என் மலர்
பெரம்பலூர்
- சாலையில் கவிழ்ந்த டிராக்டர் மீது கார் மோதியது.
- இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லோடு ஏற்றி சென்ற டிராக்டர் திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்ேபாது எதிர்பாராதவிதமாக சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது. அப்போது பின்னால் வந்த கார் டிராக்டர் மீது மோதியது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.
- வாகன சோதனையில் சிக்கினார்
- திருச்சி சிறையில் அடைப்பு
பெரம்பலூர்,
பெரம்பலூரை அடுத்த சிறுவாச்சூர் அருகே உள்ள அய்யலூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் பாலாஜி(வயது 22). இவர் கடந்த ஆண்டு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தான் வேலைபார்க்கும் ஒரு தனியார் கம்பெனியின் முன்பு தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். பின்னர் வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடுபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், குற்றபிரிவு தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் நேற்று துறைமங்கலம் நான்குசாலை சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளை ஓட்டிசென்ற புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா, கீழக்காடு, காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த மருதமுத்து என்பவரது மகன் ஒயிட் என்கிற வெள்ளைச்சாமி(29) என்பவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் தெரிவித்தார். மேலும் அவரிடம் வாகனம் சம்மந்தமான எவ்வித சான்றிதழ்களும் இல்லாதிருந்ததும், திருடிய மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்ததும் தெரியவந்தது. உடனே வெள்ளைசாமியை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். கைதான வெள்ளைசாமி பெரம்பலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- இரவு நேரத்தில் கைவரிசை
- மர்ம நபர்களை தேடி வரும் போலீசார்
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூரில் கிழக்கு பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்பு பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக உண்டியல் வைக்கப்பட்டிருந்தது. இதில் பக்தர்கள் காணிக்கையை செலுத்தி வந்தனர். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மர்ம நபர்கள் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர். இது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி, உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பொருட்கள் வாங்கும்போது தர முத்திரைகளை பார்க்க வேண்டும்
- குடிமக்கள் நுகர்வோர் மன்றம் சார்பில் விழா
பெரம்பலூர்,
பெரம்பலூர் அருகே பொம்மனப்பாடி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி உதவி தலைமை ஆசிரியை தமிழரசி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிரவன் கலந்துகொண்டு பேசுகையில், நுகர்வோர் பாதுகாப்பு, நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள், பள்ளியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற செயல்பாடுகள் குறித்து விரிவாக பேசினார். மேலும் ஒவ்வொரு மாணவர்களும் நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வினை முழுமையாக அடைந்து தனது பெற்றோரிடமும், அருகாமையில் இருப்பவரிடம் இதுபற்றி விளக்கமாக கூற வேண்டும் எனவும், கண்டிப்பாக பொருட்கள் வாங்கும் போது கவனித்து வாங்க வேண்டும், பொருட்கள் வாங்கும்போது அரசால் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தர முத்திரைகளை பார்த்து வாங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதில் ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். முன்னதாக குடிமக்கள் நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ரவிக்குமார் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் ஞானசேகரன் நன்றி கூறினார்.
- பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது
- ரூ.3.40 கோடியில் கட்டுமானம்
பெரம்பலூர்,
பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிதாக கட்டிடம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கி 3 கோடியே 40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. இக்கட்டிடத்திற்கு கடந்த நவ.29-ம்தேதி அரியலூரில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து பழைய கட்டிடம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டது. அங்கு புதிய கட்டிடம் கட்டுமான பணிக்கான பூமி பூஜை நடந்தது. பெரம்பலூர் எம்.எல்.ஏ., பிரபாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் பூமி பூஜையில் கலந்து கொண்டு கட்டுமான பணியை தொடங்கி வைத்தனர்.விழாவில் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- டிரைவர் குதித்து உயிர் தப்பினார்
- ரூ.6 லட்சம் மதிப்பிலான மீன்கள் வீண்
பெரம்பலுார்,
கடலுாரை சேர்ந்த சன்னகேசவன் என்பவர் லாரி தொழில் செய்து வருகிறார். இவரிடம் லாரி டிரைவராக கடலுார் குறிச்சிப்பாடியை சேர்ந்த செல்வகுமார்(வயது 46) வேலை செய்து வருகிறார். கடலுாரில் 4 டன் மீன்களை லாரியில் ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி லாரியை செல்வகுமார் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் சன்னகேசவனும் லாரியில் வந்துள்ளார். மீன் லோடு குறித்த நேரத்தில் சென்று கேரளாவில் சேர்க்க வேண்டும் என்பதால் லாரியை அதிவேகத்தில் செல்வகுமார் ஓட்டி சென்றுள்ளார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அவர் விரைந்து லாரியை ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்த போது பாடாலுார் அருகே திடீர் என்று லாரி என்ஜினில் இருந்து புகை வந்துள்ளது.
அடுத்த சில நொடிகளில் தீ மளமளவென லாரி கேபினில் பரவி கொளுந்து விட்டு எரிய தொடங்கியது. அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியை சடன் பிரேக் போட்டு நிறுத்தினார். பின்னர் உயிர் தப்ப அவர் குதித்து ஓடி உள்ளார்.லாரியின் முன்பகுதி தீப்பிடித்து எரிவது குறித்து தகவல் அறிந்த பாடாலுார் போலீசார் அங்கு வந்தனர். தொடர்ந்து அவர்கள் பெரம்பலுார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்த அங்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.லாரி தீவிபத்தின் காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது. இது குறித்து பாடாலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், ஏற்கனவே பலமுறை கேரளாவிற்கு சென்று வந்த லாரி ெதாடர்ந்து இயக்கப்பட்டதாலும், அதிவேகத்தாலும் இந்த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. இந்த தீ விபத்தின் காரணமாக லாரியில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்பிலான மீன்கள் கேரளாவிற்கு குறித்த நேரத்தில் சென்று சேராததால், அனைத்தும் வீணாகும் என்று கூறப்படுகிறது.
- பெரம்பலூர் அருகே ஆன்லைன் விளையாட்டு விளையாடியதை தாய் கண்டித்ததால் என்ஜினீயரிங் மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
- இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, நக்கசேலம் அரவிந்தா நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் பாலகுமார்(வயது 18). இவர் திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் பொங்கல் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த பாலகுமார் எந்நேரமும் செல்போனில் பிரீ பயர் என்ற ஆன்லைன் விளையாட்டை விளையாடி வந்துள்ளார். இதனை பார்த்த அவரது தாய் அம்பிகா அவரை கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த பாலகுமார் நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது, வீட்டின் ஜன்னல் கம்பியில் சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாத்தா வெள்ளையன் அருகில் உள்ளவர்களின் உதவியுடன் பாலகுமாரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றார். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே பாலகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அறிந்த பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் போலீசார் பாலகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் பிரீ பயர் விளையாடியதை அவரது குடும்பத்தினர் கண்டித்ததால் தூக்குப்போட்டுக்கொண்ட பாலகுமாரை அவரது குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.self-due-to-online-game-obsession-881982
- சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்கள் நாளை நடக்கிறது.
- முகாம்கள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
பெரம்பலூர்:
பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் சிறப்பு பொது வினியோக திட்ட குறைதீர்க்கும் முகாம்கள் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. முகாம் நடைபெறும் இடங்கள் கிராமங்கள், விவரம் வருமாறு:-பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் வட்டாரத்திற்கு நொச்சியம், வேப்பந்தட்டை வட்டாரத்திற்கு தொண்டமாந்துறை (மேற்கு), குன்னம் வட்டாரத்திற்கு ஒகளூர் (கிழக்கு), ஆலத்தூர் வட்டாரத்திற்கு வரகுபாடி ஆகிய 4 கிராமங்களில் முகாம் நடக்கிறது.
