என் மலர்
நீங்கள் தேடியது "Forest Worker Death"
கொழிஞ்சாம்பாறை:
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு கண்ணோடு பகுதியை சேர்ந்தவர் மோகனன் (59). இவர் வாளையாறு வனத்துறையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.நேற்று மாலை 5 மணியளவில் கஞ்சிக்கோடு பகுதியில் உள்ள வேலஞ்சேரியில் காட்டு பகுதியில் இருந்து 3 யானைகள் ஊருக்குள் புகுந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் வாளையாறு போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து வன ஊழியர்கள் அங்கு விரைந்து சென்றனர். அவர்களுடன் மோகனனும் சென்று இருந்தார்.
அவர்கள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஒரு காட்டு யானை திரும்பி வந்து வன ஊழியர் மோகனனை துதிக்கையால் இழுத்து கீழே போட்டு மிதித்தது. இதில் அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக இறந்தார்.
யானையை விரட்டும் போது தப்பி ஓடிய மற்ற ஊழியர்களான விஸ்வநாதன், சசி ஆகியோர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.
இது குறித்த தகவல் கிடைத்ததும் தலைமை வன அதிகாரி சுரேந்திர நாத் அங்கு விரைந்து சென்றார். வேறு ஊழியர்களை வரவைழத்து யானைகள் காட்டுக்குள் விரட்டப்பட்டது.
யானை தாக்கி உயிர் இழந்த மோகனன் உடல் மீட்கப்பட்டு பாலக்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
யானை தாக்கி பலியான மோகனன் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் எனவும் முதல் கட்டமாக ரூ. 5 லட்சம் இன்று வழங்கப்படும் எனவும் தலைமை வனஅதிகாரி சுரேந்திர நாத் தெரிவித்துள்ளார்.
கோவையை அடுத்த தடாகம், சின்னதடாகம், வரப்பாளையம், பாப்பநாயக்கன் பாளையம் பகுதிகளில் ஒற்றை காட்டு யானை கடந்த சில நாட்களாக அட்டகாசம் செய்து வருகிறது.
நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து வீடுகள் மற்றும் விளைநிலங்களை சேதப்படுத்தி வந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் காட்டு யானை புகுந்தது. அப்போது அங்கு வனத்துறையினர், வேட்டை தடுப்புக் காவலர்கள், துரிதமாக செயல்படும் வனக் குழுவினர்(ஆர்.ஆர்.டி.) அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
யானை புகுந்த சத்தம் கேட்டு துரிதமாக செயல்படும் வனக்குழு ஊழியரான தடாகத்தை சேர்ந்த வெங்கடேசன்(வயது 28) மற்றும் ராமதாஸ், சூரிய பிரகாஷ் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். அவர்கள் பட்டாசுகள் வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டினர்.
அப்போது திடீரென ஆவேசமடைந்த யானை திரும்பி வந்து வெங்கடேசனை மிதித்து, தூக்கி வீசியது. இதில் அவரது தலை, கால், இடுப்பு ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உடனடியாக அங்கு வன ஊழியர்கள் கூடுதலாக சென்றனர். அவர்கள் பட்டாசுகள் வெடித்து யானையை காட்டுக்குள் விரட்டினர். சம்பவ இடத்துக்கு வனத்துறை அதிகாரிகள், தடாகம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வெங்கடேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
நேற்று ஆலாந்துறை பகுதியில் காட்டு யானை தாக்கி பால் வியாபாரி ரமேஷ் என்பவர் பலியானார். இந்நிலையில் இன்று யானை தாக்கி வன ஊழியர் இறந்துள்ளார்.
பலியான வெங்கடேசனின் தந்தை ராமசாமி வனத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். வெங்கடேசன் கடந்த 3 மாதத்துக்கு முன்பு தான் வேலைக்கு சேர்ந்துள்ளார். இரவு நேரத்தில் ஊருக்குள் புகும் யானைகளை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபடும் வன ஊழியர்களுக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் கொடுப்பது இல்லை என புகார் எழுந்துள்ளது.
குறிப்பாக வாகன வசதி, டார்ச் லைட் மற்றும் தேவையான அளவுக்கு பட்டாசுகள் கூட இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் தடாகம் பகுதியில் கடந்த 10 நாட்களாகவே இந்த ஒற்றை யானை தினமும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. பொதுமக்கள் இது குறித்து வனத்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். கும்கி யானையை வரவழைத்து, அட்டகாசம் செய்யும் ஒற்றை யானையை அடர்ந்த காட்டுக்குள் விரட்டுவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் தற்போது உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.






