என் மலர்tooltip icon

    நீலகிரி

    பொள்ளாச்சி வனசகரத்தில் உள்ள டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் உள்ள 28 யானைகளுக்கும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    ஊட்டி:

    முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு இன்று காலை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. வனத்துறையினர் யானைகளிடம் இருந்து சளி மாதிரிகளை சேகரித்தனர். அதன்பின்னர் மாதிரிகள் உத்தரபிரதேசத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பரிசோதனை நடத்தப்பட்டு ஒரிரு நாட்களில் முடிவு தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதேபோல் பொள்ளாச்சி வனசகரத்தில் உள்ள டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் உள்ள 28 யானைகளுக்கும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 2 முகாம்களையும் சேர்த்து மொத்தம் 56 யானைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் கவுசல் கூறுகையில், யானைகள் முகாமில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக யானைகள் அனைத்திற்கும் தனித்தனியாகவே உணவு கொடுத்து வருகிறோம்.

    இன்று இங்குள்ள வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த முகாமில் மொத்தம் 54 பாகன்கள் உள்ளனர். இவர்களில் 12 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மற்றவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுதவிர மலைவாழ் மக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்றார்.

    ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் கூறுகையில், டாப்சிலிப் யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளின் உடல்நிலையை தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் மூலம் கண்காணித்து வருகிறோம். தொற்று காலத்தில் சிறப்பு உணவுகளையும் வழங்கி வருகிறோம்.

    இங்கு வேட்டை தடுப்பு காவலர், வனகாவலர், வன காப்பாளர், மாவூத், காவடி, அவர்களது குடும்பத்தினர் என 196 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாகன்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய முகாமாக டாப்சிலிப் முகாம் உள்ளது என்றார். 

    தற்போது ஊரடங்கால் சாலைகளில் வாகன போக்குவரத்து இன்றி காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் சுதந்திரமாக உலா வருகின்றன.
    குன்னூர்:

    குன்னூர் அருகே உள்ள அருவங்காடு பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு அருகில் அடர்ந்த வனப்பகுதி இருக்கிறது. இங்கு காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

    இந்த நிலையில் தற்போது ஊரடங்கால் சாலைகளில் வாகன போக்குவரத்து இன்றி காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் சுதந்திரமாக உலா வருகின்றன. அதன்படி நேற்று காலை 6 மணியளவில் ஜெகதளா சாலையில் அருவங்காடு பஸ் நிறுத்தம் அருகில் கரடி உலா வந்தது. சிறிது நேரம் அங்கேயே சுற்றிய கரடி அதன்பிறகு அருகில் உள்ள வனப்பகுதிகள் சென்றது. இதையொட்டி அங்கு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
    கொரோனா உறுதியான நபர்கள் பயமில்லாமல் சிகிச்சை பெறவும், தாமதிக்காமல் உடனடியாக ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை மேற்கொள்ளவும் இந்த வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக தினமும் 500 பேருக்கு மேல் உறுதியாகி வருகிறது. இதனால் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 4 ஆயிரத்து 333 ஆக உயர்ந்து உள்ளது. மொத்த தொற்று பாதிப்பு 22 ஆயிரத்து நெருங்கி இருக்கிறது. கொரோனா 2-வது அலையில் அறிகுறிகள் தென்பட்டாலும் பொதுமக்கள் தாமதமாக சிகிச்சைக்கு வருவதால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது. ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 155 படுக்கைகள், ஐ.சி.யூ. வார்டில் 25 படுக்கைகள், 35 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 215 படுக்கைகள் இருக்கிறது. நேற்றைய நிலவரப்படி 9 ஆக்சிஜன் படுக்கைகள் காலியாக இருந்தது. மீதமுள்ள அனைத்து படுக்கைகளும் நிரம்பியது

    இந்த நிலையில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களில் ஆக்சிஜன் உதவி தேவைப்படுபவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுகின்றனர். அவர்களை தாமதிக்காமல் உடனடியாக சிகிச்சை அளிக்க புதிதாக ஜீரோ டிலே வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உள்ள ஜீரோ டிலே வார்டில் 16 படுக்கை வசதிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு ஆக்சிஜன் உதவியுடன் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    வீடுகளில் இருந்து வந்தவுடன் சிகிச்சை அளிப்பதால், நோயாளிகள் பயப்படாமல் இருக்க டாக்டர்கள், செவிலியர்கள் ஆலோசனைகள் வழங்கி ஆசுவாசப் படுத்துகின்றனர்.

