என் மலர்tooltip icon

    நீலகிரி

    ஊட்டி அருகே மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊட்டி:

    சுதந்திர தினத்தை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மேலும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது, மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் ஊட்டி சர்ச்ஹில் பகுதியில் 2 பேர் மதுபானங்களை விற்பனை செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஊட்டி மேற்கு நகர போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நேதாஜி நகரை சேர்ந்த சிவகுமார் (வயது 45), மெயின் பஜாரை சேர்ந்த புட்டே கவுடர் (31) ஆகியோர் என்பது தெரியவந்தது. பின்னர் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    இதேபோன்று பந்தலூர் அருகே அத்திக்குன்னா பகுதியில் தர்மராஜ்(37), தொண்டியாளம் பகுதியில் சிவபெருமாள்(67) ஆகியோர் மது விற்றதாக கைது செய்யப்பட்டனர்.
    குன்னூர் அருகே நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் ரேலியா அணையின் நீர்மட்டம் 37 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
    குன்னூர்:

    குன்னூர் நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. இந்த அணை குன்னுரில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பந்துமி என்ற இடத்தில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 43.7 அடி ஆகும்.

    இந்த ஆண்டு தொடக்கத்தில் குன்னூர் பகுதியில் பருவமழை சரியான முறையில் பெய்யவில்லை. மேலும் அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததாலும், கடந்த ஜூலை மாதத்தில் ரேலியா அணையின் நீர்மட்டம் 28 அடியாக குறைந்தது. இதனால் குன்னூர் நகராட்சி பகுதியில் குடிநீர் தட்டுபாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரேலியா அணை நீர்பிடிப்பு பகுதியான மைனலை பகுதியில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. மேலும் அணை பகுதியிலும் பரவலாக மழை பெய்தது. இதனை தொடர்ந்து அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது.

    28 அடியாக இருந்த ரேலியா அணையின் நீர்மட்டம் தற்போது 37 அடியாக உயர்ந்து உள்ளது. மேலும் ரேலியா அணையின் நீர்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்தால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரேலியா அணை நீர்மட்டம் உயர்ந்து வருவதால் குன்னூர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
    குன்னூர் அருகே பயிற்சி முகாமில் ராணுவ அதிகாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    குன்னூர்:

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரான்சிஸ் அமிர்தராஜ் (வயது 48). இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். பிரான்சிஸ் அமிர்தராஜ் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ முகாமின் கிளை பயிற்சி முகாமான அவாஹில்லில் சுபேதாராக பணியாற்றி வந்தார். மேலும் முகாமிற்கு வரும் இளம் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுக்கும் அதிகாரியாக உள்ளார்.

    இந்த நிலையில் அவாஹில் ராணுவ முகாம் வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அமைக்கப்பட்ட இரும்பு ஏணியில் நேற்று பிரான்சிஸ் அமிர்தராஜ் தனது லுங்கி மூலம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த சக ராணுவ அதிகாரிகள், வெலிங்டன் எம்.ஆர்.சி. ராணுவ முகாம் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் உள்ள அதிகாரிகள் வெலிங்டன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதையடுத்து வெலிங்டன் போலீசார் அவாஹில் ராணுவ முகாமிற்கு விரைந்து சென்று, ராணுவ அதிகாரி பிரான்சிஸ் அமிர்தராஜின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    கூடலூர் பகுதியில் கடை மற்றும் வீட்டை காட்டு யானைகள் சேதப்படுத்தியது.
    கூடலூர்:

    கூடலூர் வனப்பகுதியில் காட்டு யானை, கரடி, சிறுத்தைபுலி, காட்டெருமை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வருகின்றன. இவ்வாறு வரும் வனவிலங்குகள் விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. மேலும் வீடுகளை உடைத்து சேதப்படுத்தி வருவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கூடலூர் ஆமைக்குளம் அரசு கல்லூரிக்கு செல்லும் சாலையில் உசேன் என்பவரின் கடையின் கதவை காட்டு யானை உடைத்து சேதப்படுத்தியது. மேலும் கடைக்குள் தும்பிக்கையை நுழைத்து அங்கு வைத்திருந்த பொருட்களை தின்றும், வெளியே வீசியும் சேதப்படுத்தியது. பின்னர் அங்கிருந்து காட்டு யானை வனப்பகுதிக்குள் சென்றது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையொட்டி வனத்துறையினரை நேரில் வந்து விசாரணை நடத்தினர். அப்போது காட்டு யானைகள் வருகையை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதேபோல் கூடலூர் வேடன் வயல் பகுதியில் 2 காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தது. அப்போது தொழிலாளி செல்வம் என்பவரது வீட்டை காட்டு யானைகள் முற்றுகையிட்டன. இந்த சமயத்தில் வீட்டில் இருந்த செல்வம் அச்சம் அடைந்தார். தொடர்ந்து காட்டு யானைகள் வீட்டு முன்பு அமைத்திருந்த கொட்டகையை சரித்தது, வீட்டின் கூரையை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றன.

