என் மலர்
பெரம்பலூர்
- மளிகை கடையில் 3-வது முறையாக திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.
- தற்போது 3-வது முறையாக திருடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் அவ்வையார் தெருவை சேர்ந்தவர் வைத்தியலிங்கம் (வயது 41). இவர் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துறைமங்கலம் பிரிவு சாலை 3 ரோடு அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். வைத்தியலிங்கம் இரவு வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து விட்டு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். அதிகாலை அவரது கடை அருகே மளிகை கடை வைத்திருக்கும் மணி என்பவர் தனது கடையை திறக்க வரும் போது, வைத்தியலிங்கத்தின் கடையின் கதவு (ஷட்டர்) பாதியளவு திறந்திருந்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து அவர் இதுகுறித்து உடனடியாக வைத்தியலிங்கத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் அவர் விரைந்து வந்து மளிகை கடைக்குள் சென்று பார்த்த போது உள்ளே இருந்த ரூ.10 ஆயிரம் மதிப்பிலான சிகரெட் பாக்கெட்டுகள், ரூ.ஆயிரம் மதிப்பிலான கைக்கடிகாரங்கள், ரூ.500 மதிப்பிலான குளிர்பானங்கள், ரூ.500 மதிப்பிலான சோப்புகள் மற்றும் கல்லாவில் வைத்திருந்த 800 ரூபாய் திருட்டு போயிருந்தது.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஏற்கனவே மேற்கண்ட மளிகை கடையில் 2 முறை திருட்டு நடந்துள்ளது என்றும், தற்போது 3-வது முறையாக திருடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- அகரம்சீகூர் மாரியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
- திருக்கல்யாணம் நடைபெற்றது
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம் அகரம்சீகூர் கிராமத்தில் மாரியம்மன் கோயிலில் திருவிழா கடந்த 9-ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் சாமி திருவீதி உலா நடைபெற்று வந்த நிலையில் நேற்று காலை மாரியம்மனுக்கு மஞ்சள், பன்னீர், தயிர், சந்தனம் உட்பட 18-வகையான மூலிகை பொருட்களால் சிறப்பு அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனையும் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நேற்று காலை காத்தவராயன்- ஆரியமாலா திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து வெடி வெடித்தும் , மேள தாளங்கள் முழங்க அருள்மிகு மாரியம்மன் சாமியை திருத்தேருக்கு கொண்டு வரப்பட்டு திருஷ்டி பூஜைகள் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது.
கிராம முக்கியஸ்தர்கள், பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் தேரோடும் வீதிகளின் வழியாக சென்று மீண்டும் நிலையம் வந்தடைந்தது.விழாவின் ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர் மேலும் இந்த தேரோட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க மங்களமேடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
- மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி நடைபெற்றது
- செட்டிகுளம் அரசு பள்ளியில்
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே உள்ள செட்டிகுளம் அரசு மேல்நிலை பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. பயிற்சியினை பள்ளி தலைமை ஆசிரியர் பொன்னுதுரை (பொறுப்பு) தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஆலத்தூர் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் பரிமளா கலந்து கொண்டார். இந்த பயிற்சியில் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009ன் நோக்கங்கள், மாணவர்கள் கல்வி கற்பதன் அவசியம், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அரசு அளிக்கும் நலத்திட்ட ங்கள், மாணவர்களி பள்ளி வளர்ச்சியில் சமுதாயத்தின் பங்கு, இடைநீற்றல், பெண் கல்வி முக்கியத்துவம் குறித்து,பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள்,பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமை, பேரிடர் மேலாண்மை செயல்பா டுகள், போ தைப்பொருட்களை தவிர்த்து பாதுகாப்பாக இருப்பது ஆகியவை குறித்து கூறப்பட்டது.
முகாமில் உதவி தலைமையாசிரியர் லதா, ஜூனியர் ரெட் கிராஸ் மாவட்ட அமைப்பாளரு ம்,தெழிற்கல்வி ஆசிரியருமான ராதாகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர் கலாதங்கராசு, ஒன்றிய குழு உறுப்பினர் திருநாவுக்கரசு, பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் கவிதா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் விஜய்அரவிந்த், வெங்கடேஷ்வர், சுகந்தி, மகாலெட்சுமி, கயல்விழி, பரமேஸ்வரி, மீனா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் கலியமூர்த்தி வரவேற்றார்.நிறைவாக பள்ளி ஆசிரியர் தெய்வானை நன்றி கூறினார்.
- கபடி போட்டியில் அரசு பள்ளிகள் முதலிடம் பிடித்தது.
- மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தின விழாவையொட்டி நடந்த பெரம்பலூர் குறுவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகளில் மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டிருந்த கபடி, கோ-கோ, கால்பந்து ஆகிய குழு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில் 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில் பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும், 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில் அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடமும் பிடித்தது. 14, 19 ஆகிய வயதுகளுக்குட்பட்ட மாணவர்களுக்கான கோ-கோ போட்டியில் எறையூர் அரசு நிதியுதவி பெறும் நேரு மேல்நிலைப்பள்ளி முதலிடம் பிடித்தது. 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் பெரம்பலூர் மரகத மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதலிடமும் பிடித்தன.
- சிறுமியை கர்ப்பமாக்கி திருமணம் செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்
- அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா பென்னகோணம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் வெங்கடேஷ் (வயது 23), கூலித்தொழிலாளி. இவர் 16 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து அச்சிறுமியை வெங்கடேஷ் திருமணம் செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராமு, பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ மற்றும் குழந்தை திருமணம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து வெங்கடேசை நேற்று கைது செய்து அரியலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெற்றால் சைல்டு லைனை 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- அரசு மேல்நிலைப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
- குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு, சில்ரன் சாரிடபுள் டிரஸ்ட் ஆகியவை இணைந்து எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியை நேற்று நடத்தினர். இதற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சிதம்பரம் தலைமை தாங்கினார். இதில் பள்ளி மாணவ-மாணவிகளிடையே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து, பெண் போலீஸ் சுமா ஆகியோர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம், இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் குழந்தைகள் நல குழு உறுப்பினர் ராமு, நன்னடத்தை அலுவலர் பிரபு, மணிமாலா ஆகியோரும் பேசினர். முன்னதாக ஆசிரியை ராகமஞ்சரி வரவேற்றார். முடிவில் முரளீஸ்வரன் நன்றி கூறினார்."
- போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது
- வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் சார்பாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள இரண்டாம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை), இரண்டாம் நிலை சிறை காவலர் மற்றும் தீயணைப்பாளர் பணியிடத்திற்கும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ள குரூப் 1-க்கான இலவச பயிற்சி வகுப்புகள் கடந்த மாதம் 17-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மேலும் தற்போது மருத்துவ தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள மருந்தாளுனர் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள பீல்டு சர்வேயர், டிராப்ட் மேன் சிவில், உதவி வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு விரைவில் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. எனவே மேற்கண்ட இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை, புகைப்படங்களுடன் பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் தொடர்பு கொண்டு பயனடையலாம் என பெரம்பலூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்."
- சாலை விபத்தில் வாலிபர் பலியானார்
- உறவினர் வீட்டிற்கு சென்றுவந்த போது விபரீதம்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம், முஸ்லீம் தெருவை சேர்ந்தவர் மகபூப்கான். இவரது மகன் குலாம்செரிப் (வயது 36).
இவர் பெரம்பலூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் சென்றுவிட்டு பின்னர் வாலிகண்டபுரத்திற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள ஜோசப் பள்ளி அருகே வந்த போது, எதிர்பாராதவிதமாக சாலையில் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோதினார்.
இதில் தூக்கி வீசப்பட்ட குலாம்செரிப், படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த பெரம்பலூர் போலீசார் விரைந்து சென்று, இறந்த குலாம்செரிப் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த, பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாகன விபத்தில் வாலிபர் பலியானார்
- வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் மருவத்தூர் போலீஸ் சரகத்திற்குட்பட்ட சித்தளி கிராமம், தெற்கு தெருவில் வசிப்பவர் செல்வராஜ். மகன் சம்பத் (வயது 25). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
விடுறைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊரான சித்தளிக்கு வந்தார்.
இந்நிலையில் பெரம்பலூருக்கு சொந்த வேலையாக இருசக்கர வாகனத்தில் சம்பத் சென்றார். பேரளி பால்பண்ணை அருகே சென்று கொண்டிருந்த போது, எதிரே அரியலூரை நோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக இவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட சம்பத், படுகாயங்களுடன் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் மருவத்தூர் போலீசார் சம்பவம் நடத்த இடத்திற்கு விரைந்து சென்று, சம்பத் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் வழக்கு பதிவு செய்த போலீசார், வித்து ஏற்படுத்திய லாரி ஒட்டுநர் பெரம்பலூர் கிரின்சிட்டியை சேர்ந்த சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராகுல் காந்தி நடை பயணத்தால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று சீமான் தெரிவித்துள்ளார்.
- மரக்கன்றுகளை வழங்கினார்.
