என் மலர்
நீலகிரி
- ஒரு குட்டியுடன் 3 யானைகள் அந்த இடத்தை முகாமிட்டது.
- இறந்த யானையின் உடலை எடுக்க விடாமல் அந்த யானைகள் அரண்போல் நின்றன.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் மலைப்பகுதியில் உணவு மற்றும் தண்ணீர் தேடி சமவெளி பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் பல குழுக்களாக சுற்றி வருகிறது. குன்னூர் அருகே கோழிக்கரை பழங்குடியின கிராமத்தில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது.
நேற்று மாலை மலைச்சரிவில் சென்ற கர்ப்பிணி யானை கால் இடறி தவறி விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே யானை பலியானது. அதன் வயிற்றில் இருந்த குட்டியும் இறந்தது.
இதை பார்த்த பழங்குடி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையிலான ஊழியர்கள் விரைந்து சென்று யானையின் உடலை மீட்க முயன்றனர்.
அப்போது ஒரு குட்டியுடன் 3 யானைகள் அந்த இடத்தை முகாமிட்டது. இறந்த யானையின் உடலை எடுக்க விடாமல் அந்த யானைகள் அரண்போல் நின்றன.
சுமார் 2 மணி நேரம் போராடி அந்த யானைகளை வனத்துறையினர் காட்டுக்குள் விரட்டினர். இதையடுத்து முதுமலை கால்நடை டாக்டர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் இறந்த யானையின் உடலை பரிசோதனை செய்த பிறகு அந்த இடத்திலேயே புதைப்பதற்கான நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இந்த பகுதியில் காட்டு யானைகள் தொடர்ந்து சுற்றி வருவதால் வன ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- பஸ்சில் பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள் உள்ளதாக ஊட்டி நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
- சோதனை சாவடிகளில் கடுமையான சோதனைகளை மேற்கொண்டால் மட்டுமே நீலகிரியின் சுற்றுச்சூழல் காக்கப்படும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில் உள்பட 19 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடையை மீறி, நீலகிரிக்கு பிளாஸ்டிக் பொருள்கள் கொண்டுவரப்படுகிறதா? என்பது குறித்து அவ்வப்போது அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மாவட்ட எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் அடிக்கடி அதிகாரிகள் ஆய்வு செய்து பிளாஸ்டிக் வைத்திருப்போருக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.
இந்நிலையில், கா்நாடக மாநிலம் சிக்மகளூர் நகராட்சி ஆணையாளர், நகராட்சி கவுன்சிலா்கள் மற்றும் சிக்மகளூர் சட்டப்பேரவை உறுப்பினா் கொண்ட குழு நீலகிரியில் திடக்கழிவு திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக அண்மையில் ஊட்டிக்கு வந்தனர். அவா்கள் வந்த பஸ்சில் பிளாஸ்டிக் தண்ணீா் பாட்டில்கள் உள்ளதாக ஊட்டி நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தப் பஸ்சில் நகராட்சி நகா்நல அலுவலா் சிபி தலைமையிலான நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, அதில் 1 லிட்டா் பிளாஸ்டிக் குடிநீா் பாட்டில்கள் 60 இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பாட்டில் ஒன்றுக்கு ரூ.100 வீதம் ரூ.6 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இது குறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், கூடலூா், நாடுகாணி சோதனை சாவடிகளை கடந்து தண்ணீா் பாட்டில்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இது சோதனைச் சாவடியின் குறைபாட்டை காட்டுகிறது. சோதனை சாவடிகளில் கடுமையான சோதனைகளை மேற்கொண்டால் மட்டுமே நீலகிரியின் சுற்றுச்சூழல் காக்கப்படும். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஊட்டிக்குப் பிறகு நீலகிரி மலைகளில் இரண்டாவது பெரிய மலைப்பிரதேசம் ஆகும்.
- 1550 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள டால்பினோஸ் ஒத்த வடிவமுள்ள அசாதாரண பாறை இது.
நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைப் பிரதேசம் குன்னூர். ஊட்டிக்குப் பிறகு நீலகிரி மலைகளில் இரண்டாவது பெரிய மலைப்பிரதேசம் ஆகும்.