    இதில் ஒரு யானை தட்டக்கொல்லி, 2, 1-ம் மைல் வழியாக சாலையில் நடந்து சென்று, ஆனைசெத்த கொல்லி வழியாக தனியார் தோட்டத்துக்குள் சென்றதாகவும், மற்றொரு யானை வேறு வழியாக வனத்துக்குள் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பார்வையிட்டனர்.
    நீலகிரியில் இதுவரை 42,871 பேரிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 14 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. அடுத்த 2 மாதங்களில் தொற்று வேகமாக பரவியதால் அதிகம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த 2 மாதங்களில் கொரோனா வைரஸ் ஆயிரத்தை எட்டி உள்ளது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகமானதால் ஊட்டி, குன்னூர் அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

    இதுவரை கொரோனா வைரஸ் உறுதியான 1,010 பேரில் 913 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 94 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அரசு வழிகாட்டுதலின்படி கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவம் அளிக்கப்பட்டு வருவதால் குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நீலகிரியில் இதுவரை 42,871 பேரிடம் இருந்து சளி மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தொடர்ந்து வைரஸ் உறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அதிகம் பேருக்கு பரிசோதனை மேற்கொள்வதால் வைரஸ் பரவல் குறைந்து இருக்கிறது. வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களிலிருந்து இ-பாஸ் பெற்று வந்த 825 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
    குன்னூர் அருகே தடுப்பணை கட்டுவதை பொதுமக்கள் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நடைபாதையை மறித்து கட்டுவதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர்.
    குன்னூர்:

    குன்னர் அருகே பர்லியார் ஊராட்சிக்கு பகுதியில் அய்யப்பன் காலனி குடியிருப்பு பகுதி உள்ளது. இந்த குடியிருப்பு பகுதியிலிருந்து சோலாடா மட்டம் மற்றும் கோடமலை எஸ்டேட் செல்லும் பிரதான நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர்.

    எனவே இந்த சாலையை விரிவுபடுத்தி, தார்சாலையாக மாற்ற வேண்டும் என்று அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் பர்லியார் ஊராட்சி சார்பில் குடிநீர் தேவைக்காக தடுப்பணை கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நடைபாதையை மறித்து தடுப்பணை கட்ட பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். பின்னர் அவர்கள், அங்கு தடுப்பணை கட்டக்கூடாது என்றுக்கூறி போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, இந்த பாதையை பல ஆண்டுகளாக பயன்படுத்துவதால் இங்கு தடுப்பணை கட்டக்கூடாது என்று பொதுமக்கள் கூறினார்கள். இதையடுத்து அங்கு தடுப்பணை கட்டும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    கூடலூர் மற்றும் அத்திக்குன்னாவில் 4 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. கூடலூரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர், சிறுவன் உள்பட 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி கூடலூர் ஹெல்த்கேம்ப் போலீஸ் குடியிருப்பில் 8 வீடுகளும், பள்ளிப்பாடியில் 15 வீடுகளும், ஸ்ரீமதுரை ஊராட்சி கலிக்குன்னு பகுதியில் 4 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் 103 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. 

    பின்னர் அவர்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆர்.டி.ஓ. ராஜகுமார், தாசில்தார் தினேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதேபோல் பந்தலூர் தாலுகா அத்திக்குன்னாவில் 17 வயது சிறுவனுக்கு காய்ச்சல் இருந்து வந்தது. இதனால் பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சளிமாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அத்திக்குன்னா தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் 47 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து 192 பேரிடம் சளிமாதிரி சேகரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்லும் சாலைகளையும் போலீசார் இரும்பு தடுப்புகள் கொண்டு அடைத்து சீல் வைத்தனர். பின்னர் நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் லீனாசைமன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கதிரவன் ஆகியோர் முன்னிலையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
    கோத்தகிரி அருகே பாறை இடுக்கில் சிக்கி கரடி பரிதாபமாக இறந்தது.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே கப்பட்டி கிராமத்தில் இருந்து நாரகிரி செல்லும் சாலையில் உள்ள பள்ளியாடா கிராமத்தில் தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் நேற்றும் மதியம் 1 மணிக்கு பெரிய பாறை இடுக்கில் ஒரு கால் சிக்கி வெளியே வர முடியாமல் கரடி சத்தமிட்டபடி தவித்துக்கொண்டு இருந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த வனவர்கள் சசிகுமார், பெலிக்ஸ், வனக்காப்பாளர்கள் மணிகண்டன், சிவக்குமார், பூபதி அடங்கிய வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் கரடி சிக்கி இருந்த பாறையை ஆய்வு செய்து, அந்த கரடியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

