என் மலர்tooltip icon

    நீலகிரி

    • கோத்தகிரியை சுற்றியுள்ள கொடநாடு, குஞ்சப்பனை, சோலூர்மட்டம், கூக்கல்தொரை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
    • குஞ்சப்பனையில் இருந்து கோத்தகிரிக்கு செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது.

    கோத்தகிரி:

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூா், மஞ்சூா், கூடலூா் பகுதிகளில் நேற்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இந்த மழையானது இன்று காலை வரை நீடித்தது.

    கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கோத்தகிரி மார்க்கெட்டில் வழிந்தோடிய வெள்ளம் தாழ்வான இடங்களில் உள்ள கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.

    இதனால் வியாபாரிகள் சிரமம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் பேரூராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    கோத்தகிரியை சுற்றியுள்ள கொடநாடு, குஞ்சப்பனை, சோலூர்மட்டம், கூக்கல்தொரை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.

    குஞ்சப்பனையில் இருந்து கோத்தகிரிக்கு செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது. இதேபோல் அந்த பகுதியில் நின்றிருந்த மரமும் மழைக்கு முறிந்து கீழே விழுந்தது.

    தொடர் மழை காரணமாக கூக்கல் தொரை பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. இதன் காரணமாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது.

    கனமழை காரணமாக ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையில் நந்தகோபால் பாலம் பகுதியில் பெரிய மரம் ஒன்று சாலையில் விழுந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் குன்னூா் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று மரத்தை வெட்டி அகற்றினா். மரம் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இதேபோல் பகல் முழுவதும் மழை பெய்து கொண்டிருந்ததால் ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லத்துக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் கடும் அவதி அடைந்தனா்.

    கோவை மாவட்டத்திலும் நேற்று காலை முதல் விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. மாநகரில் பீளமேடு, சிங்காநல்லூர், ராமநாதபுரம், கவுண்டம்பாளையம், செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் பலத்த மழை பெய்தது.

    மழையால் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

    அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் தரைப்பாலம், கிக்கானி பாலம், லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்களுடன் விரைந்து வந்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர்.

    கனமழை காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வருகின்றன.
    • வனவிலங்குகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க கேமராக்கள் உதவும்.

    கோத்தகிரி

    கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார வனப்பகுதிகளில் கரடி, சிறுத்தை, புலி, காட்டெருமை, காட்டுப்பன்றி, யானை, மான், முள்ளம்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

    இவை உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகள் மற்றும் தேயிலை தோட்டங்களில் உலா வருகின்றன. இவ்வாறு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகளால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு, சில நேரங்களில் உயிரிழப்பு நிகழ்கிறது. இதை தடுக்க வனத்துறையில் போதுமான பணியாளர்கள் இல்லாததால் வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து, உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

    இந்தநிலையில் கட்டப்பெட்டு வனசரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிறுத்தை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் தன்னார்வ தொண்டு அமைப்பின் உதவியுடன் கேமராக்கள் பொருத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கட்டப்பெட்டு வனசரகர் செல்வ குமார் தலைமையில் வனத்துறையினர் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் நேற்று 25 கேமராக்களை பொருத்தினர். வனத்துறையில் போதுமான பணியாளர்கள் இல்லாவிட்டாலும், வனவிலங்குகளின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க கேமராக்கள் உதவும். மேலும் அதன் பதிவுகளை கொண்டு அதிகமாக குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் வனவிலங்குகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • இந்த கிராமம், வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் உள்ளது.
    • கடந்த மாதம் 2 சிறுத்தைகள், 2 கருஞ்சிறுத்தைகள் மற்றும் 2 கரடிகள் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

    கோத்தகிரி

    கோத்தகிரி அருகே பெரியார் நகர் கோத்தகிரியில் இருந்து அரவேனு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் சாலையானது பிரதான சாலையாக உள்ளது. இந்த சாலையில் அரவேனு பகுதியை இணைக்கும் மாற்று சாலையாக கோத்தகிரி காமராஜர் சதுக்கத்தில் இருந்து கோட்டாஹால் வழியாக சாலை அமைந்துள்ளது.

    இந்த சாலையில் உள்ள பெரியார் நகர் கிராமத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்த கிராமம், வனப்பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் உள்ளது. இதனால் தேயிலை தோட்டங்கள், குடியிருப்புகள் மற்றும் சாலைகளில் கரடி, காட்டெருமை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது.

