என் மலர்tooltip icon

    நீலகிரி

    • சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்றிருந்தார்.
    • கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக கோத்தகிரி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் அடிப்படையில் கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் அர்ஜூ–ணன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுனர். அப்போது கோத்தகிரி அரவேணு பகுதியில் உள்ள ஒரு இறைச்சி கடையின் அருகில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்றிருந்தார்.

    அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர் கோத்தகிரி தவிட்டுமேடு பகுதியை சேர்ந்த விஜயகுமார் (வயது54) என்பதும் இவர் அரவேணு பகுதிகளில் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் கோத்தகிரி காமராஜர் சதுக்கம் பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ததாக பாலன் (வயது64) என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விவசாயிகளுக்கு விளக்கும் கூட்டம் நடைபெற்றது.
    • செயலியின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார்.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தோட்டக்கலை துறை சார்பில் ஜக்கனாரையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் பல்துறை ஒருங்கிணைப்பு கூட்டம் மற்றும் உழவன் செயலி குறித்து விவசாயிகளுக்கு விளக்கும் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு கோத்தகிரி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஐஸ்வர்யா தலைமை தாங்கினார்.

    கூட்டத்தில் வேளாண்மை பொறியியல், வேளாண் வணிகம் மற்றும் விற்பனை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் துணை தோட்டக்கலை அலுவலர் ரமேஷ், தோட்டக்கலை துறை மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினார்.

    ஆத்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரசாந்த் உழவன் செயலியின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார்.

    இப்பயிற்சியில் தேயிலை அறுவடை எந்திரம் கண்காட்சி நடத்தப்பட்டது. உதவி தோட்டக்கலை அலுவலர் அஜித் அனைவரையும் வரவேற்றார். 80-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கூட்ட முடிவில் மணிமேகலா நன்றி கூறினார்

    • வாகன ஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.
    • செல்பி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது.

    உறைபனி தாக்கத்தால் தேயிலை செடிகள், காய்கறி செடிகள் மற்றும் புல் வெளிகள் கருகி விட்டன.

    ஊட்டி, மஞ்சூர், குன்னூர், கோத்தகிரி, மசினகுடி, முதுமலை ஆகிய பகுதிகளில் பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதனால் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தாவரங்கள் மற்றும் புற்கள் காய்ந்து விட்டன. இதனால் உணவு மற்றும் தண்ணீர் தேடி விலங்குகள் இடம் பெயர்ந்து வருகின்றன.

    முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கூடலூர்-கக்கநல்லா சாலை, மசினகுடி-முதுமலை சாலையோரங்களில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன.

    இவை உணவு தேடி சாலையோரங்களுக்கு வருகின்றன. குறிப்பாக யானை, மான்கள் கூட்டமாக வலம் வருகின்றன.

    திடீரென சாலையை கடக்கின்றன. இதனால் வேகமாக வரும் வாகனங்களில் வனவிலங்குகள் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் பயணிக்க வேண்டும்.

    இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, செல்பி மோகம் அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் விலங்குகளை கண்டவுடன் செல்பி எடுக்கின்றனர். இதனால் அவற்றுக்கு இடையூறு ஏற்படுவதுடன், மனிதர்களை தாக்கும் அபாயமும் உள்ளது.

    எனவே முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் செல்பி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • இயற்கையான முறையில் நடத்தப்பட்ட இந்த வில் அம்பு சாஸ்திர திருமண விழாவின்போது மணமகன் மற்றும் மணமகள் தங்கள் முன்னோர்களை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.
    • மற்றொரு திருமணத்தில் அர்ஜ் நேர்குட்டன்-ஆஸ்வினி சின் ஆகிய தம்பதிகளும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

    ஊட்டி:

    மலை பிரதேசமான நீலகிரி மாவட்டத்தில் தோடர், இருளர், குரும்பர், காட்டுநாயக்கர், பணியர், கோத்தர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பூர்வகுடி இன மக்களான இவர்கள் திருமண விழாக்களும், கோவில் நிகழ்ச்சிகளும் இன்றும் பழமை மாறாமல் தங்கள் முன்னோர்களின் பாரம்பரிய வழிகாட்டுதலின் முறைப்படி நடத்தி வருகின்றனர்.

