என் மலர்tooltip icon

    நீலகிரி

    • ஆ.ராசாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூடலூர் ராஜகோபாலபுரத்தில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் கருப்பு கொடிகள் கட்டப்பட்டு இருந்தது.
    • ஊட்டி ஏ.டி.சி. திடலில் பா.ஜ.க.வினர் கருப்பு கொடி கட்டியும், வாயில் கருப்பு துணி கட்டியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    • எம்.பி. ஆ.ராசா திமுக துணை பொதுச் செயலாளராக 2-வது முறையாக தோ்வு செய்யப்பட்ட பின்னா் முதன்முறையாக நீலகிரிக்க வந்தார்.
    • ஊட்டியில் உள்ள உள்ளாட்சி பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி

    தி.மு.க. எம்.பி. ஆ.ராசா திமுக துணை பொதுச் செயலாளராக 2-வது முறையாக தோ்வு செய்யப்பட்ட பின்னா் முதன்முறையாக நீலகிரிக்க வந்தார்.

    அவருக்கு குன்னூரில் மாவட்ட நகர செயலாளர் ராமசாமி தலைமையில் தி.மு.க.வினர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் அவர் அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் நகர மன்ற துணை தலைவர் வாசிம்ராஜா, பொதுகுழு உறுப்பினர்கள் காளி தாஸ்,செல்வம், நகரதுணை செயலாளர் வினோத், பொருளாளர் ஜெகநாதராவ், நகரமன்ற உறுப்பினர்கள் ஜாகிர்கான், மணி, மன்சூர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

    தொடர்ந்து அவர் ஊட்டிக்கு சென்றார். அங்கும் தி.மு.க.நிர்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது அவர் தொண்டர்கள் மத்தியில் பேசியதாவது:-

    எதிா்வரும் மக்களவைத் தோ்தலில் பிரதமரை ஸ்டாலின்தான் தீா்மானிப்பாா். உலக வங்கி மூலம் தமிழகத்தில் 10 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டன. இதில், ஊட்டியில் மருத்துவக் கல்லூரியை நான் கொண்டு வந்தேன்.நீலகிரியில் டேன்டீ நிறுவனம் மூடப்படும் நிலையில் இருந்தது. அந்த சூழலில் ஆட்சிக்கு வந்த தி.மு.க, உடனடியாக இந்நிறுவனத்தை புனரமைக்க ரூ.70 கோடி ஒதுக்கியது. கூடலூா், குன்னூா், ஊட்டியில் உள்ள உள்ளாட்சி பிரச்னைகளுக்கு தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    நீலகிரி மாவட்டத்தில் விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை வரன்முறைப்படுத்த முதல்-அமைச்சரிடம் கோரியுள்ளோம்.

    இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ஊட்டியில் ஐ.டி. பாா்க் அமைக்கப்படும். அதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்ட மக்களுக்காக வெற்றி பெற்றாலும் சரி, இல்லையென்றாலும் சரி தொடர்ந்து இந்த பகுதிகளுக்கு வந்து மக்களை சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து தீர்த்து வைப்போம்.

    நான் எப்போதும் நீலகிரி பாராளுமன்ற மக்களின் பிள்ளையாக திகழ்வேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில், நீலகிரி மாவட்ட திமுக செயலாளா் பா.மு.முபாரக், துணை செயலாளா் ஜே.ரவிக்குமாா், நகர செயலாளா் ஜாா்ஜ், தலைமை செயற்குழு உறுப்பினா் முஸ்தபா, நகர பொருளாளா் நாசா் அலி உட்பட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

    முன்னதாக கூடலூருக்கு சென்ற ஆ.ராசா, பழைய பஸ் நிலையம் சந்திப்பு பகுதியில் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினாா். தொடா்ந்து காந்தி திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் பேசுகையில், கூடலூா் தொகுதியில் பிரிவு-17 நிலப் பிரச்னை, பத்தாயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளுக்கும் விரைவில் தீா்வு காணப்படும் என்றாா்.

