search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து நெரிசலில் தப்பிக்க திடீர் யோசனை: குழந்தையை காப்பாற்ற அணிவகுத்த 7 ஆம்புலன்சுகள்
    X

    ஆம்புலன்சுகள் அணிவகுத்து சென்ற காட்சி.

    போக்குவரத்து நெரிசலில் தப்பிக்க திடீர் யோசனை: குழந்தையை காப்பாற்ற அணிவகுத்த 7 ஆம்புலன்சுகள்

    • ஆம்புலன்ஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வர மத்தியில் குழந்தை இருந்த ஆம்புலன்ஸ் வந்தது.
    • மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரும் வழிகளில் போக்குவரத்து போலீசாரும் ஆம்புலன்சுகளுக்கு வழிவிட்டு உதவி செய்தனர்.

    கோத்தகிரி:

    கோத்தகிரி பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் பிரசவத்திற்கு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கடந்த 2 தினங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

    அந்த குழந்தைக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த டாக்டர்கள் குழந்தையை மேல் சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லுமாறு பரிந்துரை செய்தனர்.

    இதையடுத்து அவரது பெற்றோர் கோத்தகிரியில் இயங்கி வரும் ஒரு ஆம்புலன்ஸ் நிர்வாகத்தை தொடர்பு கொண்டனர். உடனடியாக அதன் உரிமையாளர் அக்கீம் என்பவர் ஆம்புலன்சை எடுத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு விரைந்தார்.

    பின்னர் குழந்தையை ஆம்புலன்சில் ஏற்றி கொண்டு கோவை நோக்கி பயணமாகினர். நேற்று கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் இருந்தே மழை பெய்து கொண்டு இருந்தது.

    இதனால் கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் ஒடந்துறை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் என்ன செய்வது என யோசித்த ஆம்புலன்ஸ் டிரைவர் அக்கீம்பாபு, உடனே மேட்டுப்பாளையம், கோவையில் தனக்கு தெரிந்த சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.

    தகவலின் பேரில் ஆம்புலன்ஸ் டிரைவர்களான அன்சாரி, ஜின்னன், அக்கீம், இன்பா, சதீஷ், கலை ஆகியோர் தங்களது ஆம்புலன்ஸ்சுகளை எடுத்து கொண்டு ஓடந்துறைக்கு சென்றனர்.

    மேலும் இதுகுறித்து மேட்டுப்பாளையம் போக்குவரத்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்களும் விரைந்து வந்தனர்.

    பின்னர் ஆம்புலன்ஸ் டிரைவர்களும், போக்குவரத்து போலீசாரும் இணைந்து அங்கு போக்குவரத்தை சீர் செய்தனர். தொடர்ந்து இப்படி சென்றால் நேரமாகி விடும் என்று, அக்கீம் பாபுவின் ஆம்புலன்சுக்கு முன்பும், பின்பும் ஆம்புலன்ஸ்கள் பின்தொடர்ந்து கோவை வரை பைலட் ஆம்புலன்சுகளாக சென்றன.

    ஆம்புலன்ஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து வர மத்தியில் குழந்தை இருந்த ஆம்புலன்ஸ் வந்தது. மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவை வரும் வழிகளில் போக்குவரத்து போலீசாரும் ஆம்புலன்சுகளுக்கு வழிவிட்டு உதவி செய்தனர்.

    இதனை தொடர்ந்து ஆம்புலன்ஸ் கோவைக்குள் வந்ததும், அங்கிருந்த தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தையை அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தையை வேறு ஒரு தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.

    உடனடியாக அங்கிருந்தும் ஆம்புலன்ஸ்கள் அணிவகுத்து வந்து கோவையில் மற்றொரு தனியார் மருத்துவமனையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தை அனுமதிக்கப்பட்டது. அங்கு டாக்டர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது குழந்தை நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்றுவதற்காக கோத்தகிரியில் இருந்து கோவை வரைக்கும் ஆம்புலன்ஸ் டிரைவர் வேகமாக இயக்கியதுடன், உதவிக்கு தனக்கு தெரிந்த ஆம்புலன்ஸ் டிரைவர்களை அழைத்து மொத்தம் 7 ஆம்புலன்ஸ்கள் உதவியுடன் மின்னல் வேகத்தில் கொண்டு குழந்தையின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்களின் இந்த செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

    Next Story
    ×