search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா
    X
    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா

    நீலகிரிக்கு வர இ-பாஸ் கட்டாயம்: கலெக்டர் தகவல்

    நீலகிரி மாவட்டத்துக்கு வர இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார். சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    ஊட்டி:

    தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலைத்துறை, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம், வனத்துறையின் கீழ் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் கடந்த மார்ச் மாதம் 17-ந் தேதி முதல் மூடப்பட்டன. இங்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே சமீபத்தில் தமிழக அரசு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்று அறிவித்தது.

    இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் நீலகிரிக்கு இ-பாஸ் பெற்று வந்தனர். இதன் காரணமாக தினமும் 2 ஆயிரக்கும் மேற்பட்டவர்கள் வருகை தந்தனர். இதில் பலர் சுற்றுலா நோக்கத்தோடு வந்து ரகசியமாக தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கினர். இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கவும், சுற்றுலா பயணிகள் வருவதை கட்டுப்படுத்தவும் நீலகிரிக்கு வர கலெக்டர் அனுமதியுடன் இ-பாஸ் வழங்க தமிழக அரசு அனுமதி அளித்தது. அதன்படி கடந்த 26-ந் தேதி முதல் மருத்துவம், திருமணம், இறப்பு போன்ற அவசிய, அவசர காரணங்களுக்கு மட்டும் இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊரடங்கு உத்தரவை வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வரை நீட்டித்து, பல்வேறு தளர்வுகளை அறிவித்தார். இதன்படி மாநிலம் முழுவதும் இ-பாஸ் இல்லாமல் பொதுமக்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி சுற்றுலாத்தலமான நீலகிரி மாவட்டத்திற்கு வெளிமாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்க, மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் இ-பாஸ் பெற்று செல்ல வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

    அதேநேரத்தில் நீலகிரியில் இருந்து தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் தேவை இல்லை. ஆனால், மற்ற மாவட்டங்களில் இருந்து நீலகிரி வருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும். நீலகிரி வரும் பொதுமக்களை, மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறையினர் இ-பாஸ் பெற்று வருகிறார்களா என்று தீவிரமாக கண்காணித்த பின்னரே உள்ளே அனுமதிப்பார்கள். ஒருவேளை இ-பாஸ் பெறாமல் வந்தால் கண்டிப்பாக திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்க கலெக்டர் அனுமதியுடன் அவசிய காரணங்களுக்கு மட்டும் இ-பாஸ் வழங்க அரசு அனுமதித்து உள்ளது. அதன்படி நீலகிரி மாவட்டத்துக்கு வருவதற்கு இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும். மேலும் நீலகிரியில் தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள் திறப்பது குறித்து கூட்டம் நடத்தி முடிவு எடுக்கப்படும் என்றார்.
    Next Story
    ×