இதே போல் அரியலூர் மாவட்டத்தில், அரியலூர் வட்டாரத்திற்கு கீழக்கொளத்தூர், உடையார்பாளையம் வட்டாரத்திற்கு தண்டலை, செந்துறை வட்டாரத்திற்கு (பெரியாக்குறிச்சி), ஆண்டிமடம் வட்டாரத்திற்கு கூவத்தூர் (வடக்கு) ஆகிய 4 கிராமங்களில் முகாம் நடக்கிறது.கூட்டத்தில் பொதுமக்கள் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகளை தெரிவித்தும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், செல்போன் எண் பதிவு மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு, நகல் மின்னணு குடும்ப அட்டை, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் ஆகியோர்களுக்கு அங்கீகார சான்று வழங்குதல், குடும்ப தலைவர் இறந்திருந்தால் அவரது புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு, புதிய குடும்ப தலைவரின் புகைப்படத்துடன் விண்ணப்பம் செய்தல் உள்ளிட்டவை மேற்கொள்ளலாம்.
மேலும் தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்த புகார்களை அளித்து நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம்-2019-ன் படி பயன்பெறலாம் என பெரம்பலூர்-அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சாராயம் விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
- அவரிடம் இருந்த 1 லிட்டர் 800 மில்லி பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
பெரம்பலூர் :
பெரம்பலூர் மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வேப்பந்தட்டை தாலுகா, காரியானூர் செல்லியம்மன் கோவில் தெருவில் சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த செல்லதுரை மகன் ரமேசை(வயது 31) போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த 1 லிட்டர் 800 மில்லி பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
மேலும் மோட்டார் சைக்கிள் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. இதுபோல் தங்களது பகுதிகளில் யாரேனும் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு சாராயம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ மாவட்ட போலீஸ் அலுவலகத்தை 9498100690 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவரின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
- கீழப்பெரம்பலூர் ஊராட்சி வார்டு உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது
- இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கீழப்பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன். இவரது மனைவி ஜான்சிராணி, இவர் அதே ஊராட்சியில் 4-வது வார்டு உறுப்பினராக உள்ளார். ஜான்சி ராணியின் அக்காள் ஒகளூர் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி கஸ்தூரி, அவரது மகன் ராஜேஷ்கண்ணன் ஆகியோர் நேற்று முன்தினம் கீழப்பெரம்பலூர் வந்தனர்.
அங்கு பருத்தி வயலில் ஜான்சிராணி பஞ்சு எடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது, அக்காள்- தங்கை இருவருக்கும் உள்ள முன் விரோதம் காரணமாக ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த தாகுதலில் ஜான்சிராணி மயக்கமடைந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அக்காள்- தங்கை இருவரும் குன்னம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் குன்னம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் இருதரப்பு புகாரையும் ஏற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- தொழிலாளியை தாக்கிய 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- 3 பேர் குடி போதையில் ஓரே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தாக கூறப்படுகிறது
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 45). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த மதி மகன் அருள்பாண்டியன்(31), கலியன் மகன் குட்டியான் என்கிற அழகேசன்(21), முருகன் மகன் அஜித்(24) ஆகிய 3 பேர் குடி போதையில் ஓரே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்தாக கூறப்படுகிறது. இதனை கண்ணதாசன் தட்டி கேட்டுள்ளார்
. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அருள்பாண்டியன், அழகேசன், அஜித் ஆகிய 3 பேரும் சேர்ந்து கண்ணதாசனை குச்சியால் தாக்கினர். இதில் படுகாயமடைந்த கண்ணதாசன் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து அருள்பாண்டியன், அழகேசன், அஜித் 3 பேரையும் கைது செய்து பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.
- மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழந்தார்.
- இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள காரியானூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 25) விவசாயி. இவர் நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே ஊரை சேர்ந்த சிவசக்தி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் ராமசாமி மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் படுகாயம் அடைந்த ராமசாமி சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியிலும் பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ராமசாமி உயிரிழந்தார். இது குறித்து கை.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






