என் மலர்tooltip icon

    நீலகிரி

    • தெரு நாய்களை பார்த்ததும் ஓட்டம் பிடித்தது
    • அப்பகுதி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    குன்னூர்,

    நீலகிரி மாவட்டத்தில் தற்போது கிராம மற்றும் நகர பகுதிகளில், வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகளவில் காணப்படுகின்றன. இதில் உணவு தேடி கரடிகள் தினந்தோறும் வலம் வருவது வாடிக்கையாகி விட்டது.

    இந்நிலையில் குன்னூர் நகரப்பகுதியில் ரெயில் வேக்கு சொந்தமான ரேஷன் கடை ஒன்று உள்ளது. அங்கு அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு இருந்தன. இதன் அருகாமையில் குன்னூர் பஸ் நிலையம் மற்றும் மலை ரெயில் நிலையமும், அமைந்துள்ளது. இதனிடையே இரவு கரடி ஒன்று பூட்டி இருந்த ரேஷன் கடையின் கதவை உடைத்து உள்ளே செல்லமுயன்ற போது அங்கிருந்த தெரு நாய்கள் வரவே கரடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது. இதனால் அங்கிருந்த உணவு பொருட்கள் வீணாகாமல் தப்பியது. இச்சம்பவம் நடந்த இடத்தை வனத்துறை அதிகாரிகள் வந்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் கரடி வந்து சென்ற காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியிருந்தது. குன்னூர் பஸ் நிலையம் பகுதியில் கரடி ஒன்று சர்வசாதாரணமாக வந்து சென்றது. அப்பகுதி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கன மழையால் தரைப்பாலம் உடைந்தது
    • மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    பந்தலூர் அருகே உள்ள கூவமூலா பகுதியில் உள்ள கிராமத்திற்கு செல்லக்கூடிய தரைப்பாலம் கன மழையால் உடைந்தது. இதனால் சுற்றுவட்டார மக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    நீலகிரி மாவட்டம் பந்தலூர், கூடலூர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு கன மழை பெய்தது. இதனையடுத்து அய்யன்கொல்லி, பகுதியில் சாலையின் குறுக்கே மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    மேலும் கூவமூலா அருகே செட்டிவயல் பகுதியில் தரைபாலம் தண்ணீரில் அடித்து சென்றது. இதனால் உப்பட்டி மற்றும் பந்தலூர் பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக விவசாயிகள் விளைபொருட்களை எடுத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர செட்டி வயல் பகுதியில் 180 குடும்பங்கள் இந்த பாலத்தின் வழியேசெல்ல வேண்டும். இந்த பகுதியில் பாலம் உடைந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    • கோடை சீசனையொட்டி வருகிற 19-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
    • 31-ந் தேதி தாவரவியல் பூங்காவிவ் நிறைவு விழா நடைபெற உள்ளது

    ஊட்டி:

    கோடை சீசனையொட்டி வருகிற 19-ந் தேதி ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

    இதன்படி இந்த மாதம் 6 மற்றும் 7-ந் தேதி கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி மற்றும் கோடை விழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது. 7-ந் தேதி முதல் 31-ந் தேதி தேதி வரை ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் புகைப்பட கண்காட்சி, 8-ந் தேதி சுற்றுச்சூழலை பாதுகாக்க வாக்கத்தான், 11-ந் தேதி படகு போட்டி, 12,13,14-ந் தேதி கூடலூரில் வாசனைத் திரவிய கண்காட்சி, 13,14,15-ந் தேதிகளில் ஊட்டி ரோஜா பூங்காவில் ரோஜா கண்காட்சி, 17-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை அசெம்பிளி தியேட்டரில் திரைப்பட விழா, 19-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, 21 22-ந் தேதிகளில் குன்னூரில் தேயிலை சுற்றுலா, 25 முதல் 31-ந்தேதி வரை மகளிர் சுய உதவிக் குழு சார்பில் பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் கோடை விழா, 27 28-ந் தேதிகளில் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழ கண்காட்சி, 31-ந் தேதி தாவரவியல் பூங்காவிவ் நிறைவு விழா நடைபெற உள்ளது

    இதில் சிறப்பம்சமாக 13-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஹெலிகாப்டர் சுற்றுலாவும், 20-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை ஊட்டி அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் பலூன் திருவிழாவும் நடைபெற உள்ளது.

    • ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்றது.
    • இதனால் குடியிருப்பு பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.


    ஊட்டி,

    குன்னூர் மேட்டுப்பா ளையம் சாலையில் பர்லியார் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் வியாபாரத்தை நம்பி உள்ளனர். பர்லியார் குடியிருப்பு பகுதி பர்லியார் ஊராட்சியின் 9-வது வார்டிற்கு உட்பட்டது ஆகும். இந்த குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர கோரிக்கை விடுத்து இருந்தனர்.

    இதில் மழை காலங்களில் வீடுகளுக்கு பின்புறம் மண்சரிவு ஏற்படாமல் தடுக்க தடுப்பு சுவர் அமைத்து தர வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக இருந்தது. இதன்படி ரூ.4 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு பணி நடைபெற்றது. தடுப்பு சுவர் கட்டும் பணி கடந்த 10 நாட்களுக்கு முன்பு நிறைவு பெற்றது. இந்தநிலையில் கடந்த 3 நாட்களாக குன்னூர் பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இந்த மழையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது. சுவர் இடிந்ததால் பொதுமக்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு பின்புறம் கற்கள் மற்றும் மண் விழுந்து உள்ளது. எதிர்வ ரும் நாட்களில் குன்னூர் பகுதியில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. அவ்வாறு மழை பெய்தால் மழைத் தண்ணீர் செல்ல வழியின்றி வீடுகளுக்குள் புகும் நிலை உள்ளது. இதனால் வீடுகளுக்கு சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. தடுப்பு சுவர் கட்டி 10 நாட்கள் ஆன நிலையில் தடுப்பு சுவர் இடிந்து விழுந்தது பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    தரமற்ற கட்டுமான பணியே இடிந்து விழ காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளார்கள். எனவே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு தரமான முறையில் தடுப்புச்சுவர் விரைவில் அமைத்துத்தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்

    • அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா நடைபெற்றது.
    • 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ஊட்டி,

    ஊட்டியில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா நடைபெற்றது.

    கூட்டத்தில் ஏழை மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆனந்தன், நீலகிரி மாவட்ட செயலாளரும், மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கப்பச்சி வினோத் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    நிகழ்ச்சியில் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராஜகோபால் தலைமை தாங்கினார். இதில் மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சாந்திராமு, மாவட்ட துணை செயலாளர் கோபால கிருஷ்ணன், பாசறை மாவட்ட செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான அக்கிம்பாபு, வர்த்தக அணி மாவட்ட செயலாளர் குருமூர்த்திகேத்தி, பேரூராட்சி செயலாளர் கண்ணபிரான், ஓ.சி.எஸ் தலைவர் ஜெயராமன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி நகர செயலாளரும் கிளை செயலாளருமான நொண்டி மேடு கார்த்திக் மற்றும் நிர்வாகிகள், நகர மன்ற உறுப்பினர்கள், தலைமை கழக பேச்சாளர்கள் அசோக்குமார், கூடலூர் ராமமூர்த்தி உள்பட 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ் தலைமையில் கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
    • 2 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் பழங்கள் பெரும்பாலும் செயற்கை முறையில் ரசாயனங்களை பயன்படுத்தி பழுக்க வைக்கப்படுகின்றன.

    இதனால் அதை உண்ணும் பொதுமக்களுக்கு பலவிதமான நோய்கள் பாதிக்கும் வாய்ப்புள்ளது. எனவே இவ்வாறு ரசாயனங்களை பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்பட்டு கடைகளில் விற்பனை செய்யப்படுகிறதா என உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்து, அவ்வாறு பழுக்க வைக்கப்படும் பழங்களை பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர்.

