என் மலர்
பெரம்பலூர்
- நேதாஜி பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்றது
- 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்
பெரம்பலூர்,
பெரம்பலூர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்கள் தேர்வுகளை எதிர்கொள்ளுவதற்கான ஓவியப்போட்டி நடை பெற்றது.மத்திய கல்வி அமை ச்சகத்தால், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் பராக்ரம் திவாஸ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. நேதாஜி சுபாஷ் வாழ்க்கையைப் பற்றி மாணவர்களை ஊக்குவிக்கவும், அவர்களுக்கு தேசபக்தியை வளர்க்கவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.இந்நாளையொட்டி மாணவர்களிடையே தேர்வு நேரத்தில் ஏற்படும் மன அழுத்தத்தை எதிர்கொள்ள ஒரு தனித்துவமான முயற்சியாக கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேசிய அளவிலான ஓவியப்போட்டி பிரதமர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் 'தேர்வு வாரியர்ஸ்" ஆவது எப்படி என்பதை மையக்கருத்தாக கொண்டு 25 தலைப்புகளில் நாடுமுழுவதும் நடந்தது. இதன்படி பெரம்பலூரில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மாணவர்களது மனதில் கலைத்திறன் மற்றும் நாட்டுப்பற்றை ஊக்குவிக்கும் வண்ணம் ஓவியப்போட்டி நடந்தது.இந்த போட்டியில் சிபிஎஸ்இ, மெட்ரிக் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை பயிலும் 100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். லாடபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராதாகிருஷ்ணன், பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் வேல்முருகன், ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் ஜெயராமன் ஆகியோர் நடுவர்களாக பணியாற்றி சிறந்த ஓவிய படைப்புகளை தேர்ந்தெடுத்தனர்.பின்னர் பள்ளி முதல்வர் கல்யாண்ராமன் சிறந்த 5 படைப்புகளுக்கு புத்தகம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். மேலும் ஓவியப்போட்டியில் கலந்துகொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் பிரதமர் மோடியின் தேர்வு வாரியர்ஸ் என்ற புத்தகம் வழங்கினார்.
- பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி நடந்தது
- 300 பெண் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண் ஆசிரியர்களுக்கு பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி நடந்தது. பயிற்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க நிலை) அண்ணாதுரை பயிற்சியை தொடங்கி வைத்து பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து பேசினார். மாவட்ட பயிற்சி மருத்துவர் விவேகானந்தன் பெண் குழந்தைகளின் உடல் நலம் மற்றும் பொது நலம் குறித்து பேசினார். இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி பெண் குழந்தைகள் குறித்த பாலியல் குற்றம் மற்றும் பொது குற்றம் தொடர்பாக பேசினார்.இந்தோ அறக்கட்டளை அலுவலர்கள் ரெஜினா, சுதா ஆகியோர் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தும், எந்த வகையில் எல்லாம் பிரச்சனை வரும் என்ற தலைப்பில் பேசினர். மாவட்ட சமுக நலத்துறை அலுவலர்கள் கீதா, பிரேமா ஆகியோர் பெண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு இலவச உதவி எண் 181 , 1098 மற்றும் 14417 ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து பேசினர். அங்கன்வாடி மேற்பார்வையாளர் அமுதராணி பெண் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாராம் குறித்து விளக்கமளித்தார்.வட்டார மேற்பார்வையாளர்கள் சுதா, வஹிதா பானு, பன்னீர்செல்வம், ஆசிரிய பயிற்றுநர்கள் தாமரைச்செல்வி, பொன்மலர் ஆகியோர் கருத்தாளாராக செயல்பட்டனர். பயிற்சியின் முடிவில் பயிற்சியின் போது அதிக பெண் குழந்தைகளை ஒன்றாம் வகுப்பில் சேர்த்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், பள்ளியில் அதிகளவில் பெண் குழந்தைகளை சேர்ந்த தலைம ையாசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டது. பயிற்சியில் மாவட்டத்தில் பணிபுரியும் 300 பெண் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை வட்டார கல்வி அலுவலர்கள் சம்மனசு மேரி, அம்சவள்ளி , அருண்குமார் , வினோத் குமார் மற்றும் சின்னசாமி ஆகியோர் செய்திருந்தனர். முன்னதாக பெரம்பலூர் வட்டார கல்வி அலுவலர் ஜோதிலட்சுமி வரவேற்றார். முடிவில் வட்டார கல்வி அலுவலர் இளங்கோவன் நன்றி கூறினார்.
