என் மலர்
பெரம்பலூர்
- சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
- போக்குவரத்து பாதிக்கப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது கீழப்பெரம்பலூர் காலனி தெரு முதல் சின்னாறு கரை வரை 900 மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். அதை நிறைவேற்றி தருவதாக கூறி விட்டு அமைச்சர் மற்ற நிகழ்ச்சிகளுக்கு சென்றார்.
இந்தநிலையில் கீழப்பெரம்பலூர் காலனி பகுதி மக்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஒரு வேனில் புறப்பட்டு வயலூர் கிராமம், அரியலூர் திட்டக்குடி ரோட்டில் கீழப்பெரம்பலூர் செல்லும் பிரிவு சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்தநிலையில் கீழபெரம்பலூரில் இருந்து அந்த வழியாக சென்ற அமைச்சர் சிவசங்கர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- நாட்டார்மங்கலம் கிராமத்தில் நட்சத்திர ஆமை பிடிபட்டது
- மலைப்பகுதியையொட்டியுள்ள வயலில் காணப்பட்டது
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் அருகே விவசாய நிலத்தில் இருந்த அரியவகை நட்சத்திர ஆமையை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆலத்தூர் அருகே நாட்டார்மங்கலம் கிராமத்தில் மன்னார்கோவில் அருகே மலைப்பகுதியையொட்டி சுந்தரம் என்பவரது விவசாய நிலம் உள்ளது. இன்று காலை சுந்தர மகன் பாவநாசன் தங்களது வயலில் பயிரிட்டுள்ள சம்பங்கி பூ பறித்து கொண்டிருந்தார். அப்போது வாய்க்காலில் அரியவகை நட்சத்திர ஆமை வந்தது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் பாலுசாமி மூலம் பெரம்பலூர் மாவட்ட வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் வனக்காப்பாளர் ரோஜாவிடம் பிடிபட்ட அரிய வகை நட்சத்திர ஆமை ஒப்படைக்கப்பட்டது.
- 4 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்க கோரிக்கை விடுத்தனர்.
- மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர்
பெரம்பலூர் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்ட செயற்பொறியாளர் (பொது) சேகர் தலைமை வகித்தார். பெரம்பலூர் கோட்ட செயற்பொறியாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார். இதில் மின்நுக ர்வோர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராஜாசிதம்பரம் அளித்துள்ள மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 2014ம் ஆண்டு முதல் நடப்பாண்டு ஜூன் மாதம் வரை மொத்தம் 3 ஆயிரத்து 487 விவசாயிகள் தங்களுக்கு மின் இணைப்பு கேட்டு முன்னுரிமை பதிவேட்டில் பதிவு செய்து மின் இணைப்பிற்காக காத்தி ருக்கின்றனர். இவற்றில் கணினி முறையில் பதிவு செய்ய தகுதியானவர்கள் மொத்தம் 156 பேரும், கணினியில் பதிவு செய்து மின்இணைப்பு பெற தகுதியானவர்கள் 400 பேரும் உள்ளனர். மேலும் நடப்பு நிதி ஆண்டில் விவசாய மின் இணைப்பு வேண்டி விண்ணப்பித்துள்ளனர்.
இதன்படி மொத்தம் 4 ஆயிரத்து 43 பேர் மின் இணைப்பிற்காக காத்திருக்கி ன்றனர். எனவே பதிவு செய்து காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் மின்இணைப்பு கிடைக்க தயார் நிலை பதிவே ட்டில் பதிவு செய்யவும், மின்இணை ப்பு வழங்க இலக்கீடு நிர்ணயம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரி வித்துள்ளார்.
- எல்ஐசி முகவர்கள் தர்ணா போராட்டம்
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் எல்ஐசி அலுவலகம் முன்பு முகவர் சங்கத்தினர் முகவர் ஓய்வு தினத்தையொட்டி பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பணியை புறக்கணித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு முகவர் சங்க தலைவர் சுத்தாங்காத்து தலைமை வகித்தார். செயலாளர் செந்தில் குமார், பொருளாளர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்ட இணை செயலாளர் முருகாணந்தம், மாவட்ட தலைவர் பார்த்தசாரதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில் ஆயுள் காப்பீட்டு பாலிசிதாரர் போனஸை உயர்த்தி வழங்க வேண்டும். ஆயுள் காப்பீட்டு சேவைக்கு ஜி.எஸ்.டி வரிவிதிப்பை நீக்க வேண்டும். அனைத்து முகவர்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். முகவர் நல நிதி உருவாக்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதில் எல்ஐசி முகவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் நாளை (14ம்தேதி) வரை நடைபெறுகிறது.