சிம்ஸ் பார்க், டால்பின்ஸ் நோஸ் மற்றும் கேத்தரின் நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பல சுற்றுலா தலங்களும் இங்கு அமைந்துள்ளது.
1550 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள டால்பினோஸ் ஒத்த வடிவமுள்ள அசாதாரண பாறை இதுவாகும்.
இந்நிலையில், குன்னூர் டால்பினோஸ் காட்சி முனை மேம்பாட்டு பணிகள் காரணமாக நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா பயணிகள் நலன் கருதி சாலை, கழிவளை, வண்ண விளக்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதால் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த மாதம் ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று தனது 55-வது பிறந்தநாளை யானை சந்தோஷ் கொண்டாடியது.
- தெப்பக்காடு முகாமின் அடையாள திகழ்ந்த யானை சந்தோசின் மரணம் வனத்துறையினர், பாகன்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட யானைகளை வனத்துறையினர் பராமரித்து வருகிறார்கள்.
ஒவ்வொரு யானையை பராமரிக்க தலா ஒரு பாகன், உதவியாளர் நியமிக்கப்பட்டு உள்ளனர். வளர்ப்பு யானைகள் பகல் நேரத்தில் சிறு, சிறு பணிகள் செய்வதோடு தங்களுக்கு தேவையான பசுந்தீவனத்தை வனப்பகுதியில் இருந்து கொண்டு வருவது வழக்கம்.
இந்த முகாமின் அடையாளமாகவும், வனத்துறையினர் மற்றும் அனைத்து பாகன்களின் செல்லப்பிள்ளையாகவும் சந்தோஷ் என்ற 55 வயது யானை திகழ்ந்து வந்தது. இந்த யானை 5 வயதில் முதுமலை வனப்பகுதியில் இருந்து வெளியேறியது. அன்று முதல் கடந்த 50 ஆண்டுகளாக தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்தது.
கடந்த மாதம் ஆகஸ்டு 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று தனது 55-வது பிறந்தநாளை யானை சந்தோஷ் கொண்டாடியது. அப்போது ராகி மற்றும் கொள்ளு கலந்து தயாரிக்கப்பட்ட கேக்கை வனத்துறையினர் வெட்டி யானை சந்தோசுக்கு வழங்கினர். இந்தநிலையில் வயது மூப்பால் உடல் நலம் குன்றி அவதிப்பட்டு வந்த யானை சந்தோஷ் நேற்று அதிகாலை உயிரிழந்தது. கால்நடை மருத்துவர்கள் உடல் கூறாய்வு செய்த பின் யானையின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
தெப்பக்காடு முகாமின் அடையாள திகழ்ந்த யானை சந்தோசின் மரணம் வனத்துறையினர், பாகன்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்திலேயே நீண்ட தந்தம் கொண்ட யானையாக சந்தோஷ் திகழ்ந்தது. சுமார் 1.5 மீட்டர் நீளம் கொண்ட தந்தங்களோடு யானைகள் முகாமில் கம்பீரமாக இந்த யானை வலம் வந்தது. தந்தங்கள் தரையை தொடும் அளவுக்கு நீளமாக இருந்ததால் யானை சந்தோசுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து தந்தங்களை அறுத்து நீளத்தை வனத்துறையினர் குறைத்திருந்தனர்.
- மழையுடன் கடும் குளிரும், பனிமூட்டமும் காணப்படுகிறது.
- பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
குறிப்பாக கூடலூர், பந்தலூர் சுற்றுவட்டாரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. இந்த மழையால் பந்தலூர், கூடலூரில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்திலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. பல சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
பாடந்தொரை-அலவயல் பிரதான சாலை முழுவதும் நீரில் மூழ்கியதால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
தண்ணீர் வடியும் வரை காத்திருந்து அதன்பின்னரே மக்கள் அவ்வழியாக சென்றனர். கர்க்கார்பாலி செல்லும் சாலையிலும் மழைநீர் தேங்கி நின்றதால், வாகனங்கள் மெதுவாக சென்றன.
