என் மலர்
நீலகிரி
- நீலகிரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
- ஊட்டி பஸ் நிலையம் மற்றும் மார்க்கெட்டில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடந்தது.
ஊட்டி,
சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்களை பாதுகாக்க நீலகிரி மாவட்டத்தில் 1999-ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தடை அமலில் இருந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு 19 வகையான பிளாஸ்டிக்பொருட்கள் மட்டும் பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்தது. பின்னர் இந்த உத்தரவு தமிழகம் முழுவதும் 2019-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் கோவில்கள், திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பிளாஸ்டிக் இலைகள், டம்ளர்கள், தட்டுகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.
ஆனாலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்திடும் வகையில் ஊட்டி நகர் நல அலுவலர் ஸ்ரீதர், சுகாதார ஆய்வாளர் மகாராஜன் ஆகியோர் நேற்று ஊட்டி பஸ் நிலையம் மற்றும் மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்றதாக 20 கடைகளையும் சேர்த்து மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களை எச்சரித்துவிட்டு சென்றனர்.
- குடியிருப்புகளும் சரியும் நிலையில் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
- தாசில்தார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் விரைந்து வந்து, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே அம்மன் நகரில் சாலையோரத்தில் கட்டுமான பணி நடந்து வந்தது. அவர்கள் அங்கேயே தகர சீட்டு அமைத்து இந்த பணியை மேற்கொண்டு வந்தனர். இதற்கு முறையான அனுமதி பெறவில்லை எனவும் தெரிகிறது.
நேற்று கோத்தகிரி பகுதியில் மழை பெய்தது. அப்போது இந்த பகுதியில் திடீரென மண்சரிவு ஏற்பட்டது. மண் சரிந்து அந்த பகுதிக்கு செல்லக்கூடிய சாைல முழுவதுமாக மறைந்து விட்டது. இதனால் மக்கள் அவ்வழியாக செல்ல முடியாமல் தவித்தனர். மேலும் அங்குள்ள குடியிருப்புகளும் சரியும் நிலையில் இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து பொதுமக்கள் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த தாசில்தார் மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினர் விரைந்து வந்து, மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
- புதர் மறைவில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை திடீரென வெளியில் வந்து தோட்டத்தில் நடமாடியது.
- வனத்துறையினர் விரைந்து வந்து யானையை விரட்டி விட்டு, காயம் அடைந்த தொழிலாளியை மீட்டனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கீழ் கோத்தகிரி அருகே உள்ள அரக்கோடு ஊராட்சிக்குட்பட்ட பங்களாபடிகையை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது55).
இவர் சம்பவத்தன்று, அங்குள்ள தனியார் எஸ்டேட்டில் பலாப்பழம் பறிக்கும் பணியில் ஈடுபட்டி ருந்தார். அப்போது அங்கு புதர் மறைவில் மறைந்திருந்த ஒற்றை காட்டு யானை திடீரென வெளியில் வந்து தோட்டத்தில் நடமாடியது.
இதனை பார்த்ததும் செல்வராஜ் அங்கிருந்து தப்பியோட முயன்றார். ஆனால் யானை துரத்தி சென்று அவரை தாக்கியது. இதில் கால் உள்ளிட்ட இடங்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
வலியால் அவர் அலறி துடித்தார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.
அப்போது யானை நின்றதால் அச்சமடைந்த மக்கள், யானையை அங்கிருந்து விரட்டும் பணியில் ஈடுபட்டதுடன், வனத்துறையினருக்கும் தகவல் ெகாடுத்தனர்.
வனத்துறையினர் விரைந்து வந்து யானையை விரட்டி விட்டு, காயம் அடைந்த தொழிலாளியை மீட்டு சிகிச்சைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
- பழங்குடியினா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.49.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 10 வீடுகளை கலெக்டர் அம்ரித் நேரில் ஆய்வு செய்தார்.