    இந்தநிலையில் கடந்த சில நாட்களாக அங்குள்ள சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கரடிகள் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் தொடர்ந்து நடமாடி வருகின்றன. இந்த காட்சிகள் அங்குள்ள வீடு ஒன்றில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.

    இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனர். இதே பகுதியில் கடந்த மாதம் 2 சிறுத்தைகள், 2 கருஞ்சிறுத்தைகள் மற்றும் 2 கரடிகள் உலா வந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரும் அச்சமடைந்துள்ளதோடு சிறுத்தைகள், கரடிகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை அடர்ந்த வனப்பகுதி என்பதால் யானைகள் அதிகளவு வாழ்ந்து வருகின்றன.
    • யானைகள் சென்றுவர தேசிய நெடுஞ்சாலை துறையினர் கான்கிரீட் வழித்தடம் அமைத்தனர்.

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டம் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை அடர்ந்த வனப்பகுதி என்பதால் யானைகள் அதிகளவு வாழ்ந்து வருகின்றன. இவை அவ்வப்போது தண்ணீர் மற்றும் உணவு - தேடி சாலையை கடந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலையில் சாலை விரிவாக்க பணி மேற்கொண்ட போது யானைகள் சென்றுவர தேசிய நெடுஞ்சாலை துறையினர் கான்கிரீட் வழித்தடம் அமைத்தனர்.

    இதனால் யானைகள் அவ்வழியாக செல்லாமல் ஆபத்தான முறையில் வழுக்கி கொண்டு சென்ற சம்பவம் இணையத்தில் வைரலானது. இைதயடுத்து தேசிய நெடுஞ்சாலை துறையினர் யானை சறுக்கி சென்ற இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    அந்த இடத்தில் கான்கிரீட் பாதையை அகற்றி யானைகள் எளிதில் சென்று வர ஏதுவாக புல்தரை அமைக்க முடிவு செய்துள்ளனர். தொடர்ந்து 2-வது நாளாக மீண்டும் வனத்துறையினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறையினர் கே.என்.ஆர் பகுதியில் இருந்து பர்லியாறு வரை யானைகள் கடந்து செல்லும் இடங்களை பார்வையிட்டனர்.

    இதுகுறி த்து தேசிய நெடுஞ்சாலைத் துறை உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது.பின்னர் யானைகள் பாதுகாப்பாக செல்ல உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • பொதுமக்களுக்கு போதை பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    கோத்தகிரி,

    நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஷ் ராவத் நீலகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்படுத்துவோர் மீதும் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாருக்கும் உத்தரவிட்டுள்ளார். போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் கூறியதை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு போதை பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சோலூர்மட்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாதவகிருஷ்ணன் தலைமையில் நெடுகுளா, குருக்கத்தி கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கு போதை பயன்படுத்துவதால் உடலுக்கு ஏற்படும் தீமை குறித்தும், போதை பழக்கத்தில் இருந்து தங்களை எவ்வாறு காத்துக்கொள்ள வேண்டும் என்பதை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

    • கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, அரசு உயர் நிலைப்பள்ளி, பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்டவைகளும் பிக்கட்டி பகுதியில் அமைந்துள்ளது.
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் நிழற்குடையின் மேற்கூரை பழுதடைந்தது.

    மஞ்சூர்,

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது பிக்கட்டி. இதை சுற்றிலும் முள்ளிகூர், கெரப்பாடு, ஒசட்டி, பாரதியார்புதுார், குந்தா, கோத்தகிரி உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது.

    இப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது எந்த ஒரு அத்தியாவசிய தேவைகளுக்கும் பிக்கட்டி பகுதிக்கு சென்று அங்கிருந்து அரசு பஸ்கள் மற்றும் வாகனங்களில் நகர பகுதிக்கு சென்று வர வேண்டும்.

    இது தவிர கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை, அரசு உயர் நிலைப்பள்ளி, பேரூராட்சி அலுவலகம் உள்ளிட்டவைகளும் பிக்கட்டி பகுதியில் அமைந்துள்ளது. பிக்கட்டியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியை ஒட்டி பஸ் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவ, மாணவிகள், அரசு, தனியார்துறை ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் அரசு பஸ்கள் வரும் வரை மேற்படி நிழற்குடையில் காத்திருப்பார்கள்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையில் நிழற்குடையின் மேற்கூரை பழுதடைந்தது. இதை தொடர்ந்து பழுதடைந்த மேற்கூரை இடித்து அகற்றப்பட்டது.

