என் மலர்
நாமக்கல்
- போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சம்பவம் நாமக்கல் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல்:
நாமக்கல்லை அடுத்த செல்லப்பா காலனியில் உள்ள கீழ் காலனியை சேர்ந்தவர் லோகேஷ்வரன் (வயது22). கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்பை முடித்து விட்டு தேர்வு முடிவை எதிர்பார்த்து இருந்தார்.
இந்த நிலையில் லோகேஷ்வரன் ஆன்லைன் செயலி மூலம் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கியதாக தெரிகிறது. தவணை தேதி முடிந்ததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதற்காக ஆன்லைன் செயலி நிறுவனத்தார் லோகேஷ்வரனை தொடர்பு கொண்டுள்ளனர்.
ஆனால் அவர் முறையாக பதில் அளிக்காததால், லோகேஷ்வரனின் பெற்றோரை, கடன் கொடுத்தவர்கள் தொடர்பு கொண்டுள்ளனர்.
இதனால், தான் ஆன்லைனில் கடன் வாங்கியது பெற்றோருக்கு தெரிந்து போனதை அடுத்து மனமுடைந்த லோகேஷ்வரன், வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கு போட்டுக் கொண்டார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் லோகேஷ்வரனை மீட்டு நாமக்கல்லில் உள்ள தலைமை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்ந்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறினர்.
தகவல் அறிந்து அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்த நாமக்கல் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆன்லைனில் கடன் செயலியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், நாமக்கல் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- மோகன்ராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- மர்மமான முறையில், வீட்டில் டிரைவர் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி கரியாம்பட்டி முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 33). தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி கீர்த்தனா (30).
நேற்று முன்தினம் இரவு, மோகன்ராஜ் அவரது வீட்டில் ஒரு அறையிலும், மற்றொரு அறையில் அவரது மனைவி, மகன்களும் படுத்து தூங்கினர். இந்த நிலையில் நேற்று காலையில் மோகன்ராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது உடல் அருகே மது பாட்டில் இருந்துள்ளது. அவரது முதுகில் சிறிய அளவிலான காயம் உள்ளது. இதனால் டிரைவர் மோகன்ராஜ் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.
இதுகுறித்த தகவல் அறிந்த ஆயில்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மோகன்ராஜ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் மோகன்ராஜ் கொலை செய்யப்பட்டாரா? மது போதையில் இறந்தாரா? அல்லது வேறு காரணத்தால் இறந்தாரா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் தடவியல் நிபுணர் வடிவேல் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தடயங்களை சேகரித்தார்.
இதனிடையே இறந்து கிடந்த மோகன்ராஜ் மலையாளபட்டியைச் சேர்ந்த அவரது நண்பர் சரவணன் என்பவரது மொபட்டை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். அந்த மொபட்டில் சரவணன் வைத்திருந்த ரூ.80 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு தங்க செயின் இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்மமான முறையில், வீட்டில் டிரைவர் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- சுந்தரம் (வயது 60). இவர் மன வியாதிக்காக தினசரி மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார்.
- சுந்தரம் தான் வைத்திருந்த மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டு விட்டார். இதன் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா வெங்கரை பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 60). இவர் மன வியாதிக்காக தினசரி மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். இந்நிலையில் சுந்தரம் தான் வைத்திருந்த மாத்திரைகளை அதிக அளவில் சாப்பிட்டு விட்டார். இதன் காரணமாக அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பரமத்தி வேலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியார் நிறுவன விளம்பர பேனர்கள் உள்ளிட்ட ஏராளமான பேனர்கள் ஆங்காங்கே மிக உயரமாகவும், மிகவும் நீளமாகவும் வைக்கப்பட்டு உள்ளது.