    இதன் ஒரு பகுதியாக மாவட்ட நியமன அலுவலர் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் சிவராஜ் தலைமையில் அலுவலர்கள் நேற்று கோத்தகிரி மார்க்கெட் பகுதியில் உள்ள பழகடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டார்கள். அப்போது 2 கடைகளில் அழுகிய பழங்கள் விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

    இதே போல மற்ற 2 பழக்கடைகளில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்டிருந்த 4½ கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர் தெரிவிக்கை யில், தர்ப்பூசணி, மாம்பழம், வாழைபழம் போன்ற பழங்களை இரசாயன பொ ருட்களைப் பயன்படுத்தி பழுக்க வைத்து விற்பனை செய்வது தெரிய வந்தால், அவை பறிமுதல் செய்யப் படுவதுடன் சம்பந்தப்பட்ட வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

    • 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளன.
    • பலமீட்டர் தூரம் வரை சாலை ஓரங்களில் குவிந்து உள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக கொண்டு வர மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    மாவட்ட எல்லைகளான பர்லியார், குஞ்சப்பனை சோதனை சாவடிகள், மாநில எல்லையில் உள்ள கக்கநல்லா, நாடுகாணி உள்ளிட்ட அனைத்து சோதனை சாவடிகளிலும் நீலகிரிக்கு வரும் வாகனங்களில் பிளாஸ்டிக் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுதவிர நீலகிரி மாவட்டத்தில் நகர்பகுதிகளில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு பிளாஸ்டிக் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    இந்த நிலையில் தமிழக கர்நாடக எல்லையான கக்கநல்லா.சோதனை சாவடியில் சோதனை செய்யப்பட்டது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பலமீட்டர் தூரம் வரை சாலை ஓரங்களில் குவிந்து உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் முறையாக சேமித்து வைத்து அப்புறபடுத்தபடாத காரணத்தால் அடர்ந்த வனப்பகுதியில் பல மீட்டர் தூரத்திற்கு பரவலாக குவிந்து கிடக்கின்றன.

    இதில் தேங்கும் உணவை ருசிக்க அப்பகுதியில் உள்ள குரங்குகள் குப்பைத் தொட்டியைச் சுற்றி குவிகின்றன. இதேபோல சில சமயங்களில் மான்கள் உள்ளிட்ட வன விலங்குகள் குப்பைத்தொட்டியில் உணவு கிடைக்கும் என்று எதிர்ப்பார்த்து வருவதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் வனவிலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் என வனவிலங்கு ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இது பற்றி வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் கவலைபடுவதாக தெரியவில்லை என சுற்றுசூழல் மற்றும் வன ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

    • வருகிற 6 மற்றும் 7-ந் தேதிகளில் கண்காட்சி நடைபெறுகிறது.
    • 10 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று காய்கறி சிற்ப அலங்காரம் செய்யவுள்ளனர்.

    ஊட்டி,

    காய்கறி கண்காட்சியில் கோத்தகிரி பேரூராட்சி சார்பில் மக்காத குப்பைகளை கொண்டு உருவாக்கப்பட்ட சிற்பங்கள் வருகிற 6 மற்றும் 7-ந் தேதிகளில் காய்கறி கண்காட்சி கோத்தகிரி நேரு பூங்காவில் நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் காய்கறிகளான பிரமாண்ட சிற்பங்கள், பறவைகள், வனவிலங்குகளின் உருவங்கள் அமைக்கப்படும். மேலும் பொழுது போக்கு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    இந்த காய்கறி கண்காட்சியை காண வெளிமாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இந்த பூங்காவிற்கு வந்து செல்வர். எனவே பூங்காவை அழகுபடுத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் தற்போது பூங்காவின் நுழைவு வாயில் அருகே எல். இ.டி விளக்குகளுடன் 'ஐ லவ் கோத்தகிரி' என்கிற வாசகம் மற்றும் மலர் அலங்காரத்துடன் ஒரு செல்பி ஸ்பாட், பூங்காவின் மையப் பகுதியில் பிரமாண்டமான பறவையின் சிறகு போன்ற வடிவத்திலான மற்றொரு செல்பி ஸ்டேண்ட் மற்றும் செயற்கை நீரூற்று அருகே நம்ம கோத்தகிரி என்ற வாசகத்துடன் கூடிய செல்பி ஸ்பாட் என 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