    • கடந்த ஒருவார காலமாக பெய்து வரும் மழை காரணமாக ரேலியா அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.
    • நேற்று 42.3 அடி உயரம் கொண்ட ரேலியா அணை நிரம்பியது. அணையில் இருந்து உபரி நிர் வெளியேறி வருகிறது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.

    நேற்று குன்னூர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடியது. வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

    குன்னூர் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கு ரேலியா, பந்தினி உள்ளிட்ட அணைகள் மூலம் மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக முக்கிய குடிநீர் ஆதாரமாக ரேலியா அணை உள்ளது. கடந்த ஒருவார காலமாக பெய்து வரும் மழை காரணமாக ரேலியா அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று 42.3 அடி உயரம் கொண்ட ரேலியா அணை நிரம்பியது. அணையில் இருந்து உபரி நிர் வெளியேறி வருகிறது.

    கடந்த ஜனவரி, ஜூன் மாதங்களில் முழு கொள்ளவை எட்டி உபரி நீர் வெளியேறியதை தொடர்ந்து இந்த ஆண்டு 3-வது முறையாக நேற்று உபரி நீர் வெளியேறியது.

    • போதை பொருட்கள் பயன்படுத்துவோர், அதனை விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
    • எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குரியாவதை எவ்வாறு தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவோர் மீதும், அதனை விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துறைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

    போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியதை தொடர்ந்து. மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக சோலூர்மட்டம் காவல் உதவி ஆய்வாளர் யாதவகிருஷ்ணன் தலைமையில் நேற்று கீழ் கோத்தகிரி மற்றும் சோலூர்மட்டம் பகுதியில் பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. போதை பொருட்கள் பயன்படுத்துவதால் உடலுக்கு எது போன்ற தீங்கு ஏற்படுகிறது.

    போதை பழக்கத்திலிருந்து தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும், எதிர்கால இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குரியாவதை எவ்வாறு தடுப்பது குறித்த விழிப்புணர்வை காவல் உதவி ஆய்வாளர் யாதவகிருஷ்ணன் வழங்கினார். 

    • நகர பகுதிகளில் உள்ள விடுதிகளில் பெரும்பாலானோா் தங்க விரும்புவதில்லை.
    • குடியிருப்பதற்கான வீடு என்ற அனுமதியை பெற்றுவிட்டு விதிகளை மீறி செயல்பட்டு வந்த 22 விடுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழலில், நகர பகுதிகளில் உள்ள விடுதிகளில் பெரும்பாலானோா் தங்க விரும்புவதில்லை.

    வனப்பகுதிகளை யொட்டியுள்ள பகுதிகளிலோ அல்லது இயற்கை எழில் சூழந்த பகுதிகளிலோ தான் தங்க விரும்புகின்றனா். இதை பயன்படுத்திக் கொண்டு அத்தகைய பகுதிகளில் குடியிருக்கும் வீடு என்பதற்கான அனுமதியை உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பெற்றுக் கொண்டு அதை தனியாா் விடுதிகளாக சிலா் நடத்தி வருகின்றனா்.

    இது தொடா்பாக பலமுறை புகாா்கள் தெரிவிக்கப்பட்டிருந்தும் பல்வேறு அரசுத் துறையினா் இணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்பதால், இப்பிரச்னை கிடப்பிலேயே இருந்து வந்தது.

    இதற்கிடையே கல்லட்டி மலைப் பாதையில் தொடா்ந்து ஏற்பட்டு வந்த விபத்துகளின் காரணமாக இச்சாலை வழியாக வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டிருந்த சூழலில் கடந்த ஜூன் மாதத்தில் சென்னையிலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த தனியாா் மென்பொருள் நிறுவன ஊழியா்களை ஊட்டியிலிருந்து மாற்றுப் பாதை வழியாக கல்லட்டி மலைப் பாதையில் அழைத்துச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சென்னையைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா் பலியானாா்.

