என் மலர்tooltip icon

    நீலகிரி

    சுற்றுலாவுக்காக வருபவர்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், வெளியூரில் இருக்கும் நீலகிரியை சேர்ந்தவர்களுக்கு உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க தொடர்ந்து சுற்றுலாவுக்கு தடை விதிக்கப்படுகிறது. சுற்றுலா தலங்கள் திறக்கப்படாது. வெளியூர் சுற்றுலா பயணிகள் வர தடை நீடிக்கிறது. பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு அவசிய, அவசர காரணங்கள் மற்றும் வேலை, வியாபாரம் நிமித்தமாக வருகிறவர்களின் ஆவணங்களை சரிபார்த்து இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் வெளி மாவட்டங்களுக்கு சென்று விட்டு திரும்பினால் முகவரியுடன் கூடிய ஆதார் அடையாள அட்டை, ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களோடு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும். அவர்கள் எவ்வித சிரமுமின்றி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள். தொடர்ந்து இ-பாஸ் முறை செயல்படுத்தப்படுகிறது.

    அரசு அனுமதித்ததை தொடர்ந்து கோவில்கள் திறக்கப்பட்டு உள்ளன. 3 மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினி மூலம் கோவில்கள் சுத்தப்படுத்தப்படுகிறது. ஒரே நேரத்தில் 20 பேருக்கு மேல் கூடக்கூடாது. முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சளி, காய்ச்சல், இருமல் உள்ளவர்கள் வர வேண்டாம். அவர்கள் பஸ்சில் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். வழிபாட்டு தலங்களில் 1,075 சதுர அடிக்குள் சமூக இடைவெளி விட்டு 20 பேர் கலந்து கொள்ளலாம். நீலகிரியில் தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், காட்டேஜ்கள் திறக்க அனுமதிக்கப்படுகிறது. வேலை நிமித்தமாக நீலகிரிக்கு வருகிறவர்கள் தங்கி கொள்ளலாம். சுற்றுலா நோக்கத்தோடு தங்க அனுமதி இல்லை. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    வெளி மாவட்டங்களில் இருந்து பலர் வந்து செல்வதால் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளது. கொரோனா பரவலை தடுக்க அறிகுறி தென்பட்டவுடன் அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மசினகுடியில் புலி தாக்கி பெண் இறந்த சம்பவம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 2 நாட்கள் கேமராக்கள் மூலம் புலி எங்கு செல்கிறது குறித்து கண்காணிக்கப்படுகிறது. ஆட்கொல்லி புலி என கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    ஊரடங்கை மீறியதாக ஊட்டி நகரம், ஊட்டி ஊரகம், குன்னூர் என மாவட்டம் முழுவதும் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    ஊட்டி:

    தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த கடந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.

    முழு ஊரடங்கில் பொதுமக்கள் அவசிய, அவசர காரணங்களை தவிர வேறு எவ்வித காரணங்களுக்காகவும் வெளியே வரக்கூடாது. மீறினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. முழு ஊரடங்கை மீறி அவசியம் இன்றி வெளியே யாரேனும் சுற்றுகிறார்களா? என்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முழு ஊரடங்கை மீறியதாக ஊட்டி நகரம், ஊட்டி ஊரகம், குன்னூர், தேவாலா என மாவட்டம் முழுவதும் 16 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    நீலகிரி மாவட்டத்துக்கு வர இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    ஊட்டி:

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், வனத்துறையின் கீழ் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் மூடப்பட்டன. இங்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே சமீபத்தில் தமிழக அரசு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று அறிவித்தது.

    இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நீலகிரிக்கு இ-பாஸ் பெற்று வந்தனர். இதன் காரணமாக தினமும் 2 ஆயிரக்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்தனர். இதில் பலர் சுற்றுலா நோக்கத்தோடு வந்து ரகசியமாக தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கினர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கவும், சுற்றுலா பயணிகள் வருவதை கட்டுப்படுத்தவும் நீலகிரிக்கு வர கலெக்டர் அனுமதியுடன் இ-பாஸ் வழங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி கடந்த 26-ந் தேதி முதல் மருத்துவம், திருமணம், இறப்பு போன்ற அவசிய, அவசர காரணங்களுக்கு மட்டும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊரடங்கு உத்தரவை வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை நீட்டித்து, பல்வேறு தளர்வுகளை அறிவித்தார். இதன்படி மாநிலம் முழுவதும் இ-பாஸ் இல்லாமல் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்க, மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதேநேரத்தில் நீலகிரியில் இருந்து தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவை இல்லை. ஆனால், மற்ற மாவட்டங்களில் இருந்து நீலகிரி வருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும். நீலகிரி வரும் பொதுமக்களை, மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறையினர் இ-பாஸ் பெற்று வருகிறார்களா என்று தீவிரமாக கண்காணித்த பின்னரே உள்ளே அனுமதிப்பார்கள். ஒருவேளை இ-பாஸ் பெறாமல் வந்தால் கண்டிப்பாக திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்க கலெக்டர் அனுமதியுடன் அவசிய காரணங்களுக்கு மட்டும் இ-பாஸ் வழங்க அரசு அனுமதித்து உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்துக்கு வருவதற்கு இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும். மேலும் நீலகிரியில் தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் திறப்பது குறித்து கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றார்.
    கொடிக்கம்பத்தை அகற்றிய நகராட்சியை கண்டித்து பா.ஜ.க.வினர் திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் நேற்று முன்தினம் பா.ஜ.க. சார்பில் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய இளைஞரணி துணைத் தலைவர் கலந்து கொண்டார். கட்சி கொடி ஏற்றுவதற்காக அப்பகுதியில் புதிதாக கொடிக்கம்பம் நடப்பட்டது. இதற்கிடையே நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கொடிக்கம்பம் நடுவதற்கு அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது. 

    இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சரஸ்வதி ஊட்டி நகர மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் நேற்று மாலை அனுமதி பெறாமல் நடப்பட்ட கொடிக்கம்பத்தை அகற்றினர். இதனை தொடர்ந்து கொடிக்கம்பத்தை அகற்றிய நகராட்சியை கண்டித்து பா.ஜனதா கட்சியினர் திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு ஊட்டி நகர தலைவர் பிரவீன் தலைமை தாங்கினார். இதில் நகராட்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. 

    இது குறித்து ஊட்டி நகர தலைவர் பிரவீன் கூறும்போது, நாளை கொடிக்கம்பம் நடப்படாவிட்டால் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த தலைமை கழகம் முடிவு செய்து உள்ளது என்றார்.
    ஊட்டி, குன்னூரில் வளர்ச்சி பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    ஊட்டி:

    ஊட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கக்குச்சி ஊராட்சிக்கு உட்பட்ட கனாகம்பை முதல் மதுரை வீரன் காலனி வரை ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதித் திட்டத்தின் கீழ் ரூ.43.97 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சாலை, தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கப்பச்சி முதல் மதுரை வீரன் காலனி வரை ரூ.89.40 லட்சம் செலவில் நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணி, தீனட்டியில் ரூ.22.95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மன்றகுறிச்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் செலவில் தடுப்பணை கட்டும் பணி, மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.10.50 லட்சம் மதிப்பில் மசக்கல் முதல் மன்றகுறிச்சி வரை அமைக்கப்பட்ட சாலை, ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.26.68 லட்சம் செலவில் பாக்கியா நகர் பகுதியில் நடந்து வரும் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, செயற்பொறியாளர் சுஜாதா, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மாதன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    மேலும் குன்னூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எடப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட இளித்தொரையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு கட்டிடம், ஆரக் கொம்பை கிராமத்தில் தாய் திட்டத்தின் கீழ் ரூ.7.40 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, ஆர்க்கொம்பை முதல் சித்தகிரி வரை ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ரூ.77 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் சாலை, பேரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பேரட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட குடிநீர் கிணறு, உபதலை ஊராட்சிக்கு உட்பட்ட வெலிங்டன் பிரிவு சாலை முதல் உபதலை வரை 14-வது மத்திய நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.33.62 லட்சம் செலவில் போடப்பட்ட சாலை ஆகியவற்றை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு மேற்கொண்டார்.

