என் மலர்
சினிமா செய்திகள்

ஆஸ்கர் இறுதிப் பட்டியலில் 'தி எலிபண்ட் விஸ்பெரர்ஸ்' ஆவணப்படம்- பாகன் தம்பதியினருக்கு குவியும் பாராட்டுக்கள்
- மும்பையை சேர்ந்த கார்த்திகி கொன்சால்வெஸ் என்ற பெண் இயக்குனர் தி எலிபண்ட் விஸ்பெரர்ஸ் என்ற ஆவணப்படத்தை இயக்கியிருந்தார்.
- இந்த ஆவணப்படம் ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ஆசியாவிலேயே நூற்றாண்டுகளை கடந்தது நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம். முதுமலை புலிகள் காப்பகத்தில் 28 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வனத்தில் உள்ள மரங்களை வெட்டி எடுத்து வருவதற்காக வளர்ப்பு யானைகள் பயன்படுத்தப்பட்டன. தற்போது ஊருக்குள் நுழையும் காட்டு யானைகளை விரட்டவும் அல்லது பிடிக்கவும் கும்கி யானைகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள வளர்ப்பு யானைகளை பராமரிக்கும் பணியில் வனத்துறையினர், பழங்குடி மக்கள் பணி ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் வருபவர்கள் தான் பாகன்கள். இவர்களின் முழு பணியும் யானைகளை பராமரிப்பது மட்டும் தான். அந்த யானைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கூடிய நபராக இருப்பவர்கள் பாகன்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தாயை பிரிந்து தவித்த பிறந்து 3 மாதங்களே ஆன ரகு என்ற குட்டி யானையும், சத்தியமங்கலம் வனத்தில் தாயை பிரிந்த 5 மாத அம்முக்குட்டி என்றழைக்கப்படும் பொம்மி யானையும் முதுமலை வளர்ப்பு முகாமுக்கு கொண்டுவரப்பட்டது.
இதை பராமரிக்கும் பொறுப்பினை கணவன், மனைவியாக பொம்மன், பெள்ளி என்ற பாகன்களிடம் வனத்துறை ஒப்படைத்தது. இந்த இரு யானைகளையும் வளர்த்த பொம்மன், பெள்ளி தம்பதியை மையமாக வைத்து மும்பையை சேர்ந்த கார்த்திகி கொன்சால்வெஸ் என்ற பெண் இயக்குனர் தி எலிபண்ட் விஸ்பெரர்ஸ் என்ற ஆவணப்படத்தை கடந்த 2 ஆண்டுகளாக ஊட்டியில் தங்கி இயக்கி உள்ளார்.

இந்த ஆவணப்படம் கடந்த ஆண்டு ஆஸ்கார் விருது பட்டியலுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. தற்போது இந்த ஆவணப்படம் ஆஸ்கர் விருதுக்கான இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதனால் குட்டி யானைகளை வளர்த்த பாகன் தம்பதி மகிழ்ச்சியில் உள்ளனர். பொம்மன் கூறியதாவது, 10 வயதில் அப்பாவுக்கு உதவியாக பாகன் வேலைக்கு வந்தேன். யானைகளின் குணங்கள், அதன் செயல்பாடுகளை நன்கு அறிவேன்.18 வயதில் அண்ணா என்ற கும்கி யானைக்கு காவடியாக பணியாற்றினேன்.
இப்போது 54 வயதாகிறது. யானைகளை பராமரிப்பதில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் உள்ளது. எப்போதுமே எனக்கு குட்டி யானைகள் மீது தனிபாசம் உண்டு. தாயை பிரிந்து வரும் குட்டிகளை தனி கூண்டில் வைத்து பராமரிப்போம். நான் வளர்த்த யானைகள் பற்றிய ஆவணப்படம் ஆஸ்கார் விருதுக்கான இறுதிபட்டியலில் இடம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பெள்ளி கூறும்போது, இது எங்கள் கிராமத்திற்கே கிடைத்த பெருமையாகும். குட்டி யானைகள் பராமரிப்பின் போது குழந்தைகள் போன்று நம்மிடம் கொஞ்சி விளையாடும். தாய்-சேய் போராட்டம் போல குட்டி யானையை வளர்ப்பதில் நெகிழ்ச்சி ஏற்படும் என்றார். ஆவணப்படத்தில் இடம் பெற்ற பொம்மி, ரகு என்ற குட்டி யானைகளை வளர்த்த பொம்மன், பெள்ளி தம்பதியினரை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்த பாகன் தம்பதியை நீலகிரி எம்.பி. ஆ.ராசா முதுமலைக்கே சென்று, அவர்களை நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், தனது சொந்த நிதியில் இருந்து ரூ.25 ஆயிரமும் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தினார். ஆஸ்கர் விருதுக்கான இறுதி பட்டியலில் உள்ள இந்த படம் விருதை வெல்ல வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.