    அவா்கள் தங்குவதற்கு பதிவு செய்திருந்த விடுதி அனுமதியில்லாத விடுதி என்பதால் அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டது.

    அதைத் தொடா்ந்து, அடுத்த ஒரு வாரத்துக்குள் பெங்களூருவிலிருந்து நீலகிரிக்கு சுற்றுலா வந்திருந்த மென் பொறியாளா் ஒருவா் கல்லட்டி அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.இவா் தங்குவதற்கு பதிவு செய்திருந்த விடுதியும் அனுமதியில்லாததாகும்.

    இதைத் தொடா்ந்து கல்லட்டி மலைப் பாதையில் இயங்கிவரும் அனுமதியில்லாத விடுதிகள் குறித்த விவரங்களை சேகரிக்க மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டிருந்தாா்.

    இந்த கணக்கெடுப்பில் குடியிருப்பதற்கான வீடு என்ற அனுமதியை பெற்றுவிட்டு விதிகளை மீறி செயல்பட்டு வந்த 22 விடுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுக்கு 'சீல்' வைக்கும் பணி நடந்து வருகிறது.

    முதல் நாளில் 10 விடுதிகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டன. ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, ஊட்டி தாசில்தாா் ராஜசேகா் மற்றும் ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் இணைந்து இப்பணியை மேற்கொண்டனா். 

    • மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பதற்காக தனது கைப்பையில் வைத்திருந்தது தெரிய வந்தது.
    • போலீசார் மொத்தம் 23 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கோத்தகிரி,

    கோத்தகிரி கெட்டிக்கம்பை பஜார் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஒருவர் நிற்பதாக கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேலுக்கு தொலைபேசி மூலம் ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பார்க்கும் பொழுது குண்டடா பகுதியை சேர்ந்த மணிகண்டன் (43) என்பவர் மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்பதற்காக தனது கைப்பையில் வைத்திருந்தது தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    அதே போன்று ஊனமுற்றோர் காலனி பகுதியில் அஜித் (30) என்பவரிடமிருந்து சுமார் 10 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்த போலீசார் அவரையும் கைது செய்து. அவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • பெருமாள் ஆடுகளை மேய்ச்சலுக்காக வனத்திற்கு அழைத்து சென்றார்.
    • மாலையில் ஆடுகள் மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்தது. ஆனால் பெருமாள் வீட்டிற்கு திரும்ப வரவில்லை.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் சிங்காரா வனசரக எல்லைக்குட்பட்ட வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பெருமாள்(வயது80).

    இவர் தனது மகன் கணபதி என்பவருடன் வசித்து வருகிறார்.

    பெருமாள் தனது வீட்டில் 16-க்கும் மேற்பட்ட ஆடுகளை வைத்து வளர்த்து வருகிறார். தினமும் ஆடுகளை அருகே உள்ள வனத்திற்குள் மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.

    நேற்றும் வழக்கம்போல பெருமாள் ஆடுகளை மேய்ச்சலுக்காக வனத்திற்கு அழைத்து சென்றார். இந்த நிலையில் மாலையில் ஆடுகள் மட்டும் வீட்டிற்கு திரும்பி வந்தது. ஆனால் பெருமாள் வீட்டிற்கு திரும்ப வரவில்லை.

    இரவு வெகுநேரமாகியும் திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த அவரது மகன் கணபதி வாழைத்தோட்டம் கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதிகள், அக்கம்பக்கத்தினர் வீடுகளிலும் தேடி பார்த்தார். ஆனால் கிடைக்கவில்லை.

    இதையடுத்து சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து வாழைதோட்டம் கிராமத்தையொட்டிய வனப்பகுதிகளுக்குள் தேடி பார்த்தனர். இரவு நேரம் என்பதாலும், தொடர்ந்து மழை பெய்ததாலும் தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இன்று காலை 2-வது நாளாக மாயமான பெருமாளை வனத்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பொக்காபுராம் காவல் பகுதிக்குட்பட்ட கல்லட்டி கூடுதல் காப்புக்காட்டில் பெருமாள் இறந்த நிலையில் கிடந்தார்.