    மேலும் 10 மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்று அரங்குகள் அமைத்து காய்கறி சிற்ப அலங்காரம் செய்யவுள்ளனர். சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவரும் வகையில் தோட்டக்கலை துறை சார்பில் சுமார் 4 டன் எடை கொண்ட காய்கறிகளை கொண்டு ஒரு பிரதான காய்கறி சிற்பமும், 3 சிறிய சிற்பங்களும் அமைக்கப்படுகின்றன. மேலும் கோத்தகிரி பேரூராட்சி சார்பில் மக்காத குப்பைகளை கொண்டு உருவாக்கப்பட்ட சிற்பங்களும் இந்த கண்காட்சியில் இடம் பெறவுள்ளன.

    20 அரங்குகள் அமைக்க இடம் ஒதுக்கீடு செய்வது, கலை நிகழ்ச்சிகள் நடத்துமிடத்தை தீர்மானிப்பது, காய்கறி கண்காட்சியை சிறப்பாக நடத்துவது குறித்து குன்னூர் ஆர்.டி.ஓ. பூஷணகுமார் தலைமையில் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா, தோட்டக்கலை உதவி இயக்குநர் ஐஸ்வர்யா, தோட்டக்கலை அலுவலர் சந்திரன், செயல் அலுவலர் மணிகண்டன், சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் ஆகியோர் அரங்குகள் அமைப்போர் மற்றும் பிற துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    • நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு போதை பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பதே முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக காவல்துறையினரே கூறுகிறார்கள்.
    • ஊட்டி மாணவியை போன்று இன்னொரு உயிர் பறிபோய் விடக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    ஊட்டியில் நடந்த பள்ளி மாணவியின் கொடூர கொலை... கற்பழிப்பு சம்பவத்தால் நீலகிரி மாவட்ட போலீசாரும் உள்ளூர் மக்களும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உறைந்து போய் கிடக்கிறார்கள் என்று கூறினால் அது மிகையல்ல.

    சோலைகாடு பகுதியில் பழங்குடி இனத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த வாரம் வழக்கம்போல பள்ளிக்கு சென்று விட்டு திரும்பும் வழியில்தான் அந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது.

    சக மாணவிகளோடு பஸ்சுக்காக காத்திருந்த போதுதான் அதே பகுதியை சேர்ந்த பழங்குடியின வாலிபர் ரஜ்னேஷ் கண்ணில் மாணவி பட்டார். காரில் ஏறு... வீட்டில் போய் கொண்டு விட்டு விடுகிறேன் என கூறி மாணவியை அழைத்துச் சென்ற ரஜ்னேஷ், பின்னர் மனித மிருகமாக மாறி, மாணவியின் கற்பை துடிக்க துடிக்க சூறையாடியுள்ளான்.

    கஞ்சா போதையில் இருந்த அவனது கண்ணில் காமத்தீ பற்றி எரிந்தது. இதில்தான் அந்த பிஞ்சு பொசுங்கி போயிருக்கிறது. பள்ளிக்கு சென்ற தங்களது மகள் இன்னும் வீட்டுக்கு வரவில்லையே என்று தேடிப் பார்த்தபோதுதான், காட்டுப்பகுதியில் காமப்பேயான ரஜ்னேஷ் சுற்றி திரிந்ததை மக்கள் பார்த்துள்ளனர்.

    அதன்பிறகு அவன் சுற்றி திரிந்த இடத்தில்தான் பள்ளி மாணவி சிதைக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. வக்கிர எண்ணத்துடனேயே மாணவியை பார்த்து வந்த ரஜ்னேஷ் கடந்த 24-ந்தேதி கஞ்சா போதையில் காரில் ஏற்றிச் சென்று துடிக்க துடிக்க கொலை செய்திருப்பது தெரியவந்தது. இரும்பு ஸ்பேனரால் தாக்கி மாணவியை கொன்ற ரஜ்னேஷ் போலீசில் அளித்திருக்கும் வாக்குமூலம் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    எல்லாம் முடிந்த பின்னர் அதுபற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று மாணவியிடம் கெஞ்சி கேட்டேன். ஆனால் அவள் ஒத்துக் கொள்ளாததால் இரும்பு ஸ்பேனரால் ஒரே போடு போட்டேன். செத்துப் போயிட்டா என்று சர்வ சாதாரணமாக ரஜ்னேஷ் கூறியதை கேட்டு போலீசாரே ஒரு கணம் ஆடிப்போயிருக்கிறார்கள்.

