என் மலர்
செய்திகள்

நீலகிரி மாவட்டத்திற்கு 7,000 கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளது- கலெக்டர் தகவல்
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-
தமிழக அரசு தெரிவித்துள்ள வயதிற்குட்பட்டவர்களில் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தாங்களாகவே முன்வரவேண்டும்.
நீலகிரி மாவட்டத்திற்கு 7,000 கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளது. அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் ஆர்வமாக வந்து தடுப்பூசி செலுத்தி வருகிறார்கள். மாவட்டத்திற்கு இந்த வாரத்திலிருந்து தொடர்ந்து தடுப்பூசிகள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் நமது மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்ட பகுதிகளை நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, நோய் தடுப்புப் பணிகள் மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது நமது மாவட்டத்தில் 11 கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 4 அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை அளிக்க தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேவைப்படும்பட்சத்தில் கூடுதலாக சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும். தற்போது வரை ஆக்சிஜன் பற்றாக்குறையோ, மருத்துவமனைகளில் படுக்கைகளின் பற்றாக்குறையோ ஏற்படவில்லை. நமது மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இ-பதிவு மூலம் நமது மாவட்டத்திற்குள் வரும் நபர்களின் காரணங்களின் உண்மை தன்மையறிந்து அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நீலகிரி மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, 1000 மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மரக்கன்று நடும் பணிகளை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா இ.வ.ப., உதவி வனப்பாதுகாவலர் சரவணன் உள்ளிட்ட வனத்துறை மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.