    இவர்களில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிகளில் வசிக்கும் தோடர் பழங்குடியின மக்கள் பல நூற்றாண்டை கடந்து இன்றும் பாரம்பரியமாக திருமண விழாக்கள் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா அருகே அமைந்துள்ள கார்டன் மந்து பகுதியில் தோடர் இனத்தை சேர்ந்த நார் நஷ்குட்டன்-கிர்ந்தனா சின் ஆகியோர் தங்கள் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

    இயற்கையான முறையில் நடத்தப்பட்ட இந்த வில் அம்பு சாஸ்திர திருமண விழாவின்போது மணமகன் மற்றும் மணமகள் தங்கள் முன்னோர்களை வணங்கி ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

    தொடர்ந்து மணமகன் அடர்ந்த வனப்பகுதிக்குள் தங்களது முன்னோர்களுடன் நடந்து சென்று, வனத்திற்குள் இருந்த பூர்ஸ் என்ற சங்கரா பூ செடியில் உள்ள தண்டுகளை எடுத்து அதில் வில் அம்பை உருவாக்கி எடுத்து வந்தார்.

    பின்னர் அதனை நாவல் மரத்தின் அடியில் தனது வருகைக்காக காத்திருந்த மனைவியிடம் கொடுத்தார்.

    அப்போது மணமகள் அதை ஏற்றுக்கொண்டு நாவல் மரத்தின் அடியில் வைத்து நெய் தீப விளக்கேற்றி வில் அம்பினை வணங்கி அவரை தனது கணவனாக ஏற்று கொள்கிறாள்.

    இதேபோன்று மற்றொரு திருமணத்தில் அர்ஜ் நேர்குட்டன்-ஆஸ்வினி சின் ஆகிய தம்பதிகளும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர்.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கார்டன் மந்தில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் தோடர் பழங்குடியினர் தங்கள் பாரம்பரிய உடை அணிந்து கலாச்சார நடனம் ஆடி திருமண நிகழ்ச்சியை கோலாகலமாக கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து விருந்து உபசரிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பூங்காவிற்கு வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் தோடர் பழங்குடியினரின் வில் அம்பு சாஸ்திர திருமண நிகழ்ச்சியை பிரமிப்புடன் கண்டு ரசித்தனர்.

    • ஊட்டியில் கொட்டி வரும் தொடா் உறைபனி காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
    • பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் சுவர்ட்டர் அணிந்தபடியே சென்றனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காலை நேரத்தில் உறைபனி மற்றும் நீா்ப்பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

    ஊட்டி நகர பகுதிகளில் இன்று காலை அதிகபட்சமாக 23.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், குறைந்தபட்சமாக 1.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது.

    உதகை அருகில் உள்ள அவலாஞ்சி நீா்ப்பிடிப்பு பகுதியிலும் கடும் உறைபனி நிலவி உள்ளது. இதனால் இங்குள்ள தோட்டங்களில் வெள்ளைக் கம்பளம் போா்த்தியது போல ஐஸ் கட்டிகள் காணப்பட்டன.

    உதகை தாவரவியல் பூங்கா புல்வெளி, குதிரை பந்தய மைதானம் புல்வெளி, மரம், செடி, கொடிகளிலும் உறைபனி படர்ந்திருந்தது.

    கோத்தகிரி, மஞ்சூா், கொலக்கம்பை, கிரேக்மோா், நான்சச் போன்ற பகுதிகளிலும் நீா்ப்பனியின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

    பள்ளத்தாக்கு பகுதிகளிலும் காலை நேரத்தில் சில இடங்களில் உறைபனியும், சில இடங்களில் நீா்ப்பனியின் தாக்கமும் அதிகரித்து காணப்பட்டது.

    உறைபனியில் இருந்து தப்பிக்க மக்கள் ஆங்காங்கே தீ மூட்டி குளிர் காய்ந்து வருகிறார்கள். தேயிலை தோட்டங்களில் வேலை பார்ப்போர் சுவர்ட்டர் அணிந்து கொண்டு பணியில் ஈடுபட்டனர்.

    பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் அதிகாலையில் வேலைக்கு செல்வோர் சுவர்ட்டர் அணிந்தபடியே சென்றனர்.

    ஊட்டியில் கொட்டி வரும் தொடா் உறைபனி காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    • ரியாஸ் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வேலைக்கு சென்று வந்தார்.
    • மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது.

    கோத்தகிரி,

    கோத்தகிரி ராம்சந்த் பகுதியை சேர்ந்தவர் நசீர். இவரது மகன் ரியாஸ்(வயது18). ரியாஸ் 10-ம் வகுப்பு வரை படித்துள்ளார். பின்னர் படிப்பை பாதியிலேேய விட்டு விட்டு, வேலைக்கு சென்று வந்தார்.

    நேற்று இரவு ரியாஸ் அதே பகுதியை சேர்ந்த தனது நண்பரான மாத்யூவுடன் வெளியில் செல்ல முடிவு செய்தார்.

    அதன்படி ரியாசும், அவரது நண்பர் மாத்யூவும், மோட்டார் சைக்கிளில் அனையட்டி பகுதிக்கு சென்றார். மோட்டார் சைக்கிளை ரியாஸ் ஓட்டினார்.

    ராம்சந்தில் இருந்து அனையட்டி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்புறத்தில் வேகமாக மோதியது.

    இதில் ரியாஸ் மற்றும் அவரது நண்பர் மாத்யூ ஆகியோர் தூக்கி வீசப்பட்டு லாரியின் அடியில் சிக்கினர்.

    இதில் ரியாஸ் தலையில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாத்யூ படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.

    இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து, லாரியின் அடியில் சிக்கி உயிருக்கு போராடிய மாத்யூவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கோத்தகிரி போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இறந்த ரியாஸின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோத்தகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • பாட்டவயல் பகுதியில் சாலையின் நடுவே காட்டு யானை ஒன்று நின்றது.
    • வாகன ஓட்டிகள் நிதானமாக செல்லவேண்டும் என காவல் துறை எச்சரித்துள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், கூடலூரில் இருந்து கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், சுல்தான் பத்தேரி செல்லும் சாலையில் இரவு நேரத்தில் பாட்டவயல் பகுதியில் சாலையின் நடுவே காட்டு யானை ஒன்று வாகனங்களை வழிமறித்து நின்றது. நீண்ட நேரம் யானை அங்கிருந்து நகரவில்லை. இதனால் ஆம்புலன்ஸ் உள்பட அனைத்து வாகனங்களும் சாலையின் இருபுறமும் அணிவகுத்து காத்து கிடந்தன. யானை நீண்ட நேரத்துக்கு பிறகு யானை அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. இதைத் தொடா்ந்து வாகனங்கள் அங்கிருந்து சென்றன. காட்டு யானைகள் சாலையில் நிற்பதால் வாகன ஓட்டிகள் நிதானமாக செல்லவேண்டும் என காவல் துறை எச்சரித்துள்ளது.

    • பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்
    • கோடை காலத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    அரவேணு,

    கோத்தகிரி அருகே உள்ள பாண்டியன் நகரை சேர்ந்தவர் மனோகரன்(வயது43).

    இவர் நடுஹட்டி ஊராட்சியின் 1-வது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

    இவர் தனது கிராமத்தில் உள்ள மக்களிடம் கோடை காலத்தில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுரை கூறி வந்தார்.

    இது சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த கவுதம்(21) என்பவருக்கும், மனோகரனுக்கும் இடையே முன் விரோதம் இருந்ததாக தெரிகிறது. கவுதம் திருப்பூரில் உள்ள பெட்ரோல் பங்க்கில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி கவுதம் விடுமுறையில் ஊருக்கு வந்தார். அப்போது மீண்டும் இது தொடர்பாக அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த வாலிபர், அங்கு கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து மனோகரனை தாக்கி விட்டு தப்பியோடிவிட்டதாக கூறப்படுகிறது.

