என் மலர்tooltip icon

    நீலகிரி

    மற்றொரு யானையுடன் நடந்த சண்டையில் அந்த யானைக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் யானையை பிடித்து முதுமலைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது.
    கூடலூர்:

    கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான தொரப்பள்ளி, அள்ளூர்வயல், தோட்டமூலா, ஏழுமுறம், மேல்கூடலூர், செம்பாலா, நந்தட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் கடந்த 2 ஆண்டுகளாக காயத்துடன் ஆண் காட்டு யானை ஒன்று சுற்றி வருகிறது. வனப்பகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து ஊருக்குள் முகாமிட்டு வருகிறது. மேலும் விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகிறது.

    இதற்கிடையில் அந்த யானையின் காயத்தை குணப்படுத்துவதோடு வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முயற்சி செய்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் தற்போது அந்த காயம் பெரிதாகி சீழ் வடியும் நிலைக்கு மாறிவிட்டது. மேலும் வலியை தாங்க முடியாமல், அந்த யானை குட்டைகளில் உள்ள தண்ணீரில் பல மணி நேரம் நிற்கிறது. இது காண்போரை கண் கலங்க செய்கிறது. அந்த யானைக்கு தர்ப்பூசணி உள்ளிட்ட பழங்களில் மருந்துகளை வைத்து வனத்துறையினர் வழங்கி வருகின்றனர். மேலும் யானையின் அவதி தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து வனச்சரகர் ராமகிருஷ்ணன் கூறும்போது, மற்றொரு யானையுடன் நடந்த சண்டையில் அந்த யானைக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் யானையை பிடித்து முதுமலைக்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டு உள்ளது. அங்கு வைத்து தொடர் சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.
    சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ரேஷன் அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    ஊட்டி:

    ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி நேற்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தையொட்டி உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம். அவர்களை பள்ளிக்கு அனுப்புவது போன்ற கடமையை செய்வேன் என்று அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    தொடர்ந்து சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் ரேஷன் அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு கொரோனா நிவாரண தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா 5 பேருக்கு தலா ரூ.2,000 நிவாரண நிதி உதவி வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, சமூக நல அலுவலர் தேவகுமாரி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
    பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத் தொகையை கொரோனா நிவாரண பணிகளுக்காக வழங்கினர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக தன்னார்வலர்கள் உள்பட பலர் தங்களால் முடிந்த நிதி உதவிகளை செய்து வருகின்றனர்.

    அதன்படி கூடலூர் கல்வி மாவட்டத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் ஒன்றிணைந்து தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பில் ரூ.2 லட்சத்து 22 ஆயிரத்து 500-க்கான காசோலையை மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதிக்கு நேற்று ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிடம் வழங்கினர்.

    பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத் தொகையை கொரோனா நிவாரண பணிகளுக்காக வழங்கினர். அப்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசரூதின் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.
    பாபு, ராதாகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்து, கூடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். சம்பவம் நடந்த 48 நேரத்தில் போலீசார் அவர்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட சூண்டி பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடையை நேற்று முன்தினம் மர்ம ஆசாமிகள் உடைத்து, அதில் இருந்த 62 மதுபாட்டில்களை திருடி சென்றனர். இதுகுறித்து நியூஹோப் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் சந்தேகத்தின்பேரில் அதே பகுதியை சேர்ந்த பாபு (வயது 33), ராதாகிருஷ்ணன் (28) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் மதுபாட்டில்களை திருடியது தெரியவந்தது. மேலும் அவற்றை வனப்பகுதியில் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 20 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மீதமுள்ள மதுபாட்டில்களை அவர்கள் விற்பனை செய்து உள்ளனர்.

    இதையடுத்து பாபு, ராதாகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்து, கூடலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். சம்பவம் நடந்த 48 நேரத்தில் போலீசார் அவர்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

    இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

    கைதான பாபு, வெல்டிங் கடை ஊழியர் ஆவார். அவர் அந்த டாஸ்மாக் கடை அருகே உள்ள மற்றொரு கட்டிடத்தில் வேலை செய்தார்.

    அப்போது கடையில் உள்ள ஒரு அறையில் மதுபாட்டில்கள் இருப்பதை கதவின் துளை வழியாக பார்த்து உள்ளார். அதன்பிறகு தனது கூட்டாளியும், ஆட்டோ டிரைவருமான ராதாகிருஷ்ணனுடன் திட்டமிட்டு கடையின் கதவை உடைத்து மதுபாட்டில்களை திருடி உள்ளார்.

    இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
    ஊட்டி நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி, சுகாதார அலுவலர் (பொறுப்பு) ஸ்ரீதர் ஆகியோர் ஓட்டலில் திடீரென ஆய்வு செய்தனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்துக்கு வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வர இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு இ-பதிவு அமலில் இருந்தது. இதை பயன்படுத்தி சுலபமாக பலர் நீலகிரிக்கு வந்தனர்.

