என் மலர்tooltip icon

    நீலகிரி

    சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால், மலர் நாற்றுகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்து உள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து இருக்கின்றனர்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மலர் மற்றும் பழ நாற்றுகளை விவசாயிகள் உற்பத்தி செய்து வருகின்றனர். இவர்கள் தங்களது நிலங்களில் பயிரிடுவதை தவிர அந்த நாற்றுகளை சுற்றுலா பயணிகளுக்கும் விற்பனை செய்து வந்தனர்.

    இந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இதன் காரணமாக குன்னூர் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் மலர் மற்றும் பழ நாற்றுகள் விற்பனையாகாமல் தேக்கம் அடைந்து உள்ளன.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    இதுகுறித்து குன்னூர் பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

    வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து விதைகளை கொண்டு வந்து மலர் மற்றும் பழ நாற்றுகள் மட்டுமின்றி மூலிகை, கற்றாழை, அலங்கார நாற்றுகளை உற்பத்தி செய்து வருகிறோம். கடந்த ஆண்டு கொரோனா பரவலால் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து, நாற்றுகள் விற்பனை பாதிக்கப்பட்டது.

    இந்த ஆண்டு இயல்பு நிலைக்கு திரும்பி வடும் என்று நினைத்து இருந்தோம். ஆனால் மீண்டும் கொரோனா பரவலால் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக ரூ.15 லட்சம் மதிப்பிலான நாற்றுகள் தேக்கம் அடைந்து உள்ளன. அவை அழுகும் நிலையில் இருக்கின்றன. இதனால் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. கொரோனா பரவல் குறைந்து மீண்டும் இயல்பு நிலை திரும்பினால் மட்டுமே விற்பனை தொடங்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து கன்டோன்மெண்ட் வாரிய அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் அந்த அலுவலகம் மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி மூடப்பட்டது

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வெலிங்கடன் கன்டோன்மெண்ட் வாரியம் உள்ளது. இங்கு மொத்தம் 7 வார்டுகள் உள்ளன. இதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள்.

    இப்பகுதி மக்கள் குடியிருப்புக்கான வரி, பிறப்பு, இறப்புச் சான்று பெறுவதற்காக அங்கு அலுவலகமும் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அலுவலகத்தில் பணிபுரியும் 3 ஊழியர்கள் சிலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததது.

    இதையடுத்து அங்கு பணிபுரியும் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்களின் சளி மாதிரி சேகரிக்கப்பட்டது. இதில் 3 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து கன்டோன்மெண்ட் வாரிய அலுவலகத்தில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் அந்த அலுவலகம் மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி மூடப்பட்டது. மேலும் அவர்களுடன் பணிபுரிந்த, தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர்களை தனிமையில் இருக்கவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    நீலகிரி தேயிலை தூளின் தேவை அதிகரித்து உள்ளதாக சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் தெரிவித்து உள்ளார்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை தொழிற்சாலைகள், தேயிலை தொழிற்சாலைகள் தயாரிக்கும் தேயிலை தூள் குன்னூர் தேயிலை ஏல மையத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நீலகிரி தேயிலை தூளின் தேவை அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து சர்வதேச மேலாண்மையியல் ஆலோசகர் பி.எஸ்.சுந்தர் கூறியதாவது:-

    கடந்த 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 16- வது ஏலத்தில் சராசரி விலை கிலோ ரூ.114.53 பைசாவாக இருந்தது. இந்த விலை இந்த ஆண்டின் குறைவான சராசரி விலை ஆகும். ஆனால் இந்த ஆண்டின் அதிக விற்பனையாக 93 சதவிகித தேயிலை தூள் விற்பனையானது.

    இந்த அதிக அளவு விற்பனைக்கு கொரோனா காலத்தில் தேயிலை தூள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்ற பரவலான நம்பிக்கையே காரணம் ஆகும். கடந்த ஆண்டு அமலில் இருந்த ஊரடங்கின் போது நீலகிரி தேயிலைக்கு தேவை அதிகம் இருந்தது.

    வடமாநிலங்களில் குளிர் காலமாக இருந்ததால் டிசம்பர் முதல் மார்ச் மாதம் வரை தேயிலை தூள் உற்பத்தி இல்லாமல் இருந்தது. ஏப்ரல் மாதத்தில் உற்பத்தி தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தபோது வறட்சி ஏற்பட்டு தேயிலை தூள் உற்பத்தி குறைந்தது.

    மேலும் வர்த்தகர்களின் மத்தியில் தேயிலை தூளின் இருப்பு குறைந்து விடுமோ என்ற எண்ணம் நிலவியது. இதன் காரணமாக உள்நாட்டு வர்த்தகர்களின் கவனம் நீலகிரி தேயிலை தூளின் பட்சம் திரும்பி இருப்பதால் அதன் தேவை அதிகரித்து உள்ளது.

