என் மலர்
நீலகிரி
- மலர் கண்காட்சிக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், தாவரவியல் பூங்காவை பொலிவுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
- நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தடுப்புகளில் தற்போது பெகுனியா மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது.
ஒவ்வொரு கோடை சீசனின் போதும் ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மலர் கண்காட்சி அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது.
மே மாதம் பூங்காவில் நடைபெறும் மலர்கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடந்த ஜனவரி மாதம் 30 ஆயிரம் பூந்தொட்டிகளில் பல்வேறு வகையான மலர்செடிகள் நடவு செய்யப்பட்டன.
மேலும் கோடை சீசனுக்காக டேலியா, பேன்சி, இன்கா மேரிகோல்டு, பிகோனியா, பிரமிளா, சால்வியா, பிரஞ்மேரி கோல்டு உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டன.
தற்போது கோடை சீசன் தொடங்கி விட்டதாலும் மலர்கண்காட்சி தொடங்க இருப்பதாலும் இத்தாலியன் பூங்கா, ஜப்பான் பூங்கா, பெரணி இல்ல பகுதி, இலை பூங்கா உள்பட பல்வேறு பகுதிகளில் பாத்திகள் அமைக்கப்பட்டும், நடைபாதையோரங்களிலும் மலர் நாற்றுகள் நடப்பட்டது.
மலர் கண்காட்சிக்கு இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், தாவரவியல் பூங்காவை பொலிவுபடுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக பூங்காவில் உள்ள பெரிய புல்வெளி மைதானம் பராமரிப்பு பணிக்காக மூடப்பட்டு, அதனை சுற்றி கயிறு கட்டப்பட்டு உள்ளது. அதனுள் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
அதேபோல் நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கான்கிரீட் தடுப்புகளில் தற்போது பெகுனியா மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது சால்வியா, மேரி கோல்டு, டேலியா, பெட்டுன்னி ஆகிய மலர்கள் பூக்க தொடங்கியுள்ளன. பூங்காவில் பூக்கள் பூக்க தொடங்கி பூத்து குலுங்குகின்றன. இதனை பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பதுடன், தங்களது செல்போன்களில் படம் எடுத்து மகிழ்கின்றனர்.
இதுதவிர ஜெரோனியம், சைக்லமன், பென்ஸ்டிமன், சுவீட் லில்லியம், பேன்சி, பெட்டுனியா உள்பட மொத்தம் 230 வகையான மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து, அவர்களது கண்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கிறது.
பூந்தொட்டிகள் மலர் மாடங்கள் மற்றும் புல்வெளிகளில் பல்வேறு அலங்காரங்களுடன் அடுக்கி வைக்கப்பட உள்ளது.
தற்போது ஊட்டியில் வெயில் அடித்து வருவதால் மலர் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி அதனை பராமரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் பூக்கள் பூத்து உள்ளதால் கோடை சீசன் களை கட்டியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
கோடை விடுமுறையை முன்னிட்டு தற்போதே ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களாக நீலகிரியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்காவில் உள்ள மலர் செடிகளை கண்டு ரசித்தனர். படகு இல்லத்தில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடைபெற இருப்பதால் பூங்காவில் பூச்செடிகளை பராமரித்தல், தடுப்பு வேலிகளுக்கு வர்ணம் பூசுதல் போன்ற பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்சமயம் மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் சுற்றுலா பயணிகள் மீண்டும் சொந்த ஊர்களுக்கு செல்ல கோத்தகிரி சாலை ஒருவழிப்பாதையாக உள்ளது.
இந்த வழியாக வரும் சுற்றுலா பயணிகள் கோத்தகிரி நேரு பூங்காவையும் சுற்றி பார்த்து செல்கின்றனர்.
