என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஊட்டியை உறைய வைத்த பள்ளி மாணவி கொலை- போதை வாலிபரின் வெறியாட்டம் பற்றி பரபரப்பான 'பகீர்' தகவல்கள்
- நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு போதை பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பதே முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக காவல்துறையினரே கூறுகிறார்கள்.
- ஊட்டி மாணவியை போன்று இன்னொரு உயிர் பறிபோய் விடக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ஊட்டியில் நடந்த பள்ளி மாணவியின் கொடூர கொலை... கற்பழிப்பு சம்பவத்தால் நீலகிரி மாவட்ட போலீசாரும் உள்ளூர் மக்களும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உறைந்து போய் கிடக்கிறார்கள் என்று கூறினால் அது மிகையல்ல.
சோலைகாடு பகுதியில் பழங்குடி இனத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் கடந்த வாரம் வழக்கம்போல பள்ளிக்கு சென்று விட்டு திரும்பும் வழியில்தான் அந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது.
சக மாணவிகளோடு பஸ்சுக்காக காத்திருந்த போதுதான் அதே பகுதியை சேர்ந்த பழங்குடியின வாலிபர் ரஜ்னேஷ் கண்ணில் மாணவி பட்டார். காரில் ஏறு... வீட்டில் போய் கொண்டு விட்டு விடுகிறேன் என கூறி மாணவியை அழைத்துச் சென்ற ரஜ்னேஷ், பின்னர் மனித மிருகமாக மாறி, மாணவியின் கற்பை துடிக்க துடிக்க சூறையாடியுள்ளான்.
கஞ்சா போதையில் இருந்த அவனது கண்ணில் காமத்தீ பற்றி எரிந்தது. இதில்தான் அந்த பிஞ்சு பொசுங்கி போயிருக்கிறது. பள்ளிக்கு சென்ற தங்களது மகள் இன்னும் வீட்டுக்கு வரவில்லையே என்று தேடிப் பார்த்தபோதுதான், காட்டுப்பகுதியில் காமப்பேயான ரஜ்னேஷ் சுற்றி திரிந்ததை மக்கள் பார்த்துள்ளனர்.
அதன்பிறகு அவன் சுற்றி திரிந்த இடத்தில்தான் பள்ளி மாணவி சிதைக்கப்பட்டு மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. வக்கிர எண்ணத்துடனேயே மாணவியை பார்த்து வந்த ரஜ்னேஷ் கடந்த 24-ந்தேதி கஞ்சா போதையில் காரில் ஏற்றிச் சென்று துடிக்க துடிக்க கொலை செய்திருப்பது தெரியவந்தது. இரும்பு ஸ்பேனரால் தாக்கி மாணவியை கொன்ற ரஜ்னேஷ் போலீசில் அளித்திருக்கும் வாக்குமூலம் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எல்லாம் முடிந்த பின்னர் அதுபற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று மாணவியிடம் கெஞ்சி கேட்டேன். ஆனால் அவள் ஒத்துக் கொள்ளாததால் இரும்பு ஸ்பேனரால் ஒரே போடு போட்டேன். செத்துப் போயிட்டா என்று சர்வ சாதாரணமாக ரஜ்னேஷ் கூறியதை கேட்டு போலீசாரே ஒரு கணம் ஆடிப்போயிருக்கிறார்கள்.
எங்கள் பகுதியில் கஞ்சா புழக்கம் அதிகரித்திருப்பதே மாணவி பலியாவதற்கு காரணமாகி உள்ளது என்று அப்பகுதி பெண்கள் போர்க்கொடி தூக்க... போலீசார் அடுத்தக்கட்டமாக கஞ்சா வேட்டையிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
கஞ்சாவை ஒழிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்ட களத்தில் இறங்கி இருக்கும் பெண்கள் கூறும் குற்றச்சாட்டு அதிர வைப்பதாகவே உள்ளது. ரஜ்னேசை போன்று இன்னொரு வாலிபர் மாறும் முன்னர் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை மாவட்ட போலீசார் கொஞ்சம் சீரியசாகவே பார்க்க தொடங்கி உள்ளனர்.
இன்று நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றச்செயல்களுக்கு போதை பொருட்களின் பயன்பாடு அதிகரிப்பதே முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக காவல்துறையினரே கூறுகிறார்கள். அந்த வகையில் ஊட்டி மாணவியை போன்று இன்னொரு உயிர் பறிபோய் விடக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதே நேரத்தில் ரஜ்னேசுக்கு அதிகபட்சமாக தண்டனையை வாங்கி தருவோம் என்று கூறியுள்ளனர் போலீசார். எத்தனை தண்டனைகள் வாங்கி கொடுத்தாலும் போன உயிர் திரும்ப வருமா?...
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் 30-ந்தேதி முதல் கஞ்சா வேட்டை 4.0 நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 3 நாட்களில் 72 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 60 கிலோ கஞ்சா மற்றும் 15 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இரண்டு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும், மாநகர காவல் ஆணையர்களும் கஞ்சா பதுக்கல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களின் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
கஞ்சா பதுக்கி வைப்பவர்கள், விற்பவர்கள் பற்றி 044-28447701 என்ற தொலைபேசி எண்ணிலும் tndgpcontrolroom@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்கள் குறித்த ரகசியம் காக்கப்படுவதுடன், தக்க வெகுமதியும் வழங்கப்படும் என டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.






