்ள காப்பகத்திலும் சேர்த்துள்ளனர்.

    • பள்ளி மாணவி மாயமானார்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் பெரிய தெற்கு தெருவை சேர்ந்தவர் அங்கப்ப சரவணன். இவரது மகள் மனோ வர்ஷினி (வயது 14). இவர் பெரம்பலூர் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 29-ந்தேதி பள்ளி அருகே உள்ள ஒரு புத்தக நிலையத்தில் இருந்து வெளியே சென்ற மனோ வர்ஷினி அதன்பிறகு வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அங்கப்ப சரவணன் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான பள்ளி மாணவியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி முன்னால் மாணவர்கள் தொழில் முனைவோராகியுள்ளனர்
    • பல்கலைக்கழக வேந்தரிடம் வாழ்த்து

    பெரம்பலூர்:

    தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் விமானவியல் துறையின் முன்னாள் மாணவர்களான (2013 - 2017) திருச்சியைச் சேர்ந்த நித்தீஷ் புஷ்பராஜ், கடலூரைச் சேர்ந்த மணிமாறன் கணேசன், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட வேல்முருகன் செல்வராஜ் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறினர்.

    பின்னர் அவர்கள் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசனை சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர்.

    இந்த மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் TAV சிஸ்டம்ஸ் என்ற மின்சாரத்தினால் இயங்கும் இரு சக்கர மிதிவண்டி தயாரிப்பு நிறுவனத்தை ஆஸ்திரேலியாவின் ஃபிளிண்டர்ஸ்

    பல்கலைக்கழகத்தின் உதவியுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு நிறுவி வெற்றிகரமாக நடத்தி

    வருகின்றனர். மேலும் சென்னையில் அதன் கிளையையும் தொடங்கி உள்ளனர்.

    கிளை நிறுவனம் சென்னையில் தொடங்கி சுமார் 100க்கும் மேற்பட்டோருக்கு

    வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது. சென்னையில் உற்பத்தி செய்யப்படும் மின்சார

    மிதிவண்டிகள் ஆஸ்திரேலியாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இது குறித்து முன்னாள் மாணவர் நித்தீஷ் பேசியதாவது, நாங்கள் இந்த அளவிற்கு வாழ்வில்

    முன்னேற்றம் அடைய மிகவும் உறுதுணையாக இருந்ததது இந்த தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் பயிலும் போது பெற்ற அறிவும், அனுபவமும், பேராசியர்களின் ஊக்கமும் மற்றும் பல்கலைக்கழக வேந்தரின் உந்து சக்தியாலும் தான் எங்களால் வெற்றிபெற முடிந்தது.

    இந்த பாராட்டு நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் இளங்கோவன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் வேல்முருகன், கல்வி முதன்மையர் அன்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • மதுக்கடையால் பெண்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
    • கடையை அகற்ற வேண்டும்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தில் ஊருக்கு அருகே டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த டாஸ்மாக் கடையில் மது வாங்கி அருந்தும் மதுப்பிரியர்கள் இந்த பகுதி வழியாக செல்லும் பெண்கள், மாணவிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விநாயகர் சிலை வைக்க அனுமதி பெற வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பொது இடங்களில் வைத்து வழிபடுவதற்காக

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் வருகிற 18-ந்தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடும் நபர்கள், அமைப்புகள் மற்றும் பொறுப்பாளர்கள் ஆகியோர் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 2 வாரங்களுக்கு முன்பாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் முன் அனுமதி பெற்று சிலை வைக்க வேண்டும். அதன்படி தாங்கள் சிலை வைக்கும் இடம், சிலை வைக்கும் நாள், சிலை கரைக்கும் இடம் மற்றும் தேதி, ஊர்வலம் செல்லும் பாதை, சிலை பாதுகாப்பிற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் ஆகியவை குறித்து போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவித்து, முறையான முன் அனுமதி பெற்ற பிறகே விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும். இது தொடர்பாக போலீசார் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடத்தப்படும் கூட்டங்களிலும் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும். மேலும் அனுமதி இல்லாமல் சிலைகள் வைத்தல் கூடாது என்று பெரம்பலூர் மாவட்ட போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • பணி வழங்கக்கோரி செவிலியர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
    • ஐகோர்ட்டு உத்தரவின்படி

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் மொத்தம் 276 மனுக்கள் பெறப்பட்டன. அப்போது எம்.ஆர்.பி. கோவிட் செவிலியர்கள் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் லோகலெட்சுமி தலைமையில் செவிலியர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணியமர்த்தப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 31-ந் தேதி பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு ஐகோர்ட்டு உத்தரவின்படி மீண்டும் நிரந்தர தன்மையுடைய பணி ஆணையை வழங்கிட தமிழக முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.

    • அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது
    • பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், மங்களமேடு அருகே அத்தியூர் கிராமத்தில் உள்ள விநாயகர், அய்யனார், கருப்புசாமி, திரவுபதி அம்மன், செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இதேபோல் வேப்பந்தட்டை வட்டம் மங்களமேடு கிராமத்தில் அமைந்துள்ள மங்கள விநாயகர், மங்கள மாரியம்மன், கரைமேல் அழகர், பெரியசாமி, கருப்பையா ஆகிய தெய்வங்களுக்கும் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதையொட்டி பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
    • பள்ளி கல்வித் துறையின் சார்பில்

    பெரம்பலூர்

    தமிழக முதல்-அமைச்சர் பள்ளி கல்வித்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் பள்ளி கல்வித் துறையின் சார்பில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் முதன்மையாக "எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி" என்ற நிகழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட கலெக்டர் கற்பகம் தலைமையிலும், அரியலூர் மாவட்டத்தில் அஸ்தினாபுரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையிலும் எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி நிகழ்வு நடைபெற்றது. எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி நிகழ்வானது பள்ளிகளில் பயன்பாட்டில் இல்லாத உடைந்த நற்காலிகள், மேசைகள், இ-கழிவு, மரக்கிளைகள், பழைய உபகரணங்கள், கட்டிட உடைந்த துண்டுகள் போன்றவற்றை நிரம்பி இருப்பதை அப்புறப்படுத்தி பள்ளியை தூய்மை செய்யும் வகையில் இந்நிகழ்வு செயல்படுத்தப்படுகிறது. இந்நிகழ்வானது பள்ளி அளவிலும், வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் குழுக்கள் அமைத்து செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், பள்ளி தூய்மை உறுதி மொழியினை அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் மாணவ-மாணவிகள் ஏற்று கொண்டனர். அப்போது அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மணிவண்ணன் (பெரம்பலூர்), விஜயலட்சுமி (அரியலூர்) ஆகியோர் உடனிருந்தனர். கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா நிகழ்வு நடைபெற்ற பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழலின் அவசியத்தை உணர்த்தும் வகையில் மஞ்சப்பை, துணிப்பைகளை வழங்கினார்.

    • நூற்றாண்டு பழமை வாய்ந்தது
    • பஞ்சநதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த பஞ்சநதீஸ்வரர் கோவில் உள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கோவில் பாழடைந்து சீரமைக்கப்படாமல் கிடப்பில் கிடந்தது. இந்த கோவிலை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் சீரமைக்கப்படாமல் இருந்தது. இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாலையூர் கிராம மக்கள் வேறு ஒரு இடத்தில் புதிய சிவன் கோவில் கட்ட முடிவு செய்து அதன்படி வேதநாயகி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் புதிதாக கட்டப்பட்டு கடந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது வந்த சிவனடியார்கள் பழமை வாய்ந்த பஞ்சநதீஸ்வரர் கோவிலையும் சீரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கூறினார்கள்.

    • 7-ந்தேதி கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி நடக்கிறது
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் நாட்டில் மக்களை பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலையின்மையை போக்கிட வேண்டும். அரசு காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலைக்கான சட்டம் இயற்ற வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. ஒப்பந்த அவுட் சோர்சிங் முறையை கைவிட வேண்டும். 100 நாள் வேலையை 200 நாட்களாகவும், கூலி ரூ.600-ம் வழங்க வேண்டும். முறைசாரா தொழிலாளர் சமூக பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி வருகிற 7-ந்தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய பகுதிகளில் உள்ள தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

    ×