என் மலர்
நீலகிரி
உடுமலை:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று மாலை இடியுடன் கனமழை பெய்தது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கிருஷ்ணாபுரம் வி.பி தெரு பகுதியில் ஆற்றின் கரையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு இடிந்தது.
இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார், வேன் ஆற்றில் விழுந்தது. இதில் அதிஷ்ர்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வாகனங்கள் ஆற்றில் விழுந்த தகவல் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் விழுந்து வாகனங்களை மீட்டனர். தொடர்ந்து விட்டுவிட்டு கனமழை பெய்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதேபோன்று பந்தலூர் பகுதியில் கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகப்பட்சமாக தேவாலாவில் 52 மி.மீட்டரும், பந்தலூரில் 27 மி.மீட்டரும் பதிவானது. தொடர் மழையால் கொளப்பள்ளி, அய்யன்கொல்லி ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கூடலூர்- பந்தலூர் நெடுஞ்சாலை தேவாலா அருகே நீர்மட்டம், தேவகிரி உள்ளிட்ட 3 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் மண்சரிவை ஆகற்றும் பணியில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்துவருவதால் மண் நெகிழ்வு தன்மை ஏற்பட்டு மேலும் பல இடங்களில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று நேற்று திருப்பூரில் பலத்த காற்று மற்றும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. அதிகபட்சமாக காங்கயத்தில் 67 மி.மீட்டரும், மடத்துக்குளத்தில் 40 மி.மீட்டரும், திருப்பூர் தெற்கு பகுதியில் 40 மி.மீட்டரும், அவினாசியில் 24 மி.மீட்டரும், வெள்ளகோவிலில் 30 மி.மீட்டர் என மொத்தம் 462 மி.மீட்டர் மழை பதிவானது. மழையால் ஊத்துக்குளி ரோடு ஒற்றைக்கண்பாலம் ஈஸ்வரன் கோவில் நொய்யல் பாலம். காலேஜ் ரோடு ரெயில்வே பாலம் ஆகிய இடங்களில் மழை நீர் தேங்கியது. இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
பலத்த சூறாவளி காற்று வீசதால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. சாலையில் இருந்து தடுப்பு சுவர்கள் ஆங்காங்கே பறந்து சாய்ந்து கிடந்தன.
இதேபோன்று கோவை மாநககர் மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை முதல் இரவு 8.30 மணி வரை பரவலாக சாரல் மழை பெய்தது.
நேற்று மாலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உடுமலை பஞ்சலிங்கஅருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி காட்டாற்று வெள்ளம் கொட்டி வருகிறது. இதனால் அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. கோவில் உண்டியல்களை பாதுகாக்கும் வகையில் நிர்வாகத்தினர் பிளாஸ்டிக் பைகள் கொண்டு கட்டியிருந்தனர்.
அமராவதி அணையில் இருந்து 2 ம் முறையாக உபரி நீர் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகள் மூலமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்தும் 5 ஆயிரம் கனஅடியை கடந்தது.
இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி நேற்று மாலை 4 மணியளவில் 2-வது முறையாக உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதன் படி அணையில் மொத்தம் உள்ள 9 மதகுகளில் 7 மதகுகள் வழியாக 5200 கனஅடியும் பிரதான கால்வாயில் 450 கனஅடி தண்ணீரும் திறந்த விடப்பட்டது.
நீலகிரி மாவட்டம் மசினகுடியை சேர்ந்தவர் அர்ஜூன். இவரது மகன் அபிமன்யு(வயது 28). எம்.பி.ஏ. பட்டதாரி. கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இதற்கிடையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் வேலையிழந்த அபிமன்யு, மசினகுடியில் விவசாயம் செய்தார். சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் பூண்டு பயிரிட்டார். சுமார் 3 மாதங்கள் நன்கு பராமரித்ததால், பூண்டு விளைச்சல் அமோகமாக இருந்தது. இதில் 9 ஆயிரம் கிலோ பூண்டு அறுவடை செய்யப்பட்டது. இதன் மூலம் பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.