    எங்கள் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதே மாணவி பலியாவதற்கு காரணமாகி உள்ளது என்று அப்பகுதி பெண்கள் போர்க்கொடி தூக்க... போலீசார் அடுத்தக்கட்டமாக கஞ்சா வேட்டையிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    கஞ்சாவை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்ட களத்தில் இறங்கி இருக்கும் பெண்கள் கூறும் குற்றச்சாட்டு அதிர வைப்பதாகவே உள்ளது. ரஜ்னேசை போன்று இன்னொரு வாலிபர் மாறும் முன்னர் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை மாவட்ட போலீசார் கொஞ்சம் சீரியசாகவே பார்க்க தொடங்கி உள்ளனர்.

    இன்று நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு போதை பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பதே முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக காவல்துறையினரே கூறுகிறார்கள். அந்த வகையில் ஊட்டி மாணவியை போன்று இன்னொரு உயிர் பறிபோய் விடக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

    அதே நேரத்தில் ரஜ்னேசுக்கு அதிகபட்சமாக தண்டனையை வாங்கி தருவோம் என்று கூறியுள்ளனர் போலீசார். எத்தனை தண்டனைகள் வாங்கி கொடுத்தாலும் போன உயிர் திரும்ப வருமா?...

    தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 30-ந்தேதி முதல் கஞ்சா வேட்டை 4.0 நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 3 நாட்களில் 72 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 60 கிலோ கஞ்சா மற்றும் 15 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களின் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    கஞ்சா பதுக்கி வைப்பவர்கள், விற்பவர்கள் பற்றி 044-28447701 என்ற தொலைபேசி எண்ணிலும் tndgpcontrolroom@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படுவதுடன், தக்க வெகுமதியும் வழங்கப்படும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். 

    • பிரம்மா கடவுள் உறங்குவதைப்போல தோற்றம் காணப்படுவதால் பிரம்ம கமலம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.
    • இரவு நேரங்களில் பூக்கும் இந்த மலர்களை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்து செல்வதுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுக்கா கொளப்பள்ளி கிராமத்தில் வசித்து வரும் செந்தில்குமார் என்பவர் வீட்டில் பராமரிக்கப்பட்டு வந்த பிரம்ம கமலம் செடியிலிருந்து ஆண்டுக்கு ஒரு முறை இரவு நேரத்தில் பூக்கக்கூடிய பிரம்ம கமலம் மலர்கள் பூக்க தொடங்கியுள்ளது.

    ஒரு வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே வெண்ணிறத்தில் நள்ளிரவு நேரத்தில் பூக்கும் அதிசய தன்மையும் தகவமைப்பு கொண்ட இத்தாவரத்தின் பூக்களுக்குள், பிரம்மா கடவுள் உறங்குவதைப்போல தோற்றம் காணப்படுவதால் பிரம்ம கமலம் என அழைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    ஆன்மீக உணர்வை ஏற்படுத்தும் தோற்றத்திலும், மருத்துவ குணத்தையும் கொண்டதால், பிரம்ம கமலம் மலர்கள் பூக்கள் வரிசையில் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. இலையை வெட்டி வைத்தாலே வளரும் வித்தியாசமான தகவமைப்பு பெற்று கொண்டுள்ள பிரம்ம கமலம் மலர்களை சமீபகாலமாக தமிழகத்திலும் பரவலாக விரும்பி வளர்த்து வருகின்றனர்.

    ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கும் இந்த அதிசய பூக்களை தரிசித்தால் நல்ல பலன்கள் கிடைக்குமென நம்பப்படுகிறது.