அங்குள்ள பூங்காவில் குழந்தைகள் விளையாடி மகிழ்கின்றனர். காய்கறி கண்காட்சிக்கு இன்னும் ஒரு வார காலம் மட்டும் இருப்பதால் பராமரிப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
சுற்றுலா பயணிகள் வருகையால் நீலகிரியில் உள்ள தங்கும் விடுதிகள், காட்டேஜூகளும் நிரம்பி வழிந்தன. வரும் நாட்களில் இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை பயன்படுத்தி சில காட்டேஜூகள் கட்டணத்தை உயர்த்தியும் வருகிறது.
சுற்றுலா பயணிகள் வருகையால் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவை மட்டுமே நம்பி தொழில் நடத்தி வந்த அனைத்து வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது
- குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை குரும்பாடி பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது.
குன்னூர்
நீலகிரியில் பெய்த கனமழையால் மரங்கள் விழுந்தன. இதன் காரணமாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பி உள்ளது. மேலும் வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு நீங்கி உள்ளது. இந்தநிலையில் தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
அதன்படி, நீலகிரி மாவட்டம் முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழை காரணமாக நேற்று அதிகாலை 3 மணியளவில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை குரும்பாடி பகுதியில் சாலையின் குறுக்கே மரம் விழுந்தது.
இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. செல்போன் சிக்னல் கிடைக்காத பகுதி என்பதால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கணேசன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மின்வாள் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் பொக்லைன் எந்திரம் மூலம் மரம் சாலையில் இருந்து அகற்றப்பட்டது. மலைப்பாதையில் மரம் விழுந்ததால் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் சுமார் 6 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர். மண் சரிவு இதேபோல் குன்னூர் பெட்போர்டு, கோத்தகிரி-வட்டப்பாறை சாலையில் நள்ளிரவில் 2 மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மரங்களை வெட்டி அகற்றினர். மேலும் ஆங்காங்கே சில இடங்களில் லேசான மண் சரிவு ஏற்பட்டது.
இதற்கிடையில் நேற்று மதியம் 12 மணி முதல் 2 மணி வரை ஊட்டியில் கனமழை பெய்தது. இதனால் சுற்றுலா தலங்களுக்கு சென்றிருந்த, சுற்றுலா பயணிகள் விடுதிகளுக்கு சென்றனர். சிலர் குடைகளுடன் வலம் வந்தனர். ஊட்டியில் கடும் குளிர் நிலவியதால் பூங்காக்களை கண்டு ரசிக்க முடியாமல், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். நீலகிரியில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- குன்னூர்-68, பாலகொலா-69, கிண்ணக்கொரை-62, குந்தா-55, பர்லியார்-48, கோத்தகிரி-47, ஊட்டி-10 மழை பதிவானது. நீலகிரியில் சராசரியாக 23 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
- அவ்வப்போது வழிதவறி கிராம பகுதிகளுக்குள் புகுந்தும் விடும் நிலை உள்ளது.
- அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை
கோத்தகிரி
கோத்தகிரி அருகே குஞ்சப்பனை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளது. இதனால் பலா மரங்களில் ஏராளமான பிஞ்சுகள் காய்த்துள்ளன. இதை உண்பதற்காக காட்டு யானைகள் சமவெளிப் பகுதியில் இருந்து மலைப்பகுதிக்கு வந்து, இங்குள்ள வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களில் முகாமிட்டு உள்ளன. அவ்வாறு வரும் யானைகள் அவ்வப்போது வழிதவறி கிராம பகுதிகளுக்குள் புகுந்தும் விடும் நிலை உள்ளது.
இந்தநிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் காட்டு யானை முள்ளூர் கிராம பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் தொடர்ந்து நடமாடி வருகிறது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர். மேலும் அங்கு வீடுகள் உள்ளதால், கிராமத்துக்குள் யானை நுழைந்து விடுமோ என அப்பகுதி மக்கள் அச்சமடைந்து உள்ளனா். மேலும் காட்டு யானை பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. எனவே, வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து, அதை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- ஒரே நேரத்தில் பயணம் மேற்கொண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- போலீசார் போக்குவரத்தை சீர் செய்ய திணறி வந்தனர்.
