என் மலர்
நீலகிரி
கோத்தகிரி:
கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை சோதனை சாவடியில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கென்னடி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
தொடர்ந்து லாரி டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கூடலூர் அனுமாபுரத்தை சேர்ந்த சந்தோஷ் குமார் (வயது 32) என்பதும், கர்நாடகாவில் இருந்து மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சந்தோஷ் குமாரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 69 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
ஊட்டி:
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. கடந்த சில நாட்களாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் பெட்ரோல் விலை சதத்தை நெருங்கி வருகிறது.
தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டத்தில் தான் பெட்ரோல், டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும். கடந்த பிப்ரவரி மாதம் ஊட்டியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92-க்கு விற்பனையானது. இந்த விலை படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் 99 ரூபாய் 94 பைசாவுக்கு விற்பனையானது.
இந்த நிலையில் நேற்று ஊட்டியில் பெட்ரோல் விலை 100-யை தாண்டியது. ஊட்டியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.23 உயர்ந்து 100 ரூபாய் 17 பைசாவுக்கு விற்பனையானது. சமவெளி பகுதிகளை காட்டிலும் இங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
நீலகிரி மலை மாவட்டம் என்பதால் இங்கு எரிபொருள் செலவு அதிகம். மேலும் இருசக்கர வாகனம் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் மைலேஜ் குறைவாக கிடைக்கும். இதனால் எரிபொருள் செலவு அதிகமாக இருக்கும்.
இந்த நிலையில் நாள்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல் விலை உயர்வால் வாடகை வாகனங்கள் வைத்து தொழில் செய்து வருபவர்கள், இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்வோர், தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே இதில் மத்திய, மாநில அரசுகள் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
இதேபோன்று கோவையிலும் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. கோவையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.67-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்னும் சில தினங்களில் கோவையிலும் பெட்ரோல் விலை 100- யை தாண்டும் சூழ்நிலை உருவாகி உள்ளது.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நீலகிரி மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகள் உள்பட சில வணிக நிறுவனங்களை மட்டும் குறிப்பிட்ட நேரம் திறந்துகொள்ள அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர். இருப்பினும் விதிமுறைகள் மற்றும் ஊரடங்கை மீறும் செயல்கள் நடைபெற்று வருகிறது.
இதையொட்டி நீலகிரி மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் நடுவட்டம் பகுதியில் திடீர் ஆய்வு நடத்தினார்.
அப்போது நடுவட்டம் பஜாரில் ஊரடங்கை மீறி மளிகை கடை திறந்து இருந்தது தெரியவந்தது. இதையொட்டி சம்பந்தப்பட்ட கடைக்கு பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மனோரஞ்சிதம் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தார். இதைத்தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் அபராத தொகையை வசூலித்தார். பின்னர் கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
பந்தலூர் அருகே பத்தாம் நம்பர் ஆதிவாசி காலனியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. பந்தலூர் தாசில்தார் தினேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் கதிரவன் தலைமையில் மருத்துவ குழுவினர் ஆதிவாசி மக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதேபோல் அய்யன்கொல்லி அருகே உள்ள முருக்கம்பாடி, கருத்தாடு, புஞ்சைகொல்லி உள்பட பல பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில், டாக்டர் அன்பரசு ஜெரால்டு, சுகாதார ஆய்வாளர் மோகன்குமார் ஆகியோர் மேற்பார்வையில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், பந்தலூர், குந்தா ஆகிய இடங்களில் இதுவரை 5 லட்சத்து 4,727 பேருக்கு கொரோனா சளி மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவீதத்தினர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த வாரத்தில் நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது தொற்று பாதிப்பு சற்று குறைந்துள்ளது. மாவட்டத்தில் முன்களப் பணியாளர்கள், இணை நோயாளிகள், பொதுமக்கள் என இதுவரை 2 லட்சத்து 8,398 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக வனத்துக்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் விவசாய பயிர்களையும் நாசம் செய்து வருகிறது. இதனால் காட்டு யானையை பிடித்து முதுமலைக்கு கொண்டு செல்ல வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உத்தரவின்பேரில் காட்டு யானையை பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர். இதனால் கோவை மண்டல வன கால்நடை டாக்டர்கள் மனோகரன், சுகுமாரன், முதுமலை புலிகள் காப்பக கால்நடை டாக்டர் ராஜேஷ் குமார் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் கூடலூரில் முகாமிட்டு காட்டு யானைநடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
மேலும் காயம் குணமடைய கடந்த சில தினங்களாக பழங்களுக்குள் மருந்துகளை மறைத்து வைத்து காட்டு யானைக்கு வனத்துறையினர் வழங்கி வருகின்றனர்.