- அஞ்சலக கண்காணிப்பாளருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது
- அடையாள அட்டை வழங்காத
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, பாடாலூர் கிராமத்தை சேர்ந்தவர் துரைசாமி மகன் முருகப்பாண்டியன். இவர் கடந்த 1.06.2017ம் ஆண்டு பெரம்பலூர் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சலக அடையாள அட்டை வேண்டி அதற்கான தொகை ரூ. 250ம் அளித்து விண்ணப்பித்திருந்தார். இவரது அடையாள அட்டை தராததால் மாவட்ட தலைமை தபால்நிலைய அலுவலரிடம் பலமுறை தன் அடையாள அட்டையை தாருங்கள் என கேட்டுப் பார்த்தும் பொறுப்பற்ற முறையில் பதில் கூறி காலம்தாழ்த்தி வந்துள்ளார்.
இதனால் மன உளைச்சலான முருக ப்பாண்டியன் எதிர்மானு தாரர்களான ஸ்ரீரங்கம் கோட்ட அஞ்சலக கண்கா ணிப்பாளர், பெரம்பலூர் மாவட்ட தலைமை அஞ்சல் அலுவலர் ராஜி, பாடாலூர் அஞ்சல் அலுவலக தபால்காரர் கலியமூர்த்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து சேவை குறைபாடு காரணமாக ரூ,9 ஆயிரமும், வழக்கு செலவிற்காக ரூ. 10 ஆயிரம் பெற்றுத்தரவேண்டும் என பெரம்பலூர் வக்கீல் அய்யம்பெருமாள் மூலம் பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் மூலம் வழக்கு தொடந்தார்.
இந்த வழக்கு விசாரனையில் முறையான பதில் தாக்கல் செய்யபடாததாலும், இதுவரை அஞ்சல் அடையாள அட்டை வழங்காததாலும் இரு தரப்பையும் விசாரித்த நுகர்வோர் கோர்ட் தலைவர் ஜவஹர், உறுப்பினர்கள் திலகா, முத்துகுமரன் ஆகியோர். அஞ்சலக சேவை குறைபாட்டால் ஏற்பட்ட மனுதாரர்கள் மன உளைச்சலை ஏற்படுத்தியதாற்காக நஷ்ட ஈடாக ரூ.20 ஆயிரமும், வழக்கு செலவுத்தொகை ரூ.5 ஆயிரமும் மனுதாரருக்கு கொடுத்திட வேண்டும் என உத்தரவிட்டனர்.
- ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர்கள் அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.
- கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
பெரம்பலூர்
பெரம்பலூரில் தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பினர், நான்கு ரோடு சந்திப்பு அருகே உள்ள மேற்பார்வை மின் பொறியாளர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்ட கிளை தலைவர் சம்பத் தலைமை தாங்கினார். மாநில துணை தலைவர் பஷீர், வட்ட கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். தமிழ்நாடு மின் வாரியம் மற்றும் பொதுத்துறைகளை, பொதுத்துறைகளாகவே நீடிக்க செய்ய வேண்டும். 1.1.2022 முதல் அளிக்க வேண்டிய அகவிலைப்படியை உடனடியாக அளிக்க வேண்டும். அரசின் உத்தரவாதங்களுடன் தடையின்றி தொடர்ந்து ஓய்வூதியம் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 1.4.2003-க்கு பிறகு நிரந்த வேலையில் சேர்ந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த அரைநிர்வாண போராட்டம் நடந்தது. இதில் ஆண்கள் சட்டை அணியாமலும், பெண்கள் கறுப்பு நிற முக கவசம் அணிந்தும் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட கிளை துணை செயலாளர் வீரபாண்டியன் நன்றி கூறினார்.
- ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது.
- கலெக்டர் தலைமை தாங்கினார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட ஓய்வூதியதாரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார். சென்னை ஓய்வூதிய இயக்ககத்தின் இணை இயக்குனர் கமலநாதன் முன்னிலை வகித்தார். இதில் ஓய்வூதியதாரர்கள் திரளாக கலந்து கொண்டு, தங்கள் கோரிக்கைகளை தெரிவித்து, அதனை நிறைவேற்ற வலியுறுத்தினர். இதையடுத்து கலெக்டர் பேசுகையில், ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை தொடர்பாக 24 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 3 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 21 மனுக்களையும் சம்பந்தப்பட்ட அலுவலருக்கு அனுப்பி 15 நாட்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றார். கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்."
- மனித சங்கிலி போராட்டம் நடந்தது
- மதசார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் நடத்தினர்
பெரம்பலூர்:
பெரம்பலூரில் அனைத்து மதசார்பற்ற முற்போக்கு இயக்கங்கள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நேற்று நடந்தது.