- தோட்டமூலா பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சிக்கு உட்பட்ட அல்லூா் பகுதியில் பழங்குடியினா் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.49.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் 10 வீடுகளை கலெக்டர் அம்ரித் நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து கலெக்டர் அம்ரித் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை சாா்பில் பழங்குடிகளுக்கான பசுமை வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் 2022-2023 நிதியாண்டில் கூடலூா் நகராட்சியில் 74 வீடுகளும்,நெல்லியாளம் நகராட்சியில் 126 வீடுகளும், 2023-2024 நிதியாண்டில் கூடலூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 25 வீடுகளும் கட்ட நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தோட்டமூலா பகுதியில் ரூ.1.20 கோடி மதிப்பில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
கூடலூா் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.35.50 லட்சம் மதிப்பில் சமையல் கூடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
அத்திப்பாளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ.32.65 லட்சம் மதிப்பில் வகுப்பறைகள், ஸ்ரீமதுரை ஊராட்சியில் கூடூா் பழங்குடியினா் காலனியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.64.42 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாட்டுப் பணிகளும், தேவா்சோலை கொட்டமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.33.05 லட்சம் மதிப்பில் வகுப்பறைகள் கட்டுமானப் பணியும் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது, கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா, கூடலூா் நகராட்சி ஆணையா் பிரான்சிஸ் சேவியா், நகா்மன்றத் தலைவா் பரிமளா, அரசுப் போக்குவரத்துக் கழக பொதுமேலாளா் நடராஜன், உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரபிரபு, கூடலூா் தாசில்தாா் ராஜேஸ்வரி, ஓவேலி பேரூராட்சித் தலைவா் சித்ராதேவி, துணைத் தலைவா் சகாதேவன், ஸ்ரீமதுரை ஊராட்சி தலைவா் சுனில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அண்ணாதுரை, குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
- வயநாடு செல்லும் வழியில் தமிழகம் வருகை
- முன்னாள் விண்வெளி வீரர் மற்றும் பழங்குடியின மக்களை சந்திக்கிறார்
முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். இதற்கிடையே ராகுல்காந்தி, மோடி குடும்ப பெயர் பற்றி தவறாக பேசியதாக கூறி குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகுதி நீக்கம் செய்யப்பட்டார். குஜராத் நீதிமன்றம் தண்டனையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்தது.
அதனை எதிர்த்து, ராகுல்காந்தி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, கீழ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டது. மேலும், அவர் தொடர்ந்து எம்.பி.யாக நீடிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து ராகுல்காந்தி மீண்டும் வயநாடு தொகுதி எம்.பி.யாக பொறுப்பேற்று பாராளுமன்றத்திற்கு சென்று பேசினார். இந்தநிலையில் 4 மாதங்களுக்கு பிறகு ராகுல்காந்தி தனது தொகுதியான வயநாட்டிற்கு இன்று செல்கிறார். கோவை, நீலகிரி வழியாக வயநாடு செல்லும் வகையில் ராகுல்காந்தியின் சுற்றுப்பயண திட்டங்கள் வகுக்கப்பட்டன.
இதற்காக ராகுல்காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் காலை 9 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு வந்தார். ராகுல்காந்தியை வரவேற்பதற்காக கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளும் கோவை விமான நிலையத்தில் குவிந்தனர்.
ராகுல்காந்தி விமான நிலையத்தை விட்டு வெளியில் வந்ததும், காங்கிரஸ் நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். மேலும் ராகுல், ராகுல் என உற்சாகமாக கோஷங்களும் எழுப்பி தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
எம்.பி.யாக பதவியேற்று முதல் முறையாக கோவைக்கு வந்ததால் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
பின்னர் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட ராகுல்காந்தி விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக கோவில்பாளையம், அன்னூர், மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியாக நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு புறப்பட்டார்.
- வீட்டில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது, வெளியில் கரடி நடமாடி கொண்டிருந்தது.
- கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஊட்டி,
குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக வனவிலங்குள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
காட்டெருமை, சிறுத்ைத, யானை உள்ளிட்டவை ஊருக்குள் புகுந்து வருகின்றன. இவை உணவு மற்றும் தண்ணீர் தேடியே ஊருக்குள் படையெடுத்து வருகின்றன.
குறிப்பாக கரடிகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. ஊருக்குள் புகும் கரடிகள், அங்குள்ள பொருட்களை சேதப்படுத்துவதுடன் மக்களையும் அச்சுறுறத்தி வருகிறது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் சேலாஸ் கக்காச்சி குடியிருப்பு பகுதியில் சம்பவத்தன்று ஒற்றை கரடி ஒன்று வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் வந்தது.
பின்னர் அந்த பகுதியில் உள்ள தெருக்கள் மற்றும் பல பகுதிகளிலும் நீண்ட நேரமாக சுற்றி திரிந்தது. இதற்கிடையே வீட்டில் இருந்தவர்கள் சத்தம் கேட்டு வந்து பார்த்த போது, வெளியில் கரடி நடமாடி கொண்டிருந்தது.