- இந்த நிலையில், பேரூராட்சிகள் நிர்வாகம் சார்பில் 6-ந் தேதி காலைக்குள் அனுமதியின்றி வைத்துள்ள பேனர்களை அகற்றி கொள்ளுமாறு தெரிவித்திருந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பகுதியில் உள்ள பரமத்தி, வேலூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை ஆகிய பேரூராட்சி பகுதிகளிலும், கபிலர்மலை, பரமத்தி, மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளிலும் சாலை ஓரங்களில் பொதுமக்கள், போக்குவரத்திற்கு இடையூராகவும், ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் கண்ணீர் அஞ்சலி, பிறந்தநாள் வாழ்த்து, கோவில், கட்சி விளம்பரங்கள், தனியார் நிறுவன விளம்பர பேனர்கள் உள்ளிட்ட ஏராளமான பேனர்கள் ஆங்காங்கே மிக உயரமாகவும், மிகவும் நீளமாகவும் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், பேரூராட்சிகள் நிர்வாகம் சார்பில் 6-ந் தேதி காலைக்குள் அனுமதியின்றி வைத்துள்ள பேனர்களை அகற்றி கொள்ளுமாறு தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில், சாலை ஓரங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டு அகற்றப்படாமல் இருந்த அனைத்து பிளக்ஸ் பேனர்களையும் நேற்று மாலை வேலூர் சிறப்பு நிலை பேரூராட்சி நிர்வாகத்தினர் அகற்றினர்.
பரமத்தி பேரூராட்சியில் பஸ் ஸ்டாப் அருகில் மற்றும் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் முற்றிலுமாக அகற்றப்பட்டது. அதேபோல் பரமத்திவேலூர்-ஜேடர்பாளையம் 4 ரோடு சாலைகளிலும், முக்கோண பூங்கா, சுல்தான்பேட்டை பேருந்து நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் வைத்திருந்த விளம்பர பிளக்ஸ் பேனர்களை வேலூர் சிறப்பு நிலை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
அதேபோல் பொத்தனூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் ஊழியர்கள் எம்.ஜி.ஆர்., சிலை அருகிலும், 4 ரோடு சாலை மற்றும் பல்வேறு பகுதிகளில் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றினர்.
இனி வரும் நாட்களில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறியும், பேரூராட்சி நிர்வாகத்தின் அனுமதி இன்றியும் பேரூராட்சி பகுதிகளில் வைக்கப்படும் விளம்பர பிளக்ஸ் பேனர்களின் உரிமையா ளர்கள் மீது அபராதம் விதித்து கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பரமத்திவேலுார் பல்வேறு பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், ரஸ்தாளி, பச்சநாடன், கற்பூரவல்லி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு ரகமான வாழைத்தார்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
- வாழைத்தார் விலை குறைந்ததால், வாழை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலுார், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், குப்புச்சிபாளையம், பாலப்பட்டி, செங்கப்பள்ளி, மணப்பள்ளி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, கொந்தளம், பொன்மலர்பாளையம், அண்ணா நகர், செல்லப்பம் பாளையம், சாணார்பாளையம், பிலிக்கல் பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், கண்டிபாளையம், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், மாரப்பம்பாளையம், சோழசிராமணி, சிறுநல்லிக்கோவில் மற்றும் பல்வேறு பகுதிகளில், ஆயிரக்கணக்கான ஏக்கரில் பூவன், ரஸ்தாளி, பச்சநாடன், கற்பூரவல்லி, மொந்தன்
உள்ளிட்ட பல்வேறு ரகமான வாழைத்தார்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். வாழைத்தார் வெட்டும் தருவாயில் வரும்போது கூலி ஆட்கள் மூலம் வாழைத்தார்களை வெட்டி உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்தி வேலூரில் நடைபெற்று வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்க்கும் கொண்டு சென்று விற் பனை செய்து வரு கின்றனர்.
வாழைத்தார்களை ஏலம் எடுத்து செல்வதற்காக நாமக்கல், கரூர் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து தங்களுக்கு கட்டுபடியாகும் விலைக்கு வாழைத்தார்களை வாங்கி லாரிகள் மூலம் கொண்டு செல்கின்றனர்.