இதனிடையே கூடலூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் காட்டு யானையை பிடிக்கும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் காட்டு யானை நிற்கும் பகுதியில் மயக்க ஊசி செலுத்துவதற்கு ஏற்ற இட வசதி இல்லாத நிலையில் உள்ளது. இதனால் திறந்தவெளி பகுதிக்கு காட்டு யானை இடம்பெயரும் வரை வனத்துறையினர் காட்டு யானையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதற்கிடையில், காட்டு யானையை அடைத்து சிகிச்சை அளிக்க முதுமலையில் மரக்கூண்டு அமைக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், காட்டு யானை பிடிப்பதற்காக முதுமலையில் இருந்து கும்கி யானைகள் கொண்டுவர வேண்டியுள்ளது. மேலும் மழையும் தொடர்ந்து பெய்கிறது. இதனால் யானையை பிடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இருப்பினும் மழையை பொருட்படுத்தாது காட்டு யானையை பிடிக்க மருத்துவ குழுவினருடன் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சில தினங்களில் யானை பிடிக்கப்படும் என்றனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தொட்டபெட்டா பகுதியில் தோட்டக்கலை துறையின் கீழ் தேயிலை பூங்கா உள்ளது. இங்க 10½ ஏக்கர் பரப்பளவில், 6 ஏக்கரில் தேயிலை தோட்டங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. நீலகிரியின் முக்கிய பொருளாதாரமான தேயிலை விவசாயம் மற்றும் தேயிலைத்தூள் உற்பத்தியை சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் பூங்காவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் கிரீன் டீ சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டால் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் பூங்கா மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய நிலையில் காட்சி அளிக்கிறது. மலர்கள் பூத்து குலுங்கியும் கண்டு ரசிக்க ஆளில்லை.
இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வராததால் அங்கு தேயிலை பூங்காவில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைத்தூளை விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்தது. இதனைத்தொடர்ந்து உற்பத்தி நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து பணியாளர்கள் மூலம் சமூகஇடைவெளியை கடைப்பிடித்து பச்சை தேயிலை பறிக்கப்பட்டு, கைகாட்டியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு வினியோகம் செய்யப்பட்டது. ஒரு மாதத்துக்கு 4,000 கிலோ தேயிலை வினியோகிக்கப்பட்டது.
வழக்கமாக நீலகிரி உள்பட தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் அருகே தேயிலை பூங்காவில் உற்பத்தி செய்யப்படும் கிரீன் டீ விற்பனை செய்யப்படும். ஆனால் மாநிலம் முழுவதும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் கிரீன் டீ விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் தேயிலை பூங்காவில் பச்சை தேயிலை பறிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேயிலைத்தூள் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. தினமும் 2 கிலோ தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
அங்கு தொழிற்கூடத்தில் உள்ள சூடேற்றும் எந்திரத்தில் பச்சை தேயிலை சூடேற்றி, அதன் பின்னர் உலர வைக்கப்படுகிறது. தற்போது ஊரடங்கிலும் தேயிலைத்தூள் உற்பத்தி நடைபெற்று வந்தாலும், விற்பனை செய்ய முடியாமல் தேயிலைத்தூள் தேக்கம் அடைந்துள்ளது. எனவே சுற்றுலா தலங்கள் திறந்து சுற்றுலா பயணிகள் வந்தால் தான் விற்பனை வழக்கம் போல் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. தொற்று அறிகுறி தென்பட்டு 600-க்கும் மேற்பட்ட இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே அப்பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் கேரட் அறுவடை மற்றும் விவசாய பணிகளுக்கு சென்று வந்ததால் தொற்று பரவியது. இதை கட்டுப்படுத்த அரசு விதிமுறைகளை பின்பற்றாத கேரட் சுத்திகரிப்பு நிலைய உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. கேரட் அறுவடை பணியில் உள்ளூர் தொழிலாளர்கள் மட்டுமின்றி வட மாநில தொழிலாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த கேரட் கழுவும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் ஊட்டி அருகே முத்தோரை பாலடாவில் நடைபெற்றது. சுகாதார குழுவினர் முகாமிட்டு 3 கேரட் சுத்திகரிப்பு நிலையங்களில் சுழற்சி முறையில் பணிக்கு வருபவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டனர். வடமாநில தொழிலாளர்கள் உள்பட அனைவரும் தங்களது ஆதார் அடையாள அட்டையை காண்பித்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்டு கொண்டனர். இதில், 579 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், நீலகிரியில் பழங்குடியினர்கள் தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி முன்னுரிமை அளித்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நடப்பு மாதத்துக்குள் தடுப்பூசி கிடைத்தால் பழங்குடியினர்கள் தகுதியுள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த செயல்திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.
அதன்படி ஊட்டி அருகே கவர்னர்சோலை பகுதியில் வசித்து வரும் தோடர் இன மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடந்தது. இதில் 150 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது.
இந்த முகாமில் காட்டில் தாயை பிரிந்து சுற்றி திரியும் குட்டி யானை, குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இங்கு 2 குட்டி யானை உள்பட 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் ஒரு பெண் சிங்கம் உயிரிழந்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள வன உயிரியல் பூங்காவில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்த 8-ந் தேதி முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள 2 குட்டி யானை உள்பட 28 யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
யானைகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் விமானம் மூலம் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி, இசாட் நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் வளர்ப்பு யானைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன. அதில் முதுமலை தெப்பக்காட்டில் உள்ள 28 யானைகளுக்கும் தொற்று இல்லை என வந்துள்ளது.
இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் கவுசல் கூறுகையில், முதுமலை தெப்பக்காடு முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 28 யானைகளுக்கும் தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது. தொடர்ந்து தெப்பக்காடு முகாமில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படும் என்றார்.