உடனடியாக மக்கள் சம்பவம் குறித்து குந்தா வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் கரடியை குடியிருப்பு பகுதிக்குள் இருந்து அடர்ந்த வனத்திற்குள் விரட்டினர்.
இதற்கிடையே தங்கள் பகுதியில் சுற்றி திரியும் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, வனத்துறையினர் கரடியை பிடிக்க குடியிருப்பு பகுதியில் கூண்டு வைத்துள்ளனர். மேலும் கரடியின் நடமாட்டத்தை இரவு, பகலாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- மாதந்தோறும் சம்பளம் மிக தாமதமாக வழங்குவதாக கூறப்படுகிறது.
- உடனே சம்பளம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் சூழல் மேம்பாடு திட்டத்தின் கீழ் சுமார் 35-க்கும் மேற்பட்ட ஆதிவாசி ஊழியர்கள், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உணவகம், விடுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் மிக தாமதமாக வழங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாத சம்பளம் இதுவரை வழங்கவில்லை என ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆதிவாசி ஊழியர்கள், வனத்துறையினரிடம் முறையிட்டனர்.
ஆனால் அப்போதும், அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஆதிவாசி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தெப்பக்காடு பகுதியில் உள்ள உணவகத்தை மூடினர். இதனிடையே கர்நாடகம், கேரளா உள்பட வெளிமாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் உணவகம் மூடி கிடப்பதை கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து ஆதிவாசி ஊழியர்கள் கூறும்போது, மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த சம்பளமும் மிகவும் தாமதமாகே வழங்கப்படுகிறது.
இதனால் எங்களால் குடும்பத்தை நிர்வகிக்க முடியாத நிலை உள்ளது. எனவே உடனே சம்பளம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஊழியர்களின் போராட்டத்தை அடுத்து மாலையில், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு, வழக்கம் போல தங்கள் பணியில் ஈடுபட சென்றனர்.
- ஊட்டி தமிழகம் அரசு விருந்தினா் மாளிகையில் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.
- பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து தெரிவிக்கும்போது உடனடியாக தீா்வு காணப்படும் என தெரிவித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம், ஊட்டி தமிழகம் அரசு விருந்தினா் மாளிகையில் வனத்துறை, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் வன அலுவலா்கள் மற்றும் பழங்குடியினா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வனத்துறை அமைச்சா் மதிவேந்தன் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது:-
வனப்பாதுகாப்பு, வனவிலங்குகள் பாதுகாப்பு, மலைவாழ் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதில் வனத்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வனத்துறை பணி என்பது வனத்தையும், வன விலங்குகளையும் பாதுகாக்கும் ஆத்மாா்த்தமான பணியாகும்.
அடிப்படை வசதிகள் வேண்டி வரும் பொதுமக்களிடம் வனத் துறை சாா்ந்ததா அல்லது பிற துறைகளைச் சாா்ந்த பிரச்னையா என வனத்துறை அலுவலா்கள் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.
பழங்குடியின மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து தெரிவிக்கும்போது உடனடியாக தீா்வு காணப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். கூட்டத்தில், முதன்மை தலைமை வனப்பாது காவலா் சுப்ரத் மஹாபத்ரா, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலா்கள் கவுதம், கொம்மு ஓம்காரம், துணை இயக்குநா்கள் (முதுமலை புலிகள் காப்பகம்) வித்யா, அருண்கு மாா், மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்சினி, தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழக பொது மேலாளா் அசோக்குமாா், தலைமை உதவி வனப் பாதுகாவலா் தேவராஜ், ஊராட்சித் தலைவா் பொன்தோஸ், நீலகிரி ஆதிவாசிகள் நலச் சங்கத் தலைவா் ஆல்வாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வருகிற 15-ந் தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் அந்தந்த கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் கிராம பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து எழுவதையும் பார்க்க முடிகிறது.
- சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரவேணு,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி- மேட்டுப்பாளையம் சாலையின் பிரிவில் இருந்து தும்பூருக்கு ஒரு சாலை செல்கிறது.
இந்த சாலையானது கோத்தகிரி பகுதியில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கு முக்கியமான சாலையாக உள்ளது. இதனால் பலரும் இந்த சாலையை தான் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் இந்த சாலையானது கடந்த பல ஆண்டுகளாகவே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களே செல்ல முடியாத நிலை காணப்படுகிறது.
இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து எழுவதையும் பார்க்க முடிகிறது. எந்த வாகனங்களும் செல்ல முடியாத அளவுக்கு சேதம் அடைந்துள்ள இந்த சாலையை சீரமைக்க கோரி பல முறை மனு கொடுத்தும், புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இந்த பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.
- சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. லேசான சாரல் மழையாக தொடங்கி பலத்த மழை கொட்டி தீர்த்தது.
- கூடலூர் பகுதியில் பெய்த மழைக்கு பொன்னானி, சேரம்பாடி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை குறைந்து மிதமான அளவில் வெயில் அடித்து வந்தது.
நேற்று காலையும் வெயில் நிலவியது. மதியத்திற்கு பிறகு காலநிலை முற்றிலும் மாறி இதமான காலநிலையே நிலவி வந்தது.
சிறிது நேரத்தில் மழை பெய்ய தொடங்கியது. லேசான சாரல் மழையாக தொடங்கி பலத்த மழை கொட்டி தீர்த்தது.
மாவட்டத்தில் உள்ள ஊட்டி, கூடலூர், கோத்தகிரி, குன்னூர், பந்தலூர் உள்பட அனைத்து பகுதிகளிலும் கனமழை பெய்தது.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால், அந்த பகுதிகளில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
ஊட்டியில் திடீரென கொட்டி தீர்த்த மழையால், சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்பட்டனர். வாகனங்களில் செல்பவர்களும் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலேயே சென்று வந்தனர்.
மழைக்கு கோடப்பமந்து கால்வாயில் தண்ணீர் அதிகளவில் சென்றது. மேலும் ஊட்டி மார்க்கெட்டுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. இதனால் வியாபாரிகள் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர்.
இதேபோல் மழைக்கு சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்து, அந்த பகுதியே வெள்ளக்காடாக காட்சியளித்தது.
இந்நிலையில், கோத்தகிரி-ஊட்டி சாலையில், மடித்தொரை கிராமம் அருகே 2 ராட்சத பாறைகள் உருண்டு சாலையில் விழுந்தன.
இதில் அந்த சாலையில் பெரியளவில் பள்ளம் ஏற்பட்டு, முற்றிலும் சேதம் அடைந்தது. போக்குவரத்து, பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத அதிகாலை நேரத்தில் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெடுஞ்சாலைத் துறையினா் பாறை விழுந்ததால் சாலையில் ஏற்பட்டிருந்த சேதங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா்.
கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. மழையுடன் கடும் பனிப்பொழிவு, மேகமூட்டமாகவும் காணப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர்.
கூடலூர் பகுதியில் பெய்த மழைக்கு பொன்னானி, சேரம்பாடி ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அய்யன்கொல்லி அருகே எலியாஸ் கடை வழியாக பந்தலூர் செல்லும் சாலையில் உள்ள பள்ளத்தில் மழை வெள்ளம் நிரம்பி குளம்போல் காட்சி அளித்தது.
- 3 பேரையும் வனத்துறையினர் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர்
- வெடிபொருளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
கூடலூர்
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா நாடுகாணி அருகே பொன்னூர் கோல்டு மைன்ஸ் வனப்பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடமாடுவதாக பந்தலூர் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து வனச்சரகர் சஞ்சீவ் தலைமையிலான வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு சம்பந்தப்பட்ட பகுதியில் ரோந்து சென்று கண்காணித்தனர்.
இதையடுத்து கோல்ட் மைன்ஸ் வனப்பகுதியில் 3 பேர் நடமாடுவது தெரியவந்தது. தொடர்ந்து 3 பேரையும் வனத்துறையினர் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். அவர்கள் வனவிலங்குகளை வேட்டையாடவும், தங்கத்துகள்களை தோண்டி சேகரிக்க வெடிபொருள் வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா ஆகியோர் உத்தரவின் பேரில், தேவாலாவில் உள்ள வனச்சரகர் அலுவலகத்திற்கு பிடிபட்ட 3 பேரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்கள் தேவாலா அட்டி பகுதியை சேர்ந்த யோகேந்திரன் (வயது 40), பொன்னுரை சேர்ந்த பரமேஸ்வரன் (42), கீழ் நாடுகாணியை சேர்ந்த ஜெயச்சந்திரன் (44) ஆகியோர் என்பது தெரிய வந்தது.
அவர்களிடம் இருந்து வெடிபொருளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, யோகேந்திரன், பரமேஸ்வரன், ஜெயச்சந்திரன் 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை பந்தலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கூடலூர் கிளை சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






