search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க.வினர் சாலை மறியல்
    X

    பா.ஜ.க.வினர் சாலை மறியல்

    • பா.ஜ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்
    • போலீசாரை கண்டித்து நடந்தது

    பெரம்பலூர்

    இந்து மதத்தை தொடர்ந்து இழிவுபடுத்தி பேசி வருவதாகவும், இந்துக்கள் மனதை புண்படுத்தி வருவதாகவும் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்தும், அவரை கைது செய்யக்கோரியும் பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க.வினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ராசாவை கைது செய்யக்கோரி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.

    அப்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களின் சிலரின் கையில் ராசாவின் உருவப்படங்கள் இருந்தனர். இதனை கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த பெரம்பலூர் சரக போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) தங்கவேலு தலைமையிலான போலீசார், அந்த உருவப்படத்தை எரித்து விடுவார்கள்? என்ற எண்ணி, ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடையே புகுந்து பா.ஜ.க.வினர் கையில் இருந்த உருவப்படங்களை கைப்பற்றினர்.

    அப்போது பா.ஜ.க.வை சேர்ந்த ஒருவரை போலீசார் தாக்கியதாக கூறி, அக்கட்சியினர் புதிய பஸ் நிலையத்தை விட்டு வெளியே ஓடி வந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அவர்கள் போலீசாரை கண்டித்தும், ராசாவை கைது செய்யக்கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அங்கு வந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து அவர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்பட 24 பேரை கைது செய்து குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றி அருகே உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். போலீசார் கைது செய்து வேனில் ஏற்றியபோது பா.ஜ.க. மாவட்ட தலைவர் செல்வராஜை போலீசார் தாக்கியதில், கன்னத்தில் நகக்கீறல் ஏற்பட்டதாக கட்சியினர் குற்றம்சாட்டினர்.

    Next Story
    ×