என் மலர்
நீலகிரி
நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் புதிய உச்சமாக 587 பேருக்கு தொற்று பதிவாகி இருந்தது. நேற்று இந்த எண்ணிக்கையில் 4 குறைந்து 583 ஆக பதிவாகி உள்ளது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 19,661 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 15,613 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். தற்போது 3,954 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியை விட கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தினந்தோறும் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து அந்த பகுதிகளில் சுகாதாரத்துறையினர் தீவிர கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மருத்துவ தேவைகளுக்காக அண்டை மாநிலமான கேரளாவுக்கு செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. மேலும் அங்குள்ளவர்கள் பல காரணங்களை கூறி கொண்டு இங்கு வருவதாக தெரிகிறது. இதன் காரணமாக அங்கு தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கேரளாவை ஒட்டிய எல்லைகளான நாடுகாணி, சேரம்பாடி, நம்பியார் குன்னு, பாட்டவயல் மற்றும் கர்நாடக எல்லை பகுதியான கக்கநல்லா பகுதிகளிலும் சாலைகளில் போலீசார் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வழியாக வெளி மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் இ-பதிவு பெற்றிருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கின்றனர். மேலும் அவர்கள் என்ன காரணத்திற்காக மாவட்டத்திற்கு வருகிறார்கள். அந்த காரணம் உண்மை தானா? என்பதை தீவிர விசாரிக்கின்றனர். அதன் பின்னரே மாவட்டத்திற்குள் செல்ல அனுமதி கொடுக்கின்றனர். இ-பதிவு மற்றும் முறையான காரணங்கள் இல்லையென்றால் திருப்பி அனுப்புகின்றனர்.
எல்லைப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை கூடலூர் ஆர்.டி.ஓ.ராஜ்குமார், பந்தலூர் டி.எஸ்.பி அமீர் அகமது மற்றும் வருவாய்த்துறையினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன. இதன்படி தோட்டக்கலை துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா ஆகிய பூங்காக்கள் மூடப்பட்டு உள்ளன. சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டதால், வெறிச்சோடிய நிலையில் காட்சி அளிக்கிறது.
நீலகிரியில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறும். இந்த சமயத்தில் சமவெளி பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரிப்பதாலும், விடுமுறையை கழிக்கவும் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவார்கள். இதனால் சுற்றுலா தலங்கள் களை கட்டும். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பால் கோடை சீசன் நடைபெறவில்லை. நடப்பாண்டிலும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால், கோடை சீசனையொட்டி நடத்தப்படும் அனைத்து கண்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டது.
ஊட்டி தாவரவியல் பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையை கொண்டு நீலகிரிக்கு ஆண்டுதோறும் எத்தனை பேர் வருகின்றனர் என்று கணக்கிடப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் 10 லட்சம் பேர் வந்தனர். 5 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியை ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேர் கண்டு ரசிப்பார்கள். பூங்காவில் பெரியவர்களுக்கு ரூ.50 சிறியவர்களுக்கு ரூ.30 நுழைவு கட்டணமாகவும், கேமராவுக்கு ரூ.50, வீடியோ கேமராவுக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
முழு ஊரடங்கு உத்தரவால் தோட்டக்கலை பூங்காக்கள் மூடப்பட்டதால், சுற்றுலா பயணிகள் மூலம் கிடைத்த வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தாவரவியல் பூங்கா உள்பட 5 தோட்டக்கலை பூங்காக்களிலும் சுற்றுலா பயணிகள் வராததால் ரூ.5 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்க மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில், கிராமப்புற மற்றும் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களிடையே தொற்று பரவல் அதிகரித்தது. கூடலூர் பகுதியில் இதுவரை 51 பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் கூடலூர் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக தொழிலாளர்களுக்கு காலவரையின்றி விடுமுறை அளிக்கப்பட்டது.
மேலும் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழக மட்டுமின்றி தனியார் தேயிலை தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் வேலைக்கு வருவதாகவும், இதனால் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாகவும் அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.
இதன்பேரில், கூடலூர் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று தேயிலை தொழிற்சாலைகளில் ஆய்வு நடத்தினர். அப்போது கூடலூர் இரண்டாம் பகுதியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் வசிக்கும் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து தொழிற்சாலையை 14 நாட்கள் மூட நிர்வாகத்தினருக்கு ஆணையாளர் பாஸ்கரன் உத்தரவிட்டார்.