வாங்கிய வாழைத் தார்களை தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங் களுக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த வாரம் பூவன் வாழைத்தார் ஒன்றுக்கு ரூ.300-க்கு விற்றது, தற்போது அதிகபட்சமாக, ரூ.200-க்கும், ரூ.400-க்கு விற்ற, ரஸ்தாளி தார், தற்போது, ரூ.250-க்கும், கற்பூரவல்லி வாழைத்தார் கடந்த வாரம் ரூ.300-க்கு விற்றது நேற்று ரூ.200-க்கும், ரூ.250-க்கு விற்ற பச்சநாடன் வாழைத்தார் தற்பொழுது ரூ ரூ.200-க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று, ரூ.5 விற்ற நிலையில், தற்போது, ரூ.3-யாக குறைந்துள்ளது.
வரத்து அதிகமானதும், மேலும் வெயில் காலத்தில் இரண்டு நாட்களுக்கு மேல் வாழைப்பழம் தோல்கள் கருப்பாக மாறிவிடுவதும் இதற்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
வாழைத்தார் விலை குறைந்ததால், வாழை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
- பேருந்து நிறுத்தங்களில் பயணியர் நிழற்கூடம் இல்லததால் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாணவ மாணவிகள் வெயிலில் நின்று பேருந்துக்காக காத்திருக்கும் அவலம் ஏற்படுகிறது.
- நிழற்கூடம் வேண்டி மாவட்ட கலெக்டரிடமும், குமாரபாளையம் நகராட்சி ஆணையாளரிடமும் மனு கொடுக்கப்பட்டது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் நகராட்சி பேருந்து நிறுத்தங்களில் பயணியர் நிழற்கூடம் இல்லததால் வயதானவர்கள், கர்ப்பிணி பெண்கள், மாணவ மாணவிகள் வெயிலில் நின்று பேருந்துக்காக காத்திருக்கும் அவலம் ஏற்படுகிறது. பொதுமக்களின் நலன் கருதி பள்ளிப்பாளையம் பிரிவு,
ஆனங்கூர் பிரிவு, ராஜம் தியேட்டர் நிறுத்தம் ஆகிய இடங்களில் பயணியர் நிழற்கூடமும் அமா்வதற்கு இருக்கைகளும் அமைத்துக் கொடுக்கக்கோரி மக்கள் நீதி மய்யம் மயகளிர் மற்றும் குழந்தைகள் நலஅணி நகர அமைப்பாளர் சித்ராபாபு மாவட்ட கலெக்டரிடமும், குமாரபாளையம் நகராட்சி ஆணையாளரிடமும் மனு வழங்கினார்.
- பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம் கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
- விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 150 ஹெக்டர் பரப்பளவிற்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டம் கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத் துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டில் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன உபகரணங்கள் வழங்கிட 150 ஹெக்டர் பரப்பளவிற்கு இலக்கு வழங்கப்பட்டு விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி சிறு, குறு விவசாயிகளுக்கு 5 ஏக்கர் வரை நுண்ணீர் பாசனம் அமைத்திட 100 சதவீத மானியத்திலும், பெரு விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமைத்துக்கொள்ளலாம்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி மற்றும் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், சிறு,குறு விவசாயி சான்றி தல் ஆகிய ஆவணங்களை கபிலர்மலை வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கி முன்பதிவு செய்து பயன் பெறலாம்.
மேலும் புதிதாக நுண்ணீர் பாசனம் அமைக்கவுள்ள விவசாயிகளுக்கு துணை நீர் மேலாண்மை திட்டத்தின் கீழ் மெயின் பைப் லைன் அமைக்க அதிகபட்ச மானியமாக ரூ.10 ஆயிரம், புதியதாக பயன்பாட்டிற்கு கொண்டு வரும் கிணறு அல்லது போர்வெல்லில் மின்மோட்டார் பொருத்திக் கொள்ள ரூ.15 ஆயிரம் மற்றும் பாசனத்திற்காக நீர் தேக்கத் தொட்டி 116 கனமீட்டர் அளவில் அமைத்திட மானியமாக ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என கபிலர்மலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சின்னதுரை தெரிவித்துள்ளார்.