    நீலகிரி தேயிலை உற்பத்தி செய்யும் பணிக்கு ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளதால் அதன் உற்பத்தியும் அதிகரித்து இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பிறமாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வர இ-பதிவு நடைமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளதாகவும், ஆவணங்களை காண்பித்து வர அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் கலெக்டர் தெரிவித்தார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் அனுமதி பெற்று நடைபாதை வியாபாரிகள் 500 பேர் உள்ளனர். அவர்கள் சுற்றுலா தலங்கள் அருகே கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தனர். சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், நடைபாதை வியாபாரிகளுக்கு காய்கறிகள், மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி தாவரவியல் பூங்கா முன்பு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நடைபாதை வியாபாரிகளுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான காய்கறிகள், மளிகை பொருட்களை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடைபாதை வியாபாரிகளுக்கு காய்கறிகளை விவசாயிகள் தாமாக முன்வந்து நன்கொடையாக வழங்கினர். முதல்கட்டமாக 100 பேருக்கு வழங்கப்பட்டது. மற்றவர்களும் நிதி உதவி செய்தால் வரவேற்கப்படுகிறது.

    சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால், பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு வருவதற்கான இ-பதிவு ரத்து செய்யப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக வெளிமாவட்டங்களில் இருந்து வருகை தருபவர்கள் நீலகிரியில் நிலம், வீடு உள்ளவர்கள் மற்றும் எதற்காக வருகின்றனர் போன்ற ஆவணங்களை சோதனை சாவடிகளில் காண்பித்து வர அனுமதிக்கப்படுகிறது. வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி வர இ-பதிவு நடைமுறை தொடர்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கொரோனா உறுதியான நபர்களை தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து கேட்டறிந்து, ஆக்சிஜன் தேவை என்றால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீலகிரியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். தற்போது 430 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 54 பேருக்கு அறிகுறிகள் உள்ளன. 376 பேருக்கு அறிகுறிகள் இல்லை. அவர்களுக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அறிகுறிகள் தென்படலாம். கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.

    இதன் மூலம் கொரோனா உறுதியான நபர்களை தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து கேட்டறிந்து, ஆக்சிஜன் தேவை என்றால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த பணி இதுவரை 47 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.

    உடல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் காலம் தாழ்த்தாமல் உடனே தாமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முன்வர வேண்டும். ஒரு நாளில் முடிவு கிடைத்துவிடும். தற்போது 9,000 டோஸ் கொரோனா தடுப்பூசி இருப்பு உள்ளது.

    பொதுமக்களுடன் அதிகம் தொடர்புடைய வியாபாரிகள், வணிகர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தவறினால் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, கடைகள் மூடப்படும்.

    ஊட்டி, குன்னூரில் ஆக்சிஜன் வசதியுடன் 134 படுக்கைகள் உள்ளது. இங்கு 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஐ.சி.யூ. வார்டில் 3 பேர் உள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஊட்டி இளைஞர் விடுதி, 2 தனியார் பள்ளிகள், குன்னூர், கூடலூரில் தலா ஒன்று என 5 கோவிட் கேர் சென்டர்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,100 படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கூடலூர் தாலுகா மரப்பாலம் அருகே சீனக்கொல்லி பகுதியில் வனப்பகுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் திடீரென காட்டுத்தீ பரவியது.
    கூடலூர்:

    கூடலூர் தாலுகா மரப்பாலம் அருகே சீனக்கொல்லி பகுதியில் வனப்பகுதி உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் திடீரென காட்டுத்தீ பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்த தேவாலா வனத்துறையினர் விரைந்து சென்று காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அடர்ந்த புதர்கள் நிறைந்த பகுதியில் காட்டுத்தீ பரவியதால் உடனடியாக வனத்துறையினரால் தீயை அணைக்க முடியவில்லை. இதனால் பல கட்டமாக நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    இதில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவிலான புல்வெளிகள் தீயில் கருகியது. இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, காட்டுத்தீயால் வன உயிரினங்கள் இறந்து விடுகிறது. மேலும் அரிய வகை தாவரங்கள், மரங்கள் வளராமல் காய்ந்து விடுகிறது. எனவே காட்டுத்தீ பரவாமல் தடுக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றனர்.
    தொற்று பாதித்தவர்களின் வீடுகள் மற்றும் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
    கூடலூர்:

    கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட தருமகிரி கிராமத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உள்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் தனிமைப்படுத்தி, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் அங்கு சுகாதார பணிகளை சுகாதாரத்துறையினர் மற்றும் ஓவேலி பேரூராட்சி செயல் அலுவலர் நாகராஜ் தலைமையிலான ஊழியர்கள் மேற்கொண்டனர். அப்போது தொற்று பாதித்தவர்களின் வீடுகள் மற்றும் பொது இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
    கூடலூரில் தேயிலை தோட்டத்தில் கஞ்சா பதுக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கூடலூர்:

