search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேயிலைத்தூள்
    X
    தேயிலைத்தூள்

    ஊட்டி தேயிலை பூங்காவில் ஊரடங்கிலும் தொடரும் தேயிலைத்தூள் உற்பத்தி

    சுற்றுலா பயணிகள் வராததால் அங்கு தேயிலை பூங்காவில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைத்தூளை விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்தது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே தொட்டபெட்டா பகுதியில் தோட்டக்கலை துறையின் கீழ் தேயிலை பூங்கா உள்ளது. இங்க 10½ ஏக்கர் பரப்பளவில், 6 ஏக்கரில் தேயிலை தோட்டங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. நீலகிரியின் முக்கிய பொருளாதாரமான தேயிலை விவசாயம் மற்றும் தேயிலைத்தூள் உற்பத்தியை சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் பூங்காவில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படும் கிரீன் டீ சுற்றுலா பயணிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டால் கடந்த ஏப்ரல் 20-ந் தேதி முதல் பூங்கா மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய நிலையில் காட்சி அளிக்கிறது. மலர்கள் பூத்து குலுங்கியும் கண்டு ரசிக்க ஆளில்லை.

    இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வராததால் அங்கு தேயிலை பூங்காவில் உற்பத்தி செய்யப்பட்ட தேயிலைத்தூளை விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்தது. இதனைத்தொடர்ந்து உற்பத்தி நிறுத்தப்பட்டது.

    தொடர்ந்து பணியாளர்கள் மூலம் சமூகஇடைவெளியை கடைப்பிடித்து பச்சை தேயிலை பறிக்கப்பட்டு, கைகாட்டியில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைக்கு வினியோகம் செய்யப்பட்டது. ஒரு மாதத்துக்கு 4,000 கிலோ தேயிலை வினியோகிக்கப்பட்டது.

    வழக்கமாக நீலகிரி உள்பட தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் அருகே தேயிலை பூங்காவில் உற்பத்தி செய்யப்படும் கிரீன் டீ விற்பனை செய்யப்படும். ஆனால் மாநிலம் முழுவதும் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டதால் கிரீன் டீ விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் தேயிலை பூங்காவில் பச்சை தேயிலை பறிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேயிலைத்தூள் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. தினமும் 2 கிலோ தேயிலைத்தூள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

    அங்கு தொழிற்கூடத்தில் உள்ள சூடேற்றும் எந்திரத்தில் பச்சை தேயிலை சூடேற்றி, அதன் பின்னர் உலர வைக்கப்படுகிறது. தற்போது ஊரடங்கிலும் தேயிலைத்தூள் உற்பத்தி நடைபெற்று வந்தாலும், விற்பனை செய்ய முடியாமல் தேயிலைத்தூள் தேக்கம் அடைந்துள்ளது. எனவே சுற்றுலா தலங்கள் திறந்து சுற்றுலா பயணிகள் வந்தால் தான் விற்பனை வழக்கம் போல் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×