என் மலர்tooltip icon

    பெரம்பலூர்

    • திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் சிறையில் அடைத்தனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, அடைக்கம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த கனகராஜின் மனைவி ஜெயலெட்சுமியின் வீட்டின் பீரோவை உடைத்து நகை, பணத்தை நேற்று திருடிச்சென்ற களரம்பட்டியை சேர்ந்த கண்ணன் மகன் மாரிமுத்துவை(வயது 24) பொதுமக்கள் கையும், களவுமாக பிடித்து பாடாலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் செட்டிக்குளம் வடக்கு தெருவில் பெரியசாமியின் மகன் செல்வராஜின் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. இந்த சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து மாரிமுத்துவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதேபோல் புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராமநாதன் என்பவரது அரிசி ஆலையில் இரும்பு கம்பிகளை திருடிய அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை மகன் பாஸ்கர்(31), ரவி(48), அமிர்தலிங்கம் என்ற அமுல்ராஜ்(37), சுந்தர்ராஜின் மகன் தமிழரசன்(23) ஆகிய 4 பேரை பாடாலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • கடை விற்பனையாளர் திடீரென இறந்தார்.
    • கழிவறையில் மயங்கி கிடந்தார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், தெரணி கிராமத்தில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்வகுமார்(வயது 42). இவர் பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் உள்ள ஒரு இனிப்பு கடையின் மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்து, அந்த கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அறையின் அருகே உள்ள கழிவறைக்கு சென்ற செல்வகுமார் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சக ஊழியர்கள் கழிவறைக்குள் சென்று பார்த்தபோது, அங்கு செல்வகுமார் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாலிகண்டபுரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
    • 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது

    பெரம்பலூர்

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் நகர் உதவி செயற்பொறியாளர் முத்தமிழ்செல்வன் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:பேரளி துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பேரளி, அசூர், சித்தளி, பீல்வாடி, ஒதியம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிகாடு, வாலிகண்டபுரம், கல்பாடி, க.எறையூர், நெடுவாசல், கவுல்பாளையம், மருவத்தூர், குரும்பாபாளையம், செங்குணம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அவர், அதில் கூறியுள்ளார்.

    • பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • குழாயில் குடிநீர் கலங்கலாக வந்ததால்

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள நூத்தப்பூர் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து நூத்தப்பூர் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு தெருக்குழாயில் வந்த குடிநீர் கலங்கலாக மாசு ஏற்பட்ட நிலையில் வந்துள்ளது.

    கடந்த சில நாட்களாக இதேபோன்று குடிநீர் வந்ததால், ஊராட்சி நிர்வாகத்திடம் இது குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்காததால் நேற்று திடீரென பொதுமக்கள் நூத்தப்பூர் பஸ் நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கை.களத்தூரில் இருந்து நூத்தப்பூர் வழியாக பெரம்பலூர் செல்வதற்கு வந்த அரசு டவுன் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த கை.களத்தூர் போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது விரைவில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்து சுகாதாரமான குடிநீர் வழங்கப்படும் என்று அவர்கள் உறுதி அளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • பள்ளி மாணவர்களுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி நடந்தது.
    • அதிக புள்ளிகள் பெற்ற பள்ளிக்கு சுழற்கோப்பை

    பெரம்பலூர்

    பெரம்பலூரில், மாவட்ட அளவிலான பள்ளி மாணவ-மாணவிகளுக்கான டேபிள் டென்னிஸ் போட்டி நேற்று நடந்தது. இதில் 11, 14, 17, 19 ஆகிய வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஒற்றையர் பிரிவில் நடத்தப்பட்ட போட்டியில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக பெரம்பலூர் நகர்மன்ற தலைவர் அம்பிகா ராஜேந்திரன் கலந்து கொண்டு போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த வீரர்-வீராங்கனைகளுக்கு கோப்பை, பதக்கம், கேடயம், சான்றிதழ் ஆகியவற்றை வழங்கி பாராட்டினார். போட்டியில் அதிக புள்ளிகள் பெற்ற பள்ளிக்கு சுழற்கோப்பை வழங்கப்பட்டது. மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டிற்கான ஏற்பாடுகளை பெரம்பலூர் மாவட்ட மேஜை பந்து கழகத்தின் தலைவர் சரவணன், செயலாளர் ராமர், பொருளாளர் ஸ்டான்லி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

    • பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • போலீசாரை கண்டித்து நடந்தது

    பெரம்பலூர்

    இந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வருவதாகவும், இந்துக்கள் மனதை புண்படுத்தி வருவதாகவும் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்தும், அவரை கைது செய்யக்கோரியும் பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க.வினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ராசாவை கைது செய்யக்கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் சிலரின் கையில் ராசாவின் உருவப்படங்கள் இருந்தனர். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) தங்கவேலு தலைமையிலான போலீசார், அந்த உருவப்படத்தை எரித்து விடுவார்கள்? என்ற எண்ணி, ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடையே புகுந்து பா.ஜ.க.வினர் கையில் இருந்த உருவப்படங்களை கைப்பற்றினர்.