    கூடலூர் பகுதியில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அருளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கூடலூர் ஆணை செத்தக்கொல்லி பகுதியில் உள்ள ஒரு தேயிலை தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்கு 4 கிலோ கஞ்சா பதுக்கி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை போலீசார் பறிமுதல் செய்து, தீவிர விசாரணை நடத்தினர். இதில் அதே பகுதியை சேர்ந்த ஜான்(வயது 40), கூடலூர் 1-ம் மைல் பகுதியை சேர்ந்த அலி பாவா (44), ஆணை செத்தக்கொல்லியை சேர்ந்த அப்பாஸ் (36) ஆகியோரை கைது செய்தனர். மேலும் ஆணை செத்தக்கொல்லி பகுதியை சேர்ந்த ஜாபர் என்பவரை தேடி வருகின்றனர்.
    குன்னூர் ஏல மையத்தில் 13 லட்சத்து 78 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. இது 93 சதவீத விற்பனை ஆகும்.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. இங்கு உற்பத்தியாகும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் முலம் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு ஆன்லைன் மூலம் ஏலம் நடைபெறுகிறது. வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் தேயிலைத்தூள் ஏலம் நடக்கிறது.

    அதன்படி கடந்த 22, 23-ந் தேதிகளில்(விற்பனை எண்-16) தேயிலைத்தூள் ஏலம் நடைபெற்றது. இதற்கு 15 லட்சத்து 5 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. இதில் 11 லட்சத்து 22 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் இலை ரகமாகவும், 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் டஸ்ட் ரகமாகவும் இருந்தது.

    ஏலத்தில் 13 லட்சத்து 78 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. இது 93 சதவீத விற்பனை ஆகும். இதன் ரொக்க மதிப்பு ரூ.15 கோடியே 78 லட்சம் ஆகும். விற்பனையான அனைத்து தேயிலைத்தூள் ரகங்களுக்கும் கடந்த வார விலையே நீடித்தது.

    சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.301, ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.278 என இருந்தது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.94 முதல் ரூ.99 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.155 முதல் ரூ.173 வரையும் ஏலம் போனது.

    டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.102 முதல் ரூ.107 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.150 முதல் ரூ.201 வரை ஏலம் போனது. அடுத்த ஏலம்(விற்பனை எண்-17) வருகிற 29, 30-ந் தேதிகளில் நடைபெறுகிறது. அந்த ஏலத்துக்கு 23 லட்சத்து 32 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வருகிறது.
    தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    ஊட்டி:

    இந்தியாவில் கொரோனா 2-வது அலை மிக தீவிரமடைந்து வருகிறது. பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்து மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதனையடுத்து தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் திருமணம், இதனை சார்ந்த நிகழ்ச்சிகளில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். இறப்பு சார்ந்த நிகழ்ச்சியில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். இதை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் நீலகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் திருமணங்கள் நடந்தன. முழு ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பல இடங்களில் மிக மிக எளிமையாக நடந்தன.

    ஆனால் ஊட்டி அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த திருமணத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட ஏராளமானோர் வந்திருந்தனர். அதிலும் முகக்கவசம், சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்கவில்லை. உடல் வெப்ப நிலை பரிசோதனை தகவல் பதிவு செய்யாதது போன்ற குறைபாடுகள் இருந்ததாக புகார் எழுந்தது.

    இது குறித்து தகவல் கிடைத்ததும் ஊட்டி தாசில்தார் குப்புராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் சம்பந்தப்பட்ட திருமண மண்டபத்தை ஆய்வு செய்து அதற்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து அனைத்து திருமண மண்டபங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

    பந்தலூரில் 16 வயது சிறுமியை கர்ப்பிணியாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
    பந்தலூர்:

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியை சேர்ந்த சுதாகரன்(வயது 24) என்பவருக்கும், 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.

    இதற்கிடையில் சமீபத்தில் திடீரென சிறுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவளை பெற்றோர் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்ததில், சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. 

    இதுகுறித்து அவளிடம் பெற்றோர் கேட்டபோது, தன்னை சுதாகரன் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி கதறி அழுதாள். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், தேவாலா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சுதாகரனை கைது செய்தனர்.
    பஸ்களில் இருக்கைகள், பயணிகள் அடிக்கடி தொடும் கைப்பிடிகள், கண்ணாடிகள் போன்றவை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது.
    ஊட்டி:

    கொரோனா பரவாமல் இருக்க அரசு பஸ்களில் பயணிகள் நின்று பயணம் செய்யக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது. எனினும் கிராமப்புறங்கள், வெளியிடங்களுக்கு இயக்கப்பட்டு வரும் அரசு பஸ்களில் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு தொற்று பரவும் அபாயம் உள்ளது. இதையடுத்து அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. நீலகிரியில் கண்டக்டர்கள், டிரைவர்கள், போக்குவரத்து ஊழியர்கள் 1000 பேர் உள்ளனர். அவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர். இதில் இதுவரை 850 பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. பஸ்சில் டிரைவர்கள், கண்டக்டர்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. பஸ்களில் இருக்கைகள், பயணிகள் அடிக்கடி தொடும் கைப்பிடிகள், கண்ணாடிகள் போன்றவை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்படுகிறது.
    ×