என் மலர்tooltip icon

    நீலகிரி

    • சுற்றுலா பயணிகள் ரசித்தனர்.
    • கோடையின் ஆரம்பம் வரை பூக்கும்.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளும் கிழக்கு தொடர்ச்சி மலைகளும் சந்திக்கும் இடமாக தொட்டபெட்டா மலைச்சி கரம் உள்ளது.

    இந்த மலையில் பல்வேறு அரிய வகை தாவரங்கள், மலர்கள், மூலிகைகள் மற்றும் மரங்கள் உள்ளன. குறிப்பாக, ரோடோடென்ரன் மரங்கள் அதிகளவு காணப்படுகிறது. குளிர் பிரதேசமான இமாச்சல பிரதேசம் மற்றும் நீலகிரியில் மட்டுமே இந்த வகை மரங்கள் காணப்படுகிறது.

    மிகவும் உயரம் குறைந்த, அதிக கிளைகளை கொண்ட இந்த மரத்தில் ஆண்டு தோறும் பனிக்காலமான டிசம்பர் மாதங்களில் சிவப்பு நிற ரோஜா மலரை போன்ற மலர்கள் பூக்கும். தற்போது கால மாற்றத்தால் ஜனவரி மாதம் வரை இந்த பூக்கள் பூக்கிறது. அடர் சிவப்பு மற்றும் சில இடங்களில வெளிர் சிவப்பு நிறத்தில் இந்த மலர்கள் காணப்படும்.பார்ப்பதற்கு ரோஜா மலர்களை போலவே காட்சியளிக்கும். இதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இதனை ரோஜா மலர் என நினைத்து அருகில் சென்று பார்த்த பின்னரே ரோடோடென்ரன் மலர் என தெரிய வரும்.

    இது நேபாளத்தின் தேசிய மலர். அமெரிக்காவில் வாஷிங்டன் மற்றும் மேற்கு வர்ஜீனியா மாநில மலர்*. ந்தியாவில் நாகாலாந்து மாநில மலர். சீனாவில் ஜியாங்சி மாகாண மலர் மற்றும் இந்தியாவில் சிக்கிம் மற்றும் உத்தரகாண்ட் மாநில மரம். இம்மரங்களின் பெரும்பாலான இனங்கள் பிரகாசமான வண்ண மலர்களைக் கொண்டுள்ளன, அவை குளிர்காலத்தின் பிற்பகுதியிலிருந்து கோடையின் ஆரம்பம் வரை பூக்கும்.

    தற்போது நீலகிரி மாவட்டத்தில் தொட்டபெட்டா, அவலாஞ்சி, அப்பர்பவானி, வெஸ்டர்ன்கேட்ச்மென்ட், பங்கிதபால், சைலன்வேலி மற்றும் கோரகுந்தா போன்ற பகுதிகளில் உள்ள இந்த மரங்களில் ரோடோடென்ரன் மலர்கள் அதிகளவு பூத்துள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். 

    • யானையை பிடிக்க உரிய உத்தரவை உயர் அதிகாரிகளிடம் வாங்கி அதனை காண்பிக்க வேண்டும் என்றனர்.
    • இறந்த நவுசாத்தின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி சீபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் நவுசாத்(வயது37), ஜமால்.

    இவர்கள் 2 பேரும் சீபுரம் அம்புலி மலை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் காவலர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    சம்பவத்தன்று, மாலை 2 பேரும் வழக்கம் போல் பணிக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்களை யானை ஒன்று வழிமறித்தது. யானையிடம் இருந்து தப்பிக்க 2 பேரும் ஓட்டம் பிடித்தனர்.

    யாரை துரத்தி வந்து தாக்கியதில் நவுசாத் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஜமால் படுகாயம் அடைந்தார்.

    ஓவேலி போலீசார் மற்றும் வனத்துறையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்க முயன்றனர். ஆனால் பொதுமக்கள் உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் உடலை எடுத்து சென்று, சீபுரம் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் வைத்து பூட்டினர். அவர்களிடம் அதிகாரிகள் எவ்வளோ பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.

