search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடப்பாண்டிற்கான கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட போது எடுத்த படம்.
    X
    நடப்பாண்டிற்கான கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்ட போது எடுத்த படம்.

    மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ரூ.3 ஆயிரத்து 850 கோடி கடன் வழங்க இலக்கு - கலெக்டர் தகவல்

    நீலகிரி மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ரூ.3 ஆயிரத்து 850 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கூறினார்.
    ஊட்டி:

    ஊட்டியில் உள்ள நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில், 2021-22-ம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டார்.

    பின்னர் கடன் திட்ட அறிக்கை குறித்து கலெக்டர் கூறியதாவது:- நீலகிரியில் நடப்பு ஆண்டுக்கு ரூ.3 ஆயிரத்து 850 கோடியே 45 லட்சம் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    ஆண்டுதோறும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்படுகிறது. இதேபோல் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பல்வேறு கடன்கள், வணிக ரீதியான கடன்களும் வழங்கப்பட்டு வருகிறது. கடன் திட்ட அறிக்கையில் துறை சார்ந்த விவரங்கள் அடங்கி உள்ளது.

    கடந்த ஆண்டை ஒப்பிடும்போது நடப்பு ஆண்டில் ரூ.375 கோடியே 45 லட்சம் கடன் அதிகமாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது 10.80 சதவீதம் கடன் தொகை அதிகரிக்கப்பட்டு உள்ளது. விவசாயம் சார்ந்த தொழில்கள் தொடங்க ரூ.2,722 கோடியே 50 லட்சம், குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மேம்பாட்டிற்கு ரூ.485 கோடியே 10 லட்சம், பிற முன்னுரிமை கடன்களுக்கு ரூ.642 கோடியே 85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் தகுதி உடையவர்களுக்கு கடன் உதவிகளை வழங்க வங்கிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மகளிர் திட்ட இயக்குனர் பாபு, தோட்டக்கலை துறை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சத்யராஜா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×