- 3 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.2 ஆயிரத்து 810 பறிமுதல்
- பணம் வைத்து சூதாடிய 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர்
பெரம்பலூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் ரோந்து சென்றனர். அப்போது பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் ஒரு வீட்டில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த திருவள்ளுவர் தெருவை சேர்ந்த அருண்குமார்(வயது 35), வினோத்குமார்(34), வெங்கடேசபுரத்தை சேர்ந்த சத்ரியன்(25), நீல்ராஜ் என்ற நீலமேகம்(50), உதயசூரியன்(47) மதனகோபாலபுரத்தை சேர்ந்த ராஜ்(46), மேட்டு தெருவை சேர்ந்த ரமேஷ்(56) ஆகிய 7 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 3 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ.2 ஆயிரத்து 810 பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
- பராமரிப்பு பணி நடைபெறுவதால்
- மங்களமேடு-குன்னம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பெரம்பலூர்
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெரம்பலூர் மாவட்டம், மங்களமேடு துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான ரஞ்சன்குடி, பெருமத்தூர், மங்களமேடு, தேவையூர், நகரம், நமையூர், முருக்கன்குடி. சின்னாறு, எறையூர், அயன்பேரையூர், அகரம், வி.களத்தூர், பசும்பலூர், திருவாளந்துறை, பிம்பலூர், மறவநத்தம், தைக்கால், நன்னை, அந்தூர், லெப்பைக்குடிகாடு, திருமாந்துறை, அத்தியூர், பென்னகோணம், சு.ஆடுதுறை, கழனிவாசல், ஒகளூர், அந்தூர், குன்னம், வேப்பூர், நன்னை, ஓலைபாடி எழுமூர், வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், கே.புதூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்சாரம் இருக்காது என்று லெப்பைக்குடிகாடு உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
- கோவிலில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
பெரம்பலூர்:
சேலம் மாவட்டம் லத்துவாடி கங்கவல்லி தாலுகா கடைவீதி தெருவை சேர்ந்த பெரியசாமி மகன் பாலமுருகன் (வயது 38). இவர் ரஞ்சன்குடி பிரிவு ரோட்டில் நின்றிருப்பதைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவர் மீது சந்தேகப்பட்டு அவரது பையை சோதனை செய்ததில் புத்துமாரியம்மன் கோவிலில் இருந்த இரண்டு குத்து விளக்குகள் அவரது கைப்பையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து மங்களமேடு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த மங்களமேடு காவல்துறையினர் பாலமுருகனை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மங்களமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
- கோவில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு நடந்துள்ளது
பெரம்பலூர்:
அகரம்சீகூர் அடுத்து பெரம்பலூர் மாவட்டம் தேவையூரில் அருள்மிகு மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திட்டக்குடி தாலுக்கா ஆதமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கசாமி மகன் மருதமுத்து ( வயது 50) இவர் இந்த கோவிலில் பூசாரியாக செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் இவர் வழக்கம் போல் கோவில் நடைகளை சாத்திவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் காலையில் கோவிலை திறக்க வந்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் உள்ளே சென்று பார்க்கும் பொழுது கோவிலின் உள்ளே இருந்த உண்டியலை காணவில்லை.இதனையடுத்து மங்களமேடு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த மங்களமேடு காவல்துறையினர் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
- வீட்டில் யாரும் இல்லாத போது சம்பவம்
- மெக்கானிக் தற்கொலை செய்து கொண்டார்
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை திடீர் குப்பம் பகுதியை சேர்ந்தவர் சூசை ஸ்டீபன் தேவராஜ் (வயது35). மெக்கானிக்கான இவர் தற்போது பெரம்பலூர் நான்குரோடு மின் நகரில் வாடகை வீட்டில் மனைவி ரூத் இவாஞ்சலின் (21), மகன் தியோ ஸ்டீபன் (1) ஆகியோருடன் வசித்து வந்தார். இவரது மனைவி திருச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் மனைவி பணிக்குச் சென்ற பின்னர் வீட்டின் மொட்டை மாடியில் அமைந்துள்ள நீர்த்தேக்க தொட்டிக்கு செல்லும் இரும்பு படிக்கட்டின் மேற்பகுதியில் சூசை ஸ்டீபன் தேவராஜ் தூக்கு மாட்டி தற்கொலை செய்து ெகாண்டார். இது குறித்து ரூத் இவாஞ்சலின் கொடுத்த புகாரின்பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காரில் உரிமம் இல்லாத 2 நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு 3 மான்களை வேட்டையாடி கொண்டு வந்தது தெரியவந்தது.
- திருச்சி மாவட்ட வனச்சரககத்திற்கு உட்பட்ட எதுமலை வனப் பகுதியில் மான்களை வேட்டையாடியதும் தெரியவந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் குற்றப்பிரிவு தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் இன்று காலை 7 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுநடுவலூர் ஊராட்சிக்குப்ட்ட வெள்ளனூர் அருகே வந்து கொண்டிருந்த காரை வழிமறித்து சோதனையிட்டனர்.
அதில் வந்தவர்களிடம் கேட்டபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து போலீசார் அந்த காரில் அங்குலம், அங்குலமாக சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் உரிமம் இல்லாத 2 நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டு 3 மான்களை வேட்டையாடி கொண்டு வந்தது தெரியவந்தது.
காரில் இருந்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், வெள்ளனூரை சேர்ந்த மணிகண்டன் (24), கோவிந்தன் (33), கார்த்திக் (19), மணி (17) மற்றும் ரெங்கநாதபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (30) என்பதுதெரிந்தது.