    கரடி தொடர்ந்து சத்தமிட்டபடி இருந்ததாலும், அது சிக்கிய பாறை அதிக எடை கொண்டது என்பதாலும் இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட வன அதிகாரி குருசாமி தபேலா, உதவி வன அதிகாரி சரவணகுமார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கரடியை மீட்பது குறித்து ஆலோசனை செய்தனர். பின்னர் அந்த கரடிக்கு மயக்க ஊசி செலுத்தி மீட்க முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் கீழ் கோத்தகிரி கால்நடை மருத்துவர் ரேவதி, மசினகுடி கால்நடை மருத்துவர் கோகுலன், ஊட்டி கால்நடை மருத்துவர் ராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் அந்த கரடிக்கு மயக்க ஊசி செலுத்தினார்கள். ஆனால் அந்த கரடி பரிதாபமாக இறந்தது.

    இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, இறந்தது 5 வயதான பெண் கரடி ஆகும். பாறை இடுக்கில் இருந்த எறும்புகளை சாப்பிட வந்தபோது சிக்கிக்கொண்டது. 5 மணி நேரம் தண்ணீர், உணவு இல்லாமல் கரடி மிகவும் சோர்வடைந்த நிலையில் அது இறந்து விட்டது என்றனர். இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, கரடியை மீட்க வனத்துறையினர் போதிய ஆர்வம் காட்டவில்லை. இதனால்தான் அந்த கரடி உயிரிழந்துவிட்டது என்றனர்.
    தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான ஓரசோலை, கேரடா மட்டம், கன்னேரிமுக்கு, ஜெகரண்டா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் ஆய்வு மேற்கொண்டார்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலத்தில் சுமார் 20 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் சிகிச்சைக்காக ஊட்டி மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் குடியிருந்த பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு அங்கு முழு சுகாதார பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான ஓரசோலை, கேரடா மட்டம், கன்னேரிமுக்கு, கல்பனா காட்டேஜ், கேர்கம்பை, லூக்ஸ்சர்ச் சாலை, ஜெகரண்டா அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் குன்னூர் சப்-கலெக்டர் ரஞ்சித் சிங் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது கோத்தகிரி தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் உள்பட பலர் உடனிருந்தனர்.
    கூடலூர் அருகே வெள்ளத்தில் பாலம் உடைந்ததால், கிராம மக்களின் வசதிக்காக மரக்கட்டைகளை கொண்டு தற்காலிக பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
    கூடலூர்:

    கூடலூர் தாலுகா பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீண்டும் கனமழை பெய்தது. இதனால் பாடந்தொரை, புளியம்பாறா உள்பட பல இடங்களில் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    இதேபோல் புளியம்பாறாவில் இருந்து கோழிகொல்லி, கத்தரிதோடு, மட்டம் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலையின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பாலம் ஆற்று வெள்ளத்தால் உடைந்தது. இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாலத்தை கடக்க முடியாததால், வெளியே செல்ல முடியாமல் தவித்தனர்.

    இந்த நிலையில் கூடலூர் பகுதியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று முன்தினம் வெள்ள சேதங்கள் ஏற்பட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். அப்போது பாலம் உடைந்ததால், புதிய பாலம் கட்டும் வரை, அங்கு தற்காலிக பாலம் அமைக்க அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து நெல்லியாளம் நகராட்சி அதிகாரிகள், உடைந்த பாலத்தின் மீது மரக்கட்டைகளை கொண்டு தற்காலிக பாலத்தை நேற்று அமைத்தனர். இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, உடைந்த பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் கட்டும்போது அகலமாகவும், உயரமாகவும் கட்ட வேண்டும். அப்போதுதான் வெள்ளப்பாதிப்பால் பாலம் சேதம் அடையாது என்றனர்.
    ஊட்டியில் மழை குறைந்ததால் காய்கறிகள் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாக விளை நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த காய்கறிகள் அறுவடை செய்வதில் தாமதம் ஏற்பட்டது. சில இடங்களில் கேரட், பூண்டுகள் அழுக தொடங்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதற்கிடையே கடந்த 4 நாட்களாக மழை பெய்யாமல் இதமான காலநிலை நிலவி வருகிறது. மழை குறைந்ததால் விவசாயிகள் மீண்டும் காய்கறிகள் அறுவடை பணியை தொடங்கி உள்ளனர்.