ஊரடங்கால் வேலையிழந்தாலும், பூண்டு சாகுபடியில் சாதனை படைத்த பட்டதாரி வாலிபர் அபிமன்யு கூறியதாவது:-
ஊரடங்கால் வேலையிழந்த பிறகு எனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்தேன். சுமார் 3 மாத உழைப்புக்கு பிறகு அறுவடை செய்த பூண்டுகளை விற்பனை செய்தேன். அதில் பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது. மசினகுடி பகுதியில் விளையும் பூண்டுக்கு மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் கிராக்கி உள்ளது. இதனால் எதிர்பார்த்த வருமானம் கிடைத்தது. தனியார் நிறுவனத்தில் தொடர்ந்து வேலை செய்து இருந்தாலும், இந்த வருமானம் கிடைத்து இருக்காது. ஊரடங்கு முடிவுக்கு வந்தாலும் அந்த வேலைக்கு செல்லாமல் தொடர்ந்து விவசாயத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளேன். மேலும் ஆதிவாசி மக்களுக்கு வேலை வழங்கும் வாய்ப்பும் எனக்கு கிடைத்துள்ளது. இது தவிர மன திருப்தி ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஊட்டி:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வருகிற 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இதுவரை இருந்து வந்த இ-பாஸ் நடைமுறை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
ஆனால் சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகையை தடுக்கும் விதமாக இ-பாஸ் பெறுவது கட்டயாம் ஆக்கப்பட்டுள்ளது. அதன்படி அத்தியாவசிய, அவசர மற்றும் பணி நிமித்தமாக வருபவர்கள் மாவட்ட கலெக்டர் அனுமதியுடன் இ-பாஸ் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனால் இ-பாஸ் பெறுவதில் பல்வேறு குளறுபடிகள் இருப்பதால் மாவட்டத்திற்கு தற்போது சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று குன்னூரில் இருந்து ஊட்டி செல்லும் சாலையோரங்களில் ஏராளமான வெளி மாவட்ட பதிவெண்கள் கொண்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அதில் வந்த பயணிகள் சாலையோரம் இருந்த இயற்கைகளை ரசித்து தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து கொண்டனர்.
ஊட்டி வேலிவியூ பகுதிக்கு சுற்றுலா வந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அங்குள்ள தேயிலை தோட்டங்களுக்கு இடையே சென்று இயற்கை அழகை ரசித்தபடி நின்று குடும்பமாக புகைப்படம் எடுத்து கொண்டனர். இதுதவிர எல்ஹில் பகுதியில் உள்ள முக்கிய நட்சத்திர ஓட்டல்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் அறை எடுத்து தங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வெளியூர் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பலர் வியாபாரத்திற்கு வருவதாக இ-பாஸ் பெற்று சுற்றுலாவுக்கு வந்து ஊட்டியில் தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட மக்கள் கூறுகையில், வெளி மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பாஸ் கட்டாயம் என அறிவித்துள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாக ஊட்டி பகுதிகளில் வெளிமாவட்டத்தை சேர்ந்த பலர் குடும்பம், குடும்பமாக சுற்றுலாவுக்கு வருகின்றனர். அவர்களை உடனடியாக திரும்ப மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. ஆனால் அவர்கள் திரும்பாமல் இங்கேயே தங்கி உள்ளனர்.