    அவரது உடலை வனத்துறையினர் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஆடு மேய்க்க சென்ற அவரை யானை தாக்கியதும், அதனால் அவர் இறந்ததும் தெரியவந்தது.

    யானை தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அந்த கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • கட்டடங்களை பாா்வையிட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.
    • சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் விதிமீறலை உறுதி செய்தனா்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம், குன்னூா் நகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதியில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை பாா்வையிட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா்.

    இந்நிலையில், குன்னூா் ஸ்டேன்ஸ் சாலையில் உள்ள தனியாா் குடியிருப்பு ஒன்றில் இரண்டு தளத்துக்கு அனுமதி பெற்றுவிட்டு கூடுதலாக ஒரு தளம் கட்டப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் விதிமீறலை உறுதி செய்தனா்.

    தொடா்ந்து, அந்த குடியிருப்பை மூடி அதிகாரிகள் 'சீல்' வைத்தனா்.

    • பள்ளி மைதானத்துக்குள் கரடி புகுந்தது. அங்கு சிறிது நேரம் உலவியது.
    • பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்பறைக்குள் இருந்ததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், குன்னூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீப காலமாக உணவு மற்றும் குடிநீா்த் தேடி வனப் பகுதியில் இருந்து வெளியேறும் வன விலங்குகள் சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் உலவி வருவது வாடிக்கையாக வருகிறது.

    இந்நிலையில், குன்னூா் அருகே உள்ள அரவங்காடு வெடிமருந்து தொழிற்சாலைக்குச் சொந்தமான பள்ளி மைதானத்துக்குள் கரடி புகுந்தது. அங்கு சிறிது நேரம் உலவியது.

    பள்ளியில் இருந்த காவலாளிகள் சப்தம் எழுப்பியதையடுத்து, கரடி வனப் பகுதிக்குள் சென்றது.

    பள்ளி மாணவ, மாணவிகள் வகுப்பறைக்குள் இருந்ததால் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

    குடியிருப்புப் பகுதிகளில் உலவி வரும் வன விலங்குகளை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    • நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது.
    • மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட கலெக்டர் அம்ரித் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் மழைக்காலங்களில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.

    அப்பகுதிகளை கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்துறை, உள்ளாட்சி துறை, காவல் துறை, தீயணைப்பு துறை, நெடுஞ்சாலைத்துறை, மின்சாரத்துறை, பொதுப்பணித்து துறை, மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறைகளை சேர்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

    மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் 3500 முதல் நிலை மீட்பாளர்கள் மற்றும் 150 பேரிடர் கால நண்பர்கள் பேரிடர் பயிற்சி வழங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

    இதுதவிர மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது மக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறே வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

    ஊட்டி கோட்டத்துக்கு 0423-2445577, குன்னூர் கோட்டத்துக்கு 0423-2206002, கூடலூர் கோட்டத்துக்கு 04262-261295 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.

    ஊட்டி வட்டத்துக்கு 0423-2442433, குன்னூர் வட்டத்துக்கு 0423-2206102, கோத்தகிரி வட்டத்துக்கு 04266- 271718, குந்தா வட்டததுக்கு 0423-2508123,

    கூடலூர் வட்டத்துக்கு 04262-261252, பந்தலூர் வட்டத்துக்கு 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மாவட்ட நிர்வாகம் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள முன்னேற்பாடுகளுடன் தயார் நிலையில் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆம்புலன்ஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வர மத்தியில் குழந்தை இருந்த ஆம்புலன்ஸ் வந்தது.
    • மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரும் வழிகளில் போக்குவரத்து போலீசாரும் ஆம்புலன்சுகளுக்கு வழிவிட்டு உதவி செய்தனர்.

    கோத்தகிரி:

    கோத்தகிரி பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

    அந்த குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த டாக்டர்கள் குழந்தையை மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரை செய்தனர்.