    கூடலூர் அருகே காட்டுயானை தாக்கி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    கூடலூர்:

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி (வயது 64). இவரது மனைவி பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ஒரு மகள் மட்டும் உள்ளார். அவர் திருமணமாகி கூடலூரில் வசித்து வருகிறார். பழனியாண்டி தனது விவசாய நிலத்தில் சிறிய வீடு ஒன்றை கட்டி தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் நாய் நேற்று காலை 7 மணி அளவில் பழனியாண்டியின் விவசாய நிலம் அருகே புதர் பகுதியில் நின்று குரைத்துக்கொண்டே இருந்தது. இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்றனர். அப்போது அங்கு கடும் துர்நாற்றம் வீசியது.

    இதையடுத்து பொதுமக்கள் அந்த புதர் பகுதியில் சென்று பார்த்தபோது, அங்கு அழுகிய நிலையில் பழனியாண்டியின் உடல் கிடந்தது. அவரது இடது கால் துண்டிக்கப்பட்டு காணாமல் போய் இருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த நியூ ஹோப் போலீசார் மற்றும் ஓவேலி வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியாக நடந்து சென்ற பழனியாண்டியை காட்டு யானை தாக்கி கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பழனியாண்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அத்துடன் இது குறித்து நியூஹோப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார், வனத்துறையினர் கூறும்போது, காட்டு யானை, பழனியாண்டியின் காலை சிதைத்து சேதப்படுத்தி இருக்க வாய்ப்பு உள்ளது. இரவில் அங்கு வந்த வனவிலங்குகள் அந்த காலை தூக்கி சென்று இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. எனினும் அவருடைய காலை தேடும் பணி நடந்து வருகிறது என்றனர்.
    கூடலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கூடலூர்:

    கூடலூர் அருகே உள்ள ஆமைகுளம் பகுதியை சேர்ந்தவர் மார்க்கண்டேயன். இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 44). இவர் நேற்று முன்தினம் வீட்டில் சமையல் அறைக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக அங்கு சேதமடைந்து கிடந்த மின் ஒயரில் அவரது கைப்பட்டது . இதனால் விஜயலட்சுமி மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டார். பின்னர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த விஜயலட்சுமியை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கூடலூர் அருகே அரசு பள்ளியில் பதுக்கிய ஆயுதங்கள் மற்றும் திருட்டு பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா மரப்பாலம் அருகே புளியம்பாராவில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிக்கூடம் மூடி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கூடலூர் பகுதியில் தொடர் கனமழை பெய்து வந்தது. இதனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கும் முகாமாக மாற்றப்பட்டிருந்தது.

    மழையின் தாக்கம் குறைந்துவிட்டதால் அரசு பள்ளிக்கூடத்தில் தங்கியிருந்த மக்கள் வீடு திரும்பினர். இதனால் பள்ளிக்கூடம் மீண்டும் மூடப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு பள்ளிக்கூடத்தில் உதவியாளராக பணியாற்றும் மோகன் என்பவர் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பள்ளிக்கூடத்தின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் சந்தேகமடைந்த அவர் பள்ளிக் கூடத்துக்கு சென்று பார்த்தார்.