கோத்தகிரி
கோடை சீசன் தொடங்கி உள்ளதால் நீலகிரி மாவ ட்டத்தில் சுற்றுலாபயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதன் காரணமாக கூடலூர், ஊட்டி, குன்னூர் பகுதிகளில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர் அம்ரித், போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து வாகன நெருக்கடியை சமாளிக்க ஒரு வழிப்பாதை யை அமல்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.
அதன்படி மேட்டுப்பா ளையத்தில் இருந்து வரும் வாகனங்கள் காட்டேரி வழியாகவும், ஊட்டியில் இருந்து கோவை, மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாகவும் செல்ல ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது
இந்தநிலையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் அதிக சுற்றுலாப் பயணிகள் ஊட்டி, குன்னூர் பகுதிகளில் சுற்றுலாவை முடித்துக்கொண்டு கோத்தகிரி மார்க்கமாக மீண்டும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர்.
நேற்று மாலை சுற்றுலா பயணிகள் அனைவரும் ஒரே நேரத்தில் பயணம் மேற்கொண்டதால் கோத்தகிரி கட்டபெட்டு பகுதியில் இருந்து குஞ்சப்பனை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றது. போலீசார் போக்குவரத்தை சீர் செய்ய திணறி வந்தனர்.
- காய்கறிகள் கேரளா, மும்பை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.
- ஊட்டி நகரசபை மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டை கோஸ், பூண்டு, பீன்ஸ் போன்ற மலைக்காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் கேரளா, மும்பை மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. இதற்காக ஊட்டி நகரசபை மார்க்கெட்டில் உள்ள மண்டிகளுக்கு காய்கறிகளை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
அங்கு மொத்த வியாபாரிகள் காய்கறிகளை ஏலம் எடுத்து வெளியிடங்களுக்கு சரக்கு வாகனங்களில் விற்பனைக்காக அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் மலைக்காய்கறிகளின் கொள்முதல் விலை உயர்ந்துள்ளது.
கடந்த வாரம் வரை ஒரு கிலோ உருளைக்கிழங்கு ரூ.20 வரை விற்பனையாகி வந்தது. தற்போது கிலோவுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.30-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதேபோல் கடந்த வாரம் கிலோ ரூ.30-க்கு விற்ற பீட்ரூட் ரூ.55-க்கும், ரூ.100-க்கு விற்ற அவரை ரூ.140-க்கும், ரூ.25-க்கு விற்ற கேரட் ரூ.40-க்கும், பட்டாணி கிலோ ரூ.120-க்கும் விற்பனையாகின. பெரும்பாலான காய்கறிகளின் விலை நேற்று உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதேவேளையில் கடந்த வாரம் கிலோ ரூ.100-க்கு கொள்முதல் செய்யப்பட்ட பீன்ஸ், நேற்று ரூ.50-க்கு மட்டுமே விலை போனது. நீலகிரி மாவட்டத்தில் நிலவும் காலநிலை காரணமாக இங்குள்ள பீன்ஸ் சமவெளி பகுதிகளில் கூடுதல் விலைக்கு போகும். கடந்த சில வாரங்களாக தாளவாடி உள்பட பல்வேறு இடங்களில் இருந்து பீன்ஸ் வரத்து அதிகரித்துள்ளது. அங்கிருந்து வரும் பீன்ஸ் விலை குறைவாக இருப்பதால் நீலகிரி பீன்ஸ் விலை சரிந்துள்ளது.
- 7 காட்டு யானைகள் மலைப்பாதையில் முகாமிட்டு உள்ளன.
- வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும்.