கனமழைக்கு பாடந்தொரை மற்றும் அலவயல் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடுகளுக்குள் தேங்கிய தண்ணீரை வாளி மூலமாக வெளியேற்றினர். சிலர் அங்கிருந்து வெளியேறி தங்களது உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனர்.
கூடலூர் பகுதியில் பெய்த கனமழைக்கு தேவாலா அருகே வாழவயல் பகுதியில் சுந்தரலிங்கம் என்பவரது வீடு இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த சுந்தரலிங்கத்தின் மனைவி சந்திரிகா(50) என்பவர் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஊட்டி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதேபோல் அந்த பகுதியில் உள்ள முத்துலிங்கம் என்பவரது வீடும் மழைக்கு இடிந்து விழுந்தது.
பந்தலூர் தாலுகாவில் உப்பட்டி பொன்னானி, நெலாக்கோட்டை பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் பந்தலூர் பஜாரில் வெள்ளம் தேங்கி நின்றது. இதனால் கூடலூர், கோழிக்கோடு சென்ற அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்த படியே சென்றன.
ஊட்டியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மழையுடன் கடும் குளிரும், பனிமூட்டமும் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதை அடுத்து மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி மாவட்டத்தில் அதிகம் பாதிப்பு ஏற்படக்கூடியதாக 283 பகுதிகளை கண்டறிந்துள்ளனர். அந்த பகுதிகளை கண்காணிக்க 43 மண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளது.
மேலும் நீலகிரியில் 3,600 முதல்நிலை பொறுப்பாளர்கள், 200 தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். பொதுமக்கள் தங்களது பகுதிகளில் பேரிடர் பாதிப்பு இருந்தால் வருவாய்த்துறையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து நிவாரண முகாம்களில் தங்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.
- வேட்டையாட முடியாத நிலையில், போதிய இரை கிடைக்காமல் உடல் மெலிந்து காணப்பட்டது.
- புதருக்குள் 12 வயதான பெண் புலி படுத்து கிடப்பதும், பின்னர் வெளியே வந்து விட்டு மீண்டும் புதருக்குள் செல்வதுமாக இருந்தது.
கூடலூர்:
முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல பகுதியான மசினகுடி அருகே சிங்காரா வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் பழைய கல்குவாரியில் வயதான புலி சுற்றி வந்தது. மேலும் வேட்டையாட முடியாத நிலையில், போதிய இரை கிடைக்காமல் உடல் மெலிந்து காணப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த 19-ந் தேதி முதல் சிங்காரா வனச்சரகர் தனபால், வனவர் சங்கர் உள்ளிட்ட வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். அதே பகுதியில் உள்ள புதருக்குள் 12 வயதான பெண் புலி படுத்து கிடப்பதும், பின்னர் வெளியே வந்து விட்டு மீண்டும் புதருக்குள் செல்வதுமாக இருந்தது.
இந்தநிலையில் நேற்று புலி இறந்து கிடந்ததை வனத்துறையினர் பார்த்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, இன்று புலியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படும் என்றனர்.
- வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கீழ்த்தட்டபள்ளம் நெடுஞ்சாலையில் உலா வந்தது.
- பஸ் டிரைவர் சாதுரியமாக பஸ்சை வேகமாக பின்னோக்கி இயக்கினார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள கீழ்த்தட்டபள்ளம், குஞ்சபனை உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானை நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
அதிலும் குறிப்பாக வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் அருகில் உள்ள குடியிருப்புகள், தேயிலை தோட்டங்களில் உலா வருவதுடன் அவ்வப்போது சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழிமறிப்பதுமாக உள்ளன.
இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை கீழ்த்தட்டபள்ளம் நெடுஞ்சாலையில் உலா வந்தது.
அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து பயணிகளுடன் கோத்தகிரி நோக்கி ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை காட்டு யானை வழிமறித்து வண்டியின் அருகே சென்றது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர்.
இந்த நிலையில் பஸ் டிரைவர் சாதுரியமாக பஸ்சை வேகமாக பின்னோக்கி இயக்கினார். இந்த பதைபதைக்க வைக்கும் காட்சிகளை பஸ்சில் இருந்த பயணிகள் அச்சத்துடன் வீடியோ பதிவு செய்து வெளியிட்டு உள்ளனர்.
