என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதுமலை முகாமில் யானைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட காட்சி.
    X
    முதுமலை முகாமில் யானைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட காட்சி.

    முதுமலை- டாப்சிலிப் முகாமில் 56 யானைகளுக்கு கொரோனா பரிசோதனை

    பொள்ளாச்சி வனசகரத்தில் உள்ள டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் உள்ள 28 யானைகளுக்கும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    ஊட்டி:

    முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு இன்று காலை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. வனத்துறையினர் யானைகளிடம் இருந்து சளி மாதிரிகளை சேகரித்தனர். அதன்பின்னர் மாதிரிகள் உத்தரபிரதேசத்தில் உள்ள கால்நடை ஆராய்ச்சி ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு பரிசோதனை நடத்தப்பட்டு ஒரிரு நாட்களில் முடிவு தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதேபோல் பொள்ளாச்சி வனசகரத்தில் உள்ள டாப்சிலிப் கோழிகமுத்தி யானைகள் முகாமில் உள்ள 28 யானைகளுக்கும் இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 2 முகாம்களையும் சேர்த்து மொத்தம் 56 யானைகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து முதுமலை புலிகள் காப்பக இயக்குனர் கவுசல் கூறுகையில், யானைகள் முகாமில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா அச்சம் காரணமாக யானைகள் அனைத்திற்கும் தனித்தனியாகவே உணவு கொடுத்து வருகிறோம்.

    இன்று இங்குள்ள வளர்ப்பு யானைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த முகாமில் மொத்தம் 54 பாகன்கள் உள்ளனர். இவர்களில் 12 பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். மற்றவர்களுக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதுதவிர மலைவாழ் மக்களும் கொரோனா தடுப்பூசி செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் என்றார்.

    ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் கூறுகையில், டாப்சிலிப் யானைகள் முகாமில் உள்ள வளர்ப்பு யானைகளின் உடல்நிலையை தொடர்ந்து கால்நடை டாக்டர்கள் மூலம் கண்காணித்து வருகிறோம். தொற்று காலத்தில் சிறப்பு உணவுகளையும் வழங்கி வருகிறோம்.

    இங்கு வேட்டை தடுப்பு காவலர், வனகாவலர், வன காப்பாளர், மாவூத், காவடி, அவர்களது குடும்பத்தினர் என 196 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாகன்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய முகாமாக டாப்சிலிப் முகாம் உள்ளது என்றார். 

    Next Story
    ×