குன்னூர்,
குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் காட்டு யானைகள் உலா வந்தன. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. சமவெளி பகுதிகளில் உள்ள வனப்பகுதிகளில் வறட்சி நிலவுகிறது. இதனால் காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி நீலகிரி மாவட்டம் குன்னூர் வனப்பகுதியை நோக்கி இடம்பெயர்ந்து வருகின்றன. மேலும் குன்னூரில் பலாப்பழ சீசன் தொடங்கி உள்ளதால், அந்த பழங்களை ருசிக்கவும் யானைகள் முகாமிட்டு உள்ளன. இதற்கிடையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரெயில் பாதையில் அடர்லி, ஹில்குரோவ் ரெயில் நிலையங்களுக்கு இடையே உலா வருவதோடு, மலை ரெயிலை வழிமறித்து வருகின்றன. இதனால் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். தற்போது குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை பர்லியார், மரப்பாலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பலா மரங்களில் காய்கள் காய்க்க தொடங்கி உள்ளன. இதன் பழங்கள் யானைகளுக்கு பிடித்த உணவாகும். இதனால் பலா பழங்களை ருசிக்க 7 காட்டு யானைகள் மலைப்பாதையில் முகாமிட்டு உள்ளன. இந்தநிலையில் நேற்று குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதை கே.என்.ஆர்.நகர் அருகே 7 காட்டு யானைகள் உலா வந்தன. இதை பார்த்த வாகன ஓட்டிகள் சற்று தொலைவில் பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்தினர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரம் சாலையோரத்தில் யானைகள் நின்றன. பின்னர் சுமார் ½ மணி நேரம் கழித்து சாலையில் இருந்து வனப்பகுதிக்குள் யானைகள் சென்றது. அதன் பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, கோடை சீசனையொட்டி சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து செல்கின்றனர். மலைப்பாதையில் காட்டு யானைகள் நடமாட்டம் உள்ளதால், வாகன ஓட்டிகள் மிகவும் கவனமுடன் வாகனங்களை இயக்க வேண்டும். யானைகளை புகைப்படம் எடுக்கக்கூடாது. அதனை தொந்தரவு செய்யக்கூடாது என அறிவுறுத்தி உள்ளனர்.
- ரூ.6 லட்சம் வரை கடன் வாங்கினேன்.
- இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கூடலூர்
கூடலூரில் கடன் பிரச்சினையால் நகைக்கடை ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் காசிம்வயலை சேர்ந்தவர் சங்கரன். இவரது மகன் மணிகண்டன் (வயது 45). இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். அவர் கூடலூரில் உள்ள நகைக்கடையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்றார். பின்னர் இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். இந்தநிலையில் மணிகண்டன் பணியாற்றிய நகைக்கடையின் அருகே உள்ள மற்றொரு அறையின் கதவு பாதி திறந்த நிலையில் இருப்பதை நேற்று அப்பகுதி மக்கள் கண்டனர். பின்னர் உள்ளே பார்த்தபோது, அங்கு மணிகண்டன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்த கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள், சப்-இன்ஸ்பெக்டர் கபில்தேவ் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது மணிகண்டன் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் மணிகண்டன் கூறியுள்ளதாவது:- நான் சீட்டு நடத்தி வந்தேன். இதில் சீட்டு எடுத்து விட்டு பலர் பணம் செலுத்தாமல் ஏமாற்றி விட்டனர். இதனால் மீதமுள்ளவர்களுக்கு பணம் வழங்க ரூ.6 லட்சம் வரை கடன் வாங்கினேன். அதை திரும்ப செலுத்த முடியாமல் இருந்து வந்தேன். மேலும் எனக்கு பணம் தர வேண்டியவர்கள் ஏமாற்றி விட்டனர். நான் பணம் கொடுக்க வேண்டியவர்கள் மற்றும் எனக்கு பணம் தராமல் ஏமாற்றியவர்களின் பெயர் விவரங்களை குறிப்பிட்டு உள்ளேன். இதனால் தற்கொலை முடிவை எடுத்தேன். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். போலீசார் விசாரணை பின்னர் உடல் பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்சினையால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் நிரம்பி வழிந்தன.
- கோவை குற்றாலத்திலும் தண்ணீர் விழத் தொடங்கி உள்ளதால் அங்கும் சுற்றுலா பயணிகள் அதிகம் காணப்பட்டது.