மேலும் அவர்கள் முறையான கொரோனா பரிசோதனைகள், விதிமுறைகளையும் கடைபிடிப்பதும் கிடையாது. இதன் காரணமாக மாவட்டத்தில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் 11 புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதித்தது. அதில் 11-வது புதிய அரசு மருத்துவ கல்லூரி கட்ட நீலகிரி மாவட்டம் ஊட்டி எச்.பி.எப். பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது. ரூ.447 கோடியே 32 லட்சம் மதிப்பில் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி கட்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஜூலை மாதம் 10-ந் தேதி அடிக்கல் நாட்டினார். மருத்துவ கல்லூரிக்காக வனத்துறைக்கு சொந்தமான 25 ஏக்கர் நிலம், கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 15 ஏக்கர் நிலம் என மொத்தம் 40 ஏக்கர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தொடர்ந்து 1,800 மரங்களை வெட்டி அகற்ற குறியீடு போடப்பட்டு உள்ளது. மரங்களை படிப்படியாக வெட்டி அகற்ற வனத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
முதற்கட்டமாக 130 மரங்கள் வெட்டப்பட்டு, மரங்களின் வேர் பகுதிகளை அகற்றும் பணி பொக்லைன் எந்திரம் மூலம் மும்முரமாக நடந்து வருகிறது. அந்த இடத்தில் மருத்துவ கல்லூரி கட்டுவதற்காக சமன்படுத்தப்படுகிறது. மேலும் மருத்துவமனை கட்டிடங்கள் கட்டுவதற்காக முதலில் சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது. இதற்காக பொக்லைன் எந்திரங்கள் மூலம் குறிப்பிட்ட இடைவெளியில் குழி தோண்டப்பட்டு கான்கிரீட் போடப்பட்டு வருகிறது.
கட்டிடம் கட்டுவதற்காக கொண்டு வரப்படும் சிமெண்டு, கம்பிகள் போன்றவற்றை பாதுகாப்பாக வைப்பதற்கு தற்காலிகமாக செட் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கேயே பொதுப்பணித்துறை அலுவலர்கள் பணிபுரிய 3 கண்டெய்னர்கள் தற்காலிகமாக வைக்கப்பட்டு இருக்கிறது. உள்ளே கணினி வசதி உள்ளது. தினமும் நடைபெறும் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் அரசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. 15 ஏக்கர் நிலத்தில் மருத்துவக்கல்லூரியில் பணிபுரிபவர்கள் தங்குவதற்கான குடியிருப்புகள் கட்ட சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் லாரிகளில் பொருட்களை கொண்டு செல்ல முடியும். தற்போது மழை பெய்யாததால் பொதுப்பணித்துறை மூலம் சுற்றுச்சுவர் அமைப்பது, மருத்துவ கல்லூரி கட்டும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இதுகுறித்து ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி டீன் டாக்டர் ரவீந்திரன் கூறியதாவது:-
எச்.பி.எப். பகுதியில் அரசு மருத்துவ கல்லூரி அமைப்பதற்காக பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சுற்றுச்சுவர் அமைத்து சாலை போடப்பட்டு, கட்டிடங்கள் கட்டப்படுகிறது. வனத்துறை மூலம் மரங்களை வெட்டி அகற்றும் பணி நடக்கிறது. 15 ஏக்கர் நிலத்தில் மருத்துவக்கல்லூரியில் பணிபுரிபவர்கள் தங்குவதற்காக ஐந்து பிளாக்கில் குடியிருப்புகள் கட்டப்படுகிறது. தரைத்தளம், முதல் தளத்துடன் கூடிய மருத்துவக்கல்லூரி 650 படுக்கை வசதிகளுடன் தயாராகிறது. பொது மருத்துவம், அனிமியா, ரேடியாலஜி, காசநோய், அறுவை சிகிச்சை, தோல் சம்பந்தப்பட்ட நோய்கள், மைக்ரோபயாலஜி பயோகெமிக்கல் உள்பட 21 பிரிவுகள் நவீன வசதிகளுடன் ஏற்படுத்தப்படுகிறது. வருகிற 2021-22-ம் ஆண்டில் 150 மருத்துவ இடங்கள் நிரப்பப்பட உள்ளதால், மருத்துவ கல்லூரி விரைந்து கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் ஊழல் மற்றும் லஞ்சம் குறித்த புகார்களை தெரிவிக்க தொலைபேசி மற்றும் செல்போன் எண்கள் ஊழல் மற்றும் கண்காணிப்பு பிரிவு மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நீலகிரி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டுவை 9498190735 என்ற செல்போன் எண், 0423-2443962 என்ற தொலைபேசி எண், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டரை 9498176712 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு ஊழல் மற்றும் லஞ்சம் பற்றிய புகார்களை தெரிவிக்கலாம். இந்த தகவலை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷினி தெரிவித்து உள்ளார்.
ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், தன்னார்வலர்கள் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசின் உத்தரவுப்படி நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக சில நாட்களாக ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகின்றது. பொதுமக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்கள் தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள, அவர்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
அவ்வாறு பரிசோதனைக்கு வரும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முறையான சிகிச்சை அளித்து அவர்களை குணமடைய செய்ய முடியும். நீலகிரியில் 82 சதவீதம் பேர் கொரோனாவில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர்ந்து காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளிலும் தெர்மல் ஸ்கிரீனிங், பல்ஸ் ஆக்சிடேஷன் போன்ற பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். சுகாதாரத்துறை அலுவலர்கள் காய்ச்சல் பரிசோதனை பணியில் ஈடுபடும் போது சம்பந்தப்பட்ட அலுவலர்கள், ஊர் தலைவர்கள் உடன் இருந்து அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
கொரோனாவை கண்டு பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது குறித்து அரசு பல்வேறு வழிமுறைகளை தெரிவித்து உள்ளது. அதன் அடிப்படையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பூரண குணமடைந்து வீடு திரும்பும் நபர்களின் எண்ணிக்கை நீலகிரி மாவட்டத்தில் அதிகரித்து இருக்கிறது. ஊராட்சி தலைவர்கள் தங்களது கிராமங்களில் உள்ள நபர்கள், தன்னார்வலர்களை பயன்படுத்தி பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதற்கான அறிக்கையை தயாரித்து அதற்கேற்றவாறு தடுப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
நகராட்சி மற்றும் கிராம பகுதிகளில் வார்டு வாரியாக காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டு அதிகமான நபர்களுக்கு தொற்று அறிகுறிகள் இருந்தால் அந்த பகுதிகளில் தொடர்ந்து 7 நாட்கள் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்பட வேண்டும். திருமண நிகழ்ச்சியில் 50 பேர், இறப்பு நிகழ்வில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இதனை ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊர் தலைவர்கள் முறையாக கண்காணிக்க வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு வெளியாட்கள் வந்து செல்வதை தவிர்க்க வேண்டும். அரசு விதிகளை மீறி நிகழ்ச்சிகள் நடைபெற்றால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா, சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி, மகளிர் திட்ட இயக்குனர் பாபு மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
நீலகிரியில் ஊட்டி நகராட்சியில் 36 இடங்கள், ஊட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 29 இடங்கள் உள்பட குன்னூர், கோத்தகிரி, கூடலூர் என மொத்தம் 150 இடங்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 135 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தன. தற்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ள இடங்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அப்பகுதிகளில் யாருக்கேனும் கொரோனா அறிகுறிகள் தென்படுகிறதா? என்பதை கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ள காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அரசு தெரிவித்துள்ள வழிமுறையின்படி சிகிச்சை அளிக்கப்படுவதால் குணமடைந்து செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஊட்டி அருகே எம்.பாலாடாவில் உள்ள இந்தியன் வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் ஊட்டி கமர்சியல் சாலையில் இயங்கி வரும் இந்தியன் வங்கிக்கு பணி நிமித்தமாக வந்து சென்று உள்ளார். அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் சளி மாதிரி எடுத்து பரிசோதித்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
தொடர்ந்து அவர் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் தொடர்பில் இருந்த 2 வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்கள் 20 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தடுப்பு நடவடிக்கையாக 2 இந்தியன் வங்கிகளும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு மூடப்பட்டது. இதனால் வங்கிக்கு வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். வங்கிகள் முன்பு கொரோ னா பாதிப்பு காரணமாக வங்கி மூடப்பட்டு உள்ளது என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது.






