என் மலர்
செய்திகள்

குன்னூர்- திருப்பூரில் கனமழை: பஞ்சலிங்க அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு
உடுமலை:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் நேற்று மாலை இடியுடன் கனமழை பெய்தது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கிருஷ்ணாபுரம் வி.பி தெரு பகுதியில் ஆற்றின் கரையோரம் மண் அரிப்பு ஏற்பட்டு இடிந்தது.
இதில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார், வேன் ஆற்றில் விழுந்தது. இதில் அதிஷ்ர்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வாகனங்கள் ஆற்றில் விழுந்த தகவல் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து ஆற்றில் விழுந்து வாகனங்களை மீட்டனர். தொடர்ந்து விட்டுவிட்டு கனமழை பெய்வதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இதேபோன்று பந்தலூர் பகுதியில் கனமழை பெய்தது. மாவட்டத்தில் அதிகப்பட்சமாக தேவாலாவில் 52 மி.மீட்டரும், பந்தலூரில் 27 மி.மீட்டரும் பதிவானது. தொடர் மழையால் கொளப்பள்ளி, அய்யன்கொல்லி ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
கூடலூர்- பந்தலூர் நெடுஞ்சாலை தேவாலா அருகே நீர்மட்டம், தேவகிரி உள்ளிட்ட 3 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையினர் மண்சரிவை ஆகற்றும் பணியில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்துவருவதால் மண் நெகிழ்வு தன்மை ஏற்பட்டு மேலும் பல இடங்களில் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று நேற்று திருப்பூரில் பலத்த காற்று மற்றும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. அதிகபட்சமாக காங்கயத்தில் 67 மி.மீட்டரும், மடத்துக்குளத்தில் 40 மி.மீட்டரும், திருப்பூர் தெற்கு பகுதியில் 40 மி.மீட்டரும், அவினாசியில் 24 மி.மீட்டரும், வெள்ளகோவிலில் 30 மி.மீட்டர் என மொத்தம் 462 மி.மீட்டர் மழை பதிவானது. மழையால் ஊத்துக்குளி ரோடு ஒற்றைக்கண்பாலம் ஈஸ்வரன் கோவில் நொய்யல் பாலம். காலேஜ் ரோடு ரெயில்வே பாலம் ஆகிய இடங்களில் மழை நீர் தேங்கியது. இதனால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
பலத்த சூறாவளி காற்று வீசதால் பல இடங்களில் மின் தடை ஏற்பட்டது. சாலையில் இருந்து தடுப்பு சுவர்கள் ஆங்காங்கே பறந்து சாய்ந்து கிடந்தன.
இதேபோன்று கோவை மாநககர் மற்றும் மேட்டுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை முதல் இரவு 8.30 மணி வரை பரவலாக சாரல் மழை பெய்தது.
நேற்று மாலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உடுமலை பஞ்சலிங்கஅருவியில் உள்ள தடுப்புகளை தாண்டி காட்டாற்று வெள்ளம் கொட்டி வருகிறது. இதனால் அமணலிங்கேஸ்வரர் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது. கோவில் உண்டியல்களை பாதுகாக்கும் வகையில் நிர்வாகத்தினர் பிளாஸ்டிக் பைகள் கொண்டு கட்டியிருந்தனர்.
அமராவதி அணையில் இருந்து 2 ம் முறையாக உபரி நீர் அமராவதி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற பாம்பாறு, தேனாறு, சின்னாறு உள்ளிட்ட ஆறுகள் மூலமாக அணைக்கு நீர்வரத்து ஏற்பட்டது. நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அணைக்கு வந்து கொண்டிருந்த நீர்வரத்தும் 5 ஆயிரம் கனஅடியை கடந்தது.
இதையடுத்து அணையின் பாதுகாப்பு கருதி நேற்று மாலை 4 மணியளவில் 2-வது முறையாக உபரிநீர் ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதன் படி அணையில் மொத்தம் உள்ள 9 மதகுகளில் 7 மதகுகள் வழியாக 5200 கனஅடியும் பிரதான கால்வாயில் 450 கனஅடி தண்ணீரும் திறந்த விடப்பட்டது.