    நேற்று 2-வது நாளாக கூடலூர் டி.எஸ்.பி.செல்வராஜ், ஆர்.டி.ஓ. முகமது குதிரத்துல்லா, தாசில்தார் சித்தராஜ், ஏ.டி.எஸ்.பி சீனிவாசன், டி.எப்.ஓ. ஓம்காரம், உதவி வன அலுவலர் கருப்பையா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    யானைைய பிடிக்க எழுத்து மூலம் உத்தரவாதம் வழங்க வேண்டும். யானையை பிடிக்க உரிய உத்தரவை உயர் அதிகாரிகளிடம் வாங்கி அதனை காண்பிக்க வேண்டும் என்றனர். தொடர்ந்து அவர்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்ததால் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதையடுத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் அடங்கிய குழுவினர், அரசு அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, இந்த பகுதியில் சுற்றும் யானையை விரட்ட முதுமலையில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. கும்கி யானைகள் மூலம் குடியிருப்பு பகுதிக்குள் வரும் யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தொடர்ந்து யானையை பிடிப்பதற்கு உரிய உத்தரவு கிடைத்ததும் அதனை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இறந்த நவுசாத்தின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.

    மேலும் வனத்துறை சார்பில் ரூ.5 லட்சம், எம்.பி. சார்பில் ஒரு லட்சம் நிவாரண தொகையை உடனடியாக வழங்கப்பட்டது. இதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு லட்சம், தோட்ட நிர்வாகம் சார்பில் 3 லட்சம் ரூபாய் வழங்க உறுதியளிக்கப்பட்டது.

    இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட பின்னர் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அங்கேயே நவுசாத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதற்கிடையே இந்த பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும், தொடர்ந்து நடமாட்டத்தை கண்காணிக்கவும் முதுமலையில் இருந்து 2 கும்கி யானைகள் சீபுரம் பகுதிக்கு லாரியில் கொண்டு வரப்பட்டன.

    அந்த பகுதியில் 2 கும்கி யானைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். 

    • விவசாயி ஒருவர் கோத்தகிரி ரோட்டில் நடந்து சென்றார்.
    • போலீசார் அந்த 2 பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்

    ஊட்டி,

    ஊட்டி பர்ன் ஹில் பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர் கோத்தகிரி ரோட்டில் நடந்து சென்றார்.அங்போது அங்கு நின்றிருந்த வாலிபர் தங்களிடம் அழகிகள் உள்ளனர். விருப்பம் இருந்தால் பணம் கொடுத்து உல்லாசம் அனுபவிக்கலாம் என்றார். இதனை கேட்டு அந்த விவசாயி அவருடன் ஒரு ஓட்டலுக்கு சென்றார். அங்கு சென்றதும் பணம் எடுத்து வருவதாக அங்கிருந்தவர்களிடம் கூறி வெளியே சென்றார். பின்னர் இதுகுறித்து அவர் ஊட்டி மத்திய போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் உடனே சம்பவ இடத்துக்கு சென்று அந்த ஓட்டலில் சோதனை செய்தனர். அதில் 2 பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த 2 பெண்களையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். விபசாரத்தில் ஈடுபட்ட புேராக்கர்கள் தென்காசியை சேர்ந்த சையது அலி (வயது 43), மேலூரை சேர்ந்த ரகுபதி (36), தூத்துக்குடியை சேர்ந்த அபுதாகீர் (47) ஆகியோரை கைது செய்தனர்.

    • மும்பையை சேர்ந்த கார்த்திகி கொன்சால்வெஸ் என்ற பெண் இயக்குனர் தி எலிபண்ட் விஸ்பெரர்ஸ் என்ற ஆவணப்படத்தை இயக்கியிருந்தார்.
    • இந்த ஆவணப்படம் ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

    ஆசியாவிலேயே நூற்றாண்டுகளை கடந்தது நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம். முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வனத்தில் உள்ள மரங்களை வெட்டி எடுத்து வருவதற்காக வளர்ப்பு யானைகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டவும் அல்லது பிடிக்கவும் கும்கி யானைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளை பராமரிக்கும் பணியில் வனத்துறையினர், பழங்குடி மக்கள் பணி ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் வருபவர்கள் தான் பாகன்கள். இவர்களின் முழு பணியும் யானைகளை பராமரிப்பது மட்டும் தான். அந்த யானைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கூடிய நபராக இருப்பவர்கள் பாகன்கள்.

     

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தாயை பிரிந்து தவித்த பிறந்து 3 மாதங்களே ஆன ரகு என்ற குட்டி யானையும், சத்தியமங்கலம் வனத்தில் தாயை பிரிந்த 5 மாத அம்முக்குட்டி என்றழைக்கப்படும் பொம்மி யானையும் முதுமலை வளர்ப்பு முகாமுக்கு கொண்டுவரப்பட்டது.