கடந்த ஆண்டு இதே பகுதியில் பயணிகளுடன் சென்ற அரசு பேருந்து மற்றும் காரை ஒரு காட்டு யானை மிகுந்த ஆக்ரோஷத்துடன் தாக்கி சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் காட்டு யானைகள் மீண்டும் இந்த ரோட்டில் வாகனங்களை வழிமறித்து தாக்க முயல்வதால் வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து அடர்ந்தவனப் பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- யானை சாலைக்கு வந்ததால் அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தப்பட்டன.
- சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் முதுமலை தமிழ்நாடு-கர்நாடக பாதையில் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.
இந்த வழியாக நேற்று ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று சாலைக்கு வந்தது.
அந்த வழியாக கேரட் ஏற்றி சென்ற லாரியை அந்த யானை வழிமறித்தது. டிரைவரும் உடனே வண்டியை நிறுத்தி விட்டார். பின்னர் யானை அங்கு நின்றபடியே லாரியில் இருந்த கேரட்டை எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தது.
யானை சாலைக்கு வந்ததால் அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தப்பட்டன. அப்போது யானை நிற்பதை பார்த்ததும் அங்கு நின்றிருந்த சுற்றுலா பயணி ஒருவர் ஆர்வ மிகுதியில் யானை அருகே சென்று புகைப்படம் எடுக்க முயன்றார்.
அப்போது யானை திடீரென சுற்றுலா பயணியை நோக்கி விரட்டி வந்தது. இதனால் சுற்றுலா பயணி வாலிபரிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.
ஆனால் யானை விடாமல் துரத்தி வந்தது. அப்போது திடீரென சுற்றுலா பயணி சாலையில் தடுக்கி விழுந்தார். உடனே யானை அவரை தனது காலால் தாக்கியது. இதில் சுற்றுலா பயணி பலத்த காயம் அடைந்தார்.
இதனால் அதிர்ச்சியான சக சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து யானையை வனத்திற்குள் விரட்டினர்.
பின்னர் பலத்த காயம் அடைந்த சுற்றுலா பயணியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலா பயணியை காட்டு யானை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- மழையால் ஊட்டியில் உள்ள பல்வேறு சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
- மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் நேற்று அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்தது.
இதனை தொடர்ந்து மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்தது. மேலும் மாநில பேரிடர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருந்தனர்.
கனமழை எச்சரிக்கையால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டது. சுற்றுலா தலங்களும் மூடப்பட்டன.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணிக்கு பிறகு ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை கொட்டி தீர்த்தது.
இந்த மழையால் ஊட்டியில் உள்ள பல்வேறு சாலைகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஊட்டி ரெயில்வே பாலத்தின் கீழ் மழைநீர் தேங்கி நின்றது. அப்போது அந்த வழியாக சென்ற கார் ஒன்று வெள்ளத்தில் சிக்கி கொண்டது.
தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் பொக்லைன் எந்திரம் உதவியுடன் காரை மீட்டனர். ஊட்டி கார்டன் சாலை மழையால் சேறும், சகதியுமாக மாறியது. படகு இல்ல சாலையை வெள்ளம் சூழ்ந்ததால் அங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் அந்த பகுதிகளில் செல்லக்கூடிய நகர பஸ்கள் வேறு பாதையில் திருப்பி விடப்பட்டன. ரெயில் நிலையம் அருகே உள்ள போலீஸ் நிலையத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் ஊட்டி மார்க்கெட் பகுதிக்குள்ளும் மழைநீர் புகுந்தது.
காலையில் மழை இல்லாததால் ஊட்டி தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா திறக்கப்பட்டது. ஆனால் கனமழை பெய்ய தொடங்கியவுடன் பூங்காக்கள் உடனடியாக மூடப்பட்டு சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
குன்னூர், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது. குன்னூர் லேம்ஸ்ராக், டால்பின் நோஸ் செல்லும் சாலையில் மரம் விழுந்தது. கோத்தகிரி அருகே உள்ள செம்மனாரை கிராமத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது.