    இந்நிலையில் மேற்கூரை அகற்றப்பட்டு நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நிழற்குடையை பயணிகள் பயன்படுத்த முடியாதநிலை உள்ளது.

    மழை நேரங்களில் பஸ்கள் வரும் வரை நனைந்தபடியே சாலையோரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகளும் அவதியடைந்து வருகின்றனர். எனவே பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் நலன் கருதி உடனடியாக நிழற்குடையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • யானைகளை கண்டவுடன் டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினார்.
    • சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக சாலையை மறித்தபடி நின்றிருந்த யானைகள் அங்கிருந்து மெதுவாக சென்று மண் பாதை வழியாக காட்டுக்குள் சென்றது.

    மஞ்சூர்:

    நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது கெத்தை. மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் உள்ள இப்பகுதியில் முகாமிட்டிருந்த காட்டு யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி குன்னுார் சுற்றுப்புற பகுதிகளுக்கு இடம்பெயர்ந்து சென்றது.

    இதனால் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கெத்தை பகுதியில் யானைகளின் நடமாட்டம் இல்லாததால் இவ்வழியாக இயக்கப்பட்ட அரசு பஸ்கள், தனியார் வாகனங்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் சென்று வந்தது.

    இந்நிலையில் காட்டு யானைகள் மீண்டும் கெத்தை பகுதிக்கு திரும்பியுள்ளது. கடந்த 2 தினங்களாக 6 காட்டு யானைகள் மந்து, கெத்தை, பெரும்பள்ளம் பகுதிகளில் சுற்றி திரிகிறது.

    சம்பவத்தன்று மாலை கோவையில் இருந்து பில்லூர் பகுதிக்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசு பஸ்சை முள்ளி பிரிவு அருகே குட்டியுடன் காணப்பட்ட 5 காட்டு யானைகள் வழிமறித்தது. யானைகளை கண்டவுடன் டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கி சாலையோரமாக நிறுத்தினார்.

    அப்போது மஞ்சூர் பகுதியில் இருந்து கோவைக்கு சென்ற தனியார் வாகனங்களும் காட்டு யானைகளை கண்டு ஓரங்கட்டி நிறுத்தப்பட்டது. காட்டு யானைகளை கண்ட பயணிகள் பீதி அடைந்து வாகனங்களுக்குள் அமர்ந்திருந்தனர்.

    இந்நிலையில் சுமார் ஒருமணி நேரத்திற்கும் மேலாக சாலையை மறித்தபடி நின்றிருந்த யானைகள் அங்கிருந்து மெதுவாக சென்று மண் பாதை வழியாக காட்டுக்குள் சென்றது. இதன்பிறகே அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

    இதேபோல் நேற்றும் அரசு பஸ் மற்றும் வாகனங்களை குட்டியுடன் வந்த காட்டு யானைகள் வழிமறித்தன. அரைமணி நேரத்திற்கு பிறகு யானைகள் சென்றதும், வாகனங்கள் அங்கிருந்து சென்றன.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    மஞ்சூர்-கோவை சாலையில் காட்டுயானைகள் மீண்டும் நடமாடி வருகிறது. 2 குட்டிகளுடன் யானைகள் நடமாடுவதால் இவ்வழியாக வாகனங்களில் செல்வோர் மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டும். வழியில் யானைகள் எதிர்பட்டால் வாகனங்களை தொலைவிலேயே நிறுத்த வேண்டும். யானைகளை கண்டவுடன் கூச்சலிடுவது, வாகனங்களில் இருந்து இறங்கி செல்போன்களில் போட்டோ மற்றும் செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. யானைகள் சம்பவ இடத்தில் இருந்து வனப்பகுதிக்குள் செல்வதை உறுதி செய்த பிறகே வாகனங்களை எடுத்து செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பல ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
    • வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூரில் எம்.ஜி.ஆர். நகர் பகுதி உள்ளது. இங்கு ஏராளமான மக்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்கள் பல ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் கூடலூா் எம்.ஜி.ஆா். நகா் பகுதியில் குடியிருக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் தர்ணாவில் ஈடுபட்டனா்.