    இதை பராமரிக்கும் பொறுப்பினை கணவன், மனைவியாக பொம்மன், பெள்ளி என்ற பாகன்களிடம் வனத்துறை ஒப்படைத்தது. இந்த இரு யானைகளையும் வளர்த்த பொம்மன், பெள்ளி தம்பதியை மையமாக வைத்து மும்பையை சேர்ந்த கார்த்திகி கொன்சால்வெஸ் என்ற பெண் இயக்குனர் தி எலிபண்ட் விஸ்பெரர்ஸ் என்ற ஆவணப்படத்தை கடந்த 2 ஆண்டுகளாக ஊட்டியில் தங்கி இயக்கி உள்ளார்.

     

    இந்த ஆவணப்படம் கடந்த ஆண்டு ஆஸ்கார் விருது பட்டியலுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது இந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கான இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதனால் குட்டி யானைகளை வளர்த்த பாகன் தம்பதி மகிழ்ச்சியில் உள்ளனர். பொம்மன் கூறியதாவது, 10 வயதில் அப்பாவுக்கு உதவியாக பாகன் வேலைக்கு வந்தேன். யானைகளின் குணங்கள், அதன் செயல்பாடுகளை நன்கு அறிவேன்.18 வயதில் அண்ணா என்ற கும்கி யானைக்கு காவடியாக பணியாற்றினேன்.

    இப்போது 54 வயதாகிறது. யானைகளை பராமரிப்பதில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் உள்ளது. எப்போதுமே எனக்கு குட்டி யானைகள் மீது தனிபாசம் உண்டு. தாயை பிரிந்து வரும் குட்டிகளை தனி கூண்டில் வைத்து பராமரிப்போம். நான் வளர்த்த யானைகள் பற்றிய ஆவணப்படம் ஆஸ்கார் விருதுக்கான இறுதிபட்டியலில் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

     

    பெள்ளி கூறும்போது, இது எங்கள் கிராமத்திற்கே கிடைத்த பெருமையாகும். குட்டி யானைகள் பராமரிப்பின் போது குழந்தைகள் போன்று நம்மிடம் கொஞ்சி விளையாடும். தாய்-சேய் போராட்டம் போல குட்டி யானையை வளர்ப்பதில் நெகிழ்ச்சி ஏற்படும் என்றார். ஆவணப்படத்தில் இடம் பெற்ற பொம்மி, ரகு என்ற குட்டி யானைகளை வளர்த்த பொம்மன், பெள்ளி தம்பதியினரை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த பாகன் தம்பதியை நீலகிரி எம்.பி. ஆ.ராசா முதுமலைக்கே சென்று, அவர்களை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், தனது சொந்த நிதியில் இருந்து ரூ.25 ஆயிரமும் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார். ஆஸ்கர் விருதுக்கான இறுதி பட்டியலில் உள்ள இந்த படம் விருதை வெல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

    • மாணவர்களிடையே பெருகி வரும் போதை பழக்கத்தை ஒழிக்கும் விதமாக மினி மாரத்தான் போட்டி நடந்தது.
    • இளைஞர்களை விளையாட்டுத்துறையில் சிறந்தவர்களாக உருவாக்க விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட பாரதீய ஜனதா இளைஞர் அணி சார்பில் மாணவர்களிடையே பெருகி வரும் போதை பழக்கத்தை ஒழிக்கும் விதமாக மினி மாரத்தான் போட்டி தேசிய இளைஞர் அணி தினத்தை முன்னிட்டு நடைபெற்றது.

    ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா சாலையில் தொடங்கிய மினி மாரத்தான் போட்டியை மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் ஷிவா, மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பிரேம் யோகன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மினி மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் மாநில இளைஞர் அணி தலைவர் ரமேஷ் ஷிவா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் தமிழகத்தில் போதை பொருட்கள் புழக்கமானது அதிகரித்து வருகிறது. இதற்கு முழுக்க முழுக்க ஆளும் தி.மு.க. அரசு தான் காரணம். தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பாக இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இனிவரும் காலங்களில் இளைஞர்களை விளையாட்டுத்துறையில் சிறந்தவர்களாக உருவாக்க பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

    முன்னதாக மினி மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் கேடயம், சான்றிதழ்களை அவர் வழங்கினார்

    மாவட்ட பொது செயலாளர் ஈஸ்வரன், பரமேஸ்வரன், நகரத் தலைவர் பிரவீன், நகர பொதுச்செயலாளர் சுரேஷ்குமார், நகரத் துணைத் தலைவர் அரிகிருஷ்ணன், நீலகிரி மாவட்ட பாரதீய ஜனதா கட்சி எஸ்.டி. அணி மாவட்ட தலைவர் வினோத் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளது.
    • குறிப்பாக கஞ்சா மற்றும் போதை பழக்கங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகமாகவே உள்ளது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் குன்னூர் வெலிங்டனில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமை தாங்கினார்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. சட்டசபை குழு தலைவரும், எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

    தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அபரீதமான வளர்ச்சி அடைந்துள்ளது. அதை நாங்கள் சொல்வதை விட தி.மு.க அமைச்சரே கூறியிருக்கிறார்.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஜி.கே.வாசனை சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர்.