    இரவு நேரங்களில் பூக்கும் இந்த மலர்களை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்து செல்வதுடன் புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர். பல வண்ணங்களில் இந்த மலர்கள் பூத்தாலும் தற்போது பந்தலூரில் பூத்துள்ள இந்த மலர்கள் வெள்ளை நிறத்தில் பூத்துள்ளதால் தங்கள் கிராமத்திற்கு நல்லது நடக்கும் என கருதி சிலர் அந்த பூக்களுக்கு சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த அதிசய மலர்களை காண, சுற்றுப்புற கிராமங்களை சேந்த மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    • சேரிங்கிராஸ், பஸ் நிலையம், மாா்க்கெட், தலைகுந்தா ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீா்த்தது.
    • கல்லட்டி பகுதியில் சில குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்தது.

    ஊட்டி,

    ஊட்டியில் நேற்று காலை முதல் மந்தமான காலநிலை காணப்பட்டது. பின்னா் மதியம் கனமழை பெய்தது. இதன் காரணமாக ெரயில் நிலையம், படகு இல்லம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனா்.

    சேரிங்கிராஸ், பஸ் நிலையம், மாா்க்கெட், தலைகுந்தா ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீா்த்தது. இதன் காரணமாக குளிா்ந்த காலநிலை காணப்பட்டது. மழை காரணமாக பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் விடுதிகளிலும், சுற்றுலா வாகனங்களிலும் முடங்கினா்.

    தொடர்ந்து 2 நாட்கள் பெய்த மழை காரணமாக தாழ்வாக உள்ள கல்லட்டி பகுதியில் சில குடியிருப்புகளுக்குள் மழைநீா் புகுந்தது. இதனால் குடியிருப்புவாசிகள் விடிய, விடிய தூங்க முடியாமல் தவித்தனர்.

    வீடுகளுக்குள் இருந்த புகுந்த மழைநீரை குடியிருப்புவாசிகள் இன்று காலை வரை வெளியேற்றினா். தொடா் மழை இருக்கும் பட்சத்தில் இப்பகுதி மக்கள் அனைவரும் அருகில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்படுவாா்கள் என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

    இதற்கிடையே ஊட்டியில் இருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மைசூா் செல்லும் சாலையில் லேசான மண் சரிவு ஏற்பட்டது.

    • அடிப்படை தேவைகள் இல்லை என சுற்றுலா பயணிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
    • இ- கழிப்பறை வசதி அமைத்து தர வலியுறுத்தியுள்ளனர்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை, இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலாத் தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பிற மாவட்டங்கள், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனா்.

    அவர்களுக்கான அடிப்படை தேவைகள் உள்ளதா என்றால் கண்டிப்பாக இல்லை என சுற்றுலா பயணிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். குறிப்பாக உடல் உபாதைகளை கழிக்க கழிவறைகள் இல்லாமல் தவிக்கின்றனர். வாகன நிறுத்தங்களில் இ- கழிப்பறைகள் அவசியம் தேவை.

    பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள வாகன நிறுத்ததில் வாகன நிறுத்து பவர்கள் கழிப்பிடங்கள் இல்லாமல் திண்டாடி அருகில் உள்ள வீட்டிற்கு சென்று கழிவறையை உபயோகிக்க அனுமதி கேட்டு கெஞ்சிய காட்சிகள் மனதை உறைய செய்கிறது.

    சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இ- கழிப்பறைகள் உடனடியாக அமைக்க வேண்டும், ஜி.பி.எஸ் மூலம் கழிப்பறைகள் இருக்கும் இடங்களைக் கண்டுபிடித்து சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.பொது மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டி, பொது இடங்களில் நிறுவப்படும் கழிப்பறைகளே இ- கழிப்பறைகள் எனப்படுகின்றன. தண்ணீரை சிக்கனப்படுத்தவும், சுகாதாரத்தைப் பேணும் வகையிலும் அமைத்து இந்த இ- கழிப்பறைகளை பெண்கள் எளிதாக அடையாளம் காணும் வகையில் தனியாக வா்ணம் பூசப்படவேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×