பெரம்பலூர்:
நாம் தமிழர் கட்சியின் முன்னாள் பெரம்பலூர் மாவட்ட செயலாளரின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு பெரம்பலூருக்கு வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பெருமத்தூர் மற்றும் வேப்பூர் பேருந்து நிலையம் அருகே கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது கட்சியின் மாவட்ட செயலாளர் தங்கரத்தினம், மாவட்ட தலைவர் கமுரிதீன், மாவட்ட பொருளாளர் முருகேசன், தொகுதி செயலாளர் பாலகுரு, குன்னம் தொகுதி செயலாளர் ராஜயோக்கியம், மாவட்ட மகளிர் அணி பாசறை செல்லம்மாள், குன்னம் தகவல் தொழில்நுட்பு பாசறை செயலாளர் தனபால் மற்றும் அக்கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் சீமான் பெரம்பலூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ராகுல் காந்தி தினமும் நடக்கின்றார். அதனால் என்ன நடந்து விடப்போகிறது?. ஒன்றும் நடக்காது. அவர் தினமும் நடக்கிறார். காலையில் ஒன்றேகால் மணி நேரம், மாலையில் ஒன்றேகால் மணி நேரம். அவர் நடைபயிற்சி எடுக்கிறார். இதனால் எந்த மாற்றம் வந்துவிடப்போகிறது?. 50 ஆண்டுகள் இந்த நாட்டை ஆளுகின்ற போது ஏற்படுத்தாத மாற்றத்தை இந்த நடைபயணம் செய்யும் 3 மாத காலத்தில் ஏற்படுத்தி விடப்போகிறது? நடந்து மாற்றத்தை ஏற்படுத்தி விடுவார் என்றால் எப்படி? மாற்றம் வரும் என்றால் எல்லோரும் நடக்க வேண்டியது தானே! ராகுல் காந்தி நடந்து எந்த கட்சியை ஒருங்கிணைக்க முடியும்? முதலில் தேசிய ஒற்றுமையை ஒருங்கிணைக்க வேண்டும். நடந்து சென்று கட்சிகளை ஒருங்கிணைக்க முடியாது.
அ.தி.மு.க. ஆட்சியில் மின் கட்டண உயர்விற்கு அப்போது கொரோனாவை விட மிக கொடுமையானது என்றார். எதிர்க்கட்சியாக உள்ளபோது ஒரு கருத்தை கூறுகிறார். ஆளுங்கட்சியாக இருக்கும்போது வேறொரு கருத்தை கூறுகிறார். நீங்கள் என்னதான் சொல்ல வருகின்றீர்கள். எதை எதிர்தீர்களோ அதை நடைமுறைப ்படுத்துகிறீர்கள். கோவில்களில் தமிழிலும் தொடர்ந்து அர்ச்சனை செய்ய வேண்டும் என்பதை நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழில் வழிபாடு உள்ளது தான் நடைமுறை. வழிபாடு என் தாய் மொழியில் தான் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- 111 ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- மாவட்டத்தில் 121 ஊராட்சிகள் உள்ளன.
பெரம்பலூர்:
தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் கிராம ஊராட்சிகளில் பணிபுரிந்து வரும் ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர், ஊராட்சி மன்றங்களில் காலியாக உள்ள செயலாளர் பணியிடங்களை தமிழ்நாடு அரசு தேர்வாணைத்தேர்வு மூலம் நிரப்ப வேண்டும். மன உளைச்சலை ஏற்படுத்தும் அதிக பணிச்சுமையை குறைக்க வேண்டும். கருவூலம் மூலம் நேரிடையாக சம்பளம் வழங்க வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் முதல் 3 நாட்கள் சம்பளம் பெறாமல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.பெரம்பலூர் மாவட்டத்தில் 121 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 10 ஊராட்சிகளில் செயலாளர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. 2-வது நாளாக நேற்று ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் காமராஜ் தலைமையில் மொத்தம் 111 ஊராட்சி செயலாளர்கள் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தினர்."
- கோரிக்கை அட்டை அணிந்து டாக்டர்கள் பணிபுரிந்தனர்.
- அரசு மருத்துவமனையில் நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரிந்துவரும் டாக்டர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், தமிழக அரசு ஆணை எண்.354-ஐ உடனடியாக மறுஆய்வு செய்திட வேண்டும். முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு சம்பள உயர்வு வழங்க வேண்டும். டாக்டர்களுக்கான சேமநலநிதியை (டி.சி.எப்.) விரைந்து வழங்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலநேரம் மாற்றி அமைத்துள்ள அரசாணை எண்.225-ஐ ரத்து செய்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணிபுரிந்தோம் என்றனர்.