    காயம் அடைந்த மனோகரன் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோத்தகிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

    இந்தநிலையில் சம்பவம் நடந்து 3 நாட்களாகியும், கவுன்சிலரைத் தாக்கி விட்டு தப்பிச் சென்ற வாலிபர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், உடனடியாக அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாண்டியன் நகர் கிராம மக்கள் கோத்தகிரி போலீஸ் நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் கவுன்சிலரைத் தாக் கிய கவுதம் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற ்கொண்டு வருகின்றர். இதையடுத்து கிராம மக்கள் அங் கிருந்து கலைந்து சென்றனர்.

    • ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது.
    • கடந்த வாரம் வரை ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.30 வரை விற்பனையாகி வந்தது

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பூண்டு, பீன்ஸ் போன்ற மலை காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் கேரளா, மும்பை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காய்கறிகளை அறுவடை செய்த பின்னர் விவசாயிகள் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.

    அங்கு மொத்த வியாபாரிகள் காய்கறிகளை ஏலம் எடுத்து வெளியிடங்களுக்கு சரக்கு வாகனங்களில் விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். குறிப்பாக ஊட்டி சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கிற்கு சந்தைகளில் நல்ல வரவேற்பு உள்ளது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் உருளைக்கிழங்கு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு விளையும் உருளைக்கிழங்கு ஊட்டி மார்க்கெட், மேட்டுப்பாளையம் மண்டிகளில் ஏல மூலம் விற்பனை செய்யப்பட்டும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

    கடந்த வாரம் வரை ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.30 வரை விற்பனையாகி வந்தது.

    தற்போது கிலோவுக்கு ரூ.15 அதிகரித்து, ரூ.45 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். இதுகுறித்து விவசாயி வினோதன் கூறியதாவது:- நீலகிரி மாவட்டத்தில் முட்டைகோஸ் கிலோ ரூ.5-க்கு விற்பனை ஆகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரிதும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. வழக்கமாக முட்டைகோஸ்களை அறுவடை செய்வதற்கு கிலோவுக்கு ரூ.5 வரை செலவாகும். கடந்த வாரம் 45 கிலோ எடை கொண்ட உருளைக்கிழங்கு மூட்டை ரூ.1,000 முதல் ரூ.1,200-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது ரூ.1,800 முதல் ரூ.2,000 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

    பொங்கல் அன்று அதிகபட்சமாக ரூ.2,200-க்கு மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் உருளைக்கிழங்கு விற்பனை செய்யப்பட்டது. நீலகிரியில் விளையும் உருளைக்கிழங்கை ஒரு மாதத்திற்கு மேல் வைத்து பயன்படுத்தலாம் என்பதால், நீலகிரி உருளைக்கிழங்கு அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்டதால் விலை உயர்வு ஏற்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு சில வாரங்கள் நீடிக்கும் என தெரிகிறது. இதன் மூலம் மற்ற காய்கறிகளால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டி விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    • முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில நாட்களாக காட்டுப்பன்றிகள் தொடர்ந்து பலியாகி வருகின்றன.
    • வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வந்தது.

    கூடலூர்,

    கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் காரணமாக ஏராளமான காட்டுப்பன்றிகள் உயிரிழந்தன. தொடர்ந்து அதன் அருகே உள்ள நீலகிரி மாவட்ட முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில நாட்களாக காட்டுப்பன்றிகள் தொடர்ந்து பலியாகி வருகின்றன. அதன் உடல்களை கைப்பற்றி கால்நடை மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.

    மேலும் இறந்த 28 காட்டு பன்றிகளின் முக்கிய உடற்பாகங்கள் சேகரிக்கப்பட்டு உத்தரபிரதேசத்தில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. அதன் முடிவில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தாக்கி காட்டுப்பன்றிகள் இறந்தது உறுதியானது. இதையடுத்து வனத்துறையினர், கால்நடை பராமரிப்பு துறையினர் வளர்ப்பு பன்றி பண்ணைகளில் ஆய்வு நடத்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

    மேலும் தமிழ்நாடு மாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடிகளில் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வந்தது. இதைத் தொடர்ந்து காட்டுப்பன்றிகள் உயிரிழப்பு கட்டுப்படுத்தப்பட்டது. இதேபோல் கூடலூர் கெவிப்பாரா பகுதியில் 2 காட்டுப்பன்றிகள் உயிரிழந்தன.