    இந்த வார்டில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கப்பட்டு உள்ளது. பணிபுரிபவர்கள் முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து பணிபுரிகின்றனர். வெளிநபர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை. இதுகுறித்து மருத்துவ கல்லூரி டீன் மனோகரி கூறும்போது, ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சமீபத்தில் ஜீரோ டிலே வார்டு தொடங்கப்பட்டது. கொரோனா உறுதியான நபர்கள் பயமில்லாமல் சிகிச்சை பெறவும், தாமதிக்காமல் உடனடியாக ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை மேற்கொள்ளவும் இந்த வார்டு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இங்கு சிகிச்சை அளித்த பின்னர் பிற வார்டுகளுக்கு மாற்றப்படுகின்றனர் என்றார்.
    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி கடந்த சில தினங்களாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது. சமீபத்தில் பெய்த தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131 அடியை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில் கடந்த 1-ந்தேதி முதல் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல் போக பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் விவசாய பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. விவசாயிகள் தங்களது வயல்களில் நாற்றங்கால் அமைத்து நெல் விதைகளை விதைத்து வருகின்றனர். முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டதால் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.

    இதற்கிடையே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி கடந்த சில தினங்களாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 1-ந்தேதி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 130.90 அடியாக காணப்பட்டது. நீர்வரத்து வினாடிக்கு 503 கன அடியாக இருந்தது.

    இந்தநிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 534 கன அடியாக அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 131 அடியாக இருந்தது. அணையில் இருந்து நீர் வெளியேற்றம் வினாடிக்கு 900 கனஅடியாக உள்ளது.
    வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தற்போது முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. இதில் நீலா என்ற பெண் சிங்கம் உயரிழந்தது. இதையடுத்து தொற்று உறுதியான மற்ற சிங்கங்கள் தனித்தனியாக அடைக்கப்பட்டு தீவிரமாக கண்காணி க்கப்பட்டு வருகின்றன.

    நீலகிரி மாவட்டம் முதுமலையில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. தற்போது வண்டலூரில் கொரோனா தொற்றுக்கு சிங்கம் உயிரிழந்ததை அடுத்து முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    வளர்ப்பு யானைகள் முகாமில் நேற்று புலிகள் காப்பக இயக்குனர் கவுசல், முகாமில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்குள்ள விலங்குகளின் உடல் நிலையை கால்நடை டாக்ட ர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் புலிகள் காப்பக இயக்குனர் கவுசல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தற்போது முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், காலை மற்றும் மாலை நேரங்களில் உணவு வழங்கும் நேரம் 2 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் யானைகள் ஒன்றாக நிறுத்துவது தவிர்க்கப்பட்டு, ஒவ்வொரு யானைக்கும் தனித்தனியாக உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் யானை பாகன்கள், உதவியாளர்கள் மற்றும் முகாமில் பணிபுரியும் வனத்துறை ஊழியர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் வெளியாட்கள் முகாமிற்கு வர அனுமதி கிடையாது.

    மேலும் முதுமலையில் வளர்ப்பு யானைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே ஊட்டியில் நிருபர்களை சந்தித்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து, முதுமலை, டாப்சிலிப் முகாம்களில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும், யானைகளை கண்காணிக்கவும் வனத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சரியான ஆவணங்களை சரிபார்த்து இ-பாஸ் வழங்கப்படும். அனுமதி பெறாமல் மாவட்டத்திற்கு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாத மத்தியில் கொரோனா தொற்று பரவ தொடங்கிய போது வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் இ-பாஸ் பெற்று வர கட்டாயமாக்கப்பட்டிருந்தது. தொற்று குறைந்ததும், இ-பாஸ் ரத்து செய்யப்பட்டு, இ-பதிவு முறை அமல்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கொரேனா தொற்றின் 2-வது அலையால் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொற்று பாதிப்பு 500 என்ற எண்ணிக்கையை கடந்து வருகிறது. தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. ஆனாலும் தொற்று பாதிப்பு குறையவில்லை. இந்த நிலையில் ஊரடங்கு சில தளர்வுகளுடன் வருகிற 14-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் தொற்று பரவலுக்கு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள் விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு செல்வதே காரணம் என்று கூறப்பட்டது.

    மேலும் தற்போது இ-பதிவு முறை அமலில் உள்ளதால் பலர் சுலபமாக தங்கள் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்து இ-பதிவு பெற்று நீலகிரிக்கு வர தொடங்கினர். இதனை சிலர் தவறாக பயன்படுத்துவதால் மாவட்டத்தில் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. எனவே மாவட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.

    இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு அதற்கு அனுமதி அளித்தது. இதையடுத்து வெளியூர்களில் இருந்து நீலகிரிக்கு செல்பவர்களுக்கு மீண்டும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

    நீலகிரி மாவட்டத்திற்கு அவசர காரணங்களுக்காக வருகிறவர்கள் கட்டாயம் மாவட்ட கலெக்டரிடம் இ-பாஸ் பெற வேண்டும். அவசர மருத்துவ சிகிச்சை, இறப்பு போன்ற காரணங்களாக இருந்தால் மட்டும் வெளிமாநிலங்கள், பிற மாவட்டங்களில் இருந்து சரியான ஆவணங்களை சரிபார்த்து இ-பாஸ் வழங்கப்படும். அனுமதி பெறாமல் மாவட்டத்திற்கு வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கூடலூரில் பஸ் நிலைய விரிவாக்க பணிக்காக நூற்றாண்டு பழமை வாய்ந்த மரங்களை வெட்டி அகற்ற வருவாய்த்துறை அனுமதி வழங்கி உள்ளது.
    கூடலூர்:

    தமிழகம், கேரளா, கர்நாடகா என 3 மாநிலங்கள் இணையும் இடத்தில் கூடலூர் நகரம் அமைந்துள்ளது. இதனால் கொரோனா பரவலுக்கு முன்பு வரை அண்டை மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து சென்றனர். இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநில பஸ்களும் அதிகளவு இயக்கப்பட்டது. ஆனால் பஸ்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடலூர் பஸ் நிலையத்தில் போதிய இடவசதி இல்லை. இதனால் சாலையோரம் பஸ்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் வெளியூர்களில் இருந்து வரும் பஸ்களை சாலையில் நிறுத்தி திருப்புவதால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

    இதைத்தொடர்ந்து மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சமும், சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.50 லட்சமும் ஒதுக்கப்பட்டு முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் போதிய நிதி ஒதுக்காததால் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கூடலூர் பஸ் நிலைய விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. பஸ் நிலையத்தின் உள்ளே வணிக வளாகங்கள் மற்றும் பல்வேறு நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பஸ் நிலையத்தின் பின்புறம் போக்குவரத்து பணிமனை செயல்படும் வகையில் கட்டமைப்பு மாற்றப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பஸ் நிலையத்தின் முன்புறம் சுமார் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்கள் நிற்கிறது. ஆனால் பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு அந்த மரங்கள் இடையூறாக உள்ளது. இதனால் பழமை வாய்ந்த அந்த மரங்களை வெட்டுவதற்கு வருவாய்த்துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மரங்களை வெட்டி அகற்றுவதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஊரடங்கு முடிவடைந்த பின்னர் பஸ் நிலையம் அருகே நிற்கும் மரங்களை வெட்டும் பணி தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    முழு ஊரடங்கு உத்தரவால் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு ரூ.6 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    கோடை வாசஸ்தலமான நீலகிரி மாவட்டம் சர்வதேச அளவில் புகழ் பெற்றது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் களை கட்டி காணப்படும். இதற்கு காரணம் வெளிமாநிலங்கள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டியில் குவிவதே ஆகும். இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகள், ஓட்டல்களில் ஓரிரு நாட்கள் தங்கி அனைத்து சுற்றுலா தலங்களையும் கண்டு ரசித்து விட்டு செல்கின்றனர்.

    இதற்கிடையில் கொரோனா பாதிப்பால் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தங்கும் விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்கவில்லை. வணிகரீதியாக வருகிறவர்கள் தங்கி கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டாலும், தங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. இதனால் ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகள் காலியாக கிடக்கிறது.

    ஊட்டி நகரில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக 1,500-க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், நட்சத்திர விடுதிகள் உள்ளது. வழக்கமாக கோடை சீசனில் தங்கும் விடுதிகளில் உள்ள அனைத்து அறைகளும் முன்பதிவு செய்யப்பட்டு விடும். ஒரு நாள் வாடகை ரூ.2,000 முதல் ரூ.6,000 வரை வசூலிக்கப்படுகிறது. நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஓட்டல்களுக்கு தனி வாடகை உள்ளது.

    முழு ஊரடங்கால் அனைத்து தங்கும் விடுதிகளும் சுற்றுலா பயணிகள் இன்றி முடங்கி கிடக்கிறது. இதனால் விடுதி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு பணிபுரிந்து வந்த வரவேற்பாளர்கள், பராமரிப்பாளர்கள், தொழிலாளர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேலை இழந்து வீடுகளில் முடங்கி இருக்கின்றனர். இதுகுறித்து விடுதி உரிமையாளர்கள் கூறியதாவது:-

    முழு ஊரடங்கு உத்தரவால் தங்கும் விடுதி உரிமையாளர்களுக்கு ரூ.6 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது. வருமானம் இல்லாததால் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்காத கொடுக்க முடியாத நிலை இருக்கிறது. இதனால் பணிபுரிந்தவர்கள் பணிக்கு வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு சிலர் மட்டும் தங்கும் விடுதிகளை பராமரித்து வருகின்றனர். கடந்து ஆண்டில் இருந்து நடப்பாண்டில் பழைய நிலைமைக்கு திரும்பி விடுவோம் என்று எதிர்பார்த்தோம். மீண்டும் கொரோனா பாதிப்பால் வருமானம் இன்றி வாழ்வாதாரம் பாதித்து உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு இ-பதிவு மூலம் வருகிறவர்கள் என்ன காரணத்துக்காக வருகிறார்கள் என்று உண்மை தன்மை அறிந்து அனுமதிக்கப்படுகிறது.
    ஊட்டி:

