என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யானை தாக்கி காவலாளி பலி: காட்டு யானையை விரட்ட 2 கும்கி யானைகள் வரவழைப்பு
    X

    யானை தாக்கி காவலாளி பலி: காட்டு யானையை விரட்ட 2 கும்கி யானைகள் வரவழைப்பு

    • யானையை பிடிக்க உரிய உத்தரவை உயர் அதிகாரிகளிடம் வாங்கி அதனை காண்பிக்க வேண்டும் என்றனர்.
    • இறந்த நவுசாத்தின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள ஓவேலி சீபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் நவுசாத்(வயது37), ஜமால்.

    இவர்கள் 2 பேரும் சீபுரம் அம்புலி மலை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் காவலர்களாக பணியாற்றி வருகின்றனர்.

    சம்பவத்தன்று, மாலை 2 பேரும் வழக்கம் போல் பணிக்கு புறப்பட்டு சென்றனர். அப்போது அவர்களை யானை ஒன்று வழிமறித்தது. யானையிடம் இருந்து தப்பிக்க 2 பேரும் ஓட்டம் பிடித்தனர்.

    யாரை துரத்தி வந்து தாக்கியதில் நவுசாத் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஜமால் படுகாயம் அடைந்தார்.

    ஓவேலி போலீசார் மற்றும் வனத்துறையினர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்க முயன்றனர். ஆனால் பொதுமக்கள் உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மேலும் உடலை எடுத்து சென்று, சீபுரம் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் வைத்து பூட்டினர். அவர்களிடம் அதிகாரிகள் எவ்வளோ பேச்சுவார்த்தை நடத்தி பார்த்தனர். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.

    நேற்று 2-வது நாளாக கூடலூர் டி.எஸ்.பி.செல்வராஜ், ஆர்.டி.ஓ. முகமது குதிரத்துல்லா, தாசில்தார் சித்தராஜ், ஏ.டி.எஸ்.பி சீனிவாசன், டி.எப்.ஓ. ஓம்காரம், உதவி வன அலுவலர் கருப்பையா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    யானைைய பிடிக்க எழுத்து மூலம் உத்தரவாதம் வழங்க வேண்டும். யானையை பிடிக்க உரிய உத்தரவை உயர் அதிகாரிகளிடம் வாங்கி அதனை காண்பிக்க வேண்டும் என்றனர். தொடர்ந்து அவர்கள் தங்கள் கோரிக்கையில் உறுதியாக இருந்ததால் உடலை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதையடுத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் அடங்கிய குழுவினர், அரசு அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, இந்த பகுதியில் சுற்றும் யானையை விரட்ட முதுமலையில் இருந்து 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளது. கும்கி யானைகள் மூலம் குடியிருப்பு பகுதிக்குள் வரும் யானையை அடர்ந்த வனத்திற்குள் விரட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    தொடர்ந்து யானையை பிடிப்பதற்கு உரிய உத்தரவு கிடைத்ததும் அதனை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இறந்த நவுசாத்தின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என உறுதி அளித்தனர்.

    மேலும் வனத்துறை சார்பில் ரூ.5 லட்சம், எம்.பி. சார்பில் ஒரு லட்சம் நிவாரண தொகையை உடனடியாக வழங்கப்பட்டது. இதேபோல் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு லட்சம், தோட்ட நிர்வாகம் சார்பில் 3 லட்சம் ரூபாய் வழங்க உறுதியளிக்கப்பட்டது.

    இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட பின்னர் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அங்கேயே நவுசாத்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இதற்கிடையே இந்த பகுதியில் சுற்றி திரியும் ஒற்றை காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டவும், தொடர்ந்து நடமாட்டத்தை கண்காணிக்கவும் முதுமலையில் இருந்து 2 கும்கி யானைகள் சீபுரம் பகுதிக்கு லாரியில் கொண்டு வரப்பட்டன.

    அந்த பகுதியில் 2 கும்கி யானைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து வனத்துறையினர் காட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×