    இதுகுறித்து தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-

    கூடலூா் நகராட்சியில் உள்ள எம்.ஜி.ஆா்.நகரில் நாங்கள் கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக குடியி ருந்து வருகி றோம். நாங்கள் நகராட் சிக்கு தொடா்ந்து வரி செலுத்தி வருகிறோம். குடியி ருக்கும் முகவரியில் ரேஷன் காா்டு, வாக் காளா் அடையாள அட்டை, ஆதாா் காா்டு வழங்கப் பட்டுள்ளது.

    ஆனால் பிரிவு-17 நிலப் பிரச் னையை காரணம் காட்டி இது வரை வீடு களுக்கு மின் இணைப்பு மட்டும் வழங்கப் படவில்லை.

    மின் இணைப்பு இல்லா ததால் குழந்தை களின் கல்வி பாதிக்கப் படுகிறது.

    விளக்கு களை எரிய வைக்க மண் எண்ணையும் கிடைப் பதில்லை. வீட்டில் விளக்கு எரிக்க டீசலை வாங்கி பயன் படுத்தி வருகிறோம். இதனால் பல்வேறு பிரச் சனைகளை சந்திக்க வேண்டி யுள்ளது.

    எனவே, குடியிருக்கும் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என்ற வலி யுறுத்தி தர் ணாவில் ஈடுபட் டுள்ளோம் என்றனா்.

    • கூட்டுறவு வார விழா கொண்டாடுவது குறித்து குழுக் கூட்டம் நடைபெற்றது
    • கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான விழா சிறப்பாக நடத்தி வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கூட்ட அறையில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா 14.11.2022 முதல் 20.11.2022 வரை கொண்டாடுவது குறித்து குழுக் கூட்டம் மண்டல இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் கூட்டுறவு கொடியேற்றுதல், மரக்கன்று நடுதல், ரத்ததான முகாம், கால்நடை சிகிச்சை முகாம், உறுப்பினர் கல்வித் திட்டம், இளைஞர் ஈர்ப்பு முகாம், கூட்டுறவு தயாரிப்புகள் விற்பனை மேளா, பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்துவது என்றும் வனத்துறை அமைச்சர் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான விழா சிறப்பாக நடத்தி வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்கு சரக துணைப்பதிவாளர் மது, நீலகிரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் முத்து சிதம்பரம், ஆவின் பொதுமேலாளர் வெங்கடாசலம் மற்றும் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு விளையாட்டு போட்டிகள் வரும் நாளை (வெள்ளிக்கிழமை) அன்று காலை ஊட்டியில் உள்ள அண்ணா கலையரங்கத்தில் நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை கூட்டுறவு சங்க பணியாளர்களும் இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கூட்டுறவு வார விழாக்குழுவின் சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    • சகோதரர்கள் 2 பேர் அதிரடி கைது செய்யப்பட்டனர்.
    • தோம்னிக் சேவியர் கடந்த 6 மாத காலமாக வட்டி கட்ட முடியாத சூழ்நிலையில் இருந்தார்

    கோத்தகிரி,

    கோத்தகிரி பாப்பிஸ்ட் காலனியை சேர்ந்தவர் தோம்னிக் சேவியர் என்ற ரவி. கூலி தொழிலாளி.

    இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கோத்தகிரி தர்மோன் பகுதியை சேர்ந்த சங்கீத் குமார், பாலா என்பவர்களிடம் ரூ.30 ஆயிரம் பணம் வாங்கினார். இதற்கு மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வட்டியும் கட்டி வந்தார்.

    மாதந் தவறாமல் வட்டி செலுத்தி வந்த தோம்னிக் சேவியரால், அவரது குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 6 மாத காலமாக வட்டி கட்ட முடியாத சூழ்நிலையில் இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் தோம்னிக் வழக்கம் போல் வேலைக்கு சென்றார். அப்போது வழியில் வட்டிக்கு பணம் கொடுத்த சகோதரர்களான சங்கீத் மற்றும் பாலா ஆகியோர் வந்தனர். அவர்கள் தாங்கள் கொடுத்த பணத்திற்கான வட்டியை கேட்டுள்ளனர். அதற்கு அவர் விரைவில் தந்து விடுவதாக தெரிவித்துள்ளார்.

