search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    சிங்கங்களுக்கு கொரோனா எதிரொலி: முதுமலை, டாப்சிலிப்பில் வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

    வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தற்போது முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி:

    சென்னை வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. இதில் நீலா என்ற பெண் சிங்கம் உயரிழந்தது. இதையடுத்து தொற்று உறுதியான மற்ற சிங்கங்கள் தனித்தனியாக அடைக்கப்பட்டு தீவிரமாக கண்காணி க்கப்பட்டு வருகின்றன.

    நீலகிரி மாவட்டம் முதுமலையில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. தற்போது வண்டலூரில் கொரோனா தொற்றுக்கு சிங்கம் உயிரிழந்ததை அடுத்து முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

    வளர்ப்பு யானைகள் முகாமில் நேற்று புலிகள் காப்பக இயக்குனர் கவுசல், முகாமில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் அங்குள்ள விலங்குகளின் உடல் நிலையை கால்நடை டாக்ட ர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் புலிகள் காப்பக இயக்குனர் கவுசல் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தற்போது முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. முதுமலையில் உள்ள வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும், காலை மற்றும் மாலை நேரங்களில் உணவு வழங்கும் நேரம் 2 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் யானைகள் ஒன்றாக நிறுத்துவது தவிர்க்கப்பட்டு, ஒவ்வொரு யானைக்கும் தனித்தனியாக உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மேலும் யானை பாகன்கள், உதவியாளர்கள் மற்றும் முகாமில் பணிபுரியும் வனத்துறை ஊழியர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் வெளியாட்கள் முகாமிற்கு வர அனுமதி கிடையாது.

    மேலும் முதுமலையில் வளர்ப்பு யானைகள் மற்றும் வனவிலங்குகளுக்கு இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கால்நடை மருத்துவருக்கு தகவல் அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையே ஊட்டியில் நிருபர்களை சந்தித்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், வண்டலூர் பூங்காவில் சிங்கங்களுக்கு தொற்று உறுதியானதை அடுத்து, முதுமலை, டாப்சிலிப் முகாம்களில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யவும், யானைகளை கண்காணிக்கவும் வனத்துறையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    Next Story
    ×