பெரம்பலூர் பாலக்கரை முன்பு நடந்த போராட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம் தலைமை வகித்தார். இதில் மாநில விவசாய அணி செயலாளர் வீரசெங்கோலன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ரமேஷ்,
தமிழ்வழி கல்வி இயக்க மாநில தலைவர் சின்னப்பா, மதிமுக மாவட்ட பொருளாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மனிதசங்கிலி ஒன்ரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நின்றது, இதில் 200க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
- துப்பறியும் நிபுணர் வீட்டில் நகை, பணம் கொள்ளை போனது
- சென்னையில் சிகிச்சையில் இருந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் வெங்கடாசலபதி நகர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 51). இவர் சென்னையில் டிடெக்டிவ் ஏஜென்சி (தனியார் துப்பறியும் நிறுவனம்) நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவி சரஸ்வதிக்கு திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து தாமோதரன் தனது மனைவியை சென்னையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் கணவன் மனைவி இருவரும் கடந்த இரு தினங்களாக சென்னையிலேயே தங்கி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தாமோதரன் வீட்டின் முன்பக்க கேட் மற்றும் கதவினை உடைத்து கொள்ளையர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பி சென்றனர்.
இது பற்றி தகவல் அறிந்த தாமோதரனின் சகோதரர் கரிகாலன் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். தகவல் அறிந்த போலீசார் மோப்ப நாயுடன் இன்று காலை சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அந்த மோப்ப நாய் திருட்டு நடந்த வீட்டிலிருந்து மோப்பம் பிடித்துக் கொண்டு சிறிது தூரம் ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
துப்பறியும் நிபுணர் வீட்டில் நோட்டமிட்டு கொள்ளையடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த பெண் உயிரிழந்தார்
- வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்தார்
பெரம்பலூர்
பெரம்பலூர் குன்னம் அருகே உள்ள மருவத்தூர் காலனி தெரு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்(வயது67). இவரது மனைவி முறுகாயி (59). இவர்கள் இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் பெரம்பலூரில் இருந்து மருவத்தூர் சென்றனர்.
மோட்டார் சைக்கிளை முருகேசன் ஓட்டி செல்ல பின்னால் அவரது மனைவி முருகாயி உட்கார்ந்திருந்தார்.
இந்த நிலையில் பேரலி மின்வாரிய அலுவலகம் எதிரே சென்றபோது முருகாயி மோட்டார் சைக்கிளில் இருந்து திடீரென மயங்கி கீழே விழுந்தார். கணவர் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே டாக்டர்கள் முருகாயிக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். இருந்தபோதிலும் அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து மருவத்தூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம் நடைபெற்றது
- கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூரில் உள்ள பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மதியம் வாயிற் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாணை நிலை எண் 56-ஐ பின்பற்றி கவுரவ விாிவுரையாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கல்லூரி பேராசிரியர் பணி நியமனத்தில் நேர்காணல் முறையினை தொடர்ந்து பின்பற்றவும், எழுத்து தேர்வு முறையினை கைவிட வேண்டும். ரூ.30 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். மாநில தகுதி தேர்வு உடனடியாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக முதல்வர் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றி தர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். இன்று (செவ்வாய்க்கிழமை) கவுரவ விரிவுரையாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து கல்லூரி முன்பு வாயிற் முழக்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். கோரிக்கைகள் நிறைவேற இல்லையெனில் அடுத்த கட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தமிழ்நாடு அரசு கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பினர் தெரிவித்தனர்."
- மாநில கல்வி கொள்கை வகுப்பதற்காக கருத்து கேட்பு கூட்டம் நடக்கிறது.
- எழுத்து பூர்வமாகவும் நேரில் தெரிவிக்கலாம்.
பெரம்பலூர்:
தமிழ்நாட்டில் மாநிலத்திற்கென தனித்துவமான மாநில கல்வி கொள்கை வகுப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் ஓர் உயர்மட்டக்குழு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. மாநில கல்வி கொள்கை சார்பான பல்வேறு காரணிகள் குறித்துக் கருத்து கேட்பு கூட்டங்கள் மண்டல அளவில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. திருச்சி மண்டல அளவிலான கருத்து கேட்பு கூட்டம் வருகிற 15-ந்தேதி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் சார்பாக கல்வியாளர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள், அவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் மாநில கல்வி கொள்கை சார்பான கருத்துக்களை சமர்ப்பிக்கப்படவுள்ளதால், மேற்கண்டவர்கள் மாநில கல்விக் கொள்கை சார்பான தங்களது கருத்துக்களை இன்று முதல் (செவ்வாய்க்கிழமை) முதல் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வரை மாநில கல்வி கொள்கைக்கான இணையதளத்திலும் அல்லது அருகாமையில் உள்ள உயர், மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் தெரிவிக்கலாம். இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது கருத்துகளை எழுத்துபூர்வமாக பெரம்பலூர் மாவட்ட பள்ளி முதன்மை கல்வி அலுவலருக்கு இன்றுக்குள் அனுப்பி வைக்குமாறும், மேலும் பெரம்பலூர் மாவட்ட அளவில் இன்று மதியம் 3 மணியளவில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் மாநில கல்வி கொள்கை சார்பான கருத்து கேட்பு கூட்டத்தில், தங்கள் கருத்தினை அறிக்கையாகவும், எழுத்து பூர்வமாகவும் நேரில் தெரிவிக்கலாம். இந்த தகவலை பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது."