    ஆனால் அவர்கள் இன்னும் 2 நாட்களுக்குள் பணத்தை தராவிட்டால், உன்னை எரித்து கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இதனால் பயந்து போன தோம்னிக் சம்பவம் குறித்து கோத்தகிரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர், 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் சங்கீத் மற்றும் பாலா ஆகியோர் தோம்னிக் சேவியருக்கு கொலை மிரட்டல் விடுத்தது உறுதியானது. இதையடுத்து போலீசார், சங்கீத் மற்றும் பாலா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தமிழக அரசு முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
    • வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் முன்னிலை வகித்தனர்.

    ஊட்டி,

    டான்டீ தோட்ட தொழிலாளர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், தி.மு.க துணை பொது செயலாளரும், நீலகிரி எம்.பியுமான ஆ.ராசா தலைமையில் நடைபெற்றது. வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் 10-ந் தேதி(இன்று)தேவாலா பஜார் பகுதியில் டான்டீ தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்க தமிழக அரசு முன்னெடுக்கும் திட்டங்கள் குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயர்குழு உறுப்பினர்கள் முஸ்தபா, திராவிடமணி, காசிலிங்கம், கூடலூர் ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, பந்தலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவானந்தராஜா, பந்தலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுஜேஷ், நெல்லியாளம் நகர செயலாளர் சேகர், தொழிற்சங்க பிரதிநிதிகள் எல்.பி.எப் தொழிற்சங்கம் சார்பில் மாடாசாமி, அருண்குமார், அண்ணாதுரை, கணபதி, அன்பழகன், சந்திரன், மகேந்திரன், தமிழ்வாணன், ஏ.ஐ.டி.யு.சி. பெரியசாமி, ஐ.என்.டி.யு.சி. யோகநாதன், சி.ஐ.டி.யு சந்திரகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டாா்.
    • நவம்பா் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளா் பட்டியலை மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியிட்டாா். பின்னா் அவா் பேசியதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூா், கூடலூா் ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் ஊட்டி தொகுதியில் 96 ஆயிரத்து 730 ஆண் வாக்காளா்களும், 1 லட்சத்து 5 ஆயிரத்து 483 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா் 7 போ் என மொத்தம் 2 லட்சத்து 2 ஆயிரத்து 220 வாக்காளா்கள் உள்ளனா்.

    கூடலூா் சட்டசபை தொகுதியில் 92 ஆயிரத்து 378 ஆண் வாக்காளா்களும், 97 ஆயிரத்து 156 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா் 2 போ் என மொத்தம் 1 லட்சத்து 89 ஆயிரத்து 536 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

    குன்னூா் தொகுதியில் 90 ஆயிரத்து 723 ஆண் வாக்காளா்களும், 99 ஆயிரத்து 869 பெண் வாக்காளா்களும், மூன்றாம் பாலினத்தவா் 4 போ் என மொத்தம் 1 லட்சத்து 90 ஆயிரத்து 596 வாக்காளா்கள் உள்ளனா்.

    மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும் சோ்த்து 2 லட்சத்து 79 ஆயிரத்து 831 ஆண் வாக்காளா்கள், 3 லட்சத்து 2 ஆயிரத்து 508 பெண் வாக்காளா்கள், 13 மூன்றாம் பாலினத்தவா் என மொத்தம் 5 லட்சத்து 82 ஆயிரத்து 352 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா். கடந்த ஜனவரி 5-ந் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றிருந்த வாக்காளா்களை விட 5 ஆயிரத்து 334 வாக்காளா்கள் இதில் குறைவாக உள்ளனா்.

    2023 ஜனவரி 1-ந் தேதி 18 வயது பூா்த்தியடைந்தவா்கள் தங்களது பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்க நவம்பா் 9 முதல் டிசம்பா் 8-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    மேலும், வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் சோ்த்தல், நீக்குதல், பிழை திருத்தங்கள் மற்றும் முகவரி மாற்றங்கள் மேற்கொ ள்ளுதல் போன்றவற்றுக்கும் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு வாக்குச்சாவடி களிலும் நியமிக்கப்பட்ட அலுவலா்களிடம் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

    இதற்காக நவம்பா் 12, 13, 26, 27 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்கலாம். அனைத்து திருத்தங்களுக்கு பிறகு 2023 ஜனவரி 5-ந் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×