ஊட்டி:
கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பொதுமக்கள் குளுகுளு காலநிலை நிலவும் நீலகிரி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு படையெடுக்கத் தொடங்கி உள்ளனர்.
கடந்த 3 நாட்களாக தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா தலங்களில் வழக்கத்தை விட அதிக கூட்டத்தை காண முடிந்தது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. அதனை அனுபவித்தபடியே சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகிறார்கள்.
தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா மட்டுமின்றி நகருக்கு வெளியில் அமைந்துள்ள தொட்டபெட்டா சிகரம், பைக்காரா படகு இல்லம், சூட்டிங் மட்டம், குன்னூர் பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களிலும் குவிந்து இயற்கை அழகை ரசித்து வருகிறார்கள்.
கடந்த 8 நாட்களில் மட்டும் 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் ஊட்டிக்கு வந்துள்ளனர். நேற்றும், இன்றும் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் அதிக கூட்டம் காணப்பட்டது. இதன் காரணமாக முக்கிய சாலைகளான கமர்சியல் சாலை, எட்டின்ஸ் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் ஏராளமானோர் நிறுத்தப்பட்டு போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தினர். நகரில் வாகன நெரிசலை தவிர்க்கும் வகையில் சுற்றுலா தலங்களுக்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சர்க்கியூட் பஸ்கள் இயக்கப்பட்டன. அதனை பயன்படுத்தி சுற்றுலா பயணிகள் பல இடங்களுக்கு சென்று மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் கூட்டத்தால் ஊட்டியில் உள்ள தங்கும் விடுதிகள், ஓட்டல்கள் நிரம்பி வழிந்தன. இன்னும் பல நாட்களுக்கு ஓட்டல்கள் முன்பதிவு மூலம் நிரம்பி உள்ளன. இந்த மாதம் கோடை விழா நடைபெற உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களான வால்பாறை, டாப்சிலிப், ஆழியாறு உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. வால்பாறையில் அவ்வப்போது லேசான மழையுடன் இதமான காலநிலை நிலவுகிறது. இதை அனுபவித்தபடி கூழாங்கல் ஆறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து வருகிறார்கள்.
அங்குள்ள விடுதிகள் நிரம்பி வழிந்ததால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்குவதற்கு இடம் இல்லாமல் தவித்தனர். பலர் தங்களது சுற்றுலா திட்ட நேரத்தை குறைத்துக்கொண்டு திரும்பிச் சென்றனர்.
இதேபோல கோவை குற்றாலத்திலும் தண்ணீர் விழத் தொடங்கி உள்ளதால் அங்கும் சுற்றுலா பயணிகள் அதிகம் காணப்பட்டது.
- காமிராக்கள் பொருத்தும் பணிகள் கடந்த மாதம் முதல் தொடங்கி தீவிரமாக நடந்து வந்தது.
- டிரோன் காமிராவும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
ஊட்டி,
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக ஊட்டி விளங்குகிறது.
இங்கு ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை சீசனுக்கு மட்டும் 8 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.
இதேபோல் ஊட்டி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க ஊட்டி நகருக்கு வந்து செல்கிறார்கள்.
இதனால் ஊட்டியில் வார விடுமுறை, பண்டிகை மற்றும் சீசன் காலங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இதையடுத்து போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் வகையிலும், குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையிலும் அதிநவீன கண்காணிப்பு காமிரா பொருத்த போலீசார் முடிவு செய்தனர்.
இதன்படி கடந்த டிசம்பர் மாதம் ஊட்டியில் சேரிங்கி ராஸ், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் 90 அதிநவீன கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டது.
ஊட்டி நகர் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தும் பணிகள் கடந்த மாதம் முதல் தொடங்கி தீவிரமாக நடந்து வந்தது.
இந்தநிலையில் புதிதாக பொருத்தப்பட்ட கண்காணிப்பு காமிராக்களை நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.