இதனால் அந்த பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் அந்த பகுதிகளுக்கு சென்று மரங்களை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். பந்தலூரில் கொட்டி தீர்த்த கனமழைக்கு எருமாடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை மழை வெள்ளம் சூழ்ந்தது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓவேலியில் 4 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
மாவட்டத்தில் பதிவான மழை விவரம் மி.மீட்டரில் வருமாறு:-
ஓவேலி-49, போர்த்திமந்து-47, பார்சன்வேலி-46, கீழ்கோத்தகிரி-45, தேவாலா-37, ஊட்டி-37.1, பந்தலூர்-30, நடுவட்டம்-25, சேரங்கோடு-22.
- சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தரும் போது, ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
- ரெயிலில் கூட்டம் அலைமோதுவதால், சிலருக்கு டிக்கெட் கிடைக்காமல் போவதால் ஏமாற்றம் அடைகின்றனர்.
ஊட்டி:
மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் ஊட்டியில் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். கோடை சீசன், 2-வது சீசன் காலங்களில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருகை தரும் போது, ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
ரெயிலில் கூட்டம் அலைமோதுவதால், சிலருக்கு டிக்கெட் கிடைக்காமல் போவதால் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே, சுற்றுலா பயணிகளுக்காக சிறப்பு மலை ரெயில் இயக்கப்படுகிறது. இந்தநிலையில் சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு மலை ரெயில் சேவைகளை தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. இதன்படி வருகிற 15-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை 3 நாட்கள் குன்னூர்-ஊட்டி இடையே சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகிறது.
குன்னூரில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு 9.40 மணிக்கு ஊட்டி வந்தடைகிறது. மறு மார்க்கத்தில் மாலை 4.45 மணிக்கு ஊட்டியில் இருந்து புறப்பட்டு 5.55 மணிக்கு குன்னூர் சென்றடைகிறது. ஊட்டி-கேத்தி இடையே ஒரு நாளைக்கு 3 முறை 'ஜாய் ரைடு' சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. முதல் சுற்று ஊட்டியில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு 10.10 மணிக்கு கேத்தி சென்றடைகிறது.
அங்கிருந்து 10.30 மணிக்கு புறப்பட்டு 11 மணிக்கு ஊட்டி வந்தடைகிறது. 2-வது சுற்று காலை 11.30 மணிக்கு ஊட்டியில் புறப்பட்டு மதியம் 12.10 மணிக்கு கேத்தி சென்றடைகிறது. அங்கிருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு 1.10 மணிக்கு ஊட்டி வந்தடைகிறது. 3-வது சுற்று மாலை 3 மணிக்கு ஊட்டியில் புறப்பட்டு 3.30 மணிக்கு கேத்தி சென்றடைகிறது. அங்கிருந்து மாலை 4 மணிக்கு புறப்பட்டு 4.30 மணிக்கு ஊட்டியை வந்தடைகிறது. 2 சேவைகளிலும் முதல் வகுப்பில் 80 இருக்கைகள், 2-ம் வகுப்பில் 130 இருக்கைகளுடனும் சிறப்பு மலை ரெயில்கள் இயக்கப்படுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- கடந்த சில மாதங்களுக்கு முன் ஊழியர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- தமிழக அரசு தமிழ் மொழிக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது.
கோத்தகிரி:
கோத்தகிரி அரசு மேல்நிலை பள்ளி அருகே கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஊழியர்கள் குடியிருப்பு கட்டப்பட்டு இருந்தது. மிகவும் பழமையான அந்த குடியிருப்புகளின் மேற்கூரை ஓடுகள் மற்றும் கட்டிடங்களின் சுவர்கள் பழுதடைந்து காணப்பட்டன. எனவே, பழைய குடியிருப்புகளை இடித்து அகற்றி விட்டு, அதே பகுதியில் தலா 4 வீடுகள் கொண்ட 2 கட்டிடங்கள் கட்டப்பட்டன.