    ஊட்டி அருகே நஞ்சநாடு, முத்தோரை, எல்லக்கண்டி, அணிக்கொரை, ஆடாசோலை, எப்பநாடு உள்ளிட்ட பகுதிகளில் கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஆங்காங்கே சாலையோரங்களில் லாரிகளை நிறுத்தி அறுவடை செய்த காய்கறிகள் மூட்டைகளில் நிரப்பி ஏற்றப்படுகிறது. கேரட், பீட்ரூட் போன்ற காய்கறிகளை அறுவடை செய்து சுத்திகரிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பின்னர் தண்ணீரில் சுத்திகரிக்கப்பட்டு மூட்டைகளில் நிரப்பி விற்பனைக்காக வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    ஊட்டியில் விளையும் காய்கறிகளுக்கு தனி மவுசு உள்ளதால் விவசாயிகள் காய்கறிகளை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இதையடுத்து வருகிற மழைக்காலங்களில் காய்கறிகள் பாதிக்காமலிருக்க சிலர் முன் கூட்டியே அறுவடை செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர். உருளைக்கிழங்கு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விலை கிடைக்கிறது. இந்த விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    முட்டைகோஸ் கிலோ ஒன்றுக்கு ரூ.8 முதல் ரூ.10 வரை மட்டுமே விலை போகிறது. கேரட், பீட்ரூட் ஆகிய காய்கறிகளுக்கு கணிசமான விலை கிடைக்கிறது. மேலும் மொத்த வியாபாரிகளும் நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து வருகின்றனர்.

    கடந்த வாரம் பெய்த கனமழையின் போது பலத்த காற்று வீசியது. இதனால் பல இடங்களில் பயிரிடப்பட்டிருந்த பூண்டு செடிகள் சாய்ந்தன. அதனால் பூண்டின் வளர்ச்சி பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிலர் முன்கூட்டியே அறுவடை செய்து வருகின்றனர். சிலர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளனர்.

    அதன் ஒரு பகுதியாக ஊட்டி அருகே எல்லக்கண்டி பகுதியில் விவசாயிகள் பலத்த காற்றால் பூண்டு செடிகள் சாயாமல் இருக்க செடியை கயிறு மூலம் கட்டி வைத்து உள்ளனர். சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பூண்டுகள் அதேபோல் கட்டி வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் காற்று வீசும் போது சாயாமல் இருப்பதால் பூண்டு வளர்ச்சி நன்றாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

    கூடலூர் அருகே தொழிலாளி வீட்டை உடைத்து காட்டுயானை அட்டகாசம் செய்துள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூர் தாலுகா பகுதியில் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்துள்ளது. கனமழையால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் காட்டுயானைகள் ஊருக்குள் புகுந்து வீடுகளை முற்றுகையிட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு முதுமலை ஊராட்சிக்குட்பட்ட நெல்லிக்கரை பகுதியில் காட்டு யானை ஒன்று விவசாயி உன்னிகிருஷ்ணன் என்பவரது வீட்டை நள்ளிரவில் சேதப்படுத்தியது.

    இதனால் உயிருக்கு பயந்து அவரது குடும்பத்தினர் வேறு வழியாக தப்பி சென்றனர். பின்னர் காலையில் வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க சுவர் மற்றும் அதன் உடன் இருந்த கொட்டகையை முழுமையாக சேதப்படுத்திய இருந்தது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்தது.

    இதுகுறித்து முதுமலை வனத்துறையினருக்கு கிராம மக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அடிக்கடி ஊருக்குள் வந்து காட்டு யானை விவசாய பயிர்கள் வீடுகளை சேதப்படுத்தியதாக புகார் தெரிவித்தனர்.

    இதேபோல் கூடலூர் அருகே புளியம்பாறை கத்தரி தோடு பகுதியில் நேற்று அதிகாலையில் காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. பின்னர் பொதுமக்கள் குடியிருப்புகளை முற்றுகையிட்டது. இந்த சமயத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாலசுப்பிரமணியம் என்பவரின் வீட்டை காட்டு யானை உடைத்தது. இதனால் அச்சம் அடைந்த பாலசுப்பிரமணியம் குடும்பத்தினர் கூச்சலிட்டனர்.

    வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் வீட்டுக்குள் இருந்த பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தது. இதை அறிந்த கிராம மக்கள் திரண்டு வந்து காட்டு யானையை விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டனர். பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு காட்டு யானை வனத்துக்குள் சென்றது. காட்டுயானையின் தொடர் அட்டகாசத்தால் அந்த பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.

    இதை தொடர்ந்து தகவல் அறிந்து வந்த தேவாலா வனத்துறையினர் நேரில் சேதமடைந்த வீட்டையும், அப்பகுதியில் காட்டு யானையால் சேதமடைந்த விவசாய பயிர்களை பார்வையிட்டனர். இதற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    ×