இதேபோல் நந்தட்டி, சில்வர் கிளவுட், மார்த்தோமா நகர் உள்பட பல இடங்களில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலைகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்கு வேலை பார்த்த தொழிலாளர்களின் பெயர் விவரங்களை சேகரித்தனர். இதில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் தொழிலாளர்கள் வேலைக்கு வருவது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்து 14 நாட்கள் தொழிற்சாலைகளை மூடும் படி அதன் நிர்வாகத்தினருக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதேபோல பந்தலூர் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரங்களில் தனியாருக்கு சொந்தமான தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் ஊடுபயிராக பலா மரங்கள் நடவு செய்யப்பட்டு இருக்கின்றன. இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் பலாப்பழ சீசன் தொடங்குவது வழக்கம். அந்த சமயத்தில் சமவெளி பகுதிகளில் இருந்து காட்டுயானைகள் இடம்பெயர்ந்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. அப்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை காட்டுயானைகள் கூட்டமாக கடந்து அந்த தோட்டங்களுக்கும், அருகில் உள்ள காப்புக்காடுகளுக்கும் செல்லும். இதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்ல வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தி இருக்கின்றனர்.
இதற்கிடையில் கொரோனா 2-வது அலையை தடுக்க தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அவசர தேவைக்கு மட்டும் பொதுமக்கள் வெளியே வர அனுமதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக வாகன போக்குவரத்து குறைந்து உள்ள நிலையில், காட்டுயானைகள் சுதந்திரமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் உலா வருகின்றன.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காட்டுயானை கூட்டத்தில் இருந்து பிரிந்த குட்டியானை ஒன்று, குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை கடக்க முயன்றது.
அப்போது அந்த வழியாக வாகனத்தில் சென்ற நபர், தனது செல்போனில் குட்டியானையை வீடியோ எடுத்தார். இதை கண்டு ஆவேசம் அடைந்த குட்டியானை திடீரென அவரை துரத்த தொடங்கியது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அந்த நபர் தனது வாகனத்தை வேகமாக ஓட்டி சென்றார். பின்னர் அந்த குட்டியானை சாலையை கடந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வாகன போக்குவரத்து இல்லாததால், சாலைகளில் வனவிலங்குகள் சுதந்திரமாக உலா வருகின்றன. அவற்றை வீடியோ எடுப்பது, புகைப்படம் எடுப்பது என தொந்தரவு கொடுக்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
கொரோனா பரவலை தடுக்க தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று 7-வது நாளாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. மாவட்ட எல்லையை ஒட்டி உள்ள 16 சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அவசர மருத்துவ தேவை மற்றும் சரக்கு வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகிறது. இ-பதிவு இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி விடப்படுகிறது. முழு ஊரடங்கால் ஊட்டியில் முக்கிய சாலைகள் வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி நிலையில் காட்சி அளிக்கிறது. முழு ஊரடங்கை மீறி தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றுபவர்கள், சாலையில் நடமாடும் நபர்களை போலீசார் விசாரித்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் 5 போலீஸ் உட்கோட்டங்களில் முககவசம் அணியாத 60 பேருக்கு தலா ரூ.200 என மொத்தம் ரூ.13,800 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கில் அவசியமில்லாமல் வாகனங்களில் சுற்றிய 139 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வாகன உரிமையாளர்களுக்கு ரூ.69 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டன. 49 இருசக்கர வாகனங்கள், 22 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 71 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
குறிப்பாக முழு ஊரடங்கு அமலுக்கு வந்த கடந்த 24-ந் தேதி ஒரே நாளில் 111 வாகனங்கள் அதிரடியாக பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. கடந்த ஒரு வாரத்தில் நீலகிரியில் முழு ஊரடங்கை கடைபிடிக்காமல், கொரோனா விதி மீறி வெளியே சுற்றியவர்களின் 320 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த தகவலை போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் ஊட்டி அரசு தலைமை மருத்துவமனை, கூடலூர் அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஊட்டியில் கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி கர்ப்பிணிகள், வெளி நோயாளிகள் மற்றும் இதர நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்கள் சுழற்சி முறையில் பணிபுரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நீலகிரியில் தொகுப்பூதிய அடிப்படையில் 3 மாதத்துக்கு கூடுதலாக டாக்டர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதுகுறித்து கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, அனைத்து அரசு மருத்துவமனைகள், மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் தொகுப்பூதிய அடிப்படையில் 3 மாத காலத்திற்கு வருகிற ஆகஸ்டு மாதம் 31-ந் தேதி வரை பணிபுரிய சுகாதார பணிகள் துணை இயக்குனர் மூலம் பொது மருத்துவர் (எம்.பி.பி.எஸ்) தகுதியுடைய மருத்துவ அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் செய்யப்படவுள்ளனர். மேலும், தேவைக்கேற்ப பணி நீட்டிப்பு செய்யப்படும்.