இதேபோல கோத்தகிரி சக்திமலை பகுதியில் ஏற்கனவே பழுதடைந்த தாசில்தார் குடியிருப்பு கட்டிடத்தை இடித்து அகற்றி, தலா 4 வீடுகள் கொண்ட 2 கட்டிடங்கள் (தாசில்தார் குடியிருப்பு உள்பட) என மொத்தம் 16 குடியிருப்புகள் கட்ட அதிகாரிகள் முடிவு செய்தனர். இதையடுத்து பொதுப்பணித்துறை மூலம் ரூ.4 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அரசு அலுவலர்கள் குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன் ஊழியர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு அருகே உள்ள அரசு ஊழியர்கள் குடியிருப்பின் பலகையில் குடியிருப்பு பெயர் தமிழில் தவறாக எழுதப்பட்டு உள்ளது. அதாவது அரசு அலுவலர்கள் குடியிருப்பு என எழுதுவதற்கு பதிலாக 'அரசு அலுவலரகள குடியிருப்பு' என புள்ளி வைக்காமல் பிழையாக எழுதப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழ் ஆர்வலர்கள் கூறுகையில், தமிழக அரசு தமிழ் மொழிக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்கி வருகிறது. ஆனால், அரசு குடியிருப்பில் பெயர் பலகை எழுத்து பிழையுடன் எழுதப்பட்டு உள்ளது வருத்தம் அளிக்கிறது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனடியாக அதை திருத்தி, சரியாக எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
- தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே காலநிலை முற்றிலும் மாறி காணப்படுகிறது. அவ்வப்போது சாரல் மழையும், மிதமான மழையும் பெய்த வண்ணம் இருக்கிறது. மழையால் மாவட்டம் முழுவதுமே மேகமூட்டமாக காட்சியளிக்கிறது.
குன்னூர், கோத்தகிரி, ஊட்டி, மஞ்சூர், கூடலூர் என மாவட்டம் முழுவதும் உள்ள பகுதிகளில் நேற்று மாலை முதல் சாரல் மழை பெய்தது. இரவிலும் சாரல் மழை நீடித்தது.
இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை (ரெட் அலர்ட்) விடுத்துள்ளது. இதனை தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள கொடநாடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது.
அதிகபட்சமாக மாவட்டத்தில் கொடநாட்டில் 5 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டதை தொடர்ந்து, மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் அதிகளவு மழை பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளதால், மண்சரிவு, மரங்கள் சாலைகளில் விழுந்து பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக பள்ளி மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு நீலகிரி மாவட்டத்தில் இன்று ஒருநாள் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு உத்தரவிட்டுள்ளார்.
இதேபோல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் அந்த பகுதிகளில் வெறிச்சோடியது.
ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நிலச்சரிவு அபாயமுள்ள பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இதுதவிர மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க தொடர்பு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி மக்கள் மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
மேலும் வாட்ஸ் அப் எண்ணான 9488700588க்கும் தகவல் அளிக்கலாம். வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தாசில்தார் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்பட்டு வருகிறது.
ஊட்டி கோட்டத்திற்கு 0423-2445577, குன்னூர் கோட்டத்திற்கு-0423-2206002, கூடலூர் கோட்டத்திற்கு 04262-261296, ஊட்டி வட்டத்திற்கு 0423-2442433, குன்னூர் வட்டத்திற்கு 0423-2206102, கோத்தகிரி வட்டத்திற்கு 04266-271718, குந்தா வட்டத்திற்கு 0423-2508123, கூடலூர் வட்டத்திற்கு 04262-261252, பந்தலூர் வட்டத்திற்கு 04262-220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாநகரை பொறுத்தவரை நேற்று காலை முதலே இதமான காலநிலை நிலவியது.
இந்த நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் கோவை மாநகர் பகுதிகளான காந்திபுரம், டவுன்ஹால், ரேஸ்கோர்ஸ், பாப்பநாயக்கன் பாளையம், ரெயில் நிலையம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் அவினாசி சாலை, திருச்சி சாலை, ரெயில் நிலைய சாலை, சத்தி சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீரும் தேங்கி நின்றது. திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை காணப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-
கொடநாடு-53, பார்சன்வேலி-26, கோத்தகிரி-23, கெத்தை-22, மசினகுடி-20, ஊட்டி-18.6, நடுவட்டம்-15, போர்த்தி மந்து-10, குன்னூர்-10.