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை பொறுத்தமட்டில் மாநில தலைவர் அண்ணாமலை எடுக்கும் முடிவிலேயே போட்டியானது இருக்கும்.

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் நாங்கள் ஏற்கனவே ஒரு முறை வெற்றி பெற்றுள்ளோம்.

    வருகிற தேர்தலிலும் கூட்டணி கட்சிகள் இணைந்து போட்டியிடும் போது நிச்சயம் தாமரை சின்னத்தில் இங்கு தேர்தலில் போட்டியிடுவோம்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமாக உள்ளது. குறிப்பாக கஞ்சா மற்றும் போதை பழக்கங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகமாகவே உள்ளது.

    இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    டாஸ்மாக் கடைகள் முன்பு பள்ளி, மாணவர்கள் பெண்கள் அதிகமாக நிற்பதை காண முடிகிறது. இது தொடர்பாக வீடியோ காட்சிகளும் வந்துள்ளது.

    இதுகுறித்து நான் பலமுறை சட்டசபையில் கருத்து தெரிவித்துள்ளேன். ஆனால் இதுவரை அதற்கு தீர்வு கண்டதாக தெரியவில்லை.

    எனவே தமிழகத்தில் டாஸ்மாக் கடையின் நேரங்களை குறைப்பதுடன் மதுக்கடைகளையும் குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுமக்கள் நவ்ஷாத் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • காட்டு யானையை கண்காணிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்குட்பட்ட சீ போர்த் பகுதியை சேர்ந்தவர் நவ்ஷாத்(வயது38). தொழிலாளி.

    இவரும், அதே பகுதியை சேர்ந்த ஜமால்(28) என்பவரும் தனியார் எஸ்டேட் காபி தோட்ட பகுதியில் நடந்து வந்தனர்.

    அப்போது அங்கு மறைந்திருந்த காட்டு யானை திடீரென 2 பேரையும் துரத்தியது. யானையிடம் இருந்து தப்பிக்க 2 பேரும் ஓட்டம் பிடித்தனர். ஆனால் யானை விடாமல் துரத்தி வந்து 2 பேரையும் தாக்கியது. இதில் நவ்ஷாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜமால் படுகாயத்துடன் உயிருக்கு போராடினார்.

    சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் யானையை விரட்டி காயம் அடைந்த ஜமாலை மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து நவ்ஷாத் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அவரது உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போலீசார், வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தும் அவர்கள் எடுக்கவிடவில்லை. யானையை இந்த பகுதியை விட்டு விரட்ட வேண்டும், யானையை பிடித்து அடர்ந்த வனத்திற்குள் விட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். போராட்டம் விடிய, விடிய நீடித்தது.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக யானை தாக்கி இறந்த நவ்ஷாத்தின் உடலை எடுக்க விடாமல் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பகுதியில் சுற்றி திரியும் யானையை உடனே பிடிக்க வேண்டும்.

    இதற்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே யானையை கண்காணிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. கும்கிகள் அந்த பகுதியில் நிறுத்தப்பட்டு யானையின் நடமாடத்தை கண்காணித்து வருகின்றனர். 

    • ரூ.25 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.
    • வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது.

    இங்கு வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் ஆ.ராசா எம்.பி., சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் முதுமலை தெப்பக்காடு முகாமுக்கு வந்தனர்

    அங்கு பொம்மி, ரகு என்ற குட்டி யானைகளை பராமரித்த பாகன் தம்பதியான பொம்மன், பெள்ளியை நேரில் சந்தித்து பாராட்டினர். மேலும் அவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. அப்போது வனத்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • செல்போனில் புகைப்படம் எடுத்துச் சென்றனா்.
    • 20-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூா் மாா்க்கெட் பகுதியில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு விற்பனைக்கு கொண்டு வரக்கூடிய மீன்கள் அனைத்தும் ராமேசுவரத்தில் இருந்து கொண்டு வரப்படுகின்றன. இந்நிலையில் இங்குள்ள சந்தைக்கு நேற்று 100 கிலோ எடை கொண்ட மயில் ரகம் பெரிய மீன் ஒன்றும் வந்து இருந்தது.