    அதன் பின்னர் உயிரிழப்புகள் எதுவும் பதிவாகவில்லை. இந்தநிலையில் நடு கூடலூர், ஆனைசெத்தகொல்லி பகுதியில் 2 ஆண் காட்டுப்பன்றிகள் மர்மமாக இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து வனச்சரகர் (பொறுப்பு) யுவராஜ் தலைமையிலான வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டு உடல்களை கைப்பற்றினர். பின்னர் கால்நடை பராமரிப்பு துறையினர் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்தனர். தொடர்ந்து முக்கிய உடற்பாகங்கள் சேகரிக்கப்பட்டு, ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அதன் முடிவு வந்த பின்னரே ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் தாக்கி உயிரிழந்ததா என்பது தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • நடவடிக்ைக எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பஸ் நிறுத்தத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.

    கோத்தகிரி,

    கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது.

    இந்த பஸ் நிறுத்தத்தில் பொதுமக்கள் பஸ்சுக்காக காத்திருப்பது வழக்கம். குறிப்பாக மாலை, காலை நேரங்களில் பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் பஸ் ஏறி செல்வார்கள்.

    இதனால் இந்த பஸ் நிறுத்தத்தில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கும். இந்த பஸ் நிறுத்தத்தின் அருகில் கோத்தகிரி பேரூராட்சிக்கு சொந்தமான கழிப்பிடம் ஒன்று உள்ளது.

    இந்த கழிப்பிடம் சரிவர சுத்தம் செய்யாமல் இருப்பதால் இந்த கழிப்பிடத்தில் இருந்து அதிக அளவு துர்நாற்றம் வெளியேறி வருகிறது.

    இதனால் பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் வெகுவாக சிரமம் அடைந்து வருகின்றனர்.

    பஸ் வரும் வரை மூக்கை முடி கொண்டு அங்கேயே நிற்க வேண்டிய நிலையும் காணப்படுகிறது. துர்நாற்றம் காரணமாக நோய் பரவுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக கழிப்பிடத்தை சரிவர சுத்தம் செய்து பொது மக்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் நோய் தோற்று ஏற்படாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆக்கி போட்டி குன்னூர் அறிஞர் அண்ணா அரசு பள்ளி மைதானத்தில் நடைபெற்று வந்தது.
    • இறுதி போட்டியில் ஆலோரை ஸ்போர்ட்ஸ் கிளப், பிளான்டர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் மோதின.

    ஊட்டி,

    குன்னூர் நகர தி.மு.க இளைஞரணி மற்றும் நெப்டியூன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் மாநில தி.மு.க இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் 45-வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான ஆக்கி போட்டி குன்னூர் அறிஞர் அண்ணா அரசு பள்ளி மைதானத்தில் நடைபெற்று வந்தது.

    இறுதி போட்டியில் ஆலோரை ஸ்போர்ட்ஸ் கிளப், பிளான்டர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிகள் மோதின. இதில் ஆலோரை ஸ்போர்ட்ஸ் கிளப் அணி வெற்றி பெற்றது.போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

    விழாவுக்கு நகர இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபன் தலைமை தாங்கினார்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை குன்னூர் நகராட்சி துணை தலைவர் பா.மு.வாசிம்ராஜா செய்திருந்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக நகர தி.மு.க செயலாளர் எம்.ராமசாமி கலந்துகொண்டு வெற்றிபெற்ற ஆலோரை ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினருக்கு பரிசு கோப்பை வழங்கினார்.

    இதில் நகர இளைஞரணி துணை அமைப்பாளர்கள் சையது மன்சூர், செலின்ராஜா, நகர அவைத் தலைவர் தாஸ், துணை செயலாளர் முருகேசன், கவுன்சிலர்கள் மணிகண்டன், ராபர்ட், குமரேசன் மற்றும் மாணவரணி விஜியராஜ், பொறியாளர் அணி பாலாஜி, கிளை செயலாளர்கள், சண்முகம், சிக்கந்தர், அப்துல்காதர், லியாகத் மற்றும் நந்தகுமார், தினேஷ், கிருஷ்ணகுமார், ஹபீப், விவேக், நாகூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×