அதன்படி, எம்.பி.பி.எஸ் முடித்து தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்து தகுதி உள்ளவர்கள் மாதம் ரூ.60 ஆயிரம் என்ற தொகுப்பூதிய அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். கல்வி சான்றிதழ், கல்வித்தகுதி சான்றிதழ், அடையாள அட்டை, மருத்துவக் கவுன்சில் பதிவு சான்றிதழ், பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஆகிய ஆவணங்களை சமர்ப்பித்து விண்ணப்பிக்க வேண்டும். எனவே, விருப்பமுள்ளவர்கள் ஊட்டியில் சி.டி.ஸ்கேன் மையம் அருகில் உள்ள சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தை மேற்கண்ட ஆவணங்களுடன் அணுகலாம். மேலும் விவரங்களுக்கு 8903216454 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மஞ்சூர்:
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது அப்பர்பவானி அணை. மின்வாரியத்துக்கு சொந்தமான அப்பர்பவானி அணையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
வெளி மாவட்டத்தை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் சுமார் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் அணை சீரமைப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்கள்.
அப்போது அணையின் ஷட்டர் அமைந்துள்ள பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த முருகன் (45) என்பவர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்துள்ளாராம். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதைதொடர்ந்து சக தொழிலாளர்கள் முருகனை ஒரு வாகனத்தில் ஏற்றி மஞ்சூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர் பரிந்துரை செய்துள்ளார். இதை தொடர்ந்து தனியார் ஆம்புலன்ஸ் மூலம் முருகன் அழைத்து செல்லப்பட்டார். ஆனால் பாதி வழியிலேயே முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த முருகன் மேட்டூர் கருமலைகூடல் பகுதியை சேர்ந்தவர்.
இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த குந்தா தாசில்தார் மகேஸ்வரி மருத்துவமனைக்கு சென்று சக தொழிலாளர்களிடம் விசாரித்தார். மேலும் இந்த சம்பவம் குறித்து மஞ்சூர் எமரால்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகிறார்கள்.
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து கேரளாவுக்கு ஒரு மினி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது கூடலூர்- கேரளா எல்லையான கீழ்நாடுகாணி அருகே 2-வது வளைவு சாலையில் வந்த போது திடீரென மினிலாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் மினி லாரியை ஓட்டிய பாலக்காடு மாவட்டம் கொழிஞ்சாம்பாறை பகுதியை சேர்ந்த அபிலாஷ் என்பவர் சுய நினைவை இழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்தார். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால் கூடலூரில் இருந்து கேரளா செல்லும் சாலையில் சரக்கு வாகனங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அப்போது நீலகிரி மாவட்ட கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யமூர்த்தி மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் மரைக்காயர் ஆகியோர் ரோந்துப் பணி மேற்கொண்டனர். விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்து கிடந்த டிரைவர் அபிலாஷை கண்டனர்.
உடனடியாக ஜீப்பை நிறுத்தி டிரைவர் அபிலாஷை பரிசோதித்தனர். அப்போது அவரின் சுவாசம் மிகவும் குறைவாக இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் துரிதமாக செயல்பட்டு டிரைவரின் மார்பில் சி.பி.ஆர். என்னும் முறையால் கைகளால் அழுத்தம் கொடுத்தனர். தொடர்ந்து முயற்சி செய்ததன் விளைவாக சிறிது நேரத்தில் டிரைவர் அபிலாஷ் சுய நினைவு திரும்பி கண்ணை திறந்தார்.
பின்னர் கேரளா மாநிலத்திலுள்ள பூக்கோட்டுப்பாடம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு கேரள போலீசார் ஆம்புலன்சுடன் விரைந்து வந்து டிரைவர் அபிலாஷை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். உயிர் காப்பு முறையை விரைவாக கையாண்டு ஓட்டுநரின் உயிர்காத்த வீடியோ தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஓட்டுநரின் உயிரை காப்பாற்றிய இன்ஸ்பெக்டர் சத்யமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் மரைக்காயர் ஆகியோருக்கு பொதுமக்கள் மற்றும் போலீசார் வட்டாரத்திலும் பாராட்டி வருகின்றனர்.