    அப்போது பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவரை போலீசார் தாக்கியதாக கூறி, அக்கட்சியினர் புதிய பஸ் நிலையத்தை விட்டு வெளியே ஓடி வந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் போலீசாரை கண்டித்தும், ராசாவை கைது செய்யக்கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 24 பேரை கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றி அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். போலீசார் கைது செய்து வேனில் ஏற்றியபோது பா.ஜ.க. மாவட்ட தலைவர் செல்வராஜை போலீசார் தாக்கியதில், கன்னத்தில் நகக்கீறல் ஏற்பட்டதாக கட்சியினர் குற்றம்சாட்டினர்.

    • மாணவ-மாணவிகளுக்கான தன்னம்பிக்கை பயிலரங்கம் நடந்தது.
    • தஞ்சை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் பங்கேற்பு

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் தனியார் மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கான தன்னம்பிக்கை பயிலரங்கமும், 1893-ம் ஆண்டு சுவாமி விவேகானந்தர் சிகாகோ சர்வ சமய மாநாட்டில் பாரதத்தின் பெருமையை எடுத்துரைத்த தினத்தை நினைவு கூறும் விழாவும் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் சுவாமி விமூர்த்தானந்தர் கலந்து கொண்டு ஆசியுரை வழங்கி பேசுகையில், தன்னம்பிக்கை கொண்ட சுவாமி விவேகானந்தர் உலக புகழ்பெற்றார். ஆகவே மாணவர்கள் அனைவரும் தன்னம்பிக்கை மிக்கவர்களாக உருவாக வேண்டும், என்று கூறினார்.

    • ஏரியில் கிடந்த பெண் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • மணிபர்சில் பயண சீட்டு இருந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், எசனையில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமாக உள்ள ஏரியின் உட்புறத்தில் நேற்று மதியம் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இதனை கண்ட அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது இறந்த கிடந்த பெண்ணின் உடல் அருகே வயலில் தெளிக்கக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) பாட்டில் காலியாக கிடந்தது. மேலும் அதனருகே கிடந்த பையில் இருந்த மணிபர்சில் சேலம் மாவட்டம் வீரகனூரில் இருந்து பெரம்பலூருக்கு நேற்று காலை அரசு பஸ்சில் பயணம் செய்து வந்த பயணச்சீட்டு இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். மேலும் இறந்து கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விஷம் குடித்து அந்த பெண் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர்? தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பெண் குழந்தைக்கு பாலியல் தொந்தரவு; முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
    • குழந்தையின் தாயிடம் தெரிவித்துள்ளார்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, டி.களத்தூரை சேர்ந்தவர் பி.அங்கமுத்து (வயது 80). சம்பவத்தன்று இவர் அங்கன்வாடிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய 3 வயது பெண் குழந்தையை அழைத்து சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனை கண்ட ஒருவர் இதுகுறித்து குழந்தையின் தாயிடம் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் கோபிநாத். இது தொடர்பாக பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அங்கமுத்துவை கைது செய்தனர்.

    • பா.ஜ.க. நிர்வாகியின் கடை சூறையாடப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பெரம்பலூர்

    பெரம்பலூர் நகர பா.ஜ.க. தலைவர் ஜெயக்குமார் புதிய பஸ் நிலையத்தில் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு மர்மநபர்கள் அந்த கடையை அடித்து நொறுக்கிவிட்டு சென்றனர். தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தான் கடையை அடித்து நொறுக்கியதாக பா.ஜ.க.வினர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அனுமதியின்றி கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
    • வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    பெரம்பலூர்

    திருச்சி மண்டல புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் நாகராஜன் தலைமையில் பறக்கும் படை அதிகாரிகள் பெரம்பலூர் அருகே எசனை ரெட்டமலை சந்து பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை மறித்து சோதனையிட்டனர். அதில் அரசு அனுமதியின்றி ரூ.6,840 மதிப்பிலான உடை கற்கள் ஏற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் உடை கற்களுடன் லாரியையும், அதன் டிரைவர் எசனை தேவேந்திர குல வேளாளர் தெருவை சேர்ந்த ஞானசேகரனையும் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக போலீசார் லாரி உரிமையாளர், டிரைவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அனுமதியின்றி கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல் செய்தனர்.

    "

    • கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
    • அனைத்து பஸ்களும் நின்று செல்ல வலியுறுத்தி நடந்தது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் திடீரென 2-ம் ஆண்டு மாணவர் முகமது ஜமால் தலைமையில் மாணவ-மாணவிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கல்லூரி முன் பெரம்பலூர்-ஆத்தூர் சாலையில் செல்லும் அனைத்து பஸ்களும் நின்று செல்ல வேண்டும், கல்லூரி தொடங்கும் நேரத்திலும் கலைந்து செல்லும் நேரத்திலும் அதாவது காலை மற்றும் மாலை வேளைகளில் கூடுதலாக பஸ் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் மற்றும் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ராஜா ஆகியோர் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×