என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 விடுதிகளுக்கு `சீல்’"

    • நகர பகுதிகளில் உள்ள விடுதிகளில் பெரும்பாலானோா் தங்க விரும்புவதில்லை.
    • குடியிருப்பதற்கான வீடு என்ற அனுமதியை பெற்றுவிட்டு விதிகளை மீறி செயல்பட்டு வந்த 22 விடுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்துக்கு வரும் வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் சூழலில், நகர பகுதிகளில் உள்ள விடுதிகளில் பெரும்பாலானோா் தங்க விரும்புவதில்லை.

    வனப்பகுதிகளை யொட்டியுள்ள பகுதிகளிலோ அல்லது இயற்கை எழில் சூழந்த பகுதிகளிலோ தான் தங்க விரும்புகின்றனா். இதை பயன்படுத்திக் கொண்டு அத்தகைய பகுதிகளில் குடியிருக்கும் வீடு என்பதற்கான அனுமதியை உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து பெற்றுக் கொண்டு அதை தனியாா் விடுதிகளாக சிலா் நடத்தி வருகின்றனா்.

    இது தொடா்பாக பலமுறை புகாா்கள் தெரிவிக்கப்பட்டிருந்தும் பல்வேறு அரசுத் துறையினா் இணைந்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்பதால், இப்பிரச்னை கிடப்பிலேயே இருந்து வந்தது.

    இதற்கிடையே கல்லட்டி மலைப் பாதையில் தொடா்ந்து ஏற்பட்டு வந்த விபத்துகளின் காரணமாக இச்சாலை வழியாக வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்டிருந்த சூழலில் கடந்த ஜூன் மாதத்தில் சென்னையிலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்த தனியாா் மென்பொருள் நிறுவன ஊழியா்களை ஊட்டியிலிருந்து மாற்றுப் பாதை வழியாக கல்லட்டி மலைப் பாதையில் அழைத்துச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் சென்னையைச் சோ்ந்த இளம் பெண் ஒருவா் பலியானாா்.

    அவா்கள் தங்குவதற்கு பதிவு செய்திருந்த விடுதி அனுமதியில்லாத விடுதி என்பதால் அதன் உரிமம் ரத்து செய்யப்பட்டு 'சீல்' வைக்கப்பட்டது.

    அதைத் தொடா்ந்து, அடுத்த ஒரு வாரத்துக்குள் பெங்களூருவிலிருந்து நீலகிரிக்கு சுற்றுலா வந்திருந்த மென் பொறியாளா் ஒருவா் கல்லட்டி அருகே ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா்.இவா் தங்குவதற்கு பதிவு செய்திருந்த விடுதியும் அனுமதியில்லாததாகும்.

    இதைத் தொடா்ந்து கல்லட்டி மலைப் பாதையில் இயங்கிவரும் அனுமதியில்லாத விடுதிகள் குறித்த விவரங்களை சேகரிக்க மாவட்ட கலெக்டர் அம்ரித் உத்தரவிட்டிருந்தாா்.

    இந்த கணக்கெடுப்பில் குடியிருப்பதற்கான வீடு என்ற அனுமதியை பெற்றுவிட்டு விதிகளை மீறி செயல்பட்டு வந்த 22 விடுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றுக்கு 'சீல்' வைக்கும் பணி நடந்து வருகிறது.

    முதல் நாளில் 10 விடுதிகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டன. ஊட்டி வருவாய் கோட்டாட்சியா் துரைசாமி, ஊட்டி தாசில்தாா் ராஜசேகா் மற்றும் ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள் இணைந்து இப்பணியை மேற்கொண்டனா். 

    ×