என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவை, நீலகிரியில் விடிய, விடிய கனமழை: குஞ்சப்பனை-கோத்தகிரி சாலையில் 10 இடங்களில் நிலச்சரிவு
- கோத்தகிரியை சுற்றியுள்ள கொடநாடு, குஞ்சப்பனை, சோலூர்மட்டம், கூக்கல்தொரை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
- குஞ்சப்பனையில் இருந்து கோத்தகிரிக்கு செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூா், மஞ்சூா், கூடலூா் பகுதிகளில் நேற்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இந்த மழையானது இன்று காலை வரை நீடித்தது.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் கோத்தகிரி மார்க்கெட்டில் வழிந்தோடிய வெள்ளம் தாழ்வான இடங்களில் உள்ள கடைகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.
இதனால் வியாபாரிகள் சிரமம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் பேரூராட்சி ஊழியர்கள் விரைந்து வந்து தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
கோத்தகிரியை சுற்றியுள்ள கொடநாடு, குஞ்சப்பனை, சோலூர்மட்டம், கூக்கல்தொரை உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
குஞ்சப்பனையில் இருந்து கோத்தகிரிக்கு செல்லும் சாலையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது. இதேபோல் அந்த பகுதியில் நின்றிருந்த மரமும் மழைக்கு முறிந்து கீழே விழுந்தது.
தொடர் மழை காரணமாக கூக்கல் தொரை பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கின. இதன் காரணமாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது.
கனமழை காரணமாக ஊட்டி-மேட்டுப்பாளையம் சாலையில் நந்தகோபால் பாலம் பகுதியில் பெரிய மரம் ஒன்று சாலையில் விழுந்தது. இதுகுறித்த தகவலின் பேரில் குன்னூா் தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று மரத்தை வெட்டி அகற்றினா். மரம் விழுந்ததால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் பகல் முழுவதும் மழை பெய்து கொண்டிருந்ததால் ஊட்டி தாவரவியல் பூங்கா மற்றும் படகு இல்லத்துக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள் கடும் அவதி அடைந்தனா்.
கோவை மாவட்டத்திலும் நேற்று காலை முதல் விடிய, விடிய மழை பெய்து கொண்டே இருந்தது. மாநகரில் பீளமேடு, சிங்காநல்லூர், ராமநாதபுரம், கவுண்டம்பாளையம், செல்வபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் பலத்த மழை பெய்தது.
மழையால் மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
அவினாசி சாலையில் உள்ள மேம்பாலத்தின் தரைப்பாலம், கிக்கானி பாலம், லங்கா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தகவல் அறிந்ததும் மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்களுடன் விரைந்து வந்து மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர்.
கனமழை காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.