- வசந்தபுரம் அருகே மேல் சாத்தம்பூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
- மாலை சிரஞ்சீவி நண்பர்களுடன் ஜேடர்பாளையம் தடுப்பு அணையில் உள்ள ராஜா வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தார்.
பரமத்திவேலூர்:
தேனி மாவட்டம் மார்க்கேயன்கோட்டை அருகே அய்யம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகன் சிரஞ்சீவி (வயது 20).
இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் தாலுகா வசந்தபுரம் அருகே மேல் சாத்தம்பூரில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். பெற்றோரிடம் கோபித்துக் கொண்டு ஜேடர்பாளையம் அருகே உள்ள அரசம்பாளையத்தில் நண்பர் வீட்டில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை சிரஞ்சீவி நண்பர்களுடன் ஜேடர்பாளையம் தடுப்பு அணையில் உள்ள ராஜா வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, சிரஞ்சீவி தண்ணீரில் மூழ்கி பலியானார். இதுகுறித்து தகவல் அறிந்த ஜேடர்பாளையம் போலீசார், மீனவர் உதவியுடன் சிரஞ்சீவி உடலை மீட்டனர்.
இந்தநிலையில் நேற்று சவுந்தரபாண்டியன் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில், தனது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். மேலும் சிரஞ்சீவியுடன் குளிக்கச் சென்ற மற்ற 4 பேரையும் விசாரணை செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, சிரஞ்சீவி சாவில் சந்தேகம் இருப்பதால், போலீசார் உரிய விசாரணை நடத்தினால் மட்டுமே பிரேத பரிசோதனை செய்ய சம்மதிப்போம் எனக்கூறி சவுந்தர பாண்டியன் மற்றும் அவரது உறவினர்கள், பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து, சிரஞ்சீவி இறப்பு குறித்து உரிய நடவடிக்கை எடுக்க ஜேடர்பாளையம் போலீசார் உறுதி அளித்ததின் பேரில், நீண்ட நேர போராட்டத்தை கைவிட்டனர். இதைத் தொடர்ந்து பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில், நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் சிரஞ்சீவி உடல் ஒப்படைக்கப்பட்டது.
- உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் பஸ் ஸ்டாண்ட், காவேரி நகர், பள்ளிபாளையம் பிரிவு சாலை உள்ளிட்ட பல இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சியின்போது பொதுமக்களிடம் செயல்விளக்க நிகழ்ச்சி நடத்தி காட்டப்பட்டது.
குமாரபாளையம்:
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமையில் பஸ் ஸ்டாண்ட், காவேரி நகர், பள்ளிபாளையம் பிரிவு சாலை உள்ளிட்ட பல இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியானது நடைபெற்றது.
இதில் ஆணையர் (பொ) ராஜேந்திரன், சுகாதார அலுவலர் ராமமூர்த்தி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியின்போது பொதுமக்களிடம் செயல்விளக்க நிகழ்ச்சி நடத்தி காட்டப்பட்டது. இதில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரித்து வழங்க வேண்டும், சுற்றுப்புற பகுதியை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும், பொதுமக்களுக்கு மரங்களின் அவசியம் எடுத்துரைக்க அனைத்து பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.
சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து, விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்கள் அனைத்து வார்டுகளில் விநியோகம் செய்யப்பட்டன.
- சுப்பிரமணி (வயது 70). இவர் மின்வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
- தனியாக வசித்து வந்த சுப்பிரமணி அதே பகுதியில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் மணிகண்டன் என்பவரிடம் கணக்கு பிள்ளையாக வேலை செய்து வந்தார்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள புதுப்பட்டி காமராஜ்நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70). இவர் மின்வாரியத்தில் வயர்மேனாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவரது மனைவி ருக்குமணி 7 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.