இதேபோல் டிரோன் காமிராவும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் கூறியதாவது:-
இதற்கு முன்பு பொருத்தப்பட்ட அதிநவீன காமிராக்கள் மூலம் 100 மீட்டர் தூரம் வரை உள்ள காட்சிகளை துல்லியமாக புகைப்படம் மற்றும் வீடியோவாக பதிவு செய்ய முடியும்.
மேலும் தானாகவே வாகன பதிவு எண்களை சேமித்து வைக்கும். இந்த பதிவுகள் அனைத்தும் 3 மாதங்களுக்கு அப்படியே இருக்கும். தேவைப்பட்டால் மீண்டும் எடுத்து கொள்ளலாம்.
தற்போது பொருத்தப்படும் காமிராக்கள், தனியார் பங்களிப்பு நிதியுடன் பொருத்தப்பட்டுள்ளது. ரூ.60 லட்சம் செலவில் மொத்தம் 100 கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் குற்ற சம்பவங்களை தடுக்கவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கபட்டது.
- 5 வகையான உணவுகள், இனிப்பு, பழங்களும் பரிமாறப்பட்டது.
ஊட்டி,
கேத்தி பேருராட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில், சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வரவேற்றார். கேத்தி செயல் அலுவலர் நட்ராஜ், பேருராட்சி தலைவர் ஹேமாமாலினி ஆகியோர் தலைமை தாங்கினர். விழாவில், கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை பொருட்கள்(மஞ்சள், குங்குமம், வளையல், மங்கல பொருட்கள் தட்டு, ரவிக்கை) வழங்கபட்டது.
கர்ப்பிணி பெண்களுக்கு தாய்வீட்டு சீதனமாக சமுதாய வளைகாப்பு சிறப்பாக நடத்தப்பட்டு 5 வகையான உணவுகள், இனிப்பு, பழங்களும் பரிமாறப்பட்டது. இதில் பேருராட்சி உறுப்பினர்கள் அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- தொழு நோயாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
- ரத்த சக்கரை அளவு, ரத்த சோகை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை இலவசமாக செய்தனர்.
ஊட்டி,
குன்னூர் கிரேஸ்டிரஸ்ட் காருண்யா டிரஸ்ட்டுடன் இணைந்து தி.மு.க பிரமுகரும், சமூக சேவகருமான கோவர்த்தனன் தலைமையில் தொழு நோயாளிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசின் மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர், பல்நோக்கு மறு வாழ்வு உதவியாளர் சண்முக மூர்த்தி, குன்னூர் நகர தி.மு.க பொருளாளர் ஜெகநாத் ராவ் மற்றும் அப்துல் கலாம் ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி தஸ்தகீர், பால் பரமானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் சீயோன் ரத்தப் பரிசோதனை நிலையம் சார்பில் அதன் நிறுவனர் மாவட்ட மருத்துவர் அணி துணை அமைப்பாளர் ரூபேஸ் மாற்றுத்திறனாளிகளுக்கு ரத்த சக்கரை அளவு, ரத்த சோகை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளை இலவசமாக செய்து கொடுத்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தி.மு.க பிரமுகர்கள் கிப்சன் மற்றும் சேவியர் ஆகியோர் ெசய்திருந்தனர்.
- பணிக்காக கொண்டு வரப்பட்ட கற்கள் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
- கல், மண் குவியலை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக காணப்படுகிறது.
ஊட்டியில் உள்ளூர் மற்றும் வெளியூர் வாகனங்களுக்கு வாகனங்களை நிறுத்த இடம் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இதனால் ஊட்டி நகரையே பலமுறை சுற்றி வரும் நிலையே காணப்படுகிறது.
இந்த நிலையில் கோடப்பமந்து கால்வாயின் தடுப்பு சுவர்கள் கட்டும் பணி முடிந்த பின்பும், பணிக்காக கொண்டு வரப்பட்ட கற்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் சாலையோரம் கொட்டி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் அந்த சாலையில் வாகனங்களை நிறுத்த முடியாமலும், வாகனங்கள் செல்வதற்கும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுத்து அங்கு இருக்கும் கல், மண் குவியலை அகற்ற வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.






