search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெட்ரோல்
    X
    பெட்ரோல்

    நீலகிரியில் பெட்ரோல் விலை ரூ.100-யை தாண்டியது

    தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டத்தில் தான் பெட்ரோல், டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும்.

    ஊட்டி:

    சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. கடந்த சில நாட்களாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பெட்ரோல் விலை 100 தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் பெட்ரோல் விலை சதத்தை நெருங்கி வருகிறது.

    தமிழகத்திலேயே நீலகிரி மாவட்டத்தில் தான் பெட்ரோல், டீசல் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும். கடந்த பிப்ரவரி மாதம் ஊட்டியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.92-க்கு விற்பனையானது. இந்த விலை படிப்படியாக உயர்ந்து நேற்று முன்தினம் 99 ரூபாய் 94 பைசாவுக்கு விற்பனையானது.

    இந்த நிலையில் நேற்று ஊட்டியில் பெட்ரோல் விலை 100-யை தாண்டியது. ஊட்டியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.23 உயர்ந்து 100 ரூபாய் 17 பைசாவுக்கு விற்பனையானது. சமவெளி பகுதிகளை காட்டிலும் இங்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் டீசல் விலையும் உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு லிட்டர் டீசல் 94 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

    நீலகிரி மலை மாவட்டம் என்பதால் இங்கு எரிபொருள் செலவு அதிகம். மேலும் இருசக்கர வாகனம் உள்பட அனைத்து வாகனங்களுக்கும் மைலேஜ் குறைவாக கிடைக்கும். இதனால் எரிபொருள் செலவு அதிகமாக இருக்கும்.

    இந்த நிலையில் நாள்தோறும் உயர்ந்து வரும் பெட்ரோல் விலை உயர்வால் வாடகை வாகனங்கள் வைத்து தொழில் செய்து வருபவர்கள், இருசக்கர வாகனங்களில் வேலைக்கு செல்வோர், தொழிலாளர்கள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே இதில் மத்திய, மாநில அரசுகள் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

    இதேபோன்று கோவையிலும் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்ந்து வருகிறது. கோவையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.98.67-க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்னும் சில தினங்களில் கோவையிலும் பெட்ரோல் விலை 100- யை தாண்டும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

    Next Story
    ×