    அப்போது அடையாளம் தெரியாத ஆசாமி ஒருவர் முகத்தை மூடியவாறு அங்கிருந்து வேகமாக வெளியேறினார். அப்போது தொடர்ந்து அவரை பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை. மேலும் அந்த ஆசாமியும் அங்கிருந்து தப்பி சென்றார். பின்னர் வளாகத்தை சுற்றி வந்து பார்த்தபோது ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மேலும் பள்ளிக்கூட வகுப்பறையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்தது. இதனிடையே தகவல் அறிந்த பொதுமக்கள் பள்ளிக்கூடத்துக்கு திரண்டு வந்தனர். மேலும் வகுப்பறைக்குள் மடிக்கணினி, மெமரி கார்டுகள், ஹெட்போன் மற்றும் கத்திகள் உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது. இது தவிர ஒரு அட்டைப் பெட்டி முழுவதும் ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் வைக்கப்பட்டிருந்தது. இதை தொட ர்ந்து போலீசாருக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர். இதையொட்டி தேவாலா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் மோட்டார் சைக்கிள், மற்றும் அங்கு பதுக்கி வைத்திருந்த கத்திகள், மடிக் கணினி, திருட்டு பொருட்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து கண்காணிப்பு கேமராவில் பதிவான ஆசா மியின் உருவத்தைக் கொண்டு விசாரித்து வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:- அடையாளம் தெரியாத ஆசாமி அரசு பள்ளிக்கூடத்தில் யாருக்கும் தெரியாமல் தங்கியுள்ளார். அவரது உருவத்தை கொண்டு பழைய குற்றவாளியாக இருக்கலாம் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கைப்பற்றபட்ட பொருட்கள் கூடலூர் பகுதியில் திருடி இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட குற்றவாளியை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இ-பாஸ் பெற்று நீலகிரிக்கு சுற்றுலா வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது,

    நீலகிரி மாவட்டத்துக்கு தினந்தோறும் 2 ஆயிரம் முதல் 2,500 பேர் வரை வருகை தருகிறார்கள். தற்போது தமிழக அரசு இ-பாஸ் பெறும் முறையை எளிமைப்படுத்தியதால் பல்வேறு நபர்கள் வருகை தருகிறார்கள். இதை பயன்படுத்தி சுற்றுலாவுக்காக நீலகிரிக்கு வந்து கொண்டு இருக்கின்றனர்.

    சுற்றுலா சம்பந்தமாக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. சுற்றுலா பயணிகள் வர தடை நீடிக்கிறது. சுற்றுலா நோக்கத்தோடு நீலகிரிக்கு வருகிறவர்கள் திரும்பி அனுப்பப்படுவார்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் செயல்படுகிறதா? என்று உள்ளாட்சி துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அங்கு பயணிகள் தங்குவது கண்டறியப்பட்டால் சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் தேவையான பணிகளுக்கு மட்டும் இ-பாஸ் பெற்று வர வேண்டும். தேவையில்லாமல் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். இ-பாசை தவறாக பயன்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

    மேலும் அத்தியாவசிய பணிகளுக்கு இல்லாமலும், இ-பாஸ் பெறாமலும் பயணம் செய்யும் நபர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவதோடு அபராதம் விதிக்கப்படும். கொரோனா சிகிச்சை மையங்களில் படுக்கை அறைகளை அதிகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 270 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. மேலும் 200 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளது. கூடுதலாக 300 படுக்கை வசதிகள் ஏற்படுத்த இடம் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது.

    நீலகிரியில் கொரோனா பாதிப்பால் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 5 பேர் தாமதமாக வந்ததால் உயிரிழப்புகள் ஏற்பட்டது. சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவ பரிசோதனை செய்ய முன்வர வேண்டும். தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும்.

    நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் 34 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்பட்டது. மேலும் 30 ஆயிரம் வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கின. 42 வீடுகள் முழுமையாக சேதம் அடைந்தது. 400 வீடுகள் சிறிய அளவில் சேதம் அடைந்துள்ளன. 8 பாலங்களும் சேதம் அடைந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூடலூர் அருகே வாலிபரை கத்தியால் வெட்டிய கூலித்தொழிலாளிக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கூடலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த தேவர்சோலை கடசனகொல்லி பழங்குடி கிராமத்தை சேர்ந்தவர், கேத்தன்(வயது33). கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 2012-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந் தேதி மதுகுடித்து விட்டு வந்து ஊருக்குள் சத்தம் போட்டார். இதை அப்பகுதியை சேர்ந்த மாறன் என்பவர் தட்டி கேட்டார். 