மேலும், இவர்கள் திருச்சி மாவட்ட வனச்சரககத்திற்கு உட்பட்ட எதுமலை வனப் பகுதியில் மான்களை வேட்டையாடியதும் தெரியவந்தது.
இதையடுத்து பெரம்பலூர் போலீசார் வழக்குப் பதிந்து மணிகண்டன் உட்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் மணிகண்டன், கோவிந்தன் ஆகியோரிடமிருந்து 2 உரிமம் இல்லாத ஒற்றைக்குழல் நாட்டு துப்பாக்கியையும், கோவிந்தனுடைய காரையும், வேட்டையாடப்பட்ட 3 மான்களையும் போலீசார் பறிமுதல் செய்து பெரம்பலூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
திருச்சி மாவட்டத்தில் மான்கள் வேட்டையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மருத்துவ கல்லூரி அலுவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- மணிகண்டன், வங்கியில் ரூ.14 லட்சம் கடன் பெற்று கோழிப்பண்ணை வைத்து வியாபாரம் செய்துள்ளார்.
வியாபாரத்தில் நஷ்டம் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே உள்ள கீழ உசேன் நகரம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 36). இவர், அரியலூர் அரசு மருத்துவ கல்லூரியில் அலுவலக இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு நந்தினி(26) என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மணிகண்டன், வங்கியில் ரூ.14 லட்சம் கடன் பெற்று கோழிப்பண்ணை வைத்து வியாபாரம் செய்துள்ளார்.
ஆனால் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால், ஒருவரிடம் கடன் பெற்றுள்ளார். ஆனால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதாகவும், இதனால் அவர் மது குடித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தற்கொலை இந்நிலையில் நேற்று முன்தினம் காட்டில் உள்ள தனது கோழிப்பண்ணைக்கு சென்ற மணிகண்டன், அங்குள்ள மரத்தில் தூக்குப்போட்டு தொங்கினார்.
இதை அறிந்த உறவினர்கள் அங்கு சென்று மணிகண்டனை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், மணிகண்டன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து நந்தினி கொடுத்த புகாரின்பேரில் குன்னம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே மணிகண்டனின் உடல் அரியலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
- சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
- அம்மனுக்கு மதியம் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் மிகவும் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. வாரத்தில் திங்கள், வெள்ளிக்கிழமைகளிலும், பவுர்ணமி, அமாவாசை நாட்களிலும், முக்கிய விசேஷ நாட்களிலும் இந்த கோவிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். நேற்று தை மாத அமாவாசையையொட்டி மதுரகாளியம்மன் கோவிலில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. கோவிலுக்கு பெரம்பலூர் மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி, வெளிமாவட்டங்களை சேர்ந்த பக்தர்களும் வந்திருந்தனர். அம்மனுக்கு மதியம் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் தை மாத அமாவாசையையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பொறுப்பாளர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- வேங்கைவயல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர்
பெரம்பலூர்:
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். இதில் பொறுப்பாளர்கள் கலந்து கொள்வதற்காக அழைப்பு விடுத்திருந்தனர். இதைத்தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படக் கூடாது என்பதற்காக போலீசார், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் முக்கிய பொறுப்பாளர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர். அதன்படி பெரம்பலூர் மாவட்ட செயலாளர் கை.களத்தூர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் வெள்ளுவாடி அறிவழகன், மாவட்ட குழு உறுப்பினர் சடையன் ஆகிய 3 பேரை கை.களத்தூர் போலீசார் நேற்று காலை கைது செய்தனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
- வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக பெண் புகாரின்பேரில் கணவர் கைது செய்யப்பட்டார்.
- மேலும் விமலுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அகிலா புகாரில் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது
பெரம்பலூர் :
பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிபாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் குமார். இவரது மகள் அகிலா(வயது 25). ஹோமியோபதி படிப்பு முடித்துள்ளார். இவர் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் நேற்று ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் எனக்கும், கோனேரிபாளையத்தை சேர்ந்த இளங்கோவனின் மகன் என்ஜினீயர் விமலுக்கும்(31) கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந்தேதி திருமணம் நடந்தது.
அன்று முதல் விமல் தினமும் குடிபோதையில் என்னை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்புறுத்தி வந்தார். மேலும் நான் கருப்பாக இருப்பதால், விமலுடன் தொடர்ந்து வாழ வேண்டும் என்றால் 50 பவுன் நகையும், பல லட்சங்கள் வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்றும் விமலும், அவரது குடும்பத்தினரும் என்னை கொடுமைப்படுத்தினர், என்று கூறியிருந்தார். எனவே விமல் மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியிருந்தார்.
மேலும் விமலுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக அகிலா புகாரில் தெரிவித்திருந்ததாக கூறப்படுகிறது. புகாரின்பேரில் விமல், அவரது தந்தை இளங்கோவன், தாய் விஜயலட்சுமி, அக்காள் மீனா, அக்காளின் கணவர் சிவா ஆகிய 5 பேர் மீதும் வரதட்சணை கொடுமை உள்ளிட்ட சட்டங்களின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதில் விமலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்ற 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.