    இதற்கிடையே திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு நபர், தோல் மருத்துவ சிகிச்சைக்காக இ-பதிவு பெற்று கடந்த மாதம் குன்னூருக்கு வந்தார். பின்னர் சிகிச்சை முடிந்து சொந்த ஊருக்கு செல்லாமல், ஊட்டியில் உள்ள பிரபல சொகுசு ஓட்டலில் தங்கி இருந்தார். இதுகுறித்து கலெக்டர் அலுவலகத்துக்கு புகார் வந்தது.

    இதைத்தொடர்ந்து ஊட்டி நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி, சுகாதார அலுவலர் (பொறுப்பு) ஸ்ரீதர் ஆகியோர் சம்பந்தப்பட்ட ஓட்டலில் நேற்று திடீரென ஆய்வு செய்தனர். அப்போது அந்த நபர் மருத்துவ சிகிச்சை முடிந்தும் சொந்த ஊருக்கு செல்லாமல் தங்கி இருப்பதும், அவருடன் அவரது குடும்பத்தினர் 3 பேர் தங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து கேட்டபோது, அதில் ஒரு நபர் அரசு மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வந்ததாகவும், மற்றொரு நபர் தேயிலை எஸ்டேட்டில் உள்ள தீயணைப்பு கருவிகளை பராமரிக்க வந்ததாகவும் தெரிவித்தனர். தற்போது மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அவசர காரணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு முன்னதாக இ-பதிவை தவறாக பயன்படுத்தி மொத்தம் 10 சுற்றுலா பயணிகள் அந்த ஓட்டலில் தங்கி வெளியே சுற்றி வந்தது தெரியவந்தது. உடனே சுகாதார குழுவினர் வரவழைக்கப்பட்டு, அந்த 10 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதுகுறித்து நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி கூறியதாவது:-

    சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டும், இதை மீறி ஓட்டலில் தங்கிய 10 பேரின் கொரோனா பரிசோதனை முடிவு வரும் வரை கண்காணிக்க படுவார்கள். பாதிப்பு இல்லை என்றால் அபராதம் விதிப்பதுடன், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். தொற்று உறுதியானால் சிகிச்சை அளிக்கப்படும். ஓட்டலில் பணிபுரிந்து வரும் 20 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் சுற்றுலா பயணிகளை தங்க வைத்த ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    நீலகிரி மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ரூ.3 ஆயிரத்து 850 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கூறினார்.
    ஊட்டி:

    ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், 2021-22-ம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

    பின்னர் கடன் திட்ட அறிக்கை குறித்து கலெக்டர் கூறியதாவது:- நீலகிரியில் நடப்பு ஆண்டுக்கு ரூ.3 ஆயிரத்து 850 கோடியே 45 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஆண்டுதோறும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுகிறது. இதேபோல் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பல்வேறு கடன்கள், வணிக ரீதியான கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. கடன் திட்ட அறிக்கையில் துறை சார்ந்த விவரங்கள் அடங்கி உள்ளது.

    கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் ரூ.375 கோடியே 45 லட்சம் கடன் அதிகமாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது 10.80 சதவீதம் கடன் தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது. விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடங்க ரூ.2,722 கோடியே 50 லட்சம், குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மேம்பாட்டிற்கு ரூ.485 கோடியே 10 லட்சம், பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.642 கோடியே 85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் தகுதி உடையவர்களுக்கு கடன் உதவிகளை வழங்க வங்கிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் பாபு, தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்யராஜா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    தளர்வுகளற்ற ஊரடங்கு என்பதால் மக்கள் மற்றும் வாகன நடமாட்டம் குறைந்து கூடலூர்-ஊட்டி சாலை, கூடலூர்-மைசூர் சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி கிடக்கிறது.
    கூடலூர்:

    நீலகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

    தினமும் 450-க்கும் மேற்பட்டோர் தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். மாவட்ட நிர்வாகம் எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக தற்போது சற்று தொற்று குறைந்து வருகிறது. இருப்பினும் கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தொற்று பாதிப்பு அதிகரித்தபடியே உள்ளது.

    இந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளித்துள்ளது. அதன்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மளிகை, காய்கறி, இறைச்சி கடைகள் திறக்கப்பட்டது. தற்போது கூடலூர், பந்தலூர் பகுதிகளில் கொரோனா தொற்று அதிகமாக உள்ளதை அடுத்து அங்குள்ள கடைகள் அனைத்தையும் வருகிற 14-ந் தேதி வரை அடைத்து தளர்வுகளற்ற முழு ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் வியாபாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

    கூடலூர், பந்தலூர் பகுதிகளில் மளிகை, இறைச்சி, காய்கறி கடைகள் என 550-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. அரசு அளித்த தளர்வின்படி இந்த கடைகள் கடந்த 7-ந் தேதி திறக்கப்பட்டன.

