என் மலர்
பெரம்பலூர்
- அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
- வயது 18-ல் இருந்து 59 வயதுக்குள் இருக்க வேண்டும்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் கட்டுமான தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள், குத்தகைதாரர்கள், பேக்கிங், தச்சுவேலை, கல்குவாரி, மரஆலை, உள்ளூர் கூலித்தொழிலாளர்கள், முடிதிருத்துவோர், தெரு வியாபாரிகள், சிறுவியாபாரிகள், அங்கன்வாடி பணியாளர்கள், நூறு நாள் வேலைதிட்ட பணியாளர்கள், பால் வியாபாரிகள், மீனவர்கள், செங்கல்சூளை, தையல், பட்டு வளர்ப்பு, துப்புரவு தொழிலாளர்கள், சாயப்பட்டறை தொழிலாளர்கள், டிரைவர், நடைபாதை வியாபாரிகள் என 156 வகையான அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்களது விவரங்களை இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையின் கீழ் இ-ஸ்ராம் (e-shram) அல்லது என்டியூடபுள்யூ (nduw) இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் தங்களது ஆதார் அட்டை, வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம், அலைபேசி எண் ஆகியவற்றுடன் பொதுசேவை மையத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம். அல்லது இணைய வசதி இருப்பின் தாங்களாகவே பதிவு செய்து கொள்ளலாம். இதில் பதிவு செய்வதற்கான வயது 18-ல் இருந்து 59 வயதுக்குள் இருக்க வேண்டும். வருமான வரி செலுத்துபவராக இருக்கக்கூடாது. இ.எஸ்.ஐ. சேமநலநிதி பிடித்தம் செய்யும் பணியாளராக இருக்க கூடாது. தொழிலாளர்கள் அரசுக்கு எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- மனித உரிமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்:
திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. சந்தோஷ்குமார் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி மேற்பார்வையில் பெரம்பலூர் அரசு தொழில்பயிற்சி மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு வளவன் பேசும்போது, சமூகத்தில் உள்ள அனைவரிடம் சகோதர, சகோதரிகள் உணர்வோடு பேசிப்பழக வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தங்களது கல்வி தகுதியினை கட்டாயம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அரசு பணிக்கு அறிக்கை வெளியாகும் தருணத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுவதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும். மேலும் தங்கள் பகுதிகளில் ஏதேனும் சட்டத்திற்கு புறம்பான செயல்கள் நடைபெற்றால் அதனை உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஐ.டி.ஐ. முதல்வர், விரிவுரையாளர்கள் மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு போலீசார், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
- மின்சாரம் பாய்ந்து கடைக்காரர் பலியானார்.
- வயரை வாயால் கடித்துள்ளார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெண்ணகோனம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 44). இவருக்கு கிருத்திகா என்ற மனைவியும், 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். சுப்பிரமணியன் தனது வீட்டிற்கு வெளியே சூப் கடை நடத்தி வந்தார். நேற்று மாலை அவர் வீட்டிலிருந்து வெளியே உள்ள கடைக்கு பல்ப் போடுவதற்காக வயரிங் வேலை செய்யும் போது வயரை வாயால் கடித்துள்ளார். அப்போது மின் இணைப்பு துண்டிக்கப்படாத காரணத்தினால் சுப்பிரமணியன் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுப்பிரமணியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாட்சியம் அளிக்க வராத டாக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டன.
- நீதிபதி அதிரடி உத்தரவு
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பெருமத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மனைவி வெள்ளையம்மாள் (வயது 67). விவசாய கூலித்தொழிலாளியான இவர் கடந்த 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் 29-ந்தேதி வேலை முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றுக்கொண்டிருந்தார்.
அப்போது பெருமத்தூர் வாய்க்கால் பாலம் அருகே இவருக்கு பின்னால் வந்த தனியார் பள்ளி வேன் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் காயமடைந்த வெள்ளையம்மாள் பெரம்பலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
விபத்து ஏற்படுத்திய வேன் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டில் வெள்ளையம்மாள் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் சாட்சியமளிக்க கோர்ட்டுக்கு வருமாறு சம்பவம் நடந்தபோது பணியில் இருந்த தனியார் மருத்துவமனை டாக்டருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் சம்மனை பெற்றுக் கொண்ட மருத்துவமனை நிர்வாகம் பணி மருத்துவரை கோர்ட்டுக்கு சாட்சியமளிக்க அனுப்பி வைக்கவில்லை.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை குற்றவியல் நீதிபதி, தனியார் மருத்துவமனையின் பணி மருத்துவருக்கு ஜாமினில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்தும், வரும் 28-ந்தேதி கோர்ட்டில் ஆஜராகும்படியும் உத்தரவிட்டார்.