    இதையடுத்து அவரது பெற்றோர் கோத்தகிரியில் இயங்கி வரும் ஒரு ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை தொடர்பு கொண்டனர். உடனடியாக அதன் உரிமையாளர் அக்கீம் என்பவர் ஆம்புலன்சை எடுத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.

    பின்னர் குழந்தையை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு கோவை நோக்கி பயணமாகினர். நேற்று கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் இருந்தே மழை பெய்து கொண்டு இருந்தது.

    இதனால் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒடந்துறை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் என்ன செய்வது என யோசித்த ஆம்புலன்ஸ் டிரைவர் அக்கீம்பாபு, உடனே மேட்டுப்பாளையம், கோவையில் தனக்கு தெரிந்த சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

    தகவலின் பேரில் ஆம்புலன்ஸ் டிரைவர்களான அன்சாரி, ஜின்னன், அக்கீம், இன்பா, சதீஷ், கலை ஆகியோர் தங்களது ஆம்புலன்ஸ்சுகளை எடுத்து கொண்டு ஓடந்துறைக்கு சென்றனர்.

    மேலும் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போக்குவரத்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்தனர்.

    பின்னர் ஆம்புலன்ஸ் டிரைவர்களும், போக்குவரத்து போலீசாரும் இணைந்து அங்கு போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து இப்படி சென்றால் நேரமாகி விடும் என்று, அக்கீம் பாபுவின் ஆம்புலன்சுக்கு முன்பும், பின்பும் ஆம்புலன்ஸ்கள் பின்தொடர்ந்து கோவை வரை பைலட் ஆம்புலன்சுகளாக சென்றன.

    ஆம்புலன்ஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வர மத்தியில் குழந்தை இருந்த ஆம்புலன்ஸ் வந்தது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரும் வழிகளில் போக்குவரத்து போலீசாரும் ஆம்புலன்சுகளுக்கு வழிவிட்டு உதவி செய்தனர்.

    இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் கோவைக்குள் வந்ததும், அங்கிருந்த தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தையை வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.

    உடனடியாக அங்கிருந்தும் ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து வந்து கோவையில் மற்றொரு தனியார் மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தை அனுமதிக்கப்பட்டது. அங்கு டாக்டர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக கோத்தகிரியில் இருந்து கோவை வரைக்கும் ஆம்புலன்ஸ் டிரைவர் வேகமாக இயக்கியதுடன், உதவிக்கு தனக்கு தெரிந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களை அழைத்து மொத்தம் 7 ஆம்புலன்ஸ்கள் உதவியுடன் மின்னல் வேகத்தில் கொண்டு குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்களின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    • மாவோயிஸ்டுகள் மற்றும் மர்மநபர்கள் நடமாட்டத்தையும் இரவு- பகலாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
    • பஜாரில் தேவாலா தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    ஊட்டி

    பந்தலூர் தாலுகா பகுதிகளிலிருந்து ரேஷன் அரிசி மூட்டைகளை கேரளாவுக்கு கடத்தப்பட்டு வந்தது.

    இந்த கடத்தல் மற்றும் மணல் கடத்தல்களை தடுக்கவும் பாட்டவயல், நம்பியார்குன்னு, மதுவந்தால், தாளூர், கக்குண்டி, பூலக்குன்று, கோட்டூர், மணல்வயல், சோலாடி, நாடுகாணி உள்பட பல பகுதிகளில் போலீஸ் சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு கடத்தல்களை தடுப்பது மாவோயிஸ்டுகள் மற்றும் மர்மநபர்கள் நடமாட்டத்தையும் இரவு- பகலாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் பந்தலூர் பஜாரில் தேவாலா தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு காரை போலீசார் நிறுத்திய போது காரை ஓட்டிவந்த ஒருவர் காரைநிறுத்திவிட்டு தப்பிஓடிவிட்டார். போலீசார் காரை சோதனை போட்டபோது, அதில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்ததும், கேரளாவுக்கு கடத்த முயன்றதும் தெரியவந்தது. மொத்தம் 1,200 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பிஓடியவரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

    ×