    இந்த மீனை கடை முன் பொதுமக்கள் பாா்வைக்காக விற்பனையாளா்கள் வைத்திருந்தனா். இதை ஏராளமானவா்கள் பாா்த்துச் சென்றனா். சிலா் ஆச்சரியத்துடன் செல்போனில் புகைப்படம் எடுத்துச் சென்றனா்.

    • பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
    • மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட காவல்துறை, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில், மனிதநேய வார விழா பாலடாப் பகுதியில் உள்ள பழங்குடியினா் மியூசியத்தில் நடைபெற்றது. இதில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகா் கலந்து கொண்டு ஒழுக்கம், நன்னெறி, சமுதாய அக்கறை, பிறருக்கு உதவும் மனப்பான்மை, மனிநேயம் குறித்து மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா்.நிகழ்ச்சியில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் யசோதா, விஜயலட்சுமி, நஞ்சநாடு ஊராட்சித் தலைவா் சசிகலா, தோடா் இனத் தலைவி வாசமல்லி, மஞ்சூா் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமாா், அரசு வக்கீல் முகமது மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

    • பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
    • நகர்புறங்களை நோக்கி படையெடுத்துக் கொண்டு இருக்கிறது.

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக காட்டெருமைகள் அதிகளவில் நடமாடி வருகின்றன. மேலும் வனவிலங்குகள் அனைத்தும் தற்போது வனப்பகுதியை விட்டு மக்கள் வசிக்கக்கூடிய நகர்புறங்களை நோக்கி படையெடுத்துக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை ஜான் ஸ்கொயர் சத்யா பர்னிச்சர் பகுதியில் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி செல்லும் சாலையில் காட்டெருமை ஒன்று உலா வந்தது. இதனால் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரும் அச்சத்துடன் சென்றனர்.இதுபோன்று காட்டெருமைகள் அடிக்கடி இப்பகுதிக்கு வருவதால் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. காட்டெருமைகளின் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் இவற்றின் நடமாட்டத்தை முற்றிலுமாக கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

    • இயந்திரங்கள் மற்றும் விதைகள் வழங்கப்பட்டன.
    • ரூ.98.65 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை திறந்துவைத்தனா்.

    ஊட்டி,

    கூடலூரில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூடலூா் கோட்டாட்சியா் முகமது குதுரத்துல்லா வரவேற்றாா். சுற்றுலாத் துறை அமைச்சா் ராமசந்திரன், நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா ஆகியோா் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து பேசினர்.

    விழாவில் வருவாய்த் துறை சாா்பில் 151 பயனாளிகளுக்கு ரூ.5.89 கோடி மதிப்பில் மாற்று குடியமா்வுக்கான பட்டாக்களும், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 51 பயனாளிகளுக்கு ரூ. 54 ஆயிரத்திற்கான உதவித் தொகை பெறுவதற்கான ஆணையும், ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சாா்பில் 250 பயனாளிகளுக்கு ரூ.11.21 கோடி மதிப்பிலான பழங்குடியினருக்கு வீடு வழங்குவதற்கான ஆணையும்,

    அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.6.30 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கான சாவியும் வழங்கப்பட்டன. ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிா் குழுக்களுக்கு வங்கிக் கடன், தோட்டக் கலைத் துறை சாா்பில் 5 பயனாளிகளுக்கு சிறு பொறி இயந்திரங்கள் மற்றும் விதைகள் வழங்கப்பட்டன.

    முன்னதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மருத்துவ முகாமை அமைச்சரும், எம்.பி.யும் பாா்வையிட்டனா். தொடா்ந்து பல்வேறு துறைகள் சாா்பில் கட்டி முடிக்கப்பட்ட ரூ. 98.65 லட்சம் மதிப்பிலான கட்டிடங்களை திறந்துவைத்தனா். தொடா்ந்து தோட்டக் கலைத் துறை, மகளிா் திட்டம், ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பாா்வையிட்டனா்.

    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலா் கீா்த்தி பிரியதா்ஷிணி, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநா் வித்யா, திட்ட இயக்குநா் ஜெயராம், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் பாலகிருஷ்ணன், தோட்டக்கலை இணை இயக்குநா் ஷிபிலா மேரி, நகராட்சி தலைவா்கள் பரிமளா, சிவகாமி, நகராட்சி ஆணையா் பிரான்சிஸ் சேவியா், முன்னாள் எம்.எல்.ஏ. திராவிடமணி, நகா் மன்ற உறுப்பினா்கள், பேரூராட்சி தலைவா்கள் உள்ளிட்ட அனைத்து துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா். தாசில்தார் சித்தராஜ் நன்றி கூறினாா்.

    ×