என் மலர்
பெரம்பலூர்
- வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
- கொலை முயற்சி செய்தவர்கள் மீது நடவடிக்கை கோரி
பெரம்பலூர்:
பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்க அவசர நிர்வாக குழு கூட்டம் அதன் தலைவர் வள்ளுவன்நம்பி தலைமையில், செயலாளர் சுந்தர்ராஜன் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கீழமை நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க, திருப்பூர் மகளிர் நீதிமன்ற அரசு சிறப்பு வழக்கறிஞர் ஜமீலாபானு மற்றும் அவரது மகள் ஆகியோரை வழக்கறிஞர் அலுவலகத்தில் நுழைந்து கொலை செய்ய முயற்சி செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரியும், தமிழக அரசு வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்ற வலியுறுத்தியும் ஒரு நாள் மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பணிகளில் இருந்து விலகி இருப்பது என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி பெரம்பலூர் வழக்கறிஞர்கள் சங்கத்தை சேர்ந்த (பார் அசோசியேசன்) வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர்.
- கூடுதல் பஸ் இயக்கக்கோரி பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்
- ஒரு வாரத்திற்குள் கூடுதல் பஸ்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா செட்டிகுளத்தை அடுத்த மாவிலங்கை கிராமத்ைத மாணவ, மாணவிகள் செட்டிகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். அவர்கள் தினமும் பள்ளிக்கு மாவிலங்கை கிராமத்தில் இருந்து வந்து பஸ்சில் செல்கின்றனர்.
இந்த நிலையில் பள்ளி செல்லும் நேரத்தில் கூடுதல் பஸ் இயக்கக்கோரி மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று கூறி மாணவ, மாணவிகள் மாவிலங்கை பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை எதுமலையில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்ற அரசு பஸ் மறித்து சிறைபிடித்தனர். பின்னர் அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
சுமார் 1½ மணி நேரம் இந்த மறியல் போராட்டம் நீடித்தது. இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், அரசு போக்குவரத்துக் கழக பெரம்பலூர் கிளை மேலாளர் ராஜா மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் மாவிலங்கை கிராமத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வாரத்திற்குள் கூடுதல் பஸ் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் மாணவ-மாணவிகள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
- பெண்களிடம் நகை-பணம் பறிக்கப்பட்டது.
- நாட்டு வைத்தியர் என்று கூறினார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரை சேர்ந்தவர் சித்ரா(வயது42). மாற்று திறனாளியான இவரிடம் நேற்று வீட்டிற்கு வந்த மர்ம நபர் தன்னை ஒரு நாட்டு வைத்தியர் என்றும், சித்ராவின் காலை உடனடியாக சரி செய்வதற்கு தன்னிடம் மருந்து உள்ளதாகவும் கூறி உள்ளார். அதற்கு ரூ.13 ஆயிரம் செலவு ஆகும் என கூறியுள்ளார். இதனை நம்பிய சித்ரா எப்படியாவது தனது கால் குணமானால் போதுமே என நினைத்து ரூ.13 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார். அதன்பிறகு அந்த மோசடி ஆசாமி மாந்திரீகம் செய்ய வேண்டும் அதற்கு சித்ரா கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை கொடுங்கள் என கேட்டுள்ளார். இதை நம்பிய சித்ரா ரூ.13 ஆயிரம் பணத்தையும், தான் கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலியையும் கழட்டிக் கொடுத்துள்ளார். இதை வாங்கிய அந்த மர்ம ஆசாமி வாசலில் மருந்து வைத்துள்ளேன் எடுத்து வருகிறேன் என கூறிவிட்டு தான் தயாராக வைத்திருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுள்ளார். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த சிவகாமி என்பவரிடம் உடல் வலியை போக்குவதற்கு மருந்து தருவதாக கூறி ரூ.11 ஆயிரத்தை வாங்கி உள்ளார். அதையும் பெற்றுக்கொண்டு ரூ.50 மதிப்புள்ள ஒரு மருந்து பாட்டிலை கொடுத்து விட்டு தப்பி உள்ளார். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் வி.களத்தூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் பெண்களை ஏமாற்றி நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மோசடி நாட்டு வைத்தியரை போலீசார் தேடி வருகின்றனர்."
- வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.
- வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றுள்ளார்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள பசும்பலூரை சேர்ந்தவர் கணபதி மனைவி ராஜேஸ்வரி(வயது28). கணபதி வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜேஸ்வரி நேற்று காலை தனது வீட்டை பூட்டிவிட்டு வயலுக்கு சென்றுள்ளார். மீண்டும் வயலிலிருந்து மாலையில் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் தங்கச் செயின் மற்றும் ரூ.15 ஆயிரம், வெள்ளி கொலுசு உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்று இருந்தது தெரிய வந்தது. இது குறித்து ராஜேஸ்வரி வி.களத்தூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்."
- சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
பெரம்பலூர்
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பிக்கும் வகையில் 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' பெறுபவருக்கு ரூ.5 லட்சம் விருது தொகையும், ஒரு பவுன் தங்கப்பதக்கம், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர்கள் முதல்-அமைச்சரால் தேர்வு செய்யப்படுகிறார்கள். 2022-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது' வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் சமூக நீதிக்காக பாடுபட்டு, பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள், தங்களது விண்ணப்பம், தங்களின் சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கிய தகுதிகள் உடையவர்கள் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவல் பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
- பெண்கள்-குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசாரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
- இலவச எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேலூர் கிராம பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து போலீசாரின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மருதமுத்து, பெண் போலீஸ் சுமா ஆகியோர் இணைந்து பொதுமக்களிடையே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும், ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் செயல்படும் பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 குறித்தும், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்ற இலவச தொலைபேசி எண் குறித்தும், பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்."
- ரத்ததான முகாம் நடைபெற்றது
- உலக நோயாளிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடந்தது
பெரம்பலூர்:
பெரம்பலூரில் உலக நோயாளிகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு லயன்ஸ் கிளப், உதிரம் நண்பர்கள் குழு ஆகியவை இணைந்து ரத்த தான முகாமினை நடத்தியது.
முகாமிற்கு லயன்ஸ் கிளப் தலைவர் ஆனந்த் தலைமை வகித்தார். உதிரம் நண்பர்கள் குழு தலைவர் ஜெயராமன் முன்னிலை வகித்து முகாமினை தொடங்கிவைத்தார். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை டாக்டர் சரவணன் தலைமையில் செவிலியர்கள் கொண்ட குழுவினர் ரத்தம் சேகரித்தனர். இதில் 26 யூனிட் ரத்தம் பெறப்பட்டு அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.
முகாமில் நகராட்சி கவுன்சிலர்கள் ஷாலினி, மணிவேல் மற்றும் நாரணாயசாமி, லயன்ஸ் கிளப் செயலாளர்கள் தமிழ்மாறன், தமிழ்செல்வன் , பொருளாளர் ராஜேஸ், உதிரம் நண்பர்கள் குழு செயலாளர் நாகராஜ், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு நலசங்க செயலாளர் நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்
- வாகனம் மோதி வாலிபர் உயிரிழந்தார்.
- புறவழிச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
பெரம்பலூர்
பெரம்பலூர் அருகே குரும்பலூர் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் பூவரசன்(வயது 26). இவர் நேற்று அதிகாலை பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையில் குரும்பலூர் புறவழிச்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் முகம் நசுங்கி சம்பவ இடத்திலேயே பூவரசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், பூவரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது
- சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பெரம்பலூர்:
பெரம்பலூரில் தந்தை பெரியாரின் 144 வது பிறந்த தின விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
பெரம்பலூரில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது பெரியார் சிலைக்கு திராவிட கட்சியினர் மாவட்ட தலைவர் தங்கராசுதலைமையிலும், முன்னாள் பகுத்தறிவு செயலாளர் தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ஓவியர் முகுந்தன் முன்னிலையிலும் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.
இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரியாரின் திரு உருவ படத்திற்கு, கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ் மாணிக்கம் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் சமூக நீதி நாள் உறுதிமொழியை அக்கட்சியினர் ஏற்றனர். பின்னர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதே போல் லோக் ஜனசக்தி கட்சியின் சார்பில், மாநில விவசாய அணி தலைவர் பீல்வாடி சீனிவாசன் தலைமையில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பெரியாரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்து அக்கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.
- சமூக நீதியை கடைபிடிக்கும் கட்சி பா.ஜ.க. தான் என்று மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
- தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. போராட்டம் நடத்தியுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூரில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
நீதிமன்றத்தை நாடுவோம்
பிரதமர் மோடியின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாட கூடாது என மாநில அரசு காவல்துறை மூலம் தடுத்து வருகின்றனர். தி.மு.க. துணை பொது செயலாளர் ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து பெரம்பலூரில் பா.ஜ.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கட்சியினரை தாக்கிய போலீஸ் துைணசூப்பிரண்டு மீது நடவடிக்கை எடுக்க திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி.யையும் மாவட்ட கலெக்டரையும் சந்தித்து மனு அளிக்க உள்ளோம். நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் நீதிமன்றத்தை நாடுவோம். மேலும் திருச்சி கோட்ட பா.ஜ.க. வினர் சார்பில் பெரம்பலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துமு சூழ்நிலை ஏற்படும்.
பதில் சொல்ல வேண்டும்
ஆ.ராசா, மற்ற மதங்களில் குறிப்பிட்டுள்ள பெண்களுக்கு விரோதமாகவும், சமூக நீதிக்கான விரோதமாகவும் குறிப்பிடப்பட்டுள்ள விஷசங்களை பற்றி பேசமுடியுமா? மக்கள் பிரநிதியான ராசா அனைத்து மக்களுக்கும் பொதுவானராக இருக்கவேண்டும். இந்துக்கள் குறித்து ஆ.ராசா பேசியதற்கு முதல்-அமைச்சர் பதில் சொல்ல வேண்டும்.
சமூக நீதியை கடைபிடிக்கும் கட்சி பா.ஜ.க. தான். சொத்து வரி, மின் கட்டணம் உயர்வு போன்றவற்றை கண்டித்தும், மக்களுக்கு விரோதமாக செயல்படும் தி.மு.க. அரசை கண்டித்து பா.ஜ.க. போராட்டம் நடத்தியுள்ளது.
இந்து மக்களை பற்றி அவதூறாக பேசிய ஆ. ராசா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் அந்த பேச்சை வாபஸ் பெறவேண்டும். அதுவரை பா.ஜ.க. தொடர்ந்து போராடும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது மாவட்ட தலைவர் செல்வராஜ் உடனிருந்தார்.
- எசனை பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுகிறது
- காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை
பெரம்பலூர், செப்.19-
பெரம்பலூர் மின் கோட்டத்திற்குட்பட்ட எசனை துணை மின்நிலையத்தில் நாளை (20-ந் தேதி) மாதாந்திரபராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராமபகுதிகளான கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, இரட்டைமலைசந்து, அனுக்கூர், சோமண்டாப்புதூர், வேப்பந்தட்டை, பாலையூர், மேட்டாங்காடு, திருப்பெயர், கே.புதூர், மேலப்புலியூர், நாவலூர் ஆகிய கிராமங்களில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
- இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது
- விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்தது
பெரம்பaலூர்:
பெரம்பலூரில் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இரட்டைமலை சீனிவாசனின் 77-வது நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நடந்தது. பெரம்பலூர் புதுபஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை வகித்து இரட்டைமலை சீனிவாசனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர் வீரசெங்கோலன், ஜெயவர்த்தனன், வக்கீல் அண்ணாதுரை, பிரேம்குமார் மற்றும் நகராட்சி கவுன்சிலர் தங்கசண்முகசுந்தரம், லெனின், செல்வக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