இவருக்கு முருகன் (55), பாஸ்கர் (53) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். முரு கன் ஆட்டையாம்பட்டியில் சுகாதார ஆய்வாளராக உள்ளார். பாஸ்கர் குடும்பத்துடன் புதுப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். தனியாக வசித்து வந்த சுப்பிரமணி அதே பகுதியில் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் மணிகண்டன் என்பவரிடம் கணக்கு பிள்ளையாக வேலை செய்து வந்தார்.
இன்று காலை சுப்பிரமணி வேலைக்கு வராததால் மணிகண்டன் அவரை தேடி வீட்டுக்கு வந்தார். அங்கு கட்டிலில் படுத்த நிலையில் சுப்பிர மணி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர் இதுபற்றி சுப்பிரமணியின் மகன்க ளுக்கும், நாமகிரிபேட்டை போலீஸ் நிலையத்துக்கும் தகவல் கொடுத்தார்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்கள் சேர்ந்து இந்த கொலையில் ஈடுபட்டி ருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மர்ம நபர்கள் கட்டில் சட்டத்தால் தாக்கி சுப்பிரமணியை கொலை செய்துள்ளனர். அவரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக இந்த கொலை நடந்தது? சுப்பிர மணிக்கும் வேறு யாருக்கும் முன்விரோதம், பகை உள்ளதா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.
ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார். தடயவியல் நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர். மோப்பநாய் வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் மோப்பம் பிடித்தது. யாரயும் கவ்வி பிடிக்கவில்லை.
இந்த கொலை சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடுமையான வெயிலின் தாக்கத்தால் வெயிலின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் சாலையில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
- இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அரசு மருத்துவமனை அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலை பகுதியில் முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது கடுமையான வெயிலின் தாக்கத்தால் வெயிலின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் சாலையில் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் பரமத்தி வேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் முதியவரின் உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் கடுமையான வெயிலின் தாக்கத்தால் அவர் சுருண்டு விழுந்து இறந்தது தெரியவந்தது. அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்?, எதற்காக இங்கு வந்தார்? என்பது குறித்து பரமத்திவேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆவராங்காடு பகுதியில் ஒரே வளாகத்தில் 4 ரேஷன் கடைகள் செயல்படுகிறது.
- இந்த ரேஷன் கடைகள் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, பாமாயில், சர்க்கரை, பருப்பு, உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றனர்.
பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே ஆவராங்காடு பகுதியில் ஒரே வளாகத்தில் 4 ரேஷன் கடைகள் செயல்படுகிறது. இந்த ரேஷன் கடைகள் வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, கோதுமை, பாமாயில், சர்க்கரை, பருப்பு, உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றனர்.
குறிப்பாக கோதுமையை வாங்கி மாவாக அரைத்து மக்கள் முழுமையாக பயன்படுத்துகின்றனர். இதனால் கோதுமையை மாதந்தோரும் வாங்கிவிடுவர்கள்.
கடந்த ஒரிரு மாதங்களாக கோதுமை கிடைப்பதில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து அகில பாரத கிரகப் பஞ்சாயத்தின் நிர்வாகி சபரிநாதன் கூறியதாவது:-
பள்ளிபாளையம் ரேஷன் கடைகளில் சில மாதங்களாக முக்கிய பொருளான கோதுமை வழங்கப்படுவது இல்லை. இது குறித்து ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் கேட்டபோது, தற்போது 20 சதவீதம் மட்டுமே கடைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆதனால் தான் முழுமையாக வழங்கபட முடியவில்லை என, தெரிவித்துள்ளார்.
ஏழை, எளிய மக்கள், ரேஷன் பொருட்கள் நம்பி தான் உள்ளார்கள். சம்பந்தப் பட்ட அதிகாரிகள் இதில் கவனம் செலுத்தி உடனடி யாக பொதுமக்களுக்கு, பொருட்கள் அனைத்தும் முறையாக வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






