search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Wild elephant attack"

    மசினகுடியில் காட்டு யானை தாக்கி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். எனவே மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    மசினகுடி:

    மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் முதுமலையை சுற்றி பார்க்க வரும் சுற்றுலா பயணிகள் மதுபானங்களை வாங்க மசினகுடியில் 2 அரசு மதுபான கடைகள் திறக்கப்பட்டது. நெடுஞ்சாலையோரங்களில் செயல்பட்டு வந்த 2 கடைகளும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டன. அதில் ஒரு கடை ஊட்டி சாலையில் உள்ள பட்டுப்பூச்சி பண்ணையின் பின்புற பகுதிக்கும், மற்றொன்று மாயார் சாலையில் உள்ள மின்வாரிய குடியிருப்பு பகுதிக்கும் மாற்றபட்டது.

    இதில் பட்டுப்பூச்சி பண்ணை அருகில் செயல்பட்டு வரும் மதுபான கடை வனப்பகுதியை ஒட்டி அமைந்து உள்ளது. இதனால் காட்டு யானைகள், சிறுத்தைப்புலிகள், கரடிகள், காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அப்பகுதியில் அடிக்கடி சுற்றி திரிகின்றன. மேலும் அந்த கடைக்கு செல்லும் சாலையில் தெருவிளக்கு வசதியும் கிடையாது. இதனால் அந்த மதுபான கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று மசினகுடி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.

    பொக்காபுரத்தை சேர்ந்தவர் மாதேவன் (வயது 49), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மதுபானம் வாங்க அந்த கடைக்கு சென்று உள்ளார். ஆனால் வீட்டிற்கு திரும்பி செல்லவில்லை என்று கூறப்படுகிறது. நேற்று காலை வரை மாதேவன் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் மசினகுடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து, அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.

    இந்த நிலையில் பட்டுப்பூச்சி பண்ணையின் பின்புற பகுதியில் ஒருவர் காட்டு யானை தாக்கி இறந்து கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் மசினகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் இறந்து கிடந்தது மாதேவன் என்பது தெரியவந்தது.

    மது போதையில் வீட்டிற்கு திரும்பி செல்ல முடியாமல் மதுபான கடை அருகில் மாதேவன் படுத்து உள்ளார். அப்போது அந்த வழியாக வந்த ஆண் காட்டு யானை ஒன்று அவரை தந்தத்தால் குத்தி கொன்றது தெரிய வந்தது. அவரது உடலை மீட்ட மசினகுடி போலீசார் பிரேத பிரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மசினகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- மசினகுடி மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே அந்த மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தினோம். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் காட்டு யானை தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அந்த மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். மேலும், உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    கோவை அருகே இன்று அதிகாலை காட்டு யானை தாக்கி வன ஊழியர் உயிரிழந்தார். போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவையை அடுத்த தடாகம், சின்னதடாகம், வரப்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம் பகுதிகளில் ஒற்றை காட்டு யானை கடந்த சில நாட்களாக அட்டகாசம் செய்து வருகிறது.

    நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து வீடுகள் மற்றும் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை புகுந்தது. அப்போது அங்கு வனத்துறையினர், வேட்டை தடுப்புக் காவலர்கள், துரிதமாக செயல்படும் வனக் குழுவினர்(ஆர்.ஆர்.டி.) அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    யானை புகுந்த சத்தம் கேட்டு துரிதமாக செயல்படும் வனக்குழு ஊழியரான தடாகத்தை சேர்ந்த வெங்கடேசன்(வயது 28) மற்றும் ராமதாஸ், சூரிய பிரகாஷ் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பட்டாசுகள் வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டினர்.

    அப்போது திடீரென ஆவேசமடைந்த யானை திரும்பி வந்து வெங்கடேசனை மிதித்து, தூக்கி வீசியது. இதில் அவரது தலை, கால், இடுப்பு ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    உடனடியாக அங்கு வன ஊழியர்கள் கூடுதலாக சென்றனர். அவர்கள் பட்டாசுகள் வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டினர். சம்பவ இடத்துக்கு வனத்துறை அதிகாரிகள், தடாகம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    நேற்று ஆலாந்துறை பகுதியில் காட்டு யானை தாக்கி பால் வியாபாரி ரமேஷ் என்பவர் பலியானார். இந்நிலையில் இன்று யானை தாக்கி வன ஊழியர் இறந்துள்ளார்.

    பலியான வெங்கடேசனின் தந்தை ராமசாமி வனத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். வெங்கடேசன் கடந்த 3 மாதத்துக்கு முன்பு தான் வேலைக்கு சேர்ந்துள்ளார். இரவு நேரத்தில் ஊருக்குள் புகும் யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபடும் வன ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுப்பது இல்லை என புகார் எழுந்துள்ளது.

