search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    யானையிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்ட காட்சி.
    X
    யானையிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்ட காட்சி.

    முதுமலை தெப்பக்காடு முகாமில் 28 வளர்ப்பு யானைகளுக்கும் கொரோனா தொற்று இல்லை

    தமிழகத்தில் உள்ள வன உயிரியல் பூங்காவில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது.

    இந்த முகாமில் காட்டில் தாயை பிரிந்து சுற்றி திரியும் குட்டி யானை, குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்யும் யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இங்கு 2 குட்டி யானை உள்பட 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் 13 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதில் ஒரு பெண் சிங்கம் உயிரிழந்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள வன உயிரியல் பூங்காவில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அமைச்சர் ராமச்சந்திரன் உத்தரவிட்டார்.

    இதையடுத்து கடந்த 8-ந் தேதி முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள 2 குட்டி யானை உள்பட 28 யானைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    யானைகளிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் விமானம் மூலம் உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி, இசாட் நகரில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த நிலையில் வளர்ப்பு யானைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளன. அதில் முதுமலை தெப்பக்காட்டில் உள்ள 28 யானைகளுக்கும் தொற்று இல்லை என வந்துள்ளது.

    இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் கவுசல் கூறுகையில், முதுமலை தெப்பக்காடு முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டது. இதில் 28 யானைகளுக்கும் தொற்று இல்லை என்ற முடிவு வந்துள்ளது. தொடர்ந்து தெப்பக்காடு முகாமில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிக்கப்படும் என்றார்.

    Next Story
    ×