- வாலிபரை பீர் பாட்டிலால் குத்தியவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
- முன்விரோதம் காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டதாம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் வெங்கடேசபுரத்தை சேர்ந்த துரைராஜ். இவரது மகன் பெரியசாமி (வயது 33). சம்பவத்தன்று இவர் தனது நண்பர்கள் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து மது குடித்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது. அப்போது பெரியசாமிக்கும், சங்குபேட்டை ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த செல்லமுத்துவின் மகன் சூர்யாவுக்கும் (26) இடையே முன்விரோதம் காரணமாக வாய்த்தகராறு ஏற்பட்டதாம். இதில் ஆத்திரமடைந்த சூர்யா கையில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து பெரியசாமியின் கழுத்தில் குத்தி விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பெரியசாமி திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி இருந்த சூர்யாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். சூர்யா ரவுடி என்று போலீசார் தெரிவித்தனர்."
- சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.40.50 லட்சம் கிடைத்துள்ளது.
- 3 மாதங்களுக்கு ஒரு முறை எண்ணப்படுவதும் வழக்கம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் உண்டியல்களில் பக்தர்கள் காணிக்கையாக பணம், தங்க, வெள்ளி, வெளிநாட்டு பணம் ஆகியவற்றை செலுத்துவது வழக்கம். மேலும் அந்த உண்டியல்களை 3 மாதங்களுக்கு ஒரு முறை திறந்து எண்ணப்படுவதும் வழக்கம். அதன்படி நேற்று கோவில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, அதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், தங்க, வெள்ளி, வெளி நாட்டு பணம் ஆகியவற்றை இந்து சமய அறநிலையத்துறையின் பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன் தலைமையில், கோவில் செயல் அலுவலர் வேல்முருகன், சரக ஆய்வாளர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலையில் கோவிலில் உள்ள 7 உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்பட்டது. கோவில் உண்டியல்களில் இருந்து வருவாயாக ரூ.40 லட்சத்து 42 ஆயிரத்து 650 ரொக்கமும், 353½ கிராம் தங்கமும், 575 கிராம், 200 மில்லி கிராம் வெள்ளியும், டாலர், தினார் உள்ளிட்ட 138 எண்ணிக்கையிலான வெளிநாட்டு பணமும் பக்தர்களால் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், ஆன்மிக அண்பர்கள் ஈடுபட்டிருந்தனர். இதற்கு முன்பு கோவில் உண்டியல் கடந்த ஏப்ரல் மாதம் திறந்து எண்ணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- செஞ்சேரியில் கிராமப்புற நூலகம் அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
- மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்
பெரம்பலூர்:
பெரம்பலூரில் மக்கள் சக்தி இயக்கத்தின் கூட்டம் மாநில துணைத்தலைவர் பெரியசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை, கிளைகளை தொடங்குதல், இயக்க செயல்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடமும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 2-வது இடமும் பெற்றமைக்கும், தேசிய திறனறி தேர்வில் பெரம்பலூர் மாவட்ட கல்வித்துறைக்கும், கல்வித்துறை அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்தும், செஞ்சேரியில் கிராமப்புற நூலகம் அமைக்க வேண்டும். மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் மீது 5 சதவீத விற்பனை மற்றும் சேவை வரிவிதிப்பை ரத்துசெய்ய வேண்டும். தாலுகா தலைநகரான ஆலத்தூரில் தனி நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பெரம்பலூரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த செஞ்சேரி முதல் திருச்சி-சென்னை நான்கு வழிச்சாலையை இணைக்கும் புறவழிச்சாலை விரிவாக்க திட்டப்பணிகளை உடனடியாக மேற்கொள்ள அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டும் என்றும், பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை குறைக்க கோரியும், தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.
- விஷம் குடித்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்
- சிகிச்சை பலனின்றி அழகம்மாள் உயிரிழந்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிபாளையம்-புதூர் ரோட்டை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி அழகம்மாள்(வயது 65). இவருக்கு கடந்த ஒரு வாரமாக உடல்நலம் சரியில்லையாம். இதனால் மனமுடைந்த அழகம்மாள் நேற்று காலை வீட்டில் இருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு சிசிக்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மாலையில் அழகம்மாள் உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏரிக்கரை பகுதியில் பகுதிநேர அங்காடி திறப்பு விழா நடைபெற்றது.
- 222 குடும்ப அட்டைதாரா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்
பெரம்பலூா்:
பெரம்பலூா் அருகேயுள்ள எசனையில், நியாயவிலை அங்காடி கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா மற்றும் வடக்குமாதவி ஏரிக்கரை பகுதியில் பகுதிநேர அங்காடி திறப்பு விழா ஆகியன நடைபெற்றது.
எசனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கக் கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டி, வடக்குமாதவி எரிக்கரை பகுதியில் பகுதிநேர அங்காடியை திறந்துவைத்த கலெக்டர் ப. ஸ்ரீ வெங்கடபிரியா கூறியது:
எசனை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் வடக்குமாதவி முழுநேர நியாயவிலை அங்காடியில் 822 குடும்ப அட்டைகள் உள்ளதாலும், அத்தியாவசியப் பொருள்கள் வாங்க பொதுமக்களுக்கு சிரமமாக இருப்பதாலும் வடக்குமாதேவி ஏரிக்கரை பகுதியில் பகுதிநேர அங்காடி தொடங்கப்பட்டுள்ளது. ஏரிக்கரை பகுதியில் வசிக்கும் 222 குடும்ப அட்டைதாரா்கள் பகுதிநேர அங்காடியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா் அவா்.
- பொதுமக்கள் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் வலியுறுத்தினார்.
- நிறுத்தப்பட்டு ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும்
பெரம்பலூர்:
பெரம்பலூர், பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமையில் நடந்தது.
அப்போது வேப்பந்தட்டை தாலுகா, நூத்தப்பூர் கிராமத்தை சேர்ந்த கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்று அளித்தனர்.
அதில் நூத்தப்பூர் வடக்கு கிராமத்தில் விவசாய நிலம் மற்றும் 50க்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றோம். எங்களது விவசாய நிலம் பூர்வீகமாக பாத்தியப்பட்டு, மூன்று தலைமுறைகளுக்கு மேலாக அனுபவம் செய்து வருகின்றோம். எங்களது வயல் காடு அருகிலேயே நாங்கள் வீடுகள் கட்டி குடியிருந்து வருகிறோம். பரம்பரை பரம்பரையாக அங்குள்ள பாதையை பயன்படுத்தி வருகின்றோம். இந்த பாதை வனத்துறைக்கு சொந்தமான பாதையாகும்.
இந்நிலையில் எங்களது கிராமத்தை சேர்ந்த 2 பேர் வீடு கட்டிக்கொண்டு பொதுபாதையை மறித்து பொதுமக்களின் பயன்பாட்டை தடுத்து வருகின்றனர். இதனால் நாங்களும் பாதை வசதியின்றி தவித்து வருகிறோம். அது மட்டுமல்லாமல் எங்களது பிள்ளைகள் பள்ளிக்கு செல்ல வழியின்றி பள்ளிக்கு செல்லாமல் கல்வியை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே பொதுபாதையை ஆக்கிரமிப்பு செய்து வருவோர்கள் மீது நடவடிக்கை எடுத்து பொதுபாதையை மக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
கவுள்பாளையம் ஊராட்சி தலைவர் கலைச்செல்வன் தலைமையில் நிறுத்தப்பட்டு ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என கோரி பாதிக்கப்பட்ட 25க்கு மேற்பட்ட முதியோர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். மனுவினை பெற்றுக்கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்து, அம்மனுவினை தொடர்புடைய அதிகாரிகளிடம் அளித்து உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
- ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது
பெரம்பலூர்:
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் சின்னசாமி, மாவட்ட செயல் தலைவர் ராமர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு தேர்தல் அறிக்கையில் கூறியவாறு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தேசிய கல்வி கொள்கையை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும். பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் தமிழக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும். மத்திய அரசைப்போல், தமிழக அரசும் ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர். முன்னதாக தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட பொருளாளர் கணேஷ்ராஜா வரவேற்றார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் காமராஜ் நன்றி கூறினார்.
- கோவிலில் சாமி சிலைகளை திருட முயற்சி நடந்துள்ளது.
- மரக்கதவுகளை உடைத்து திறக்க முயன்றுள்ளனர்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே ஓலைப்பாடி கிராமத்தில் மன்னார் சுவாமி பச்சையம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலில் வைக்கப்பட்டு உள்ள சாமி சிலையை திருடுவதற்கு மர்ம நபர்கள் நேற்று முன்தினம் அதிகாலை வந்துள்ளனர். அங்கு கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளதை அறிந்து, கண்காணிப்பு கேமராக்களின் மெயின் சுவிட்சை அணைத்துவிட்டு கடப்பாரை மற்றும் ஆயுதங்களை கொண்டு மரக்கதவுகளை உடைத்து திறக்க முயன்றுள்ளனர். ஆனால் கோவிலின் கதவுகளை உடைக்க முடியாததால் திரும்பி சென்றனர். இதனால் சாமி சிலைகள் தப்பின. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