    குறிப்பாக வாகன வசதி, டார்ச் லைட் மற்றும் தேவையான அளவுக்கு பட்டாசுகள் கூட இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தடாகம் பகுதியில் கடந்த 10 நாட்களாகவே இந்த ஒற்றை யானை தினமும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. பொதுமக்கள் இது குறித்து வனத்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். கும்கி யானையை வரவழைத்து, அட்டகாசம் செய்யும் ஒற்றை யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டுவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
    பந்தலூர் அருகே காட்டு யானை தாக்கி முதியவர் படுகாயம் அடைந்தார்.
    பந்தலூர்:

    பந்தலூர் அருகே தொண்டியாளம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து (வயது 60). இவர் நேற்று காலை 6 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அங்கு மறைந்து இருந்த காட்டு யானை காளிமுத்துவை தாக்கியது. அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து காட்டுயானையை விரட்டினர்.

    பின்னர் காயமடைந்த காளிமுத்து மீட்கப்பட்டு பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல் சிகிச்சைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா வனச்சரகர் சரவணன், வனக்காப்பாளர் லூயிஸ் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.

    இதனிடையே தொண்டியாளம் அம்புரோஸ் பகுதிக்கு ஆம்புலன்ஸ் உள்பட எந்த ஒரு வாகனமும் செல்ல முடியாத படி தனியார் தேயிலை தோட்ட நிர்வாகம் தடைகள் ஏற்படுத்தி இருந்தது. இதனால் காயமடைந்த முதியவரை பொதுமக்கள் தொட்டில் கட்டி தூக்கிக்கொண்டு சிறிது தூரம் சென்றனர். பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    எனவே தனியார் தேயிலை தோட்ட நிர்வாகம் வாகனங்கள் வந்து செல்ல அனுமதிக்கக்கோரி நேற்று பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

    இதன்பின்னர் பந்தலூர் தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்பொது பொதுமக்கள் கூறியதாவது:-

    எங்களது பகுதிக்கு செல்லும் சாலை தனியார் நிர்வாகத்துக்கு சொந்தமானது. இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாதபடி நிர்வாகத்தினர் தடைகளை ஏற்படுத்தி உள்ளனர். இதனால் யானை தாக்கி காயம் அடைந்த முதியவரை தொட்டில் கட்டி தூக்கி சென்றோம். இதேபோல் கர்ப்பிணிகள், நோயாளிகளையும் தொட்டில் கட்டி தூக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    எனவே வாகனங்கள் சென்று வர அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அப்போது தனியார் தோட்ட நிர்வாகத்தினர் தற்போது ஆட்டோ செல்ல அனுமதிக்கப்படும். பின்னர் உரிய அனுமதி பெற்று இந்த சாலை சீரமைக்கப்படும் என்றனர்.

    இந்த பேச்சுவார்த்தையில் தேவாலா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜவேலு, வனச்சரகர்கள் சரவணன், மனோகரன், கனேசன், துணை தாசில்தார் ராஜசேகர், வருவாய் ஆய்வாளர் காமு. கிராம நிர்வாக அலுவலர் யுவராஜ், தேயிலைத் தோட்ட நிர்வாகத்தினர், ஊர்பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கி பலியான விவசாயி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிதிஉதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். #TNCM #EdappadiPalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம், ஆழியாளம் கிராமத்தை சேர்ந்த மாதேஸ் இன்று அதிகாலை தனது விவசாய நிலத்திற்கு செல்லும்போது காட்டு யானை தாக்கியதில் உயிர் இழந்தார் என்ற செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிர் இழந்த மாதேஸ் குடும்பத்துக்கு 4 லட்சம் ரூபாய் வனத்துறை மூலம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #TNCM #EdappadiPalaniswami
    உத்தமபாளையம் அருகே காட்டு யானை தாக்கியதில் ஓட்டல் ஊழியர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து கேரள வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் உள்ளது. இதனை ஒட்டியுள்ள வனப்பகுதியில் யானை, காட்டெருமை, மான், முயல் உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மக்னா யானை விவசாய நிலத்தில் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது.

    மேலும் விவசாயிகளை தாக்கியதில் படுகாயமடைந்தனர். இதனால் இரவு காவலுக்கு செல்ல அச்சமடைந்தனர்.

    போடி மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் குமார்(வயது47). தமிழக-கேரள எல்லையில் 18-ம் படி பகுதியில் உள்ள ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். ஓட்டல் அருகே நின்று கொண்டிருந்தபோது அவ்வழியே வந்த காட்டு யானை குமாரை விரட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ஓட்டம் பிடித்தார். விடாமல் துரத்திய யானை குமாரை தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து கேரள வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குமாரின் உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டது.
    கேரள மாநிலம் பாலக்காடு அருகே காட்டு யானை தாக்கியதால் தொழிலாளி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் புதுப்பரியாரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 49). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் மகன், 3 மகள்கள் உள்ளனர்.

    நேற்று பிரபாகரன் அங்குள்ள ரப்பர் தோட்டத்தில் நடந்து வந்தார். அப்போது புதர்மறையில் இருந்த காட்டுயானை பிரபாகரனை தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து பரிதாபமாக பலியானார். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஊர் பொதுமக்கள் பாலக்காடு- கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    தகவல் அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பொது மக்கள் கலைந்து சென்றனர். இந்த பகுதியில் காட்டு யானை தாக்கி இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×