    இதனால் ஆத்திரம் அடைந்த கேத்தன் மாறனை கத்தியால் வெட்டினார். இதுகுறித்து தேவர்சோலை போலீசார் கேத்தனை கைது செய்தனர்.இது தொடர்பான வழக்கு கூடலூர் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் பாபு, குற்றவாளி கேத்தனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

    கூடலூர் அருகே பாழடைந்த கிணற்றில் தவறி விழுந்த இளம் பெண் பலியானார். அவரை காப்பாற்ற முயன்ற 2 சகோதரர்களும் சேற்றில் சிக்கி உயிரிழந்தனர்.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகா தேவாலா அருகே வடமூலா கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரலிங்கம். இவரது மகள் ரூபி என்ற சுகன்யா (வயது 22). நேற்று மாலை 3 மணி அளவில் சுகன்யா விறகு சேகரிக்க வீட்டின் அருகே 300 மீட்டர் தூரத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் நடந்து சென்றார்.

    அப்போது வனத்தில் புதர்கள் மூடியவாறு இருந்த 70 அடி ஆழமுள்ள பாழடைந்த கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதையறிந்த சுகன்யாவின் சகோதரர் தமிழழகன் (24) மற்றும் அவரது சித்தப்பா மகன் முரளி (26) ஆகியோர் அந்த கிணற்றை நோக்கி ஓடினர். பின்னர் சுகன்யாவை மீட்பதற்காக ஒன்றன்பின் ஒன்றாக கிணற்றுக்குள் குதித்தனர்.

    ஆனால் கிணற்றுக்குள் தண்ணீர் மற்றும் சேறு நிறைந்து காணப்பட்டது. இதனால் அவர்களால் வெளியே வரமுடியவில்லை. இதை அறிந்த கிராம மக்கள் தேவாலா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டுகள் அமீர் அகமது, ஜெய் சிங் உள்பட போலீசார் மற்றும் கூடலூர் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    பின்னர் தீயணைப்பு துறையினர் அந்த கிணற்றுக்குள் இறங்கி அவர்கள் 3 பேரையும் தேடினார்கள். அப்போது கிணற்றுக்குள் சேறு-சகதியில் சிக்கி அவர்கள் 3பேரும் உயிரிழந்தது தெரிய வந்தது. பின்னர் பல்வேறு போராட்டத்துக்கு பின்னர் இரவு 7.30 மணிக்கு இளம்பெண் சுகன்யா மற்றும் முரளி, தமிழழகன் ஆகியோரின் உடல்களை தீயணைப்புத் துறையினர் மீட்டு கிணற்றுக்குள் இருந்து வெளியே கொண்டு வந்தனர்

    பின்னர் அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்த புகாரின்பேரில் தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பேர் உயிரிழந்த சம்பவம் தேவாலா பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    நீலகிரியில் கொரோனா சிகிச்சை மையங்கள், படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று கண்காணிப்பு அதிகாரி சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள இன்கோசர்வ் அலுவலகத்தில் கொரோனா நோய் தடுப்பு பணிகள் குறித்து சுகாதாரத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு இன்கோசர்வ் முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அதிகாரியுமான சுப்ரியா சாகு தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏதுவாக படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரசு தெரிவித்துள்ள வழிமுறைகளின்படி சிகிச்சைகளை அளிக்க வேண்டும். தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் விவரங்களை முழுமையாக சேகரித்து அவர்களுடன் தொடர்புடைய முதல், இரண்டாம் நிலை நபர்களை கண்டறிந்து அறிகுறி இருக்கும் பட்சத்தில் அவர்களையும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். கொரோனா சிகிச்சை மையங்களை அதிகரிப்பது மற்றும் படுக்கை வசதிகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அறிகுறி கண்டறியப்பட்ட பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் அறிகுறியுடன் நபர்கள் வந்தால் அவர்களின் முழு முகவரிகளை சேகரித்து அந்த பகுதிகளில் காய்ச்சல் மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தினமும் கபசுரக் குடிநீர், ஜிங்க் மாத்திரைகள் ஆகியவற்றை தவறாமல் வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பேசும்போது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதோடு அவர்களது உடல்நலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து 10 நாட்களுக்கு காய்ச்சல் கண்டறியும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். தொற்று பாதிப்பில் இருந்து மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக முககவசங்கள் அணிவது, அடிக்கடி கை கழுவுவது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். கூட்டத்தில் ஊட்டி மருத்துவ கல்லூரி டீன் ரவீந்திரன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பழனிச்சாமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
    ×