    இந்த நிலையில் கூடலூர், பந்தலூர் பகுதிகளில் தொற்று பரவல் அதிகமாக இருந்ததை அடுத்து, கலெக்டர் வேண்டுகோளை ஏற்று, வியாபாரிகள் நேற்று தங்கள் கடைகளை அடைத்தனர்.

    இன்று 2-வது நாளாக கூடலூர், நாடுகாணி, பந்தலூர், தேவாலா, பாட்டவயல், சேரம்பாடி, எருமாடு, மசினகுடி உள்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள மளிகை, காய்கறி கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது.

    கடைகள் மூடப்பட்டுள்ளதால் கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள முக்கிய கடைவீதிகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது.

    மேலும் தளர்வுகளற்ற ஊரடங்கு என்பதால் மக்கள் மற்றும் வாகன நடமாட்டம் குறைந்து கூடலூர்-ஊட்டி சாலை, கூடலூர்-மைசூர் சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி கிடக்கிறது.

    அத்தியாவசிய தேவைகளான மருந்து கடைகள், பாலகங்கள், பெட்ரோல் பங்க்குகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களுக்கு தேவையான காய்கறி, மளிகை பொருட்கள் நடமாடும் வாகனங்கள் மூலம் அவர்களது இருப்பிடங்களுக்கு சென்று விற்பனை செய்யப்படுகிறது.



    கோத்தகிரி அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோத்தகிரி:

    கோத்தகிரி அருகே உள்ள சுள்ளிக்கூடு கிராமத்தில் பொதுமக்கள் பலருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விதிமுறைகளை மீறி அங்கு சிலர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக நேற்று கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் அருண் குமார் தலைமையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். இதில், பிரகாஷ் (வயது33), ராஜேஷ் (34), தேவராஜ் (37) ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
    இந்தியாவிலே தடுப்பூசி செலுத்தி கொண்ட முதன்மை மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தினை மாற்ற அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளபடி, தேயிலை தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தேவையான செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 80 சதவீதம் தொழிலாளர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது.

    மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நீலகிரி மாவட்டம் சிறிய மாவட்டமாகவும், குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டமாக உள்ளதால், அரசு தெரிவித்துள்ள வயதிற்குட்பட்டவர்கள் அனைவருக்கும் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்த நடவடிக் கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    அதனடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் சுமார் 5.8 லட்சம் நபர்கள் உள்ளனர்.

    இதில் இதுவரை சுமார் 2 லட்சம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 3.8 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி பெறப்பட்டு, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தி, இந்தியாவிலே தடுப்பூசி செலுத்தி கொண்ட முதன்மை மாவட்டமாக நீலகிரி மாவட்டத்தினை மாற்ற அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. வனத் துறையினர் யானைகளிடம் இருந்து சளி மாதிரிகளை சேகரித்தனர்.

    ஊட்டி:

    சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதில் ஒரு பெண் சிங்கம் உயிரிழந்தது. இதையடுத்து வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தமிழகத்தில் உள்ள வன உயிரியல் பூங்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவிட்டார்.

    முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகளும், டாப்சிலிப் கோழிகமுத்தி முகாமில் 28 வளர்ப்பு யானைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாம் மற்றும் டாப்சிலிப் யானைகள் முகாமில் நேரடியாக ஆய்வு மேற்கொண்ட வனத்துறை அமைச்சர் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்ததுடன், யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தினார்.

    அவரது உத்தரவின் பேரில் கொரோனா பரிசோதனை செய்ய வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.

    அதன்படி இன்று காலை முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. வனத் துறையினர் யானைகளிடம் இருந்து சளி மாதிரிகளை சேகரித்தனர். அதன்பின்னர் மாதிரிகள் உத்தரபிரதேசத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பரிசோதனை நடத்தப்பட்டு ஒரிரு நாட்களில் முடிவு தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதேபோல் பொள்ளாச்சி வனசகரத்தில் உள்ள டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் உள்ள 28 யானைகளுக்கும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 2 முகாம்களையும் சேர்த்து மொத்தம் 56 யானைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் கவுசல் கூறுகையில், யானைகள் முகாமில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக யானைகள் அனைத்திற்கும் தனித் தனியாகவே உணவு கொடுத்து வருகிறோம்.

    இன்று இங்குள்ள வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த முகாமில் மொத்தம் 54 பாகன்கள் உள்ளனர். இவர்களில் 12 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மற்றவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுதவிர மலைவாழ் மக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்றார்.

    ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் கூறுகையில், டாப்சிலிப் யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளின் உடல்நிலையை தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் மூலம் கண்காணித்து வருகிறோம். தொற்று காலத்தில் சிறப்பு உணவுகளையும் வழங்கி வருகிறோம்.

    இங்கு வேட்டை தடுப்பு காவலர், வனகாவலர், வன காப்பாளர், மாவூத், காவடி, அவர்களது குடும்பத்தினர் என 196 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாகன்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய முகாமாக டாப்சிலிப் முகாம் உள்ளது என்றார்.

    பொதுமக்கள் பெரும்பாலும் வீடுகளில் முடங்கி உள்ள நேரத்தில் வனவிலங்குகள் ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாகிவிட்டது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும்பாலும் வீடுகளில் முடங்கி உள்ளனர். இந்த நேரத்தில் வனவிலங்குகள் ஊருக்குள் உலா வருவது வாடிக்கையாகிவிட்டது.

    இந்த நிலையில் குன்னூர்-கோத்தகிரி சாலையோரத்தில் எல்க்ஹில் என்ற இடத்தில் தேயிலை தோட்டத்துக்கு நடுவே உள்ள பாறையில் கருஞ்சிறுத்தை படுத்து ஓய்வெடுத்து கொண்டு இருந்தது. இதை அந்த வழியாக சென்ற சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.

    அந்த தேயிலை தோட்டத்துக்கு ஊரடங்கு காரணமாக தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. எனினும் அங்கு கருஞ்சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
    விற்பனையான தேயிலைத்தூளின் ரொக்க மதிப்பு ரூ.20 கோடியே 62 லட்சம். ஏலத்தில் அனைத்து ரக தேயிலைத்தூள்களிலும் கிலோவுக்கு ரூ.5 விலை வீழ்ச்சி ஏற்பட்டது.
    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதனை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு கூட்டுறவு மற்றும் தனியார் தொழிற்சாலைகள் உள்ளன. விவசாயிகள் தங்களது தோட்டங்களில் பறிக்கும் பச்சை தேயிலையை தொழிற்சாலைகளுக்கு வினியோகம் செய்து வருமானம் ஈட்டுகின்றனர்.

    தொழிற்சாலைகளில் பச்சை தேயிலையை கொண்டு தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதில் உள்நாட்டு, வெளிநாட்டு வர்த்தகர்கள் கலந்துகொண்டு தேயிலைத்தூளை வாங்குகின்றனர். தேயிலை வர்த்தகர் அமைப்பு சார்பில் வாரந்தோறும் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் ஆன்லைனில் தேயிலைத்தூள் ஏலம் நடைபெறுகிறது. தேயிலை வர்த்தகர் அமைப்பில் உறுப்பினர்களாக இருந்தால் மட்டுமே ஏலத்தில் கலந்து கொள்ள முடியும்.

    இந்த நிலையில் கடந்த 27, 28-ந் தேதிகளில் நடைபெற இருந்த ஏலம்(விற்பனை எண்-21) தேயிலை கிடங்குகள் மூடப்பட்டதால், தள்ளி வைக்கப்பட்டு இருந்தது. அந்த ஏலம் கடந்த 3, 4-ந் தேதிகளில் நடைபெற்றது. இதற்கு 23 லட்சத்து 90 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனைக்கு வந்தது. அதில் 18 லட்சத்து 26 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் இலை ரகமாகவும், 5 லட்சத்து 64 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் டஸ்ட் ரகமாகவும் இருந்தது. ஏலத்தில் 17 லட்சத்து 62 ஆயிரம் கிலோ தேயிலைத்தூள் விற்பனையானது. இது 74 சதவீத விற்பனை ஆகும். விற்பனையான தேயிலைத்தூளின் ரொக்க மதிப்பு ரூ.20 கோடியே 62 லட்சம். ஏலத்தில் அனைத்து ரக தேயிலைத்தூள்களிலும் கிலோவுக்கு ரூ.5 விலை வீழ்ச்சி ஏற்பட்டது.

    ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.300, சி.டி.சி. தேயிலைத்தூளின் அதிகபட்ச விலை கிலோவுக்கு ரூ.241 என இருந்தது. சராசரி விலையாக இலை ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.96 முதல் ரூ.100 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.158 முதல் ரூ.186 வரை ஏலம் போனது. டஸ்ட் ரக சாதாரண வகை கிலோவுக்கு ரூ.102 முதல் ரூ.106 வரை, உயர் வகை கிலோவுக்கு ரூ.180 முதல் ரூ.196 வரை விற்பனையானது. தேயிலைத்தூள் விலை குறைந்து உள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். விற்பனை எண் 22-க்கான ரத்து செய்யப்பட்டு, விற்பனை எண் 23-க்கான ஏலம் வருகிற 10, 11-ந் தேதிகளில் நடைபெற உள்ளது.
    ×