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி நீலகிரி மாவட்ட வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா ஊட்டி ஸ்டேட் வங்கி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி சோலை மரக்கன்றுகளை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட வன அதிகாரி குருசாமி தபேலா, உதவி வன பாதுகாவலர் சரவணன் மற்றும் வனத்துறை, வங்கி ஊழியர்கள் கலந்துகொண்டனர். அதன்பின்னர் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி மாவட்டம் தோறும் 1,000 மரக்கன்றுகள் நடவு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

    அதன்படி நீலகிரி மாவட்டம் கூடலூர் வன கோட்டத்திற்கு உட்பட்ட வனச்சரகங்களில் 1,000 மரக்கன்றுகள் இன்று (அதாவது) நேற்று நடவு செய்யப்பட்டது. சுற்றிலும் வேலி உள்ள பகுதிகளில் சோலை மரக்கன்றுகள் நடவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வளர்ந்த பின் சுற்றுச்சூழலுக்கு பயனுள்ளதாக இருக்கும். நீலகிரியில் சுற்றுச்சூழலை பாதுகாக்க தொடர்ந்து மரக்கன்றுகள் நடவு செய்யப்படும். பிற மாவட்டங்களில் இருந்து வருகிறவர்கள் மருத்துவ தேவைக்கு மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மாவட்ட எல்லைகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    பிற மாவட்டங்களில் இருந்து நீலகிரிக்கு இ-பதிவு மூலம் வருகிறவர்கள் என்ன காரணத்துக்காக வருகிறார்கள் என்று உண்மை தன்மை அறிந்து அனுமதிக்கப்படுகிறது. நீலகிரியில் 11 கொரோனா சிகிச்சை மையங்கள், 4 அரசு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் கூடுதலாக சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நீலகிரி மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட பகுதிகளை நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, நோய் தடுப்புப் பணிகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    தமிழக அரசு தெரிவித்துள்ள வயதிற்குட்பட்டவர்களில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தாங்களாகவே முன்வரவேண்டும்.

    நீலகிரி மாவட்டத்திற்கு 7,000 கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளது. அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். மாவட்டத்திற்கு இந்த வாரத்திலிருந்து தொடர்ந்து தடுப்பூசிகள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

    மேலும் நமது மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட பகுதிகளை நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, நோய் தடுப்புப் பணிகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது நமது மாவட்டத்தில் 11 கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 4 அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும்பட்சத்தில் கூடுதலாக சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும். தற்போது வரை ஆக்சிஜன் பற்றாக்குறையோ, மருத்துவமனைகளில் படுக்கைகளின் பற்றாக்குறையோ ஏற்படவில்லை. நமது மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இ-பதிவு மூலம் நமது மாவட்டத்திற்குள் வரும் நபர்களின் காரணங்களின் உண்மை தன்மையறிந்து அனுமதிக்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, 1000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மரக்கன்று நடும் பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா இ.வ.ப., உதவி வனப்பாதுகாவலர் சரவணன் உள்ளிட்ட வனத்துறை மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நீலகிரியில் நேற்று ஒரே நாளில் 579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 20,241 ஆக அதிகரித்துள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே தொற்று பாதிப்பு எண்ணிக்கை 500-யை கடந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 20,241 ஆக அதிகரித்துள்ளது.

    மேலும் 460 பேர் குணமடைந்து வீடு திரும்பியதை அடுத்து எண்ணிக்கை 16,073 ஆக உயர்ந்துள்ளது. தற்போது ஊட்டி அரசு ஆஸ்பத்திரி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள ஆஸ்பத்திரிகளில் 4,068 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்ததை அடுத்து எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி இதுவரை ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 883 பேருக்கு செலுத்தப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கிடையே மத்திய அரசு தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டிய தடுப்பூசி இன்னும் வராததால் நாளை (வியாழக்கிழமை) முதல் 3 நாட்கள் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று ஊட்டி தனியார் பள்ளியில் கொரோனா தடுப்பூசி செலுத்த பொதுமக்கள் காலை முதலே வந்தனர். 200 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதன் பின்னர் வந்தவர்கள் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் பள்ளி வளாகம், மைதானம் வெறிச்சோடி காணப்பட்டது.

    இதுகுறித்து சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறும்போது, நீலகிரிக்கு தடுப்பூசி கிடைப்பதற்கு ஏற்ப செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது 1,200 கொரோனா தடுப்பூசி இருப்பு உள்ளது. இதுவரை ஒரு லட்சத்து 85 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என்றார்.
    ×